இன்றைய தேவை ஒரு இயக்கம்

‘‘உலகத்தின் பொதுவார்த்தையை அளித்த பண்பாட்டிலும் தேசத்திலும் இருந்து நான் வந்திருக்கிறேன். அந்த வார்த்தையின் முன் மௌனம் இருக்கிறது. அந்த வார்த்தையின் பின்னரும் மௌனம் பொதிந்திருக்கிறது. அந்த வார்த்தை ஓங்காரம். எனவே, இவ்விருதை என் தேசத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”.

போர் குறித்து ஒரு மொழி சொல்வார்கள் - முதற்போர்கள் மனங்களில் நிகழ்கின்றன. அதாவது, நிஜ வாழ்வில் யுத்தங்கள் நடந்து மானுட அழிவு ஏற்படுவதற்கு முன்னரே மானுட மனங்களில் போர்கள் உருப்பெற்றுவிடுகின்றன. அண்மையில், டாக்காவிலிருந்து பிரான்ஸ் வரை நிகழ்ந்த படுகொலைகள் நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. போர்கள் மட்டுமல்ல, பயங்கரவாதச் செயல்களும் மனித மனங்களிலேயே முதலில் நிகழ்கின்றன.

பயங்கரவாதச் செயல்களில் ஒருவர் ஈடுபட, மனிதர்களில் ஒருசாராரை அவர் வாழவே தகுதியில்லாதவர்களாகக் கருத வேண்டும். இது எப்படி முடியும்? அதற்கு அவர் ஒரு கருத்தியலைக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு ஒரு உலகப் பார்வை வேண்டும். அதில் அவர் சிறிதும் ஐயம் இல்லாமல் உறுதியாக நிற்க வேண்டும். இதற்கு நீடித்த தயாரிப்பு தேவை. மிகவும் வைராக்கியம் அளிக்கும் மனப்பயிற்சி தேவை. இதை அளிப்பதென்பது ஒருநாளில் இரண்டு நாட்களில் நடைபெறும் விஷயமல்ல. அப்படி ஒரு உலகப்பார்வை பெற, உங்களுக்கு எல்லா பதில்களும் அளிக்கப்பட வேண்டும். அதை ஒரு மதத்தால் அல்லது சித்தாந்தத்தால் கொடுக்க முடியுமென்றால், அந்த மதம் அல்லது சித்தாந்தம் ஒரு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் தன்னில் பதில் கொண்டதாக இருக்க வேண்டும்.

உலகம் ஏன் படைக்கப்பட்டது, படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தொடங்கி, மரணத்துக்குப் பின் மறுமை வாழ்வில் மதப்பற்றாளர்களுக்கு என்ன சுகங்கள் கிடைக்கும் என்பது வரை திட்டவட்டமாகப் பதில்கள் சொல்லப்பட்டு அதை ஒருவர் நம்பவைக்கப்பட வேண்டும். இதை நம்புகிறவர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. கணிசமாக இருந்தாலே போதும். உலகை நம்பமுடியாத அளவு தீவிரமான செயல்பாடுகளால் கதிகலங்கச் செய்துவிடலாம்.

ஒருவிதத்தில், இந்தப்போக்கு கொண்ட ஒரு அம்சம் எல்லா மதங்களிலும் இருக்கும். எல்லா சித்தாந்தங்களிலும் இருக்கும். ஆனால், சில மதங்களில் இத்தகைய போக்கு கொண்ட இயக்கங்கள் தீவிரமாக மையத்தில் இருக்கும். சில சித்தாந்தங்களில், இந்தப் போக்கே மையமாக இருக்கும். அவை கைகோத்துக்கொள்வதும் எளிதாக இருக்கும். பல நேரங்களில் இத்தகைய அரசியல் சித்தாந்தங்களும் இத்தகைய மதங்களும் கைகோத்துக்கொள்ளும். சமூகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களையவே அப்படி கைகோத்துக்கொண்டதாக நமக்குச் சொல்லப்படும். ஆனால், விளைவுகள் பயங்கரவாதத்தை நோக்கி நம்மை செலுத்துபவையாகவே அமையும்.

