30. சச்சி பௌலோமி

மெத்தென்ற மலர் மஞ்சத்தின் நடுவே ஒரு வெண்தாமரையை தண்டுடன் இருத்தியிருந்தது போல துயில் கொண்டிருந்தாள் இந்திராணி.
30. சச்சி பௌலோமி

மெத்தென்ற மலர் மஞ்சத்தின் நடுவே ஒரு வெண்தாமரையை தண்டுடன் இருத்தியிருந்தது போல துயில் கொண்டிருந்தாள் இந்திராணி. தண்மையான மாலைப் பொழுதொன்றில்,போகிற போக்கில் சூரியன் கொத்து கொத்தான மேகங்களுக்கு தன் ஒளியை வாரி வழங்குகையில் அவ்வொளி பட்டு ஓரங்களின் வெள்ளியென மினுக்கும் வெண்மேகப் பொதியைப் போன்று தன் மேனி மின்ன, பஞ்சணையில் அவள் துயில் கொண்டிருந்தாள். கனவில் எதைக் கண்டாளோ அவள் இதழ் கடையோரம் புன்சிரிப்பு, தாரைகள் என முளைத்து ஒளி சிந்தின.

கனவிலும் அவளது புன்னகை விரிந்து விரிந்து ஈரேழு உலகங்களையும் தன்னுள் அடக்கிவிடும் ஆர்ப்பரிப்புடன் பரவியது. அதன் காரணம் அவள் மென்கரத்தைப் பற்றியிருந்த ஆறடி அழகன்தான். அவள் கைத்தலம் பற்றி காடு வெளிகள் மலை முகடுகள் அனைத்தையும் கடந்து அவளுக்கான ஒரு இந்திரலோகத்தை சிருஷ்டித்து  தன் இந்திர சிம்மாசனத்தின் அருகமர்த்தியவன். ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் அதே இளமைத் துடிப்பு மிகுந்த அப்பசுமையான நினைவு கனவாகி அவளுள் கசிந்துருகிக் கொண்டிருந்தது. 

அதே சமயம், ஆ! அதோ அங்கே என்ன தூசும் புழுதியும் பறக்க, அனல் தெறிக்க யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதே. தன் கணவன் தேவேந்திரன் முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ தேரில் நின்று போர் புரிந்து கொண்டிருக்கிறானே. அவனைச் சுற்றிலும் உலக்கை போன்ற கைகளும் கால்களும், கரிய தோற்றமும், மலை போன்ற உடலும், தேக்கைப் போல உயர்ந்த உருவமும் கொண்டுள்ள ராட்சத கணங்கள் நின்று தாக்குகிறார்களே என அவள் மனம் பதைத்தது. இப்போது இதழில் இருந்த இளநகை மறைந்து பெரும் பதற்றம் அவளை சூழ்ந்து கொண்டது.

சட்டென்று கண்விழித்த இந்திராணி உறக்கத்தின் தேவதையான நித்திரா தேவியை அழைத்தாள். ‘அழைத்தீர்களா தேவி’ என்று பணிவாக கேட்டுக் கொண்டே அவள் முன் வந்தாள் நித்திரா தேவி.

‘ஆம் நித்ரா. என்றைக்கும் இல்லாமல் இன்று ஏன் எனக்கு தொடர்பில்லாத பல கனவுகள் வந்து அலைக்கழிக்கின்றன எனத் தெரியவில்லை’

‘தேவி. தொடர்பில்லாதவை எதுவும் நம் ஆழ்மனதில் தோன்றுவதில்லை. ஆழ் மனத்தின் ஏக்கங்களோ நினைவுகளோதான் அவ்வப்போது கனவாக வெளிப்படுவது என்பது தாங்கள் அறியாததா?’

