மண்ணிலும் உண்டு ஒரு விண்ணகரம்!

கற்கால மனிதர்கள் வேட்டையாடி கனிகளைச் சேகரிக்கும் குழுக்கள் என்றே மானுடவியலாளர்களால் கருதப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு விண்மீன்கள் குறித்த அறிவு ஏன் அவசியமாக இருந்தது?

அண்மையில், தெலங்கானாவில் கற்காலத்தைச் சார்ந்த பழங்கால வாழ்விடம் ஒன்றின் தொல்லெச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கண்டடைந்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இந்தக் கற்கால அமைப்புகள் இன்றைக்கு ஏறக்குறைய 7000 ஆண்டுகள் முந்தியவை எனக் கணித்திருக்கின்றனர். இங்கு ஏறக்குறைய 80 பெரும் கற்கள் நிற்கின்றன. இவை 3.5 – 4 மீட்டர் உயரம் உடையவை. இவற்றில் பெரும்பாலானவை ஒரு மையத்தைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளன. இக்கற்களின் உபயோகம் என்ன? கற்கால மக்களுக்கு இக்கல் அமைப்புகள் எவ்விதத்தில் முக்கியமானதாக இருந்திருக்கும்?

தெலங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கல் அமைப்புகள்

இந்த அமைப்புகளை உருவாக்கியவர்கள், இக்கற்கள் சிலவற்றில் குழியெடுத்து அவற்றில் சில குறியீடுகளை விட்டுச்சென்றுள்ளனர். இந்தக் குறியீடுகள் ஏழு விண்மீன்கள் கொண்ட சப்தரிஷி மண்டலத்தைக் குறிக்கின்றன என இந்த அமைப்புகளைக் கண்டடைந்த அகழ்வாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

அவ்வாறு பொறிக்கப்பட்ட சப்தரிஷி மண்டல விண்மீன் குறியீடுகளில் உள்ள மேல் இரண்டு விண்மீன்களிலிருந்து ஒரு கற்பனையான கோடு இழுக்கப்பட்டால், அந்தக் கோடு துருவ நட்சத்திரத்தைக் காட்டும்படியாக இந்த அமைப்பு உள்ளது.

எனவே, இதை மிகவும் பழமையான விண்மீன் பார்வை மையம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது அடுத்து ஒரு கேள்வியை எழுப்புகிறது. கற்கால மானுட சமுதாயத்துக்கு ஏன் வானியல் அத்தனை முக்கியமானதாக இருந்திருக்கிறது? கற்கால மனிதர்கள் வேட்டையாடி கனிகளைச் சேகரிக்கும் குழுக்கள் என்றே மானுடவியலாளர்களால் கருதப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு விண்மீன்கள் குறித்த அறிவு ஏன் அவசியமாக இருந்தது?

வானத்தின் இயக்கங்களை மனிதர்கள் கற்காலம் தொட்டே – ஒருவேளை அதற்கும் முன்னதாகக்கூட – அவதானித்து வந்திருக்கலாம். மிகவும் பழமையான குகை ஓவியங்களின் நட்சத்திர மண்டலங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேட்டைகளை மக்கள் செய்வதற்கு முன் சடங்குகள் நடத்தப்பட்டிருக்கலாம்; அச்சடங்குகள் நடத்தப்படும் தினங்கள் வானியல் சுழற்சிகளுடன் தொடர்புடையதாக இருந்திருக்கக்கூடும். எனவே, கற்கால சடங்குகளை நிகழ்த்தியவர்கள் வானியல் சுழற்சிகளைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருந்திருக்கும். பூமியின் பருவ சுழற்சிகளுக்கும் தாம் வானில் கண்ட சுழற்சிகளுக்கும் ஒரு தொடர்பை கற்கால மானுட பிரக்ஞை அறிந்திருக்கிறது எனக் கருத முடிகிறது.