இதில் ஒரு விசித்திரமும் உண்டு.

எந்தச் சமூகத்தை சீரழிவு கொண்டதாக இவர்கள் சொல்கிறார்களோ, அதே சமூகத்தின் எழுத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றை பயன்படுத்தியே இவர்கள் அந்தச் சமூகத்தின் மீது கருத்தியல் போரைத் தொடுப்பார்கள். முதலில் இது கருத்துச் சுதந்தரம் என்கிற பெயரில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக்கொள்ளப்படும், ஏன் ஆதரிக்கக்கூடப் படலாம். ஆனால், அக்கருத்தியல் ஒரு அளவு வலிமையை அடைந்ததும் அதே சமூகத்தின் கருத்துச் சுதந்தரத்தின், பேச்சுச் சுதந்தரத்தின் குரல்வளையைப் பிடித்து இறுக்கி அழிக்க முன்வரும்.

உதாரணமாக, அரசியல் சித்தாந்தமான மார்க்ஸியத்தை எடுத்துக்கொள்வோம். உண்மையில், மார்க்ஸியம் அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அதற்கு இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் ஒரு பார்வை இருக்கிறது. அந்த இயக்கத்தை அவர்கள் முரணியல் என்கிறார்கள். அவர்களின் பார்வை பொருள் முதல்வாதப் பார்வை. வரலாறு எப்படி நிகழ்கிறது என்பது குறித்து அவர்களுக்குத் தீர்மானமான ஒரு பார்வை இருக்கிறது. பொருளாதார உற்பத்தி உறவுகளின் மேல்கட்டுமானமே மதமும் பண்பாட்டு மதிப்பீடுகளும் என அவர்கள் நம்புகிறார்கள். மார்க்ஸிய உலகப்பார்வையில் இவை எல்லாம் உடன் வரும் இதர அம்சங்கள். மார்க்ஸியம் ஒரு கருத்தியல் தரப்பாக இயங்கும்போது ‘இது ஒரு தரப்பு’. ஆனால், அது நம் சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பிரசாரம் செய்யப்படும்போது, அது ஒன்றே ஒரே தரப்பு – ஒரே தீர்வு. அப்படியானால் பிறர்?

நீங்கள், நாங்கள் அளிக்கும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளின் ஒரு அங்கம் என்பதே இதற்கான விடை. சோவியத் யூனியனிலும் செஞ்சீனத்திலும் மார்க்ஸியர்கள் அதிகாரத்துக்கு வந்தபோது, அவர்கள் இதையே செயல்படுத்தினார்கள். இருபதாம் நூற்றாண்டில் அறிவியலுக்கு எதிரான மிகக் கொடுமையான வன்கொடுமைகளும் அழித்தொழிப்புகளும் மார்க்ஸிய நாடுகளிலேயே நடைபெற்றன. ஜெனிடிக்ஸ் என்கிற மரபணுவியல் ‘பூர்ஷ்வா அறிவியல்’ எனப் பெயரிடப்பட்டு அறிவியலாளர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இடதுசாரி சாய்வு கொண்டவர் என்றபோதிலும், அவரது பெயர்கூட இயற்பியல் பாடப் புத்தகங்களில் வராதவாறு ஒரு காலகட்டத்தில் சோவியத் யூனியன் பார்த்துக்கொண்டது.

மூளைச்சலவை செய்யப்பட்ட சீன ராணுவத்தினர் - அவர்களால் எரிக்கப்படும் பௌத்த பாரம்பரிய நூல்கள்

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?

