6. மாதவி

பன்னெடுங் காலமாக புராண கதைகளும் காவியங்களும் மனித குலத்தில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்து கொண்டேதான் வருகிறது.
6. மாதவி

பன்னெடுங் காலமாக புராண கதைகளும் காவியங்களும் மனித குலத்தில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்து கொண்டேதான் வருகிறது. போற்றுவோரையும் தூற்றுவோரையும் பற்றிய மயக்கம் அதற்கில்லை. நிகழ்ந்ததோ நிகழ்த்தப்பட்டதோ அல்லது நிகழ்ந்ததாய் கூறப்பட்டதோ எவரும் அறியிலர். ஆனால் அவைகள் தமக்கே உரிய பாணியில் தனது அறத்தை நிலை நாட்டிக் கொண்டே காலங்காலமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அதே புராணங்களிலும் இதிகாசத்திலும் தான் அறம் எனும் பெயரால் பெண்ணுக்கு அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. பெண்ணை தாயாக தேவதையாக குலம் தழைக்க வைக்கும் தெய்வமாக பார்க்கப்பட்ட அதே இதிகாசங்களில் தான் பெண்ணை போக வஸ்தாகவும் பண்டமாற்றப் பொருளாகவும் இனப்பெருக்க இயந்திரமாகவும் கருதப்படுவதைக் காண்கிறோம். அவளது மனது உணர்வுகள் உணர்ச்சிகள் என எதுவும் கருதப்படாமல் வெறும் ரத்தமும் சதையுமான பிண்டமாகவே கையாளப்படுகிறாள்.

மாதவி. இவள் சிலப்பதிகாரத்து கோவலனின் மாதவி அல்ல. இம்மாது அதிகம் பேரால் அறியப்படாதவள். நித்ய கன்னி. உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் நடுவே சிக்கித் தவித்த ஒரு அபாக்கியவதி. அறத்தின் பேராலும் தர்மத்தின் பேராலும் தன்னையே பலி கொடுத்துக் கொண்ட வெள்ளாடு.

இவளைப்பற்றிய விபரங்கள் அதிகம் காணப்படவில்லை. மஹாபாரதத்திலும் வெகு சில பக்கங்களிலேயே இவள் கதை முடிந்துவிடுகிறது. வரம் எனும் பெயரால் சாபம் தாங்கிய அதிர்ஷ்டமில்லாதவளைப் பற்றி விவரிக்க ஏதும் இல்லை போலும்.

மாதவியின் தந்தை யாயாதி சந்திரவம்சத்து அரசன். தர்மத்தாலும் அறத்தாலும் உயர்ந்த தேவேந்திர பதவியைப் பெற்று பின் தனது அகங்காரத்தால் அப்பதவியை இழந்துவிட்ட நகுஷனின் மகன் யாயாதி. ப்ரதிஷ்டா நகரை (ப்ரயாகை - தற்கால அலஹாபாத் அருகில் உள்ள நகரம்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் பாண்டவர்களின் மூதாதையர்களுள் ஒருவர். யயாதி பார் போற்றும் தர்மவான் நீதி வழுவாது ஆட்சி புரியும் மக்கள் மனம் கவர்ந்த அரசர். அவரின் மகள் மாதவி பெறற்கரிய பேறு பெற்றவள். குழந்தை ஈன்ற நொடியே கன்னித்தன்மையை அவள் மறுபடியும் பெற்றுவிடுவாள். இயற்கை நியதிக்கு மாறாக, மணமானாலும் மகவு ஈன்றாலும் கட்டுக்குலையாமல் அழகு கெடாமல் நித்ய கன்னியாய் இருக்கும் வரத்தைப் பெற்றவள்.

