அறிவியல் நிறைந்த விடியற்காலை…

சமயோசித அறிவை போதிக்கும் அழகிய கற்பனைக் கதை மட்டுமல்ல ஈஸாப்பின் கதை. அது காகங்களின் அறிவார்ந்த போக்கை அவதானித்த எவரோ எழுதியிருக்கிறார்கள். ஒருவேளை, ஈஸாப் கதைகள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேறு வடிவம் பெற்ற கதைகளாகக்கூட இருக்கலாம் என ரொமிலா தப்பாரே சொல்கிறார். இருக்கலாம். காகங்களின் நடத்தையை கூர்ந்து அவதானிக்கும் வாய்ப்புகள் இந்தியச் சமுதாயத்தில் அதிகம் என்பது ஒரு உண்மை.

அதெல்லாம் எப்போது தொடங்கிய சம்பிரதாயங்கள் என்பது தெரியாது. ஆனால் நம் தாய்மார்களெல்லாம் செய்யக்கூடிய ஒரு விஷயம் அது. காலையில் சாப்பாடு செய்தது, ஒரு கவளம் எடுத்துச் சென்று ‘கா கா’ என்று விளிப்பார்கள். எங்கிருந்தோ காகங்களும் வந்துவிடும். அவையும் கரையும். இன்னும் சில காகங்கள் வரும். உணவருந்தும். அப்புறம் நமக்கு உணவிடுவார்கள். தமிழ்நாடெங்கும் நம்மால் காணமுடிந்த காட்சிதான் இது. இன்றைக்குக் குறைந்துகொண்டே வந்தாலும் இன்னும் பரவலாகக் காணமுடிகிற காட்சியாகத்தான் இருக்கிறது.

காகங்கள் கரைந்துண்பதை, உணவையும் செல்வத்தையும் பகிர்ந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டாக நீதி இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்பார் திருவள்ளுவர். ‘காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே’ என்கிறார் திருமூலர். அந்த அளவுக்கு நம்மில் கலந்திருக்கும் காலைக் காட்சி காகங்களுக்கு உணவிடும் காட்சி. இன்று பறவையியலாளர்கள், காக்கைகள் கரைந்தழைப்புகளில் 250 வித அழைப்பொலிக் குறிப்புகள் உள்ளதெனக் கூறுகிறார்கள்.

நமக்கெல்லாம் தெரிந்த ஈசாப் கதை ஒன்று உண்டு. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அதை அழகுத் தமிழில் தந்திருக்கிறார். சிறுவர்களாக நாம் அதை தொடக்கக் கல்விச்சாலைகளில் பயின்றோம். தண்ணீர் கிடைக்காமல் காகம் ஒன்று தவித்து அலைந்து, இறுதியில் ஒரு மண்ஜாடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டது. கூழாங்கற்களைக் கண்டெடுத்து அந்த மண்ஜாடியில் போட்டு அந்த நீர்மட்டத்தை உயரவைத்து தண்ணீரை அருந்தி மகிழ்ந்தது.

நல்ல கதைதான். காகங்கள் அந்த அளவு மூளையுடன் செயல்படுமா என்ன?

டாக்டர் அலெக்ஸ் டைலர் (Dr. Alex H. Taylor) ஒரு பரிணாம உளவியலாளர். இவர் காகங்களின் அறிவுத்திறனை பரீட்சிக்க சில பரிசோதனைகளை வடிவமைத்தார். ஈசாப் கதையில் சொன்னபடி இல்லாவிட்டாலும் சற்றேறக்குறையவாவது காகங்களால் அப்படி நடக்க இயலுமா? தண்ணீரால் பாதி நிரம்பிய ஒரு ஜாடி. மண் பாதி நிரப்பப்பட்ட ஒரு ஜாடி. அவற்றில் ஒரு உணவுப் பொருள். மண்ணில் கிடக்கிறது. நீரில் மிதக்கிறது. நீர் மட்டம் உயர்ந்தால் அந்த உணவுப் பொருளை காகம் எடுக்கலாம். காகத்தின் முன் பலவிதமான பொருட்கள். உள்ளே வெற்றாக இருக்கும் பொருட்கள். கனமான பொருட்கள். நீரில் மிதக்கும் பொருட்கள். நீரில் மூழ்கும் பொருட்கள்…