உண்மையில் நீங்கள் தெருவில் சந்திக்கும் ஒரு சராசரி மார்க்ஸிய தோழரிடம் பேசிப்பாருங்கள். அவர் நல்ல மனிதராக இருப்பார். பிறர் கஷ்டங்களுக்காக வேறு எவரையும்விட மனம் இரங்குபவராக இருப்பார். மூடநம்பிக்கைகள் இல்லாமல் அறிவியல்பூர்வமாக சிந்திப்பவராகக்கூட உங்களுக்குத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவரே சோவியத் யூனியனில் நிகழ்ந்த அறிவியல் அழித்தொழிப்பை நியாயப்படுத்தக்கூடும். திபெத்தில் புத்த மடாலயங்கள் அழிக்கப்படுவதை நியாயப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

இந்தப் போக்கை எல்லா சித்தாந்தவாதிகளிலும் நாம் காணலாம். எல்லா மதவாதிகளிலும் காணலாம். குறிப்பாக, என் மதம் / சித்தாந்தம் ஒன்றே சரி, பிற மதங்கள் / சித்தாந்தங்கள் தவறு என நினைக்கும் அனைத்து மதவாதிகளிலும் காணலாம்.

இந்தியா, மதத்தின் அடிப்படையில் பிளவுண்டபோது, நம் நாட்டிலிருந்து பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிக்கப்பட்டது. அது, கிழக்கு பாகிஸ்தான் -  மேற்கு பாகிஸ்தான் என இரு துண்டுகளாக அமைந்தது. இரண்டுமே இஸ்லாமிய பெரும்பான்மைப் பகுதிகள். கிழக்கு பாகிஸ்தான், வங்க முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதி. மேற்கு பாகிஸ்தான், பஞ்சாபி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதி. விரைவில், கிழக்கு பாகிஸ்தான் தனிநாடாக வேண்டுமெனக் கோரியது. 1971-ல், பாகிஸ்தான் ராணுவம் ஒரு புனிதப் போரை அறிவித்தது. கிழக்கு பாகிஸ்தானில் இனப்படுகொலை ஒன்றை அரங்கேற்றியது. அதில் ஒரு முக்கிய அம்சம் உண்டு. அப்படி கிழக்கு பாகிஸ்தானில் அரங்கேறிய மிகக் கொடூரமான இனப்படுகொலையில், கிழக்கு பாகிஸ்தானிலிருந்தே பாகிஸ்தானிய ராணுவத்துடன் இணைந்து அதைச் செய்தவர்கள் ஜமாயத் - இ - இஸ்லாமி என்கிற அமைப்பைச் சார்ந்தவர்கள்.

1971 (கிழக்கு பாகிஸ்தான்) - இன்றைய பங்களாதேஷில் பாகிஸ்தானி ராணுவம் மத ரீதியில் அடையாளப்படுத்தி நிகழ்த்திய இனப்படுகொலை

1971-ல், இந்தியாவின் உதவியாலும் இந்திய ராணுவத்தின் தியாகத்தாலும், பங்களாதேஷ் எனும் புதிய தேசமாக கிழக்கு பாகிஸ்தான் பெயர் மாறியது. அது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கும் என்றே பலரும் எண்ணினர். ஆனால், விரைவில் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் துணையுடன் ஜமாயத் - இ - இஸ்லாமி, பங்களாதேஷில் செயல்படத் தொடங்கியது. விரைவில் அங்கே மதவெறி பரப்பப்பட்டது. ஜமாயத் - இ - இஸ்லாமி, ஒரு ‘தூய இஸ்லாமை’ பேசுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையில், அது சவூதி அரேபிய தன்மை கொண்ட ஒரு இஸ்லாமையே முன்வைக்கிறது. அதன் பிரசாரகர்கள், ஒவ்வொரு முறை சமுதாயத்தில் ஒரு குற்றம் நிகழும்போதும், அதற்கான சவூதி அரேபிய தீர்வைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்வார்கள். (‘இதையெல்லாம், சவூதியில் செய்தால் கையை வெட்டிருவாங்க. நமக்கு அப்படிப்பட்ட சட்டம் வேண்டும்’) ஜனநாயகத்தின் மீது மிக நுண்ணிய வெறுப்பை உருவாக்குவார்கள். பிற மத கோட்பாடுகளைத் திரித்து அவை அனைத்தும் இஸ்லாத்தின் கீழான வடிவங்கள் என்பதாக ஒரு பிரசாரத்தை உருவாக்குவார்கள்.