காலவன் என்பவன் விசுவாமித்திர முனியின் சிஷ்யன். தன் குருகுல வாசத்தின் போது பல சங்கடமான சமயங்களில் குருவுக்கு உற்ற துணையாய் அல்லும்பகலும் இருந்தவன். அவனது சிரத்தையை மெச்சி முனிவரே அவனுக்கு குருகுல வாசத்தை முடித்து வழியனுப்புகிறார். ஆனால் குருதட்சணை கொடுத்து தன் சிஷ்யக் கடமையை முடிக்க விழைகிறான் காலவன்.

குருதட்சணை என்ன தரவேண்டும் என விசுவாமித்திரரை வேண்டுகிறான். அவர் குருதட்சினை என்று எதுவும் தேவை இல்லை காலவா. உன் சேவையை மெச்சினேன். அதுவே போதும் எனக் கூறி மனமுவந்து அவனை ஆசிர்வதித்து அனுப்புகிறார். ஆனால் குருவுக்கு தட்சிணை தராமல் தனது அப்பியாசம் பூர்த்தி ஆகாது என மிகப் பிடிவாதமாக குருதட்சணையை ஏற்கும் படி விசுவாமித்திரரை வற்புறுத்துகிறான் காலவன்.

முனிவர்  ஏற்கனவே கோபக்காரர். தன் சொல்லை ஏற்காமல் நிர்ப்பந்தம் செய்தால் சும்மாவா இருப்பார். கோபத்தில் எனக்கு எண்ணூறு புரவிகள் வேண்டும். அதுவும் நிலாவண்ண உடலும் ஒரு காது மட்டும் கருப்பாகவும் உள்ள எண்ணூறு புரவிகளை குருதட்சிணையாகக் கொடுத்து உன் கடனை தீர்த்துக்கொள் என்றுவிடுகிறார்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன காலவன் தன் நாக்கில் விதி விளையாடியதை எண்ணி நொந்து போகிறான். இப்படி ஒரு விசித்திர லட்சணம் பொருந்திய குதிரைகளை இந்த ஏழை பிராமணன் எங்கே போய் தேடுவது என அயர்ந்தும் போகிறான். அவனுடைய விதியா அங்கு விளையாடியது! அவன் மூலமாக மாதவியின் விதியல்லவா விளையாடிவிட்டிருந்தது.

காலவன் யாயாதியின் உதவியை நாடி பிரதிஷ்டா நகரம் வருகிறான். ஆனால் அவன் கூறிய லட்சணம் பொருந்திய குதிரை ஒன்றுகூட யாயாதியிடம் இல்லை. உதவி என்று வந்த பிராமணனை வெறுங்கையுடன் அனுப்ப யயாதியின் தர்மம் இடம் தரவில்லை. அவர் தான் தர்மவான் ஆயிற்றே. அதற்கு பதில் காலவனுக்கு ஒரு உபாயம் சொல்கிறார். குதிரைகளுக்கு பதில் தன் புதல்வியை அவருடன் அனுப்புவதாக வாக்கு கொடுக்கிறார். அவள் நித்ய கன்னி வரம் பெற்றவள் என்பதால் எந்த அரசனிடனம் அவன் குரு கூறிய லட்சணங்களுடன்  பரிகள் இருக்கின்றதோ அந்த அரசனுக்கு தன் மகளை மணமுடித்து, அவள் மூலம் சிரேஷ்ட்ட புத்திரனை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பிரதி உபகாரமாக குதிரைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே அந்த உபாயம்.

ஒரு மகவை ஈன்றவுடன் அவள் மீண்டும் கன்னித்தன்மை பெற்றுவிடுவதால் அவள் கற்பு நெறிக்கும் பங்கம் நேராது. அவள் தர்மமும் காக்கப்படும் என்பதால் இந்த உபாயம். அட! என்ன ஒரு விசித்திரமான பண்டமாற்று. பெண்ணின் கற்புக்கு பரிகள். பெண்ணின் கற்பை போற்றும் அதே இதிகாசம் தான் பெண்ணின் கற்புக்கு தர்மத்தின் பெயரால் பண்டமாற்றும் செய்கிறது.