மானுடத்தின் உதயம் தொடங்கி உருவான இந்த அறிவு சேகரம் எத்தகைய பரிணாம வளர்ச்சியை அடைந்தது? அதன் நீட்சி நம் பண்பாட்டில் எவ்விதங்களில் உள்ளது? மிக வெளிப்படையாக நமக்குத் தெரியும் பரிணாம வளர்ச்சி வானவியல்தான். வானவியலில் மட்டுமல்லாமல் கற்கால சடங்குகளின் நீட்சி நம் பண்பாட்டிலும், புராண சடங்குகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும். தொடர்ந்து வானின் சுழற்சிகளையும், தம்மைச் சுற்றி நிகழும் பருவ மாற்ற சக்கரங்களையும் உள்வாங்கியே ‘ரிதம்’, ‘அறம்’, ‘தாவோ’ ஆகிய பிரபஞ்ச ஒழுங்கோட்ட நியதிகளை மானுடம் வந்ததடைந்தது.

உலகம் முழுவதும் கற்காலம் சார்ந்த பெருங்கல் பண்பாடுகளில் வானியல் ஒரு முக்கியமான அம்சமாக இருப்பது தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்கள் 7000 ஆண்டுகள் முந்தைய இந்தக் கற்கால அமைப்பில் வானியல் அவதானிப்பு – சடங்கு மையம் ஒன்றின் சாத்தியத்தை ஊகித்துக்கொண்டிருக்கும்போது, அக்டோபர் 2016-இல் ஆஸ்திரேலியாவின் பழங்கால கற்கால அமைப்பு ஒன்று சூரியனின் பருவ சுழற்சி இயக்கத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஒரு ஆண்டு சுழற்சியில் வானியல் ரீதியாக நான்கு தினங்கள் முக்கியமானவை. அவை, சம இரவு-பகல் நாட்கள், (equinoxes) சூரிய இயக்கத்தின் (அதாவது நமது பார்வையிலான இயக்கத்தின்) திசை மாறும் நாட்கள் (solstices) ஆகியவை. ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடிகளின் கல் அமைப்புகள், சூரிய இயக்கத்தின் இந்த முக்கியத் தினங்களைக் கண்டறியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவையும் 7000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.

ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகளின் கல் அமைப்புகள்

ஆஸ்திரேலியாவிலும் பிற பசிபிக் தீவுகளிலும் அங்கே காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கே ஏற்கெனவே வசித்துவந்த பூர்விகக் குடிகளை அறிவற்ற பண்பாடற்ற மக்கள் எனக் கருதினர். அவர்களை நாடோடிகளாகவும் நிலைத்த வாழ்விடம் அற்றவர்களாகவும் கருதினர். அவர்கள் மீது ஐரோப்பியரின் பண்பாடும் மதமும் திணிக்கப்பட்டது. பூர்விகக் குடிகளின் பண்பாட்டையும் ஆன்மிக மரபுகளையும் கட்டிக்காத்த சிலரால் இன்று அப்பண்பாட்டின் ஆழமும் விஸ்தீரணமும் புரிய ஆரம்பித்துள்ளது. டுயேன் ஹமாச்செர் (Duane Hamacher) ஒரு வானவியலாளர். அவர் ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகளின் அறிதல் முறைகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். உர்டி யுவாங் (Wurdi Yuang) எனும் இடம், ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் சடங்கு மையம் ஆகும். சூரியனின் பருவ இயக்கத்தின் முக்கிய நாட்களுடன் தொடர்புடையவை எனக் கருதுகிறார்.

உலகப் பண்பாடுகள் அனைத்திலுமே இந்த நான்கு நாட்களும், சூரிய சந்திர கிரகணங்களும் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. இந்திய மரபில் உத்ராயணம், மகரசங்கராந்தி, சித்திரை விஷு, சரத் விஷு ஆகியவை பல முக்கியத் திருவிழாக்களுடன் இணைந்திருக்கின்றன. வேத சடங்குகள் மகர சங்கராந்தியில் தொடங்குகின்றன. இயற்பியலாளரும் இந்தியவியலாளருமான சுபாஷ் கக், மகர சங்கராந்தி (winter solstice) காலத்தில் செய்யப்படும் மகாவிரத சடங்குகளுடனேயே வைதீகச் சடங்குகளின் ஆண்டு தொடங்குவதாகவும், இதர மதச்சார்பற்ற செயல்பாடுகளுக்கு சித்திரை விஷு ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுவதாகவும் சொல்கிறார். (ஆக, வேடிக்கையாக ஒன்றைச் சொல்லலாம். தமிழ்ப் புத்தாண்டு தை எனச் சொல்பவர்கள், உண்மையில் மிகவும் வைதீகமான ஒரு ஆண்டுத் தொடக்கத்தை நம் மீது சுமத்துகிறார்கள்!) சரத் விஷு (autumnal equinox) காலத்தில்தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க பூர்விகக் குடிகளின் சடங்குகள் இத்தகைய இயற்கையான பருவச் சுழற்சிகளின் அடிப்படையில், அவற்றின் முக்கியத் தினங்களிலேயே அமைந்திருந்தன. குறிப்பாக, நாம் உத்தராயணம் எனச் சொல்லும் (summer solstice) நாளில் ஒரு குறிப்பிட்ட பாறைப் பிளவில் எங்கே சூரிய ஒளி ஒரு திரவக் கோடு போல நீளும் இடத்தில் புனித ஓவியச் சின்னங்களை அப்பாறையில் தீட்டி அங்கு சடங்குகள் நடத்தப்படுகின்றன.