‘அப்படி என்றால் நான் கண்டவை அனைத்தும் என்னுடன் தொடர்புடையதா? அந்த யுத்தம் உண்மையில் நிகழ்ந்ததா அல்லது நிகழப் போவதா? ஐயோ அந்த ராட்சத கனங்களுடன் என் கணவர் போரிடுகிறாரே. யார் ஜெயிப்பர் யார் கொல்லப்படுவர் என்பது தெரியவில்லையே. எனக்கு பயமாக இருக்கிறது நித்ரா. எனக்குப் புரியும்படி சொல்லேன்’

‘தேவி உங்களுக்கு ஆழ்ந்த நித்திரையை அளிக்கிறேன். நன்கு உறங்குங்கள். தானாகவே அனைத்தையும் அறிவீர்கள்’. சொல்லியபடியே இந்திராணியின் இமைகளைத் தழுவிக் கொண்டாள் நித்ரா தேவி. அடுத்த நொடி இந்திராணி ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

நித்திரையின் ஆழத்தில் அவள் தன் பூர்வ ஜென்மம் அடைந்தாள். வைவஸ்வத மன்வந்தரத்தில் விந்தியமலை முகடுகள் சூழ்ந்து அரணமைத்த காலகவனம் என்னும் பெருங்காட்டில் காலகேயர்களும் புலோமர்களும் வாழ்ந்திருந்தனர். காலகை மற்றும் புலோமை என்ற இரட்டைச் சகோதரிகளான தங்கள் மூதாதை பெண்களின் தவப்பயனால் யாராலும் தம் இனத்தை அழிக்க முடியாத வரத்தை யுகம் யுகமாக பெற்று வளர்ந்து கொண்டிருந்தனர். தங்கள் குடிவழியில் வந்த பெண்ணால் மட்டுமே தம்மினம் அழிய வேண்டுமே அன்றி பிரிது வேறு எந்த சக்தியாலும், மானுடராலும் தேவர்களாலும் தெய்வங்களாலும் தம் இனம் அழியக் கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தனர் காலகையும் புலோமியும். காலகை வழி வந்தவர்கள் காலகேயர்கள் எனவும் புலோமை வழி வந்த வம்சத்தினர் புலோமர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இப்படி யாராலும் அழிக்க முடியாத அரக்கர் கூட்டம் பல்கி பெருகி, இந்திர லோகம் வரை தங்கள் அரசாட்சியை நிறுவ முயன்றது. அவர்களுடன் போர் புரிய முப்பத்து முக்கோடி தேவர்களையும் தயாராகச் சொல்லி போரிடும் நாளை நிமித்திகர்களிடம் குறித்துத் தரச் சொன்னான் தேவேந்திரன். அவர்கள் இந்திரனிடம் அவர்களை அவர் குலத்துப் பெண் அன்றி வேறு எவராலும் எவ்விதத்திலும் போரிட்டு வெல்ல முடியாது என்பதைக் கூறினர். இதைக் கேட்ட இந்திரன் சோர்ந்து அரியணையில் அமர்ந்துவிட்டான்.

‘பெண்களின் பெருவஞ்சத்தால் உருவான குலம் அது. அப்பெண் கொடிவழியில் தோன்றிய ஒருத்தியால் அது அழிக்கப்படுவது இயல்வதே அல்ல’ என்றார் அமைச்சர்.

‘அழிக்கப்பட்டாக வேண்டும். வேறுவழியே இல்லை. இல்லையென்றால் நாம் நாளை அவர்களுக்கு அடிமையாகி சாமரம் வீசிக் கொண்டிருக்க வேண்டியது தான்’ என்றான் இந்திரன்.