மறுநாள் தன் பெண்ணை யாயாதி காலவனுடன் ரதத்தில் ஏற்றி அனுப்பி வைக்கிறார். நாடே யயாதியின் இச்செயலைப் புல்லரிக்கப் பார்க்கிறது. மாதவியை பெரும் பேறு பெற்றவள் என்று போற்றுகிறது. தர்மத்திற்காகவும் அறத்தை நிலை நாட்டவும் தன்னையே தியாகம் செய்ய முன்வந்திருக்கும் தெய்வ ஸ்வரூபமாக அவளைப் பார்க்கிறது.

முனிவர் சொன்ன லட்சணம் பொருந்திய குதிரைகள் மொத்தமாக எந்த ஒரு அரசனிடமும் இல்லை. அயோத்தியின் அரசன் ஹர்யசுவன், காசியின் அரசன் திலோ தாசன், போஜராஜன், உசீநரன் இவர்களிடம் மட்டுமே இருந்தன. காலவனுக்கு பேரழகுப் பதுமையாக ரதத்தில் அமர்ந்திருக்கும் யுவதியின் மேல் கவனம் இல்லை. ’இவள் பேரழகிதான் அதற்கும் மேலே நித்யகன்னி வேறு. ஆனால் குதிரைகளை வைத்திருக்கும் அரசன் இவளை வேண்டாம் என்றுவிட்டால் தன் குருதட்சணை பங்கப்பட்டு விடுமே’ என்ற கவலையே ஓங்கி இருந்தது. அவன் மனதில் கூட இவளுக்கு இதில் சம்மதமா?, குதிரைகளுக்காக முன் பின் பார்த்திராத மனிதனை மன்னனே ஆனாலும் மணம் புரிந்து கொள்ள இவள் மனம் ஒப்புவாளா? மனதில் வேறு யாரையேனும் கணவனாக வரித்திருக்கிறாளா என்ற கவலை கிஞ்சித்தும் தோன்றவில்லை.

ஆனால் காலவனின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் வந்த நோக்கம் தெரிந்தவுடனும் அப்ஸரஸையே விஞ்சும் அழகுடையவளான மாதவியை பார்த்த பின்னும் ஹர்யசுவனுக்கு வேண்டாம் என்று மறுக்க முடியுமா என்ன? மாதவியின் அழகுக்கு எண்ணூறு என்ன ஆயிரம் புரவிகளைக் கூடக் கொடுக்க அவன் சித்தமாய் இருந்தான். ஆனால் அவனிடம் வெண்மையாகவும் ஒரு காது மட்டும் கருப்பாகவும் உள்ள புரவிகள் இரு நூறு மட்டுமே இருந்தன. அதையும் அவன் காலவனுக்குக் கொடுக்க சம்மதித்தான். காலவன் மாதவியை ஹர்யசுவனிடம் விட்டுவிட்டு ஒரு மகவு ஈந்ததும் மறுபடியும் வந்து அவளை கூட்டிச் செல்வதாகக் கூறி குதிரைகளுடன் சென்றுவிட்டான்.

திருமணத்துக்குப் பின் ஹர்யசுவனின் அந்தப்புரத்தில் மாதவிக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கப்பட்டது. ஏனென்றால் பேரழகி மட்டுமல்லாது அவள் நித்ய கன்னி அல்லவா. பருவப் பெண் அதுவும் ராஜகுமாரியின் முதல் திருமணம், முதல் ஆடவனுடனான சங்கமம். எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும். அவள் மனதில் எத்தனை கற்பனைகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். ஒரு நாடோடியைப் போல ஓடி வந்து அவசரமாக செய்விக்கப் பட்ட திருமணம்.