அமெரிக்க பூர்விகக் குடிகளின் உத்ராயண சடங்கு பாறை: அரிசோனா மாகாணம்

சூரிய சுழற்சியின் விளைவான சடங்குகளின் நாயகர்கள் இன்று உலகமெங்கிலும் வழிபடப்படுகிறார்கள். உதாரணமாக, ஏசுவின் பிறப்பு குளிர் காலமான டிசம்பரின் முடிவிலும், அவர் உயிர்த்தெழுவது வசந்த கால புத்தாண்டான ஏப்ரலிலும் நடைபெறுவதும், அவருக்கு பன்னிரெண்டு சீடர்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதும், அவரது அன்னையான மேரியும் சந்திரனுடன் தொடர்புபடுத்தப்பட்டு காட்டப்படுவதும், அவரது வாராந்திர புனித நாள் ஞாயிறு என்பதும், ஏசு என்கிற தொன்மத்தின் சூரியத் தொடர்பையே காட்டுகிறது.

இஸ்லாமியரின் புனிதத் தலமான மெக்கா, முகமதுவின் காலத்துக்கு முன்னர் வானியலுடன் தொடர்புடைய ஒரு சடங்குத் தலமாக இருந்திருக்கிறது. அங்கு 360 தெய்வச் சிலைகள் இருந்தனவாம். 360 என்பது சந்திர ஆண்டுச் சுழற்சியுடன் தொடர்புடைய ஒரு எண். இன்றும் இஸ்லாமிய ஆண்டு சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுதான். ஒருவேளை, சந்திர அவதானிப்புக்கும் அது சார்ந்த சடங்குகளுக்குமான ஒரு பழமையான மையமாக மெக்கா இருந்திருக்கக்கூடும். இஸ்லாமிய ஏக-இறைக் கோட்பாட்டின்படி, அது ஆபிரகாமுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) எனப்படும் பெருங்கல் வளையங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவையும் வானியல் அவதானிப்புகளுக்காகவும் வானியல் நிகழ்வுகள் சார்ந்த சடங்குகளுக்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்பதே அவை குறித்த முதன்மையான கருத்தாக உள்ளது. இன்றைய மேற்கத்திய அறிவியக்கத்தின் வேர்களை – இந்தக் கற்கால வானியல் அவதானிப்புடன் இணைத்து எண்ணிப்பார்ப்பது முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு கலைஞன் இன்றைய வானியல் சார்ந்த அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு முன்னரே அப்படி ஒரு தொடர்ச்சியை தன் கலையின் கண்ணால் கண்டறிந்திருக்கலாம் எனக் கருத முடியும். ‘ஜெருசலேம்’ எனும் கவிதைக்கான தமது ஓவியமொன்றில், வில்லியம் பிளேக் (1757-1827) கல்-வட்டத்தின் பின்னணியில் சந்திரனையும் மூன்று மனித உருவங்களையும் காட்டுகிறார். இம்மூன்று மனித உருவங்களும், பிளேக்கின் மனத்தில் மேற்கின் அறிவியல் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தின் பிதாமகர்களாக அறியப்படும் நியூட்டன், பேகன், லாக் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறுகிறார். ('And there they combine into Three Forms, named Bacon & Newton & Locke.')