கால் நூற்றாண்டாக, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் காஷ்மீரி பண்டிட்கள்

பெரும் இந்திய நிலப்பரப்பு என்பது இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்டது. இவை ஒவ்வொன்றிலும் ஜமாயத் - இ - இஸ்லாமி செயல்படுகிறது. அவை ஒன்றொடொன்று தொடர்பற்றவை என வெளியே சொன்னாலும்கூட, அவை ஒரே உலகப்பார்வையையே முன்வைக்கின்றன. முக்கியமான காலகட்டங்களில், இந்நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், வாக்குவங்கி அரசியலுக்காக ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்புகளை ஆதரித்துள்ளனர். எப்போதுமே ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்புகள் இயங்கிய இடங்களில் பயங்கரவாதம் எழுந்துள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் மத கல்விச் சாலைகளில், காஷ்மீரிய ரிஷி - ஸூஃபி மரபுகள் கொண்ட இஸ்லாமிய அறிஞர்களை அகற்றி ஜமாயத் - இ - இஸ்லாமி அவற்றில் செயல்பட, ஒருகாலத்தில் புதுடெல்லி மைய அரசு ஆதரவு அளித்தது. காரணம், அன்றைய ஜம்மு காஷ்மீர் அரசுக்குத் தலைவலி வர வேண்டுமென்கிற குறுகிய அரசியல் பார்வை. இந்தத் தவறான போக்குதான், பின்னர் பாகிஸ்தானிய ஆதரவுடனான பயங்கரவாதம் காஷ்மீரில் வேரூன்ற வளமான வாய்ப்பை அளித்தது.

இன்றைக்கும், குறுகிய அரசியல் லாபங்களுக்காக ஜமாயத் - இ - இஸ்லாமி போன்ற அமைப்புகளின் செயல்பாட்டை அரசியல்வாதிகளில் ஒருசாரார் ஆதரிக்கின்றனர். இது அவர்கள் செயல்படும் ஜனநாயகச் சூழலையே அழிக்கக்கூடிய ஒரு செயல் என்பதை அவர்கள் அறியவில்லை.

பாரதத்தின் இஸ்லாம் பன்மைத்தன்மை கொண்டது. அது திட்டவட்டமான ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து, இங்குள்ள ஆன்மிகத் தத்துவ மரபுகளுடன் இணைத்துக்கொண்ட ஒரு பாரம்பரிய இஸ்லாம் இங்குள்ளது. ஆனால், இஸ்லாமியவாத அரசியலில் அந்தப் பாரம்பரிய பெரும்பான்மை இஸ்லாம், களங்கம் கொண்டதென்று புறம் தள்ளப்படுகிறது. பயங்கரவாதிகளை உருவாக்க, பாரம்பரிய இஸ்லாம் பலியிடப்படுகிறது. இது, உண்மையில் இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் பெரிய துரோகம் என்றே சொல்லலாம். சவூதி பண பலத்துடன், இஸ்லாமியவாத சக்திகள் போலி அறிவியல் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்; பெரும் பணச்செலவுடன் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், தர்கா வழிபாடு முதல் மெய்ஞானியரின் ஆன்மிக அனுபவங்கள் வரை அனைத்து பாரம்பரிய இஸ்லாமிய அடையாளங்கள் எதிர்க்கப்படுகின்றன.

ஹஸ்ரத் இனயத் கான்

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த நூற்றாண்டில் எவ்வித பணபலமும் இல்லாமல் எவ்வித அரசு ஆதரவும் இல்லாமல், இந்திய இஸ்லாமியர்கள் அறிவியலுடன் உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக, ஹஸ்ரத் இனயத் கான் (1882 - 1927) அவர்களைக் கூறலாம். இசை மேதை, தத்துவஞானி, பரந்த ஆன்மநேய ஒருமைப்பாடு கொண்ட சூஃபி ஞான மரபை இந்தியாவிலிருந்து மேற்குக்குக் கொண்டுசென்றவர் இவரே. இன்றைக்கும், அறிவியலுக்கும் இஸ்லாமிய மெய்ஞான மரபுக்குமான உரையாடலை இவரது இயக்கம் நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. உலக ஞான மரபுக்கு இந்திய இஸ்லாம் வழங்கிய அருட்கொடையாகவே நாம் ஹஸ்ரத் இனயத் கானை கருதமுடியும். பரிணாம அறிவியலுக்கும், ரூமியின் ஆன்மிகத்துக்குமான தத்துவார்த்த இணைத்தன்மையை ஹஸ்ரத் இனயத் கான் முன்வைத்தார்.