பலிக்கு நேர்ந்துவிட வெள்ளாடு பலி பீடத்தில் தலை வைத்து கழுத்தில் எப்போது வெட்டு விழும் என பதைத்துக் கிடப்பதைப் போல அவள் முதலிரவுப் பஞ்சணையில் காமத்துக்காக மட்டுமே கிடந்திருந்தாள். கிடத்தப்பட்டிருந்தாள். உடலும் உள்ளமும் சங்கமிக்க வேண்டிய வேளையில் உடல் மட்டுமே அரிதாரம் பூசி அரங்கேறியது. சிறிது காலத்தில் மாதவி கர்ப்பமுற்றாள். அவளுக்கு வசுமனன் என்ற மகவு பிறந்தான். மகவை ஈந்த மறு நொடியே மாதவி கன்னித்தன்மை பெற்றுவிட்டாள். உடலில் குழந்தை சுமந்த தளர்வோ, பிரசவித்த தளர்ச்சியோ எதுவும் இல்லை. கட்டுடல் குலையவில்லை. அழகு துளியும் குறையவில்லை.

இதைக் கண்ட ஹர்யசுவனுக்கு வியப்பு தாளவில்லை. தனக்கே சொந்தமாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு மேலோங்கியது. ஆனால் படுக்கையில் அவளது ஈடுபாடில்லாத நடத்தை கண் முன் வந்து போனதும் அழகியானாலும் களியாட லாயக்கற்றவள் என்ற எண்ணம் மேலோங்கியது. காலவன் வந்ததும் அவனோடு அனுப்பி விட்டான்.

மறுபடியும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.

'நாம் ப்ரதிஷ்டா நகரை நோக்கிப் போகிறோமா?'

'இல்லை காசியை நோக்கிப் போகிறோம் மாதவி' சற்றே நடுங்கும் குரலில் பதிலுரைத்தான் காலவன்.

'காசியை நோக்கியா? ஏன் காலவரே?'

ஹர்யசுவனிடம் இரு நூறு பரிகளே இருந்தன. என் தேவையோ எண்ணூறு பரிகள். காசி மன்னன் திலோதாசனிடம் இதே போன்ற பரிகள் இருப்பதாக செய்தி. அதனால்….'

“ஓ!” என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் அவள் எதுவும் பேசவில்லை.

ரதம் காசியை நோக்கிச் சென்றது. மாதவியை ஓரக்கண்ணால் அளந்தான் காலவன். அவளை நேருக்கு நேர் பார்க்கும் திட சித்தம் அவனுக்கு ஏது? அவன் செய்யும் காரியம் அவள் கண்களை நோக்கும் தைரியத்தை பரித்துவிட்டிருந்தது. அவனும் அவளது மேனி எழில் குன்றாதிருக்கும் அதிசயத்தைக் கண்டு வியந்தான். ஆனால் ஏதோ ஒரு குறை இருப்பது போல் பட்டது அவனுக்கு. அதன் காரணம் அவன் உள் மனம் அறிந்திருந்தாலும் அதை மேலெழ விடவில்லை. மனசாட்சிக்கு பதில் கொடுத்தால் நட்டம் அவனுக்குத்தானே.

மாதவி மறுபடியும் காசி மன்னன் திலோதாசனுக்கு மனைவியானாள். அவனும் அவள் அழகை திகட்டத் திகட்ட அனுபவித்தான். அவனுக்கும் பிரதர்த்தனன் என்ற மகவை ஈன்றெடுத்தாள்.  அள்ளி அள்ளி பருகினாலும் குறையாத ஜீவ நதியைப் போல் எத்தனை அனுபவித்தாலும் துளியும் குறையாத பருவத்தையும் அழகுடலையும் பெற்றிருந்தாள் மாதவி.

இம்முறை காசி ராஜனை விட்டுக் கிளம்புகையிலேயே மாதவிக்குத் தெரிந்துவிட்டது. இவனிடம் இருநூறு பரிகள் மட்டுமெ தேறியது என்று. தேரில் ஏரியதும் ஒரு இழிந்த புன்னகையுடன் காலவனை நோக்கிக் கேட்டாள்,  'காலவரே இப்போது எந்நகரை நோக்கி நமது பயணம்' என்று.