ஸ்டோன்ஹெஞ்ச் எனும் கல்வட்டம், சந்திர கிரகணம், மேற்கின் அறிவியக்க பிதாமகர் மூவர் - இத்தனையையும் இணைக்கும் வில்லியம் பிளேக்கின் ஓவியம்

வானியலாளர் ப்ரெட் ஹோயல் (Fred Hoyle) பலதுறை நிபுணர். வரலாறு தொடங்கி புதினங்கள் வரை பல துறைகளில் கால் பதித்தவர். இவர், இந்தக் கல்வட்டங்கள் வானியல் அவதானிப்பு மையமாகச் செயல்பட்டிருப்பதாகவே கருதுகிறார். பிளேக்கின் இந்த ஓவியமும் அதில் அவர் காட்டியுள்ள குறியீட்டுத்தன்மையும் இன்று வானியல் - அகழ்வாராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்படும் கருதுகோள்கள் குறித்த ஒரு உள்ளுணர்வான அறிதலாக இருக்கலாம் என்கிறார். பெருங்கல் வட்டம் குறித்த தம் நூலில் அது சந்திர கிரகணங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் ஹோயல்.

இன்றைக்கும் இந்தக் கல்வட்ட மேடையில், உத்தராயணம், விஷு ஆகிய தினங்களின் சூரிய கதிர்கள் உதய நேரத்தில், அவற்றின் வாசல்களின் ஊடாக ஒற்றைத்தன்மையுடன் ஊடுருவும்போது அவற்றைக் காணவும், பழைய பாகனீய சடங்குகளை நடத்தவும் மக்கள் கூடுகின்றனர். ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் விட்டுப்போன தொடர்ச்சியொன்றை அவர்கள் தேடுகின்றனர்.

இக்கல்வட்டங்கள் குறித்த ஆராய்ச்சியில் பல்லாண்டுகள் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஆப்ரே பர்ல் (Aubrey Burl), இவை சந்திரனோடு தொடர்புடைய சடங்குகளுக்காகக் அமைக்கப்பட்டவை எனக் கருதுகிறார். சந்திரன், இறந்தோர் மறுமைக்கு செல்லும் ஒரு திறப்பு வெளி என அம்மக்களால் கருதப்பட்டது என்கிறார். எனவே, இறந்தோரின் ஆன்மாக்களிடம் தமக்காக மன்றாடும் சடங்குகள் இங்கு நடத்தப்பட்டன. அது சந்திரனின் இயக்கத்துடன் இணைந்திருந்ததாம். ஆர்தர் சி க்ளார்க், இக்கல்வட்டங்களில் புதைந்திருக்கும் வானியல் தரவுகளைக் குறித்த ஒரு கருத்தை முன்வைக்கிறார்: ‘‘இன்றைக்கு நகரத்தில் வாழும் ஒரு சராசரி நவீன மனிதனைவிட இந்தப் ‘பழங்கால’ கற்கால மனிதர்களுக்கு வானியல் அறிவு அதிகமாக இருந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு இப்போது கறாரான வானியலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்”’.

மேற்கில் நவீன புத்தெழுச்சியின் பின்னரே கடந்த இருநூறு ஆண்டுகளாக வானியலுடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்த பார்வை மீட்டெடுக்கப்படுகிறது. வானியலையும் அகழ்வாராய்ச்சியையும் தொடர்புபடுத்தி விண்-அவதானிப்பு சார்ந்த அகழ்வாராய்ச்சி (astro-archeology) ஒரு முக்கியப் புலமாகவே மாறியுள்ளது.

1800 ஆண்டுகள் தொடர்ச்சியற்று இருந்த அல்லது உதாசீனப்படுத்தப்பட்ட தரவுகளை கடந்த 200 ஆண்டுகளாக மேற்கத்தியப் பண்பாடு மீட்டெடுத்துவருகையில், இந்தியா 5000 ஆண்டுகளாகத் தொடர்ந்திருந்த தம் பண்பாட்டிலிருந்து விலக ஆரம்பித்தது. இந்தியச் சூழலில் அது இப்போது கவனம் பெறுவது முக்கியமான ஒன்றாகும். கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் இந்தியப் புண்ணிய தீர்த்தங்கள், கோவில் அமைப்புகள் ஆகியவற்றில் வானியல் சார்ந்த பரிமாணங்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அவை பொதுப்புலங்களில், வெகுஜன அறிதலின் பகுதியாக இப்போதுதான் மெள்ள மெதுவாக ஊர்ந்தெழுகின்றன.

