13. டெஸ்ஸி தாமஸ்

நீல நிற கோப்பைக் கையில் அனைத்துக் கொண்டு அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியினுள் மேலாளரைப்
13. டெஸ்ஸி தாமஸ்

நீல நிற கோப்பைக் கையில் அனைத்துக் கொண்டு அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியினுள் மேலாளரைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள் பதினாறு வயதேயான அச்சிறு பெண். மிக அமைதியான முகம் அதே நேரம் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற திடமான மனதுடனும் அமர்ந்திருந்தாள். வயதானவர்கள் ஓய்வூதியம் பெறவும், மத்திம வயதுடையவர்கள் பணம் எடுக்கவும், தொழிலதிபர்கள் பணப் பட்டுவாடா செய்வதற்கும், கல்லூரிப் பெண்களும் ஆண்களும் வரைவோலை எடுத்துக் கொண்டும் இருந்த வங்கியின் பரபரப்புக்கு சற்றும் பொருந்தாத, இதில் எதிலுமே சாராத இச்சிறு பெண் மேலாளரைப் பார்க்க வேண்டும் என கடந்த அரைமணிக்கும் மேலாக உட்கார்ந்திருக்கிறாள்.

மேலாளர் அறையினுள் இருந்தவர் வெளியே வருகையில் தனியே காத்திருக்கும் அச்சிறுமியை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு கடந்து சென்றார். மென்மையாக கதவைத் தட்டிவிட்டு உள் நுழைந்த அப்பதின் வயதுப் பெண்ணை புருவத்தை உயர்த்தியபடியே ஏறிட்டார் மேலாளர். தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்துக்குப் பின் தன்னிடமிருந்த நீல நிற கோப்பை அவரிடம் கொடுத்தாள் அச்சிறுமி. உள்ளே அவளுடைய பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் தேர்ச்சி சான்றிதழ்கள், அவள் வாங்கிய மற்ற பரிசுச் சான்றிதழ்கள் தேதிவாரியாக அழகாக கோர்க்கப்பட்டிருந்தன. கணக்கிலும் அறிவியலிலும் இரு வகுப்புகளிலுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தாள் அச்சிறுமி.

மேலாளரிடம் தன் குடும்பச் சூழலை சொல்லி தனக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கு கல்விக் கடன் கொடுத்து உதவ முடியுமா எனக் கேட்டாள். அவளுடைய குடும்ப விபரங்களைக் கேட்டறிந்த மேலாளர் மறுநாள் தானே அவள் வீட்டுக்கு வந்து இது குறித்து பேசுவதாக வாக்களித்தார். குடும்பச் சூழல் காரணமாக வங்கிக்கு பெரியவர் யாரும் துணையில்லாமல், பயமோ சங்கோஜமோ சிறிதும் இன்றி தன் படிப்பு ஒன்றே இலக்காக கடன் உதவி கோறி நின்ற அச்சிறுமி தான் டெஸ்ஸி தாமஸ். இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர்.

டெஸ்ஸி 1963 ஏப்ரல் மாதம் இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் பிறந்தார். நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருக்கு நடுவே பிறந்தவர் டெஸ்ஸி. சிறு வயது முதலே அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவரது தந்தை வனத்துறை அதிகாரியாக இருந்தவர் தாயார் இல்லத்தரசி. குழந்தைகளை எவ்விதத்திலும் குறை இல்லாமல் முக்கியமாக படிப்பில் குறை வைக்காமல் வளர்த்த பெருமை டெஸ்ஸியின் தாயாரைச் சேரும். டெஸ்ஸியின் பதிமூன்றாவது வயதில், அவரது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது வலதுபுறம் முழுவதும் செயலிழந்து போனது. படிந்திருந்த போதும் தாய்க்கு வீட்டைப் பராமரிப்பது தவிர வேறு எதுவும் தெரியாது. ஆறு குழந்தைகளையும் நோயுற்ற கணவனையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதென்பது மிகவும் இயலாத காரியமாக இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தில் அவர் தாய் மிகவும் தெளிவாக இருந்தார். எப்பாடுபட்டாவது பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல கல்வியை வழங்கிவிட வேண்டும் என.

அப்போது டெஸ்ஸி ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புக்கு அடியெடுத்து வைத்த சமயம். டெஸ்ஸியின் கனவு, தான் ஒரு சிறந்த பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்பது. பொறியியலைப் பற்றி அந்த வயதில் அவருக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவரது பெருங்கனவாக அது வளர்ந்தது.

வங்கி மேலாளர் டெஸ்ஸியிடம் வாக்களித்தது போலவே அவர் வீட்டுக்குச் சென்று அவர் தாய் தந்தையிடம் பேசி அவரது கல்லூரி படிப்புக்கு கடன் தர ஒப்புதல் கொடுத்தார். மாதம் நூறு ரூபாய் தவணையில் திருசூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தன் விருப்பப்படி பொறியியல் பட்டப்படிப்பை துவங்கினார் டெஸ்ஸி.