இருவரும் போஜராஜனின் அரண்மனையை அடைந்தனர். செய்தி கேட்டு போஜராஜன் உசீநரன் அவர்களை எதிர்கொண்டு அழைத்தான். மிக மரியாதையாக மாதவியை நடத்தினான். இவனிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் உசீநரன் மாதவியின் கட்டுடலை மோகித்து மணக்காமல் தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் அவளை மணந்தான். வருட முடிவில் மாதவி உசீநரனின் பிள்ளையைப் பெற்றாள். சிபி என்ற சிசு தொட்டிலில் அவளுக்கு அருகில் கையைக் காலை உதைத்து அழுது கொண்டிருந்தது. மாதவியால் அவனை அள்ளி எடுக்க முடியவில்லை. (இக் குழந்தைதான் பின்னாளில் சிபிச்சக்ரவர்த்தி என தர்மத்தில் புகழ் பெற்று விளங்கிய அரசன்)

முதல் குழந்தை பெற்றதும் அதன் அழுகைச் சத்தம் கேட்டு துடித்துப் போய் கையில் ஏந்தினாள். முலைப்பால் கொடுக்க மார்க்கச்சை அவிழ்க்கையில் தான் அவளுக்கு தான் நித்ய கன்னி என்பதும் தாய்மையின் எந்த ஒரு அறிகுறியும் தனக்கு வராது என்பதையும் உணர்ந்தாள்.

பத்து மாதம் சுமந்து ஈன்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி மார்போடு அணைத்துக் கொஞ்சும் சுகம் கூட இல்லாத வரம் என்ன வரம். துடித்துப் போனாள். அத்துடிப்பும் வேதனையும் அடங்க வெகு நேரம் ஆகியது. தாதி அழும் குழந்தையைத் தூக்கிச் சென்று பசும்பால் புகட்டினாள்.

இப்போது அவளுக்கு பழகிவிட்டது. இது மூன்றாம் குழந்தை அல்லவா. தாய்மையின் எந்த அறிகுறியும் அவளுக்கு தோன்றவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டாலே பால் சொரியும் மார்பு அவளுக்கு இல்லை. இல்லறம் நடத்திய பின்னும் குழந்தை ஈன்றபின்னும் கூட திண்ணென்ற மார்பை உடையவளாகவே இருந்தாள். அவள் வியிற்றில் உதித்த பச்சிளம் சிசுவை கையில் எடுக்கையில் பாசத்தில் வயிறு குழையவில்லை. இடையும் வயிறும் ஒட்டி சிக்கென்ற உடல்வாகு மீண்டிருந்தது. அவள் தான் நித்ய கன்னி ஆயிற்றே?

உசீநரனின் அன்பான பிரியாவிடைக்குப்பின் மீ்ண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது. இம்முறை அவள் வாய் திறந்து காலவனை ஏதும் கேட்கவில்லை. கேட்காமலேயே அவன் கூறினான். இனி இது போல் பரிகள் வேறு எந்த அரசனிடமும் இல்லை. மொத்தம் அறுநூறு குதிரைகளே தேறின. மீதம் உள்ளவற்றுக்கு என்ன வழி எனத் தெரியவில்லை. அதனால் குரு நாதரையே சரணம் அடையப் போவதாகக் கூறினான்.

ரதம் விசுவாமித்திர முனியின் ஆசிரமத்தை அடைந்தது. அவர் தான் முற்றும் உணர்ந்த ஞானி ஆயிற்றே. அவர்கள் வருகையை எதிர்ப்பார்த்தபடி தான் இருந்தார். குடிலுக்கு முன் விரிந்திருந்த புல்வெளியில் அவன் அனுப்பி வைத்த அறுநூறு புரவிகளும் மேய்ந்து கொண்டிருந்தன.