பெங்களூரில் இருக்கும் கங்காதரேஸ்வரர் கோவிலில் மகர சங்கராந்தி அன்று சூரியன் சிவலிங்கத்தைத் தொடுகிறது. ஆனால், இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் இரு விசித்திரமான வட்ட வடிவ ஸ்தம்பங்கள், இக்கோவிலின் மீது கடந்த இருநூறு ஆண்டு கட்டுமானங்கள் படிவதற்கு முன்னர் அவை எவ்விதத்தில் செயல்பட்டன என்பதைப் பழைய பிரிட்டிஷ் காலனிய ஓவியப் பதிவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. வானவியல் சார்ந்த ஆராய்ச்சிகள், இக்கோவிலில் உத்ராயண, தட்சியாயண நாட்களைக் காட்டும்விதமாக நிழல்கள் விழும்படியும், லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படும்படியும் அமைக்கப்பட்டுள்ளதைக் கூறுகிறார்கள்.

பெங்களூரு கங்காதரேஸ்வரர் கோவில்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், சரத் விஷுவின்போது (செப்டம்பர் 21-23) சூரியன் மிகச் சரியாக கோவில் கோபுரத்தின் நடு மாடங்களின் ஊடாக அஸ்தமனமாவது, இப்போது ஊடகக் கவனங்களைப் பெற்றுவருகிறது.

புராணங்களில், குறிப்பாக தல புராணங்களில் இந்த வானியல் தரவுகள் இருக்கின்றன. ஆனால் அவை கடந்த இருநூறு ஆண்டுகளில் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்திருக்கின்றன. அவை வெறுமனே தலங்களை மகிமைப்படுத்தும் புகழ் பாடல்கள், அதிக யாத்திரீகர்களை ஈர்க்க உருவாக்கப்பட்டவை என்றே கருதப்படுகின்றன. இலக்கிய மதிப்பீடுகள், மையப்படுத்தப்பட்ட வரலாற்று மதிப்பீடுகள் ஆகியவற்றை மட்டுமே வைத்து அவை பேசப்பட்டு, அவற்றின் முக்கியத்துவம் ஆராய்ச்சியாளர்களாலும் பொதுமக்களாலும் உணரப்படாமல் போயுள்ளது.

சூரிய வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவன் கிருஷ்ணனின் மகனான சாம்பன். இவன் ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி மூலமாக கிருஷ்ணனுக்குப் பிறந்தவன் என புராண வரலாறு கூறுகிறது. சூரிய வணக்கத்துக்கும் வழிபாட்டுக்கும் சாம்பன் தொடர்புபடுத்தப்படுவது, அவன் கரடி வம்சத்துடன் தொடர்புடையவனாக இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். சப்த ரிஷி மண்டலம் முதலில் ரிக்‌ஷா என்று ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது. கரடியைக் குறிக்கும் இப்பெயர், சில அதீத யூகங்களை சுவாரசியத்துக்காகவேனும் முன்வைக்கத் தூண்டுகின்றன.

சாம்பன் மூன்று சூரியக் கோவில்களை உருவாக்கினானாம். இந்தியாவின் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் கிழக்குக் கடற்கரையில் உள்ள கொனார்க், சூரிய உதயத்தைக் குறிப்பது. வரலாற்றுக் காலங்களில் இதை உருவாக்கியவன், சுங்க வம்சத்தைச் சார்ந்த முதலாம் நரசிம்மன் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சேனாப் நதிக்கரையில் இருக்கும் முல்டானில் உள்ள சூரியக் கோவில், உச்சி வேளை சூரியனுக்காகக் கட்டப்பட்டது. இது சூரிய வழிபாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை பொது யுகத்துக்கு முற்பட்ட கிரேக்கக் குறிப்புகள் கூறுகின்றன. முல்டான் என்பதன் உண்மை பெயர் மூலஸ்தானம் என்பதாகும். ஏழாம் நூற்றாண்டில் பாரதத்துக்கு தீர்த்த யாத்திரைக்காக வந்த பௌத்த அறிஞர் யுவான் சுவாங், இக்கோவில் குறித்து தம் பயண நூல்களில் எழுதியிருக்கிறார்.

