5. காந்தாரி

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெண்கள் பெரும்பாலும் குல விருத்திக்கும் குடும்ப விருத்திக்கும் என்று மட்டுமே நேர்ந்து விடப்பட்ட பலியாடுகளாக இருக்கின்றனர்.
5. காந்தாரி

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெண்கள் பெரும்பாலும் குல விருத்திக்கும் குடும்ப விருத்திக்கும் என்று மட்டுமே நேர்ந்து விடப்பட்ட பலியாடுகளாக இருக்கின்றனர். இதில் அரசகுமாரிகளின் பாடு இன்னமும் மோசமாகவே இருந்திருக்கிறது. வாரிசுச் சண்டை, அரசு உரிமை போட்டிகள் பொறாமைகள் நிறைந்த மாஹாகாவியத்தில் சிக்கல்களுக்கும் சீண்டல்களுக்கும் இரையாகி அதிக பாதிப்புக்கு உள்ளாவது பெண் பாத்திரங்கள் தான். நற்குணங்கள் கொண்டிருந்தாலும், பேரழகியாகவே இருந்தாலும் கொண்டவன் சரியில்லாத போது, பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காத போது அவளின் அத்தனை பண்புகளும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுவிடுகின்றன. ஆக, ஒரு பெண்ணின் பெருமை பேசப்படுவதும் தூஷிக்கப் படுவதும் அவளது நன்நடத்தையால் மட்டுமன்றி அவள் சார்ந்திருப்பவர்களாலேயே நிர்ணயிக்கப் படுகிறது. 

காந்தாரி...

காந்தார நாட்டு இளவரசி ஆனதால் அப்பெயரா இல்லை காந்தம் போன்ற கண்களைக் கொண்டதால் அப்பெயர் பொருத்தமானதா? அழகும் இளமையும் நற்பண்புகளும் மட்டுமல்லாமல் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றவள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறன் கொண்டவள். காந்தார மன்னன் சுலபனின் மகள் தான் காந்தாரி. மிகவும் செல்லமாகத் தாய் தந்தையாலும் தன் தனையன்களாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவள்.

அழகும் அறிவும் நிரம்பி இளமையின் பூரிப்பில் மதர்ந்திருந்த காந்தாரிக்கும் எல்லா பெண்களையும் போலவே திருமணத்தைப் பற்றியும் தன் மணாளனைப் பற்றியும் கனவுகளும் கற்பனைகளும் மனது முழுக்க நிரைந்திருந்தது. சிவபெருமானிடம் தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவள். ஆனால் அவளின் ஜாதக தோஷத்தின் படி அவளை திருமணம் செய்யும் முதல் கணவன் இறந்துவிடுவான் என்ற விதியும் இருந்தது. இது தெரிந்தால் எந்த மன்னனும் தன் மகளை மணம் புரியத் துணிய மாட்டானே என்ற கவலை காந்தார மன்னனை பெரிதும் வாட்டியது.

அதே சமயத்தில் பீஷ்மர் தன் குலம் தழைக்க, குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக் கொண்டிருந்தார். இதில் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கும், யாதவ குல மன்னனான சூரசேனனின் மகளும் குந்தி போஜனின் வளர்ப்பு மகளுமான குந்தி மற்றும் மத்ர இளவரசி மாத்ரியை பாண்டுவுக்கும் மணம் முடிக்க விரும்புகிறார்.

காந்தார நாட்டு மன்னன் பெண் கேட்டு வந்த பீஷ்மரின் தூதை உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகள் ஒரு குருடனுக்கு மனைவியாவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன் பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வை அற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். 

ஆனால் மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் ஒரு உபாயம் செய்கிறான். தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக, ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக் கிடாயை அவளுக்கு மணம் செய்து வைத்து பின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன் படி காந்தாரி தன் முதல் கணவனான ஆடை இழந்துவிட்ட விதவை. திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற கணக்கு சரியாகிவிடுகிறது. (ஆனால் இதுவே காந்தார நாட்டு வாரிசுகளுக்கும் அதன் பின் குருகுல வம்சம் நாசமாவதற்கும் காரணமாகிவிடுவது தனிக் கதை).

திருதராஷிடிரன் தான் தன் கணவன் என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்திருப்பதை அறிந்த காந்தாரி மறுவார்த்தை கூறாமல் சம்மதம் தெரிவித்தாள். குருடனானாலும் தன் கணவன் மூத்தவன், அரச குமாரன் குலத்தில் சிறந்தவன் என்ற காரணங்களால் மனம் தேற்றிக் கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும் பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனி.

அங்கு காந்தாரியும் சகுனியும் சகல மரியாதைகளோடு வரவேற்கப் படுகின்றனர். திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வை அற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால் தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டுவிட்டாள் காந்தாரி.