யோசித்தவாறே இதற்கு என்ன வழி என்று மனத் தவிப்புடன் அரண்மனையில் சுற்றி வந்தான். அவ்வமயம் நாரதர் இந்திரனின் அவைக்கு வந்தார். அவரிடம் வழி கேட்டு சரணடைந்தான் இந்திரன். ‘அரசே, கேட்பதற்கு அரிதெனத் தோன்றும். ஆனால் அக்குலத்தில் பிறக்கும் பெண்ணால் அக்குலம் அழியும் என்பதைப்போல இயல்பான நிகழ்வு பிறிதென்ன?’ என்றார். வியப்புடன் நோக்கிய இந்திரனிடம் ‘இதுவரை அழிந்த அனைத்துக் குலங்களும் அக்குலம் ஈன்ற கன்னியரால் அல்லவா அவ்வாறாயின?’ என்றார் நாரதர். இந்திரன் அது உண்மை என அக்கணமே உணர்ந்தான்.

‘எல்லைகளை பெண்களின் கருவறைகள் கடப்பதன் மூலமே இங்கு உயிர்குலம் விரிந்துபரவுகின்றது’ என்றார் நாரதர். ‘பெருவிழைவு கொண்ட பெண் ஒருத்தி அக்குடியில் எழட்டும். பெண் முளை என்றால் குலமே விதை. உறை கிழிக்காமல் அவள் எழமுடியாது.’ என்றார்.

நாரதரின் சொல்படி தன் மனைவி இந்திராணியின் காதில் ‘தேவி நீ சச்சி என்ற பெயரில் புலோம குலத்தில் தோன்றுவாயாக. நீ புலோமனின் மகளெனத் தோன்றி சீரும் சிறப்புமாக புலோம இளவரசி சச்சி பௌலோமி எனும் பெயரில் எழுக. உரிய பருவத்தே நான் உனை வந்தடைவேன்’ என்றான். அதே சமயம் புலோம குலத்தரசி தன் கனவில் சிம்மத்தில் ஏறி பேரழகுப் பெண் ஒருத்தி தீயெனப் பொசுக்கி எரிக்கும் சினத்துடன் தன் வயிற்றில் நீர்த்துளியென நுழைவது போல் கண்டாள். அத்துளி நுழைந்த நேரம் அவள் வயிறு குழைந்தது, உடல் விதிர்த்து, அதரங்களில் சிரிப்பொலி தோன்ற எழுந்தமர்ந்தாள். அருகில் இருந்த அரசன் புலோமன் அவளின் சிரிப்புக்கான காரணம் அறிந்து மகிழ்ந்தான். இத்தனை காலம் குழந்தை இல்லை என்ற கவலை தீர்ந்தது என்று மகிழ்ந்த புலோமன் நிமித்திகர்களை அழைத்து விபரங்கள் கேட்டான்.

‘சிம்மம் மீது அவள் அமர்ந்திருந்தது அவள் பெருஞ்சினம் கொண்டவள் என்பதை காட்டுகிறது, அரசே’ என்று நிமித்திகர் சொன்னார்கள். ‘குருதிவிடாய் கொண்டவள் அவள். எரிநிகர் கன்னி’ என்றனர். தைத்யர்குலத்தின்  பொறாமையனைத்தும் கூர்கொண்டு விதையென்றாகி முளைத்தெழுந்தாள் சச்சி. அவள் ஜாதகம் கணித்த நிமித்திகர்கள் அவள் இந்திரனின் அரியணையில் அமர்வாள் என்றனர். அதைக் கேட்ட புலோமன் ’மண்ணுலகமின்றி இனி விண்ணுலகமும் எனதாட்சி, அந்த இந்திர சபையும் நமதாகும்’ என்று கூத்தாடினான்.

சச்சி பருவ வயதை அடைந்தாள். அழகுகளை மொத்தமாகக் கொட்டி வார்ப்பில் இட்டு எடுத்தது போல நிகரற்று விளங்கினாள். ஆனால் தீயைப் போல எப்போதும் கனன்று கொண்டே இருந்தாள். காரணமின்றி மிகுந்த கோபம் கொண்டிருப்பவளானாள். அவளுடன் பழகுவதற்கே தோழிகள் அஞ்சினர். ஆண்கள் அவள் பார்வைபடும் இடத்தில் கூட நிற்பதில்லை. அழகிருந்து என்ன, குணம் இல்லையே. கண்டாலே மனது குழையும் நேர்த்தி இல்லையென ஆடவர்கள் அவள் பக்கம் பார்வையைக் கூட திருப்பாது சென்றனர். போதததற்கு அவள் அரக்கன் புலோமனின் மகள் வேறு. அவளை நெருங்கவே எவரும் துணியவில்லை. சச்சி தனியள் என இருந்தாள்.