யுவான் சுவாங், இந்த சூரியக் கோவிலை அற்புதமாக விவரிக்கிறார்:

இக்கோவில் சூரிய தேவனின் ஆலயம். இந்த பிரம்மாண்டமான ஆலயம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூரிய தேவனின் திருமேனி, மஞ்சள் தங்கத்தாலும் அழகிய கற்களாலும் அலங்கரிக்கப்படுள்ளது. இதன் ஆன்மிக உள்ளொளி ரகசியம் பொருந்தியது. அதன் அற்புத சக்திகள் அனைவருக்கும் கிட்டுகின்றன. இங்கு பெண்கள் இசை மீட்டிப் பாடுகின்றனர். தீபங்கள் ஏற்றுகின்றனர். மலர்களைத் தூவி தூபங்கள் காட்டி வழிபடுகின்றனர். இங்கு இந்திய தேசத்தின் ஐம்பெரும் வம்சங்கள் பெரும் கொடைகளை அளிக்கின்றனர். அவர்கள் இங்கு ஒரு ஆனந்த நிலையத்தை உருவாக்கியிருக்கிறர்கள். அந்த நிலையத்தில் வறியவர்களுக்கு உணவும் நீரும் வழங்கப்படுகிறது; நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை அளிக்கப்படுகிறது. இங்கு எல்லா தேச மக்களும் வந்து வழிபடுகின்றனர். எப்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இக்கோவிலின் நான்கு திசைகளிலும் கோவில் குளங்களும் நந்தவனங்களும் உள்ளன.

அந்நிய ஆட்சி அங்கு ஏற்பட்ட பிறகு இக்கோவிலின் அருகே பிற மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டது. ஆனால், இந்தக் கோவிலின் கர்ப்பகிருகம் மட்டும் விட்டுவைக்கப்பட்டது. ஆனால், முடிந்தவரை அவமானப்படுத்தியே விட்டுவைக்கப்பட்டது. ஒரு பசு கொல்லப்பட்டு, அதன் தோலை உரித்து சிலையின் மீது அவமானப்படுத்தப்படும் நோக்கத்துடன் போர்த்தினார்கள். எந்தப் பாரத அரசனும் தங்கள் மீது படையெடுத்தால் இக்கோவில் உடைக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது. இன்று இக்கோவில் தன் முந்தைய கீர்த்திகளையெல்லாம் இழந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ளது.

சூரிய உதயத்துக்கான கோவில் : ஒடிஸா கொனார்க்; உச்சி சூரியனுக்கான கோவில்: மூலஸ்தான் அல்லது முல்டான், பாகிஸ்தான்; சூரிய அஸ்தமனத்துக்கான கோவில்: மொதேரா, குஜராத்

அஸ்தமன சூரியனுக்கான வழிபாட்டுத் தலம் மொதேரா எனும் ஊரில் உள்ளது. இது குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. இதுவும் சாம்பனால் கட்டப்பட்டதென்றே புராண வரலாறு சொல்கிறது. வரலாற்றுக் காலங்களில் 11-ஆம் நூற்றாண்டு சோலங்கி அரசர்கள் இக்கோவிலைக் கட்டினார்கள். முகமது கஜினியின் படையெடுப்பின்போது கோவில் சிதைக்கப்பட்டது. இன்று இக்கோவிலில் வழிபாடு எதுவுமில்லை. சிதிலமடைந்த நிலையிலும், அதன் கலையழகுக்காக மக்களால் வந்து ரசிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கான கோவிலை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டியும் அதன் அஸ்தமனத்துக்கான கோவிலை பாரதத்தின் மேற்குக் கடற்கரையை ஒட்டியும் அமைத்திருப்பதும், அவற்றைக் கட்டிய சாம்பன் எனும் ஒரு ஆளுமையுடன் தல புராணங்களில் தொடர்புபடுத்தியிருப்பதும் முக்கியமானது. ஒருவிதத்தில், ஏதோ நம் பண்பாட்டில் பாரதத்தையே ஒட்டுமொத்த அளவில் சூரிய இயக்கம் மூலமாக ஒரு வானியல் அவதானிப்பு மையமாக அமைத்திருக்கிறார்களோ எனும் வியப்பு ஏற்படும் அளவுக்கு இது அமைந்துள்ளது.