இருவரும் ரதத்திலிருந்து இறங்கி முனிவரைப் பணிந்தனர். மாதவியை ஏற இறங்கப் பார்த்தவாரே அவர்களுக்கு ஆசி வழங்கினார் ராஜரிஷி. அவரின் பார்வையை அரை நொடி சந்தித்து விலகிய மாதவியின் கண்கள் தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த குதிரைகளிடம் சென்றது. அவள் மனக்கண்ணில் ஒரு பெரிய தராசும் அதில் இப்பக்கம் மாதவி அப்பக்கம் அறுநூறு புரவிகளும் தோன்றின. எண்ணிக்கையும் கனமும் அதிகமாயினும் எடை மாதவியின் பக்கமே கூடி தராசு தாழ்ந்து இருந்தது. இப்போது எப்படி சமன்படப் போகிறது என்பதை அவள் ஊகித்துவிட்டிருந்தாள்.

காலவன் சிரம் தாழ்ந்து மெல்லிய குரலில் அவனால் அறுநூறு புரவிகளையே சம்பாதிக்க முடிந்ததைக் கூறினான். ரிஷியோ சிரித்தபடி 'அதனால் என்ன காலவா, மிச்சம் இருநூறு கணக்குக்கு மாதவியை என் பத்தினி ஆக்கிவிடு. எனக்கும் குலம் தழைக்க சிரேஷ்ட புத்திரன் வேண்டும்' என்று கூறிவிட்டார்.

இதைக் கேட்ட மாதவியின் தலையில் இடியெல்லாம் விழவில்லை. இது அவள் எதிர்பார்த்தது தானே. அரசர்களுக்கு சேவை புரிந்த அவள் அழகு இப்போது மாமுனியான ராஜரிஷி விஸ்வாமித்திரருக்கு சேவை புரியப் போகிறது அவ்வளவே. அந்தப்புர பஞ்சணையில் பள்ளி கொண்டவள் இப்போது குடிலின் ஓலைப்பாயில் இருக்கப் போகிறாள். இடமும் ஆட்களும் மாறினாலும் வேலை ஒன்றுதானே. அடுத்த பிள்ளைக்கு தன் கருப்பையை தயார் செய்யத் தொடங்கினாள்.

அஷ்டகன் எனும் மகவு விசுவாமித்திரருக்கும் மாதவிக்கும் பிறந்தது. மகவை ஈன்ற மறு நிமிடம் அவள் மீ்ண்டும் கன்னி ஆகிவிட்டாள். குழந்தையை ரிஷியிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் தன் நகரம் நோக்கி பயணத்தை தொடங்கினாள். அவள் உடல் என்றும் பதினாறாகவே கட்டுக்குலையாமல் அழகு தேயாமல் மிளிர்ந்தது. ஆனால் மனது தன் சோபையை யாரோ மொத்தமாக வாரி வழித்து எடுத்துச் சென்றது போல் வெறுமையாகிக் கிடந்தது. உடலால் இளமை பொங்க நின்றவள் உள்ளத்தால் என்றோ மூப்பெய்திவிட்டாள்.

செயற்கரிய செயலைச் செய்து மீண்டுவந்த தம் மகளை படாடோபமாக வரவேற்றார் யாயதி. நாடே அதைக் கொண்டாடி மகிழ்ந்தது. மகளிடம் வந்த யயாதி 'கண்மணியே எத்தனை பெரிய காரியத்தை நீ செய்து வந்திருக்கிறாய் தெரியுமா? உன் பொருட்டு என் தர்மம் நிலைபெற்று அழியா புகழுடன் விளங்குகிறது. காலவரின் குருகடன் அடைந்துவிட்டது. அழியாப் புகழ் பெரும் மகவுகளை நீ ஈன்றெடுத்து கொடுத்துள்ளாய். எனதருமை மகளே இனி உன் சுகவாழ்வுக்கான மெனக்கெடுதலை தந்தையாக இருந்து நான் செய்ய வேண்டும். விரைவிலேயே உனக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்கிறேன். உனக்குப் பிடித்த மன்னனை முன்பே நீ மணந்தவர்களில் ஒருவராகிலும் கூட இருக்கட்டும் தேர்ந்தெடுத்து சுகவாழ்வு வாழ்வாயம்மா' என்று வாழ்த்திக் கிளம்பினார்.