இது எத்தனை பெரிய தியாகம். பிறவியிலேயே பார்வை இழந்தவனும் இத்தனை காலம் இயற்கையையும் மனிதர்களையும் பூமியின் அதி அற்புதங்களையும் வண்ணங்களையும் கண்டு களித்து ராஜகுமாரியாக சுற்றித் திரிந்து ஆடி பாடி மகிழ்ந்திருந்த ஒரு இளம் பெண், அதுவும் தான் பிறந்த மண்ணை விட்டு மக்களை விட்டு பெற்றோரை உடன் பிறந்தோரை என சகலத்தையும் விட்டு புதிய இடத்துக்கு வாழ்க்கைப் பட்டு வந்திருக்கும் பெண், யாரும் பழகாத சூழல், புரியாத நிலை என்று இருக்கையில் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு விழிகள் இருந்தும் பார்வை துறந்தவளாக வாழ முற்படுவதற்கு எத்தனை மனோதிடம் தேவைப்பட்டிருக்கும் அவளுக்கு.

எது அவளை அப்படி செய்யத் தூண்டியிருக்கும்? தன் கணவனின் மேலிருந்த அன்பா, காதலா தன் பதிவிரதாத்தனம் கொடுத்த திடமா இல்லை பார்வை அற்றவன் ஆனாலும் அவனே அரசன், தான் அவனது பட்டத்து ராணி என்ற கனவு பொய்யாகிப் போனதாலா? கண்ணிருந்தும் பார்வை அற்றவனாய் நாடு இருந்தும் மணிமுடி மறுக்கப்பட்டவனாய் இருக்கும் கணவனை பெற்றவள் தானே நாம், எதற்கு நமக்கு பார்வை என்ற விரக்தியால் கண்ணைக் கட்டிக் கொண்டாளோ?  

காரணம் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அத்தனை அறிஞர்களும், மதியூக மந்திரிகளும் பெரியோர்களும் நிறைந்த சபையில் அவள் கண்ணைக் கட்டிக் கொண்ட போது 'ஏன் இப்படிச் செய்கிறாய் காந்தாரி? உனது அன்பை அபிமானத்தை காதலை கற்பைக் காட்ட இது சரியான வழி இல்லை. இயற்கையிலேயே பார்வை இழந்தவனும் நீயும் ஒன்றல்ல. உன் துணையால் அவனை வழி நடத்தவும், உன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்திடவும் உன் பார்வையும் கவணிப்பும் அவசியம் என்று ஏன் யாரும் சொல்லவில்லை.’

‘இது தியாகம் அல்ல அம்மா இது உன்னை நீயே வருத்திக் கொள்ளும் செயல். இனி வாழ் நாள் முழுமைக்குமான தண்டனை. இந்த அரண்மனைக்கு நான் ஒரு குருடன் போதும், என்னைக் கட்டிக் கொண்ட பாவத்திற்காக நீயும் ஏன் குருடாக அலைகிறாய். வேண்டாம் காந்தாரி என திருதராஷ்டிரனும் கூட வாய் திறக்கவில்லை. பீஷ்மர் தடுக்கவில்லை.  இது அவளின் கடமை போலவும் அவள் பதிவிரதாத் தனத்துக்கு சான்று போலவும் எண்ணி மகிழ்ந்தனரே தவிர அவள் பக்கம் இருந்த இயலாமையை ஏமாற்றத்தை யாரும் உணரவில்லை. எக்காரணமும் இன்றி அவள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட இடரை குரு குலம் தடுக்காமல் மௌனமாகவே வேடிக்கை பார்த்திருக்கிறது.

கணவனால், குறை உள்ளவன் என்ற காரணத்தால் அரசாள முடியவில்லை. தனக்குப் பிறக்கும் குழந்தைகளாவது நாடாளும் ஆசியைப் பெறட்டும் என்று ஏங்கி இருந்தவளுக்கு விதியும் சேர்ந்தே சதி செய்தது. பத்து மாத கருக்காலம் தாண்டியும் அவளுக்கு பிள்ளை ஈன்றெடுக்கும் நேரம் வரவில்லை. குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து குரு வம்சத்தின் வாரிசை பெற்றுவிட்டாள் என்ற செய்தி அவளுக்கு அளவில்லாத துக்கத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது. விதி இந்த விஷயத்திலுமா தன் விளையாட்டைக் காட்ட வேண்டும்.

நூறு குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற வரம் வாங்கியும் தான் வஞ்சிக்கப் பட்டவளாக உணர்ந்தாள். அக்கோபத்தில் ஏமாற்றத்தில் தன் வயிற்றை தடியால் அடித்துக் கொள்ள, மாமிசப்பிண்டம் தசையும் ரத்தமுமாக வெளியேறியது. அப்போது அங்கு வந்த வியாசர் அப்பிண்டங்களை சுத்தப்படுத்தி சம பாகங்களாகப் பிரித்தார். 100 பாகங்களும் மிச்சமாக ஒரு சிறிய பாகமும் தேறியது. அவற்றை நூற்றி ஒரு கிண்ணங்களில் பசு நெய்யை நிரப்பி அதில் போட்டு வைத்தார். உரிய காலம் ஆனதும் முதல் கிண்ணத்திலிருந்த பாகம் துரியோதனானகவும், அடுத்த கிண்ணத்தில் இருந்தது துச்சாதனாகவும் மற்றும் ஏனைய எல்லாம் அவனது சகோதரர்களாகவும் பிறப்பெடுத்தனர். கடைசி கிண்ணத்தில் இருந்த பிண்டம் துச்சலை என்ற பெண் குழந்தையாக உருவெடுத்தது.