கோணாரக், மூலஸ்தான், மொதேரா ஆகிய மூன்று கோவில்களும் சூரிய வழிபாட்டுடன் தொடர்புடைய பழமையான கோவில்கள். இவற்றுக்கும் சூரிய பருவ சுழற்சிக்குமான தொடர்புகள் ஆராயப்பட்டால், அவை இன்னும் அதிக வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தரவுகளை நமக்கு வெளிப்படுத்தக்கூடும்.

சாம்பன் புராணம் அதனுடனான ஐதீகங்கள் இந்தியா முழுக்க சூரியக் கோவில்களை உருவாக்கின என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். சாம்பன் தான் அமைத்த மூலஸ்தான கோவிலை மித்திரவனம் என அழைத்தான். சூரிய வழிபாட்டுக்காக 18 அந்தணக் குடும்பங்களை ஸாகதேசத்திலிருந்து கருடன் மூலமாக வரவழைத்தான் எனப் புராணம் சொல்கிறது. ஜாம்பவான் தம் முன்னோர் எனப் பறையர் சமுதாயத் தலைவரும் தமிழக சமூக வரலாற்றறிஞரான எம்.சி. ராஜா கூறுகிறார். மித்ரனாகிய சூரிய தேவனின் வழிபாடு பாரசீகத்தில் ஒரு கட்டத்தில் செழித்திருந்தது. அங்கிருந்து அது ரோமானியப் பேரரசுக்குச் சென்றது. கிறிஸ்தவத்தின் புராணத்திலும் சடங்கிலும் அதன் கூறுகள் கலந்தன. இன்றைக்கும் ஒடிஸாவில், சூரியனை நோக்கி சாம்பன் தவமிருந்து கொனார்க் கட்டியதை நினைவுகூரும் வகையில் சாம்பதசமி கொண்டாடுகிறார்கள்.

இந்திய வேத பண்பாட்டிலிருந்து ஏக இறை வழிபாடாகக் கிளை பிரிந்த பின்னர், பாரசீக மித்ர வழிபாட்டை மீண்டும் இந்தியப் பண்பாட்டுடன் இணைத்தவராக சாம்பன் இருந்திருக்கிறார். பின்னர் இதை முழுமைப்படுத்தியவர் ஷண்மத ஸ்தாபகரான ஆதிசங்கர பகவத்பாதர்.

பாரதத்தில் நாம் இழந்த மற்றொரு அழகிய சூரியக் கோவில், லலிதாத்திய மாமன்னரால் காஷ்மீரில் எழுப்பப்பட்ட கோவில். அந்நியப் படையெடுப்பின்போது இதுவும் இடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பல தல புராணங்களில் நவக்கிரகங்கள் வந்து வழிபட்டதாக அல்லது வழிபடுவதாகக் கூறப்படுகிறது. இவை ஏன் அந்தந்த கோவில்களுடன் இணைந்த வானியல் அவதானிப்புகளுடன் தொடர்புடைய அம்சங்களாக இருக்கக் கூடாது? சில உதாரணங்களை மட்டும் காண்போம்:

  • திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது வைகுந்தநாதர் கோவில். இக்கோவிலில் சித்திரை மாதம் 5, 6-ஆம் தேதிகளில் திருமாலை சூரியன் வந்து வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரு நாட்களில் சூரிய கிரகணங்கள் இறை விக்கிரகத்தின் மீது நேரிடையாக விழுகின்றன.
  • பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் கீழ்கோட்டம் என்றும் அழைக்கப்படும் கும்பகோணம் நாகேசுவரர் ஆலயத்தில், சூரியன் சிவபெருமானை சித்திரை 11-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வழிபடுவதாக ஐதீகம். இம்மூன்று நாட்களும் சூரியனுடைய கிரகணங்கள் நேரிடையாகக் கர்ப்பகிரகத்தில் இறைவன் திருமேனி மீது நன்கு படும் எனக் கூறுகின்றனர்.
  • தஞ்சை மாவட்டத்தில் திருநெல்லிக்காவல் எனும் தலத்தில் நெல்லி வனநாதேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. ஐப்பசி மாதத்து கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி முதல் 7 நாட்களும் மாசி மாதம் 18-ஆம் தேதி முதல் 7 நாட்களும் மாலையில் சூரியன் இறைவனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது.