அவளின் அந்தப்புர தோழியருக்கு எல்லாம் அவர்களுக்காகவே காத்திருக்கும் ஆண்மகன்கள் காதலர்கள் என இருந்தனர். மாடத்திலும், தோட்டத்திலும் வெளியே நதிக்கரையிலும் காதலாகி கசிந்துருகி ஒருவர் மற்றவருக்காக ஏங்கியும், பிற தோழிகளிடம் அவர்கள் செய்த சல்லாபங்களையும் சீண்டல்களையும் பகிர்ந்து சிரித்தும், வெட்கத்தில் கன்னக்கதுப்புகள் சிவந்தும் இதழ் கனிந்தும் என அவர்களைக் காண சச்சியிற்கு பொறாமையும் கோபமும் எல்லை மீறிப் போயின. கையறு நிலை கொண்டவளைப் போல தன்னுடைய தாபத்தை கோபத்தால் தணித்துக் கொண்டாள்.

புலோமன் ஒளியுரு கொண்டு இந்திரனின் அமராவதியில் உலவி வந்தான். அவ்விடத்தின் அழகு அவனை அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கிவிட்டது. தேவர்களை வம்புக்கு இழுத்து போருக்கு அழைத்தான். அதற்கு மேல் பொறுக்கமாட்டாத இந்திரன், போருக்குத் தயாரானான். தேவர்கள் புலோமர்களையும் காலகேயர்களையும் எதிர்த்து போர் புரியலாயினர். ஆயிரம் பேரைக் கொன்றாலும் லட்சம் பேராக திரும்பி வந்து தாக்கினர் புலோமரும் காலகேயர்களும்.

பெண்ணால் வரம் பெற்ற குலம் அக்குடிப் பெண்ணால் மட்டுமே அழியும் என்ற விதியை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டதை உணர்ந்தான் இந்திரன்.

அன்றிரவு சச்சியின் அந்தப்புரத்தில் ஆறடி ஆணழகன் ஒருவன் நுழைந்தான். அவனைக் கண்டு அதிர்ச்சியில் அலற வாய்திறந்த அந்தப்புர தோழிகள் அனைவரையும் கற்சிலை போல நிற்கச் செய்துவிட்டு, சச்சியின் மஞ்சம் நோக்கி நடந்தான். உள்ளுணர்வால் சச்சி அவனை உணர்ந்தாள். இருந்தும் கண் மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்ய, மனது அவன் யார் எப்படிபட்டவன் என அறிய ஏங்கியது. அவள் இதயம் நெஞ்சுக்கூட்டை விட்டு வெளியே வந்துவிவேன் என்பதைப் போல வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

அவள் அருகில் அமர்ந்த அவன், தன் கரத்தால் சச்சியின் தலை கோதினான். ‘தேவி இந்நாளுக்காகத்தான் நான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். நீ என்னுடையவளாகும் தருணம் வந்துவிட்டது. எனக்கென மட்டுமே பிறந்தவள் நீ. அதன் பொருட்டே பிற ஆடவர் உன்னை அஞ்சி விலகினர். உன் சினம் உனக்கு பாதுகாப்பு வளையமாகியது. உன் மனதின் ஏக்கங்களையும் இதயத்தின் காதலையும் நான் அறிவேன். வா நதிக்கரையில் நாம் சந்திப்போம்” என்று கூறி மறைந்துவிட்டான்.