அவ்வார்த்தைகளை கேட்ட மாதவி தீக்கட்டையால் சுளீரென்று அடிவயிற்றில் சூடு பட்டது போல உணர்ந்தாள். போதும் இந்த வாழ்வு. போதும் இந்த தாம்பத்யம். போதும் சிரேஷ்ட புத்திரப்பேறு. அவளுக்கு அலுத்துவிட்டது. நித்திய கன்னி வரத்தால் அவள் தர்மம் காக்கப்பட்டது தான். கற்பு பிறழவில்லை தான். ஆனால் அவ்வுடல். மூன்று அரசர்களும் ஒரு முனிபுங்கரும் தீண்டிய உடல். இது மாறவில்லையே. மனம் ஒன்று தானே. அது மாறவில்லையே. கற்பும் அறமும் உடல் சார்ந்ததா மனம் சார்ந்ததா. அவர்கள் அறம் காக்கப்பட்டது என்றால் என் அறம். என் தர்மம். என் உணர்வு? என்ன பதில் சொல்லப் போகிறார் தர்மத்தின் காவலனாக விளங்கும் என் தந்தை?

பெண்களை அநித்தியமானவர்கள் என்றும் சிற்றின்பத்தை தவிர்த்து பேரின்பத்தை நாடும்படியும் போதிக்கும் முனிவரான விசுவாமித்திரர் குலவிருத்தி என்ற போர்வை போத்திக்கொண்டு என்னை ஏன் நாடினார்? பிராமண குல தர்மத்தை விட்டுவிட்டு தன் சுயநலத்திற்காக தன் கடனை அடைப்பதற்காக என்னை ஒவ்வொரு அரசனிடமும் கொண்டுவிட்ட காலவன் என்ன பதில் கூறப்போகிறார்?

அவள் மனம் பித்து பிடித்தாற் போல் பலவாறாக அரற்றியது. இத்தனை காலம் அடக்கிவைத்த பொறுமையானது கோபமாக வெளியாகி ஒவ்வொருவரை நோக்கியும் விரல் நீட்டி விரசமாக விகாரமான பதிலே சொல்ல முடியாத கேள்விகளாக கேட்க வைத்தது.

எல்லாவற்றுக்கும் ஒரே முடிவாக அவள் மனம் அதையே நாடியது. ஆம். சுயம்வரம் தவிர்த்து இல்லறம் தவிர்த்து முற்றும் துறந்து தவ வாழ்வு மேற்கொள்ள கானகம் சென்றுவிட்டாள். பேரழகி, நித்ய கன்னி, என்றும் மாறாத இளமையும் அழகும் உடையவள். தர்மம் அறம் எனும் பெயரால் சீரழிக்கப்பட்டு, ஒப்புதல் புணர்வு செய்யப்பட்டு தன் வாழ்க்கையும் நிம்மதியையும் துறந்துவிட்டாள்.

அவரவர் தர்மத்தில் அவரவர் நின்றனர். எல்லாருக்கும் அவர்கள் வேண்டியது கிடைத்து திருப்தி அடைந்தனர். அவரவர் அறம் காப்பாற்றப்பட்டது. யயாதிக்கு தன்னை நாடி வந்தவனை ஏமாற்றத்துகுள்ளாக்காமல் தன் மகளையே தானமாகக் கொடுத்த பேறு கிட்டியது. காலவனுக்கு அவள் மூலம் குரு தட்சணைக் கடன் தீர்ந்தது. மூன்று அரசர்களுக்கும் முனிவனுக்கும் உன்னத புத்திரர்கள் கிடைத்தனர். ஆனால் மாதவிக்கு????....

நித்யகன்னி என்பது அவளுக்கு வரமா சாபமா?

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com