சூரியன் மட்டுமல்லாமல் பிற கிரகங்கள் வந்து வழிபடுவதாகச் சொல்லப்படும் கோவில்களும் உள்ளன. செவ்வாயுடன் வைத்தீஸ்வரன் கோவில், கச்சிநெறிக் காரைக்காடு எனும் ஊரில் புதன், வெள்ளியங்குடியில் சுக்கிரன் – போன்ற தல புராண ஐதீகங்களின் பின்னால், அக்கோவில் அமைப்புடன் இக்குறிப்பிட்ட கிரகங்களின் இயக்கத்துக்குத் தொடர்பிருக்கலாம்.

இவை எல்லாமே கல்வட்டங்களாக இருந்து கோவில்களாகப் பரிணமித்திருக்கலாம். வழிபாட்டின் தொடர்ச்சி இன்றும் அப்படியே உள்ளது. உலக நாகரிகங்கள் பலவற்றிலும் இருந்து அழிந்துபோன அல்லது கண்காட்சிப் பொருட்களாக இருக்கும் வானியல் சார்ந்த வழிபாடு, கட்டடக் கலை, ஆன்மிக மரபுகள் இந்தியாவில் தொடர்ந்து வழக்கொழியாமல் பரிணமித்து வந்துள்ளன. அவற்றைக் காப்பாற்றிச் செல்ல, அவை குறித்த சரியான அறிதல் நமக்குத் தேவைப்படுகின்றன.

இவ்வாறு, ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சூரிய கதிர்கள் வந்து ஒரு கோவில் கருவறையில் அல்லது கொடிமரங்களில் விழும்படி இருக்க, கோவில் மட்டுமல்ல அவற்றைச் சுற்றி உள்ள அமைப்புகளையும் நம் பண்பாட்டில் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். அதாவது, நம் பாரம்பரிய நகர அமைப்புகளில் இந்த வானியல் தரவுகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆக, ஒரு சிற்றூரோ நகரமோ பெரும் வானியல் சுழற்சியுடன் இணைக்கப்பட்ட பண்பாட்டு அம்சங்களைப் பெற்றிருந்திருக்கிறது. இன்று மட்டற்ற கான்கிரீட் கட்டடங்கள் எவ்வித அழகியல், சூழலியல், பண்பாட்டு அறிவும் இல்லாமல் கட்டப்படுகின்றன. கையூட்டு, பேராசை, பண்பாட்டு அறிவின்மை இவற்றின் அடிப்படையில் எழுப்பப்படும் இக்கட்டடங்கள், கோவில்களைச் சூழ்ந்தும் அமைகின்றன. இவற்றினால் மௌனமாக நாம எத்தனை பண்பாட்டு அறிவியல் அம்சங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என நாம் அறியக்கூட வழியில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

வரலாற்றுக் காலங்களுக்கு அப்பால், கற்காலங்களிலிருந்தே தோன்றிய சூரிய அவதானிப்புகளே கோவில்களாக உருவெடுத்து தொடர்ச்சியாக உள்ளன. ஆனால், அவ்வாறு தொடர்ச்சியில்லாமல் போன இடங்கள் இன்று கற்கால வானியல் அமைப்புகளாக இப்பண்பாட்டின் பழம் வேர்களை நமக்குக் காட்டுகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், கொடுமணல் பகுதியில் பெருங்கற்களும் சிறுகல் வட்டங்களும் உள்ளன. அவற்றின் வானவியல் தன்மைகள் இன்னும் ஆராயப்படவில்லை.

கொடுமணல், பெருங்கற்கள்.

ஊதாரித் தந்தை தன் சந்ததிகளுக்கு ஏற்படுத்தும் கடன் சுமைபோல, நாம் நம் உதாசீனத்தால் உருவாக்கிக்கொண்டிருக்கும் அழிவிலிருந்து மீட்கும் பண்பாட்டு அறிதல் முறைகளை மீட்கும் சுமையை நம் சந்ததிகளுக்கு அளித்துச் செல்கிறோம். சிந்திப்போம்!

மேலதிக விவரங்களுக்கு -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com