காகங்கள் கனமான பொருட்களை அந்த ஜாடிகளில் போட்டன. நீர் பாதி நிரம்பிய ஜாடிகளில் போட்டன. மண் நிரம்பிய ஜாடிகளில் போடுவதை விரும்பவில்லை. நீரில் மூழ்கும் பொருட்களைப் போட்டன. அதாவது, நீர்மட்டத்தை அதிகரிக்கும் பொருட்களைப் போட்டன. சுருக்கமாகச் சொன்னால், சமயோசித அறிவை போதிக்கும் அழகிய கற்பனைக் கதை மட்டுமல்ல ஈஸாப்பின் கதை. அது காகங்களின் அறிவார்ந்த போக்கை அவதானித்த எவரோ எழுதியிருக்கிறார்கள். ஒருவேளை, ஈஸாப் கதைகள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேறு வடிவம் பெற்ற கதைகளாகக்கூட இருக்கலாம் என ரொமிலா தப்பாரே சொல்கிறார். இருக்கலாம். காகங்களின் நடத்தையை கூர்ந்து அவதானிக்கும் வாய்ப்புகள் இந்தியச் சமுதாயத்தில் அதிகம் என்பது ஒரு உண்மை. 2014-ல் இன்னும் சில பரிசோனைகள் நடத்தப்பட்டன. அதன் முடிவு - காகங்களின் அறிதலும் காரிய-காரண உறவுகளை உணர்வதும் முழுமையாக இல்லை என்றாலும் நன்றாகவே இருக்கிறது – ஏறக்குறைய 5-7 வயதுகளில் உள்ள மானுடக் குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு இணையானது.

சிறுமியும் காகங்கள் அளித்த ‘பரிசு’களும்

2015-ல் பிபிசி ஒரு செய்தியைக் கூறியது. கபி மான் (Gabi Mann), எட்டு வயது குழந்தை. 2013-ல் அவளும் அவள் அன்னை லிஸாவும் காக்கைகளுக்கு உணவு வைக்க ஆரம்பித்தனர். வேடிக்கையாக அல்லது இரக்கத்தினால் இருக்கலாம். ஆனால், விரைவில் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். காகங்கள் அந்த எட்டு வயதுச் சிறுமிக்கு ‘பரிசுப் பொருட்களைக்’ கொண்டுவந்து அளிக்க ஆரம்பித்தன. சின்னச் சின்ன பொருட்கள். பளபளக்கும் பொருட்கள். சிறு கற்கள். இவை அனைத்தையும் அந்தச் சிறுமி சேகரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறாள். அந்தச் செய்தி ‘ரிப்போர்ட்டில்’ சொல்லப்படும் வார்த்தைகள் சுவாரசியமாக இருக்கின்றன. கபியும் அவரது அன்னையும் அவ்வப்போது மீந்துபோன உணவை காகங்களுக்குப் போடவில்லை. ஒரு நித்திய சடங்காகவே காகங்களுக்கு உணவு வைப்பதை செய்தார்களாம் (‘started offering food as a daily ritual, rather than dropping scraps from time to time’.) இந்த வார்த்தைகளில் இருக்கும் இந்தியத்தன்மையை தவறவிடுவது சற்றே கடினம்தான்.

இப்போது இந்தியச் சூழலைச் சற்றே பார்ப்போம்.

