7. அகலிகை

அகலிகை தமிழ் மொழியில், அஹல்யா சமஸ்கிருத மொழியில். அழகே உருவானவள், நிகரில்லாத அழகுடையவள்
7. அகலிகை

அகலிகை தமிழ் மொழியில், அஹல்யா சமஸ்கிருத மொழியில். அழகே உருவானவள், நிகரில்லாத அழகுடையவள் என்ற பொருள் பெற்ற பெயருடையவள் அஹல்யா எனும் அகலிகை.

இவளைப் பற்றி பல கதைகள் புனைவாகவும் காப்பிய வடிவாகவும் பாடல்களாகவும் வெண்பாக்களாகவும் பல கோணங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. பெண்ணிய சிந்தனைகள் உருவான போதே அகலிகை பெரும் முக்கியத்துவம் பெற்ற பேசு பொருள் ஆகிவிட்டாள். எத்தனையோ எழுதிவிட்டார்கள் அகலிகையின் வாழ்க்கையை, நெறியை, இலக்கணத்தை. கற்பென்ற சொல்லுக்கு சனாதன தர்மத்தின் இலக்கணம் என்ன என்பதை துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. அக்காலம் தொட்டு பெண்ணியம் உச்சத்தில் இருக்கும் இன்று வரையுமே பெரும் சர்ச்சைக்குள்ளானவள்  அகலிகை.

அகலிகை என்பவள் யார்? எந்த நாட்டு இளவரசி? எந்த சபையின் பேரரசி? சற்று விரிவாகப் பார்ப்போம். இவளின் தோற்றம் மானுடர்களைப் போல பிறப்பால் உருவானதல்ல. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி வாசுகி எனும் பாம்பை கயிராகத் திரித்து இமய மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்த போது பல்லாயிரக்கணக்கான விசேஷப் பொருட்களும், உயிரனங்களும் தோன்றின.

காமதேனு என்ற வற்றாத மடியுடைய தெய்விகப் பசு, வெண்ணிறப் புரவி, ஐராவதம் எனும் வெள்ளை யானை, பாரிஜாத மலர், கற்பக விருட்சம், அப்ஸரஸ்கள் எனும் தேவ கன்னியர், செல்வத்தின் அதிபதியான லஷ்மி தேவி போன்றோர் தொன்றியதாக ஐதீகம். அவற்றுடன மற்றொரு பெண் வடிவமும் தோன்றியதாம்.

ஆயிரம் நட்சத்திரங்கள் மிளிர்ந்தாலும் ஒற்றை நிலவுக்கு ஈடாகாது என்பது போல அவள் அத்தனை பிரகாசமாகவும், கடைந்தெடுத்த சிற்பம் போலவும் தோன்றினாளாம். திவ்ய அலங்கார பூஷிதையாக ஈரேழு உலகத்தில் இருக்கும் அழகை எல்லாம மொத்தமாக கொட்டி வார்த்தது போல் இருந்தாளாம். அவள் தான் அகலிகை.

அவளை தனதாக்கிக் கொள்ள சப்த ரிஷிகளுள் ஒருவரன கௌதம முனிவருக்கு ஆவல் எழுந்தது. அதே சமயம் தேவலோகத்தின் அதிபதியான இந்திரனுக்கும் அவளை அடையும் ஆசை எழுந்தது. இருவரின் விருப்பத்தையும் அறிந்த பிரம்மா அவர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தார்.  இருவரில் யார் இருபக்கமும் தலையுடைய பசுவைப் பார்த்து சாட்சியுடன் நிருபிக்கிறார்களோ அவர்களுக்கே அகலிகை உரித்தானவள் என்கிறார்.

உடனே ஞானப்பழத்தைத் தேடி முருகன் மயிலில் புறப்பட்டது போல் இதோ ஈரேழு லோகமும் சென்று முன்புறமும் பின்புறமும் முகம் கொண்ட பசுவை தேடிக் கண்டுபிடித்து வருகிறேன் எனச் சொல்லி இந்திரன் புறப்பட்டுப் போனான். முனிவரோ இது என்ன விந்தையாக உள்ளதே? இருபுறமும் முகம் கொண்ட பசு இருப்பது எங்கிருந்து சாத்தியம்? என யோசித்தவாரே தபோ வனத்தில் தியானத்தில் அமர்ந்துவிட்டார். அப்போது அங்கு வந்த நாரதர் ‘முனிவரே மிகவும் கவலையாக உள்ளீர்களே வாருங்கள் அருகிலுள்ள கோசாலைக்குச் சென்று உமக்கு தீர்வு கிடைக்கிறதா என பார்த்து வரலாம்’ என்று கூறி அழைத்து சென்றார்.