சட்டென்று கண்விழித்த சச்சி தான் கண்டது கனவா நினைவா என்றே புரிபடாமல் விழிதாள். மஞ்சத்தில் இருந்து இறங்கி  சுற்றுமுற்றும் பார்த்தாள். தோழிகள் எல்லாம் அவரவர் இடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு தோன்றியது போல் சிலையாக நின்றிருக்கவில்லை. யாரும் வந்து போன சுவடுகளும் மாடத்திலோ முற்றத்திலோ எங்குமே இல்லை. அந்தப்புர காவலாளிகள் இமைக்காமல் வெளியே காவல் புரிவதை கண்டாள். ச்சே இவை எல்லாம் வெறுங்கனவா என்று பெருமூச்சு விட்டபடியே தன் மஞ்சத்தில் அமர்ந்தாள். இல்லை என்பது போல் சற்றே சுருங்கி இருந்த பட்டு விரிப்பும், தலையனை அருகே இருந்த வெண்ணிற முத்து மாலையும் அவள் கண்களுக்குத் தெரிந்தன.

அதைக் கண்டவுடன் அளவற்ற வியப்பும் மகிழ்வும் ஒரு சேர அவளைத் தாக்கின. தான் கண்டது கனவல்ல என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்த முத்துமாலையை அள்ளி அணிந்து கொண்டு தன் மார்பில் தவழவிட்டாள். இனம் புரியாத பேரன்பை உணர்ந்தவள் ஆனாள் சச்சி. அதன் பின் பொழுதுவிடியும் வரை அவள் உறங்கவே இல்லை.

மறுநாள் மாலை மயங்கும் நேரத்தில் அவள் தன் கனவில் கண்ட ஆணழகனை சந்திக்க நதிக்கரைக்கு வந்தாள். ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு யுகமாகத் தெரிந்தது அவளுக்கு. நீல நதியில் வெள்ளி நிலா நீந்த ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்னமும் அவனைக் காணவில்லை. கண்டதெல்லாம் கனவு தானோ? தான் தான் மதிகெட்டு காத்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சலிப்பும் ஏமாற்றமும் அவளுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. திரும்பிச் செல்ல முயன்ற அவள் காதுகளின் “சச்சி” என  மென்மையான குரல் மயிலிறகைப் போல வருடிச் சென்றது. சுற்றுமுற்றும் பரபரப்போடும் பயத்தோடும் பார்த்தாள் சச்சி.

அவள் நின்றிருந்த மரத்தின் பின்னிருந்து அவன் தோன்றினான். அவனைக் கண்டவுடன் அவள் உள்ளம் துள்ளியது. இவன் தான், இவன் தான் எனக்கானவன் என இதயம் விம்மித் தனிந்தது. இதுவரை அவள் உள்ளத்தில் குடி கொண்டிருந்த பொறாமையும் கோபமும் சூரியனைக் கண்ட பனித்துளி போல உருகிக் கரைந்தன. மனம் நிச்சலனமாக மோன நிலைக்குட்பட்டதை உணர்ந்தாள் சச்சி. அவளை நோக்கி மயக்கும் சிரிப்புடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தான் இந்திரன். அவளின் மென் கரத்தைப் பற்றி ’நீ என்னை எதிர்பார்க்கவில்லை அல்லவா. உனை ஏமாற்றிவிடுவேன் என்று நினைத்து தான் திரும்பிச் செல்ல கிளம்பிவிட்டாயா தேவி’ என்றான்.

அரக்க மகளையும் தன்னவளாக்கிக் கொள்ள, காதலிக்க, அன்புடன் அரவணைக்க  ஒருவன் வந்துவிட்டான் என்ற நினைவே சச்சிக்கு பேருவுவகை அளித்தது. இத்தனை நாள் ஏற்பட்டிருந்த கழிவிரக்கத்தில் இருந்து மீண்டாள். அவனை நேசத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் வெட்கம் மேலிட நிலம் நோக்கினாள். தனன்று சூரியனைப் போல அவளை ஆட்கொண்டிருந்த கோபம் வெறுப்பு பகை எல்லாம் உருகி வழிந்து நிலவின் தண்மையென மாறியது.   