காலையில் காகத்துக்கு உணவு வைப்பவர்களிடம் பேசினீர்களென்றால், அவர்களில் பலருக்குக் காகங்களுடன் தனிப்பட்ட ஒற்றைக்கொற்றை உறவுகள் இருப்பதை கவனிக்கலாம். அவர்கள் ஏதாவது ஒரு காகத்துடன் அன்யோன்யமாக உறவுகொண்டிருப்பார்கள். இறந்த தம் முன்னோர், பெற்றோர் எவராவது ஒருவரின் பெயரை, வழக்கமாக வரும் ஒரு காகத்துக்கு வைத்திருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட காகத்தின் ஆளுமை குறித்து சில கதைகள்கூட அவர்களிடம் இருக்கும். காகங்களின் நேரம் தவறாமை, நாம் தாமதித்தால் அவற்றின் குரல்களில் வெளிப்படும் சீற்றம், இத்யாதிகளை அவர்கள் அவதானித்திருப்பதைக் காணலாம். இவை எல்லாம் ஒருவிதத்தில் அறிவியல் அறிதலுக்கான அடிப்படை உள்ளீடுகள்தான். ஆனால், அவை தனிப்பட்ட கதைகள் என்ற அளவிலேயே தங்கி நின்றுவிட்டனவே அன்றி, அதற்கு அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. அதுதான் ஏன் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

இன்றைக்கு அறிவியல், காகங்களின் செயல்படு திறனானது பல தனிப்பட்ட செயல்களை ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி தர்க்கரீதியாக இணைத்து நகரும் தன்மை கொண்டது என்று சொல்கிறது. இது இன்றுவரை மனிதர்களிடையேயும் சிம்பன்ஸிகளிடையேயும்தான் கண்டடையப்பட்ட ஒரு குணாதிசயம். இன்று காகங்களிடையேயும் நாம் காண்கிறோம். அவை சமுதாயமாக வாழும் பறவைகளும்கூட. இப்படிப்பட்ட பறவைகளுடன் மனித சமுதாயத்துக்கு ஒரு உறவுப்பாலத்தை நம் பண்பாடு நமக்கு அளித்திருக்கிறது. ஆனால், நாம் ஏன் அதனை அறிவியல் பயணத்துக்காகப் பயன்படுத்த முடியவில்லை?

அதை மூடநம்பிக்கை என கிண்டலடிக்கலாம். குறுகிய பகுத்தறிவு அல்லது போலியான பகுத்தறிவு நமக்கு அப்படி கிண்டலடிக்கத்தான் கற்றுத் தந்திருக்கிறது. பொதுப்புத்தியில், திரைப்பட ‘நகைச்சுவைகளில்’கூட காகங்களுக்கு உணவூட்டுவது கிண்டல் செய்யப்படுகிறது. இந்தப் போலி பகுத்தறிவுதான் அறிவியலுக்கு எதிரான ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூர்க்கத்தனமான எதிர் - எதிர்வினை எல்லாமே இங்கே ஏற்கெனவே இருந்தது என சொல்வது. இன்று இணைய யுகத்தில் இந்நிலை மாறிவருகிறது என்று சொல்லலாம். மேற்கத்தியர் அல்லாத பண்பாடுகள் தம் பண்பாட்டு அம்சங்களை அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ளவும், அவற்றின் பன்முகப் பரிமாணங்களை தெரிந்துகொள்ளவும் முன்வருகின்றன. ஆங்கிலக் கல்வி கற்று பாரம்பரியத்திலிருந்து பண்பாட்டு அந்நியரான பொது மனநிலைக்கு எதிரான ஒரு மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரல் இன்று எழுந்து வருவதை காண்கிறோம்.