சிறு வயதில் தும்பா ராக்கட் தளத்தின் அருகே அவர்களது குடும்பம் குடியிருந்தது. அங்கிருந்து ஏவப்பட்ட ராக்கட்டுகளைப் பார்த்து டெஸ்ஸி மிகவும் அதிசயித்தார். வெண்புகையை சீரான நீள் கோடாக வான் நெடுக வெளியிட்டுக் கொண்டே வேகமாக மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருப்பார். அப்போது அவர் நினைத்திருக்கவில்லை பின்னொரு நாளில் தானும் அது போன்ற ராக்கட்டுகளை வின்னில் செலுத்தும் பணியில் ஈடுபடுவோம் என்று.

வின்னில் பறந்த ராக்கெட்டுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அன்றே அவர் ஆழ்மனதில் ராக்கெட் அறிவியல் புகுந்துவிட்டது. வெற்றிகரமாக தன்னுடைய பிடெக் படிப்பை முடித்த டெஸ்ஸி அடுத்து புனேவிலுள்ள ஆயுத தளவாட தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பான எம்டெக்கையும் முடித்தார். படிப்பில் மட்டுமல்ல டெஸ்ஸி விளையாட்டிலும் சிறந்தவர். கல்லூரி நாட்களில் அவர் பேட்மிட்டனில் சிறந்த வீரராகவும் விளங்கினார்.

எம்டெக் முடித்த போதே குடிமையியல் தேர்வு எழுத விரும்பி விண்ணப்பித்தார். தேர்வு எழுதி முடித்ததும் அடுத்த தேர்வுக்கான அழைப்பு வந்த அதே நாளில் டிஆர்டிஓ (Defence Research and Development Organization) அமைப்பிடமிருந்து பணி நேர்காணலுக்கான அழைப்பும் வந்தது. குடிமையியல் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகியிருக்க வேண்டிய டெஸ்ஸியின் விதி அவரை வேறு ஒரு புதிய கோணத்திற்கு இட்டுச் சென்றது.

மாவட்ட ஆட்சியர் ஆவதா இல்லை தனக்கு மிகவும் பிடித்த ராக்கட் சயின்ஸில் தன்னை நிருப்பிப்பதா என்ற மனதின் போராட்டத்தில் அவர் தன் மனதுக்கு மிக நெருக்கமான ராக்கட் சயின்ஸையே தேர்ந்தெடுத்தார். ஹைதராபாத் சென்று நேர்காணலில் பங்கு பெற்றார். அதில் வெற்றி பெற்று அவர் டிஆர்டிஓ வில் 1988 ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் குழுவின் கீழ் இளநிலை விஞ்ஞானியாக சேர்ந்தார்.

ராக்கெட் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த கலாம், டெஸ்ஸியின் திறமையை உணர்ந்து அவரை ஏவுகணை திட்டக்குழுவில் சேர்த்துக் கொண்டார். டெஸ்ஸி இப்பணியில் சேரும் போது இவரையும் சேர்த்து விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலேயே பெண்கள் இருந்தனர். ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ராக்கெட் விஞ்ஞானத்தில் ஒரு பெண்ணாக இவரின் பணி மிகவும் சிறப்புக்குறியது. பெண்கள் பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிடாமல் கல்லூரி வரை செல்ல ஆரம்பித்த காலகட்டம் அது. இருப்பினும் பொறியியல் துறையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் பெரும்பான்மையாக ஆண்களே அரிதாக தேர்ந்தெடுக்கும் ராக்கெட் சயின்ஸ் கல்வியை பெண்கள் தேர்வு செய்வது அரிதிலும் அரிதாக இருந்த நேரம். அறிவியல் மற்றும் கணிதத்தில் முக்கியமாக பௌதீகத்தில் இருந்த அவருடைய தீராத தாகமே அவரை ஏவுகணைப் பாதையில் செலுத்தியது. 

முதல் அக்கினி (Agni -1) ஏவு கணை 1989 இல் அனுப்பப் பட்டுச் சோதனை செய்யப் பட்டது. இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்து, சோதித்த பெரும்பான்மையான அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணைகள் அனைத்திலும் டெஸ்ஸி பங்கெடுத்தார்.  மேலும் பல்வேறு போராயுத வெடிகள் தூக்கிச் செல்லும் தனித்துவக் கட்டளை ஏவுகணை மீட்சி வாகனம் (Misson Guidance Systems for Mulitiple Independent Re-entry vehicle that carries multiple warheads) சம்பத்தப் பட்ட புதிய ஆய்வு அமைப்புத் துறையிலும் ஈடுபட்டவர்.