இருப்பினும் இளவரசிக்கே உரிய கம்பீரத்துடன் அவனை  நேர் கொண்டு நோக்கி ‘நீங்கள் யார். என்னைத் தேடி அத்தனைக் கட்டுக்காவலையும் மீறி என் அந்தப்பரத்துள்ளே வரும் துணிவு எப்படி வந்தது உங்களுக்கு?” என்று கேட்டாள்.

இந்திரனும் இளநகையுடன் “ம்ம்.. அத்தனைக் கட்டுக்காவலையும் மீற வைத்தது உன் மேல் நான் கொண்ட கட்டுகடங்காத காதல்தான் சச்சி” என்றான்.

காதல் என்று சொல்லி காமம் களைய வந்தீரோ? நான் கந்தர்வ மணம் புரியும் பெண் அல்ல. என்று சற்றி காட்டமாகவே கூறினாள் சச்சி. கள்ளத்தனமாக அந்தப்புரம் நுழைந்தவன் மனதுக்கு உகந்தவனே ஆனாலும் திருட்டுத்தனமாக ஒரு ஆண்மகனிடம் தன்னை ஒப்படைக்க ஒப்பவில்லை அவள் மனது.

அவள் கையை மேலும் இறுக்கிய இந்திரன். ”நீ எனக்கானவள். எனக்கு மட்டுமே உரித்தானவள். எத்தனை யுகங்கள் ஆனாலும் உனக்காக நான் காத்திருப்பேன். என் மீது நம்பிக்கை வரும் போது என்னுடன் வா” என்று சொல்லி விடைபெற்றான்.

தான் அதிகம் பேசிவிட்டோமோ என்று வாட்டம் கொண்டாலும் தன் பெண்மையை கௌரவத்துடன் அளிக்கவே சச்சி விரும்பினாள். விதிப்படி நடக்கட்டும் என்று அரண்மனைக்குத் திரும்பினாள். அன்றிலிருந்து தினமும் இந்திரன் ஒவ்வொரு விதமாக அவளைச் சந்தித்தான். பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் தேன் அருந்த வரும் வண்டாக, இளங்காலைக் கதிராக, மென் காற்றின் குளிராக, தினை உண்ண வரும் சிட்டுக்குருவியாக, மாமரக் கிளையில் தன் பேடையைத் தேடிக் கூவும் ஆண் குயிலாக என ஒவ்வொரு நாளும் அவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. நாட்கள் கூடக் கூட இந்திரனின் வசம் மனதை இழந்தாள் சச்சி. போரும் வெகு தீவிரமாக இருபக்கமும் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடியாத படி நடந்துகொண்டிருந்தது.

தன் தோள் சாய்ந்திருந்த சச்சியை அணைத்தபடியே இந்திரன் “இன்னும் எத்தனை நாள் நாம் இவ்வாறே சந்திப்பது சச்சி. உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள என் இதயம் துடிக்கிறது. என்னுடன் வந்துவிடு என்றான்.

”என் தந்தை அத்துனை எளிதில் உங்களுக்கு என்னைத் தரமாட்டார். அவர் என்னை இந்திரனின் அரசியாக்கும் விழைவு கொண்டுள்ளார். அமராவதியைப் பிடிக்க தேவர்களுடன்  போர் புரிந்து கொண்டிருக்கிறார்” என்று கண்களில் நீர் தளும்பிட வார்த்தைகளை உதிர்த்தாள் சச்சி.

இந்திரன் விஷமமாகப் புன்னகைத்தவாறே” ஓ! அப்படியா. அப்படியென்றால் உன் தந்தையை வென்றபின்பு உன்னை தூக்கிச் செல்வேன் என்றான்.