உதாரணமாக, க. சுதாகர் எழுதிய ‘6174’ என்கிற அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவலை எடுத்துக்கொள்வோம். அந்நாவலில், கோலம் போடுவதன் பின்னால் உள்ள அறிவியல் அம்சங்கள் பேசப்படுகின்றன. அமெரிக்காவில், ‘தெற்காசிய நாடுகளில் பெண்களின் நிலை’ குறித்து பேசும் வழக்கமான ஒரு இடதுசாரி பெண்ணியப் பேச்சாளர், கோலம் போடுவதை இந்தியப் பெண்கள் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்தும் பண்பாட்டுச் சிறைக்கம்பிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். ஒரு காணொளியைக் காட்டுகிறார். ஒரு ஐ.டி. கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கும் பெண் ரங்கோலி போடுகிறாள். ஏன் என்று கேட்டால், மனத்துக்கு இதமாக இருக்கிறது என்கிறாள். கதையின் நாயகி இதனை எதிர் கேள்வி கேட்கிறார். அவர், கோலங்களில் உயர் கணித அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். டாக்டர் நாரணன் என்கிற கணிதவியலாளர், இதில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்திருப்பதை அந்தக் கதாநாயகி கூறுகிறார்.

அந்த ‘தெற்காசிய’ பெண்ணியலாளரும், கோலம் போட்டால் மனநிம்மதி கிடைப்பதாகச் சொன்ன பெண்ணும், அந்த ஜானகி என்கிற கணிதவியல் கதாபாத்திரமும் கற்பனைகள். ஆனால் டாக்டர் நாரணன், ரத்தமும் சதையுமான நபர். எக்ஸ்-ரே வானவியலாளர். அவர் ஒரு இணையதளமே வைத்திருக்கிறார். பெரும் அழகியலும் கனக்கச்சிதமான சிக்கல்களும் கொண்ட ஒரு அமைப்பாக கோலங்கள் உள்ளன என்கிறார் அவர்.

சுதாகரின் நாவல் 2012-ல் வெளிவந்தது. அதில் ஒரு கற்பனைப் பெண் சொல்கிறார், கோலம் போடுவது மனத்துக்கு இதமாக இருக்கிறது என்று. 2014-ல், சென்னை ஐஐடி-யில் கோலம் போடுவது குறித்து ஒரு பட்டறை நடத்தப்பட்டது. அதில் பங்குகொண்ட ஒரு பெண் சொன்னார், கோலம் போடும் பட்டறையில் கலந்துகொண்டு கோலம் போட்டபோது அதில் மன-சிகிச்சை அளிக்கும் தன்மையை தான் உணர்ந்ததாக அவர் கூறினார். சுதாகர் கற்பனையாகக் கூறியதில் ஒரு பண்பாட்டு உண்மை இருந்திருக்கிறது.

கோலங்கள், கணிதத் திறனுடனும் அழகியலுடனும் மட்டுமல்ல, மன ஆரோக்கியம் அளிக்கும் பயிற்சியாகவும் செயல்பட முடிந்தவை. இவை எல்லாமே ஆராய்ச்சிக்குரியவை. காக்கைக்கு உணவளிப்பதும் சரி, கோலம் போடுவதும் சரி, நம் காலைகளின் கலாசார அம்சங்கள். அவை நம் அறிவுலகப் பயணங்களுக்கான சாவிகளாகவும் இருக்கின்றன. அவற்றை நாம் உணர வேண்டும் என்பதுதான் விஷயம்.

தொடர்புடைய காணொளிகள் -

● ஈசாப் கதையைச் செயல்படுத்தும் காகம்: https://youtu.be/NGaUM_OngaY

● பரிசளிக்கும் காகம் - பிபிசி காணொளி: https://youtu.be/HWXe7Js6GnI

மேலதிக விவரங்களுக்கு -

● Katy Sewall, The girl who gets gifts from birds, BBC Magazine, 25-Feb-2015, url: http://www.bbc.com/news/magazine-31604026

● Prof. Naranan’s website on Kolams: http://vindhiya.com/Naranan/Fibonacci-Kolams/

● Sarah A Jelbert et al., Using the Aesop's Fable Paradigm to Investigate Causal Understanding of Water Displacement by New Caledonian Crows, March 26, 2014, http://dx.doi.org/10.1371/journal.pone.0092895

● க. சுதாகர், 6174, வம்சி, 2012

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com