அக்னி 3 ஏவுகணையின் ஆரம்பகட்ட தோல்வி இவரை தூங்கவிடாமல் செய்தது. நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரங்கள் பசி, தூக்கம் வீடு வாசல் என எதையும் பாராமல் அத்தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்ததில் டெஸ்ஸியின் பங்களிப்பு முகியமானது மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலைக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அக்னி வெற்றிகரமாக 2008ல் சோதிக்கப்பட்டது..  அதன் பின்பே அவருக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

வளி மண்டலத்தில் அதீத திசை வேகத்தில் செல்லும் ஏவுகணையின் வெளிப்புறம் மிக அதிகமான வெப்பம் உருவாகும். இது உட்சபட்சமாக 3000 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அவ்வெப்பத்தை சமாளிக்க ”வளி மண்டல ஏவுகணை நுழைவு முறை”(Re Entry Vehicle system- RVS) என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதில்  டெஸ்ஸி தாமஸின் நிபுணத்துவம் வெகு சிறப்பானது.

அடுத்து சில மாதங்களிலேயே அக்னி 4 க்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டது டெஸ்ஸியின் குழு. நாலாயிரம் கிமீ தொலைவுக்கு பாயும் ஏவுகணைத் திட்டத்தின், திட்ட இயக்குநராக டெஸ்ஸி நியமிக்கப்பட்டார். 2011 ல் அக்னி 4 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதன் பின் அக்னி ஏவுகணைத் தொடர் வரிசையில் 2009 ல் ஆரம்பிக்கப்பட்ட அக்னி 5 திட்டத்திலும் தொடர்ந்து பணியாற்றினார். (ஏப்ரல் 19, 2012) அக்னி 5 வெற்றிகரமாக விண்ணில் ஏவி 3500 கி.மீ. பயணம் செய்தது. டெஸ்ஸியின் ஆளுமைத் திறனும் விவேகமும் அவரை ஆண்கள் நிறைந்த விஞ்ஞானத் துறையில் வெற்றி நடை போட வைத்தது.

இத்தனைக்கும் காரணம் தன் அறிவும் திறனும் மட்டுமே என்று மார் தட்டிக் கொள்ளாமல் தன்னுடைய வெற்றியை உடன் பணிபுரிந்தவர்களின் வெற்றியாக, தன் வழிகாட்டியின் வெற்றியாக அத்தனைக்கும் துணையாக நின்ற தன் குடும்பத்தின் வெற்றியாக முன்னிருத்துகிறார் டெஸ்ஸி. அவர் புனேயில் மேற்படிப்பு படிக்கும் போது தன் கணவர் சரோஜ் படேலை சந்தித்ததாக கூறுகிறார். அவர் இந்திய கடற்படையில் கமாண்டராக மும்பையில் வேலை செய்து வருகிறார். இவர்களது திருமணம் மதம் கடந்த திருமணம். இவர்களது அன்பான வாழ்க்கையை அவர்களது மதம் எந்த அளவிலும் பாதித்ததில்லை. இவர்களுக்கு தேஜஸ் என்ற மகன் உண்டு.

இத்தனை பெரிய பொறுப்பிலும் பதவியிலும் இருந்த போதிலும் அவர் குடும்பத் தலைவி என்ற பொறுப்பிலிருந்து தப்பித்ததில்லை. மிகச் சரியாக துல்லியமாக ராக்கெட் சயின்ஸை போலவே குடும்பத்தையும் அலுவலையும் சமநிலையில் பார்த்துக் கொண்டார். சக மனுஷியாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடமும் நண்பர்களிடமும் மிகவும் அன்பாகவும் தோழமையுடனும் பழகும் இயல்புடையவராக இருக்கிறார்.

டெஸ்ஸி ஒரு போதும் 'இது ஆண்களின் ஆளுமை நிறைந்த துறை, ஒரு பெண்ணாக இதில் இயங்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது' என்பது போன்ற எந்த குற்றச்சாட்டையும் வைத்ததில்லை. விஞ்ஞானத்துறை என்பது பால் பேதமற்றது. முற்றிலும் அறிவும் அறிவியலும் சார்ந்தது. புத்திக்கூர்மையும் விவேகமும் இருந்தால் ஆண் பெண் என்ற பால் பேதமின்றி யார் வேண்டுமானலும் எத்துறையிலும் சாதிக்கலாம் என்ற கருத்துடையவர் டெஸ்ஸி.  

இவரின் சாதனைகளுக்காக முனைவர் பட்டம், லால் பகதூர் சாஸ்திரி விருது, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துகலாமிற்கு நிகரான ஏவுகனைப் பெண்மனி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி Missile Woman of India அக்னிபுத்திரி, இந்தியாவின் ஏவுகணை மனிதன் டாக்டர் அப்துல் கலாமிற்கு நிகராக ஏவுகணைப் பெண்ணாகத் திகழ்ந்தவர். அவரின் கீழ் உதவி திட்ட இயக்குனராக பணிபுரிந்த பேறு பெற்றவர். டிஆர்டிஓ-வின் திட்ட இயக்குநர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பிஎச்டி செய்தவர், பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றவர் பெற்றுக் கொண்டு இருப்பவர், பேட்மிட்டன் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். பல திறமைகளையும் பன்முகத்தன்மையும் கொண்டவர் ஆயினும் எந்தவிதமான கர்வமும் அலட்டலும் இல்லாத டெஸ்ஸி தாமஸ், இன்றளவிலும் சாதனைகளை சத்தமில்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com