பாண்டிச்சேரி அன்னை (இளம் வயதில்)

பாண்டிச்சேரி அரவிந்த அன்னை, ஹஸ்ரத் இனயத் கானை சந்தித்திருக்கிறார். 1912-ல் தான் கேட்ட அவரது உரையை அன்னை நாற்பதாண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகூர்ந்தார். இறையிடம் சரணடைவதையும் தாண்டி இரண்டற கலக்கும் நிலையையே அவர் இறுதி நிலை என தம் உரையில் கூறியதை அன்னை சுட்டிக்காட்டினார்.

சவூதி பண உதவியுடன் உலகம் முழுவதும் பறந்து, குறுகிய அடிப்படைவாத இஸ்லாமியவாதத்தைப் பேசுகிறவர்கள் அல்ல இந்திய இஸ்லாமின் முகங்கள். இசை வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, ஆஸ்கார் விருது மேடையில் கூறினார் -  

‘‘உலகத்தின் பொதுவார்த்தையை அளித்த பண்பாட்டிலும் தேசத்திலும் இருந்து நான் வந்திருக்கிறேன். அந்த வார்த்தையின் முன் மௌனம் இருக்கிறது. அந்த வார்த்தையின் பின்னரும் மௌனம் பொதிந்திருக்கிறது. அந்த வார்த்தை ஓங்காரம். எனவே, இவ்விருதை என் தேசத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”.

ரசூல் பூக்குட்டி ஒரு விதிவிலக்கல்ல. மாறாக, இந்த மண்ணின் பண்பாட்டின் விதி. காசியில் கங்கைக்கரையில் வாழ்ந்த இசை மேதை பிஸ்மில்லா கானிடம் ஒரு நேர்காணலின்போது, ‘நீங்கள் ஏன் பாகிஸ்தான் செல்லவில்லை’ என வினவப்பட்டபோது அவர் சொன்னார் - ‘என் கங்கையும் மகாதேவனும் பாகிஸ்தானுக்கு வரமுடிந்தால் நானும் போவேன்’.

ரசூல் பூக்குட்டி

ஹஸ்ரத் இனயத் கானையும், ராமேஸ்வரத்தின் அப்துல் கலாமையும், கேரளத்தின் ரசூல் பூக்குட்டியையும், வாரணாசியின் பிஸ்மில்லா கானையும் உருவாக்கிய ஒரு இஸ்லாமிய மரபு இந்த மண்ணில் உள்ளது. அதை நாம் காப்பது மட்டுமல்ல, உலக அளவில் அதை முன்னெடுப்பதும் நம் கடமை. அந்தக் கடமையில் நாம், நம் ஓட்டுவங்கி அரசியல் லாபங்களுக்காகத் தவறும்போது, சவூதி பணத்துடன், பாகிஸ்தானிய விரிவாதிக்கச் சக்திகளுடன் கைகோத்து இயங்கும் அடிப்படைவாத சக்திகள் பலமடைகின்றன. நம் தேச இளைஞர்களின் மனங்கள் எனும் முக்கியக் கேந்திரங்களை அவை வென்றெடுக்கின்றன.

பிஸ்மில்லா கான்

பயங்கரவாதத்தை நம் பாதுகாப்புப் படைகள் களத்தில் எதிர்கொண்டு வெற்றிகொள்ளும் அதேநேரத்தில், மனத்தில் விதைக்கப்படும் பயங்கரவாதத்தைப் பாரத சமுதாயம் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நமக்குத் தேவை, மிக விரிவான ஒரு இயக்கம். இந்தியாவின் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்தும் இஸ்லாமியத்தை உலகுக்கு நன்கொடையாக வழங்கும் ஒரு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com