துரியோதனன் பிறந்த வேளை சரியில்லை என அரண்மனை ஜோசியர்கள் கூறினர். குல அழிவு இவனால் ஏற்படும் என்றும் அவனை அழித்து விடும்படியும் கூறிவிட்டனர். இதுவரை குழந்தை பிறக்கவில்லையே என்ற வேதனை பிறந்த பின்னோ அதை அழிக்க வேண்டும் என்ற சோதனை. ஐயோ! பாவம் ஒரு பெண் எத்தனை இன்னல்களை மன உளைச்சல்களைத் தான் தாங்குவாள்.

பாரதப் போருக்கு முன் துரியோதனும் அவனது சகோதரர்களும் ஆசி பெற காந்தாரியின் கால்களின் விழுந்த போது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி் உண்டு’ என்று கூறியே வாழ்த்தினாள். வியாசர் அளித்த திவ்ய திருஷ்டியால் போரை அவள் கண்மூடி இருந்த போதும் நேரில் பார்ப்பது போலவே கண்டாள். தனது ஒவ்வொரு மகன்களும் குந்தி புத்திரர்களால் அழிக்கப்படும் போது அவளது உள்ளம் பட்ட பாட்டை விளக்க வார்த்தைகள் இல்லை. அறநெறிக்கு புறம்பாக இருந்தாலும் தாய்க்கு தன் மகவு தன் மகவு தானே?

பீஷ்மர் கோபத்துக்கு ஆளாகி சிறை வைக்கப்பட்டு பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்தவள் காந்தாரி. (திருமணத்திற்கு முன் தனக்கிருந்த தோஷத்தால், ஆட்டுக் கிடாயை மணம் செய்து கொண்டதும் அதன் பின் அதை பலி கொடுத்து முதல் கணவன் இறந்தான் எனும் படி தோஷ பரிகாரம் செய்ததும் பீஷ்மருக்கு தாமதமாக அச்செய்தி ஒற்றன் மூலம் கிடைக்க, தன் குலத்திற்கு விதவை மருமகள் ஆவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணி, அந்த ரகசியம் தெரிந்த சுலபன் குடும்பத்தினர் ஒருவரையும் விடாது அழிக்க வேண்டும் என்ரு எண்ணம் கொண்டார். அதன் காரணமாக அவர்களை குடும்பத்துடன் சிறை வைத்து ஒரு பிடி உணவு மட்டுமே கொடுத்து அழித்ததாக கதை போகிறது. அதில் சாகாமல் எஞ்சி, குரு குலத்தை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தவன் சகுனி மட்டுமே).

குரு குலத்தைப் பழி வாங்க சகுனி எடுத்துக் கொண்ட சபதத்தால் தன் குலத்தையும் குழந்தைகளையும் தன் சொந்த சகோதரனின் சூழ்ச்சியாலே இழந்தனள். கணவனாலும் அவளுக்கு நிறைவு இல்லை, பெற்ற குழந்தைகளாலும் அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லை, உடன் பிறந்த சகோதரனாலும் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. மன அமைதி இன்றி தவிப்பு சோகம் பதட்டம் நிரைந்ததாகவே அவள் வாழ்க்கை இருந்தது.

அறம் உள்ள பக்கம் ஜெயிக்கட்டும் என்று கூறியதில் ஆகட்டும், தன் கணவன் பார்க்காத உலகை நானும் பார்க்கமாட்டேன் என்று கூறி தன் கண்ணை கட்டிக் கொண்டதிலாகட்டும், போரில் தனது நூறு மகன்களையும் இழந்து சோகத்தில் இருக்கும் போது, தன்னைச் சந்திக்க வந்த பாண்டு மைந்தர்களை எதிரிகளே ஆனாலும் தன் வருத்தத்தையும் கோபத்தையும் அளவோடு வெளிப்படுத்தி அவர்களை அரவணைத்துச் சென்றதிலாகட்டும் காந்தாரி கற்புக்கரசி மாத்திரம் அல்லாமல்  திட சித்தமும் மன உறுதியும் கொண்ட வெற்றிகரமான பெண்மணி ஆகிறாள்.

ஆனால் இன்றும் நமக்கு காந்தாரி என்றால் சின்னத் திரை தொடர்களில் வரும் வில்லிகளை ஒத்தவள், குணம் கெட்டவள் என்ற உருவகமே நினைவுக்கு வருகிறது. நாணயத்திற்கு இரு புறம் இருப்பது போல மனிதர்களும் அகமும் புறமும் என இரு பக்கத்தைக் கொண்டவர்கள். நமக்குத் தெரிந்த ஒரு பக்கத்தை மாத்திரம் வைத்து ஒப்பீடு செய்து, இவர் இப்படித்தான் என முத்திரை குத்தப் பழகிவிட்டோம். காந்தாரியின் மறுபுறம் மென்மையானதும் சோகத்தால் நிறைந்ததும் அதுவே அவளுக்கு திட சித்தத்தை கொடுத்ததுமாக இருந்துள்ளது.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com