‘என் தந்தையை நீங்கள் நினைக்கும் வண்ணம் எளிதில் வென்றிட முடியாது. அவரைச் சுற்றி இருக்கும் புலோம குல வளையத்தை தகர்த்த பின்பே அவர் அருகில் கூட நெருங்க முடியும். குல வளையம் தகர்ப்பது என்பது அந்நியர் யாராலும் இயலாத காரியம். அதற்கு எங்கள் குடியின் மந்தணச் சொல்லும், சொல் நிரைகளும் அறிந்திருக்க வேண்டும்.”

‘அவ்வாறென்றால் நீ எனக்கு அத்தளை அறுக்கும் சொல்லைக் கூறுவாயா”

‘அய்யோ! என்னால் முடியவே முடியாது. குல வழியாக வரும் ரகசியச் சொல்லைக் கூறி குலத்துரோகம் புரிய என்னால் இயலாது என அழுதாள் சச்சி.

அவ்வாறென்றால் நாம் நம் காதலை மறக்கத்தான் வேண்டும். இப்பிறவியில் உன்னை நான் அடைய முடியாது. இன்னும் ஒரு யுகம் காத்திருக்க வேண்டும் தேவி. உன் மீது கொண்டுள்ள காதல் என்னை எத்தனை யுகமானாலும் காத்திருக்கச் செய்யும். நான் போகட்டுமா” எனக்கேட்டு கிளம்பினான் இந்திரன்.

துடித்துப் போன சச்சி என்னால் உங்கள் பிரிவையும் தாங்கமுடியாதே? எப்படிப்பட்ட அபாக்கியவதி நான். என்றாள்.

‘ஆனால் தந்தையைக் கடக்காமல் மகள் தன் மைந்தனை பெறமுடியாது என்பதே உலகநெறி’ என்றான் இந்திரன். ‘வீழ்ந்த மரத்தில் எழும் தளிர்களை பார். அவை அந்த மரத்தையே உணவென்று கொள்கின்றன. ஆனால் மரம் வாழ்வது தளிர்களின் வழியாகவே.”

அவளை மெல்ல சொல்லாடி கரைத்தான். அவள் காலகேயரும் புலோமரும் கொண்டிருந்த மந்தணச்சொல் நிரையை, குறிகளின் தொகையை அவனுக்கு உரைத்தாள்.

அடுத்த சிலமணித்துளிகளில் போரின் நிலவரமே மாறிப்போனது. மந்தணச்சொல் அறிந்த இந்திரனும் அவன் பெரும் படையும் எளிதாக வியூகத்தை உடைத்து முன்னேறிச் சென்றனர். வெறுந்திரள் என்றான புலோமனின் படையைத் தாக்கி அழித்தனர் தேவர். இந்திரன் புலோமனை களத்தில் எதிர்கொண்டழித்தான்.

அதன் பின் தன்னுடைய வெண்புரவியிலேற்றி சச்சியை விண்ணுக்குக் கொண்டுசென்று அமராவதியில் அமர்த்தி தன்னவளாக்கிக் கொண்டான். சச்சிக்கும் இந்திரனுக்கும் ஜெயந்தன், ஜெயந்தி(முருகனை கைப்பிடித்த தெய்வானை) மற்றும் சித்திரகுப்தன் என மூன்று குழதைகள் பிறந்தனர்.

சச்சியின் நித்திரையும் அவளது பூர்வ ஜென்ம நினைவும் நிறைவுற்றது. இதுகாறும் தோன்றிய சஞ்சலங்கள் நீங்கி மனதில் ஏற்பட்ட நிறைவுடன் எழுந்தாள் சச்சி, இல்லை இல்லை இந்திராணி. ஆம் இனி அவள் அரக்கன் பவுலோமனின்(புலோமன்) மகள் இல்லை. இந்திரன் மனைவி இந்திராணி. அமராவதியின் பட்டத்தரசி.

நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com