ஆனால் எங்கு தேடியும் இருபுறமும் முகமுள்ள பசுவை காண முடியவில்லை. முனிவர் நாரதரிடம் ‘இது சாத்தியமே இல்லையே? பிரம்ம தேவன் இப்படி ஒரு சோதனையை எனக்கு ஏன் அளித்தார்?’ என்று புலம்பினார். அவருக்கு இந்திரனிடம் தோற்றுவிட்டால் சிறுமை பட்டு போய்விடுவோமே என்ற கவலையுடன் நிகரில்லாத அழகி அகலிகை தன் கைவிட்டுப் போய்விடுவாளே என்ற விரக்தியும் தோன்ற திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

நாரதர் ‘கௌதமரே பிரம்மதேவன் வாக்கு ஒரு போதும் பொய்த்துப் போனதில்லை. அதோ பாரும் இருபுறமும் தலை உள்ள பசு’ என்று காட்டிய திசையில் பசு ஒன்று கன்றை ஈன்று கொண்டிருந்தது. கன்றின் தலை பசுவின் பின்புறம் தெறிய பசுவின் தலை முன்புறம் என இருபுறமும் தலையுள்ள பசுவாக தோன்றியது அக்காட்சி. பரவசமடைந்த முனிவர் உடனே பிரம்ம தேவரிடம் சென்று நாரதர் சாட்சியாக தான் இருபுறம் தலை உள்ள பசுவை பார்த்து விட்டதை தெரிவிக்க முனிவருக்கே உரித்தானவள் ஆனாள் அகலிகை. திரும்பி வந்த இந்திரனால் பெருத்த ஏமாற்றத்துடன் ஏக்கப் பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. என்றாவது ஒரு நாள் உன்னை அடைந்தே தீருவேன் என்று அகலிகையை பார்த்து அவன் மனம் உறுதி பூண்டது.

அன்று சப்த ரிஷிகளுள் ஒருவரான கௌதமரோ, தேவலோகத்துக்கே அதிபதியான இந்திரனோ உலகையே படைக்கும் பிரம்ம தேவனோ சதுர் வேதங்களையும் கரைத்துக் குடித்த தேவரிஷி நாரதரோ கூட அகலிகையின் விருப்பம் எது என்பதைப் பற்றிக் கேட்கவே இல்லை. 

காட்டில் முனிவரின் குடிலில் அவருக்கு சேவை செய்வதிலும் குடிலையும் குடிலைச் சுற்றியும் தூய்மைப் படுத்துவதிலும் தன் நாட்களைக் கழித்தாள் அகலிகை. தவத்துக்கு பெரும் தடை காமம், அக்காமத்தை அடக்காமல் கடந்து செல்ல வேண்டும் என்பதாலும் தனக்குப் பின் தன் குலம் தழைக்க பிள்ளை வேண்டும் என்பதாலும் மட்டுமே முனிகள் தபஸ்விகள் போன்றோர் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள் போலிருக்கிறது. அவர்களது இல்லறக் கடமை ஒரு பிள்ளை பெற்றவுடன் நிறைவுற்றுவிடுகிறது. அதன் பின் சுயம் அடக்கி புலன் அடக்கி தவம் செய்து வல்லமைகளை பெருக்கிக் கொள்வதிலேயே அவர்களது தன்முனைப்பு செல்கிறது.

அகலிகையும் மிகச் சிறந்த பத்தினி. தன் கணவருக்கு சேவை செய்வதில் தன் தேவைகளை கருக்கிக் கொண்டாள். இரவில் தென்றல் பட்டு அசைந்தனவோ இல்லையோ, குடிலைச் சுற்றி இருந்த கொடிகளும் மலர்களும் அவளின் பெருமூச்சுகளால் ஆடின. இப்படியாகக் கடந்து சென்ற நாட்களில் தான் தேவேந்திரனுக்கு தான் செய்த உறுதி திடீரென நினைவுக்கு வந்தது.

எப்படியாவது அகலிகையை அடையும் நோக்கத்துடன் அவன் சந்திரனின் உதவியை நாடினான். அவன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழி போல் கூவினான். வெள்ளி வெளுக்கும் முன் (அதிகாலை நான்கு மணிக்கு முன்னரே) காலைக் கடன்களையும் நித்திய அனுஷ்டானங்களையும் முடிப்பது பெரியோர் வழக்கம். கோழி கூவிய சத்தத்தைக் கேட்ட கௌதமர் சுருக்கென்று எழுந்து தன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு கங்கை நோக்கிச் சென்றார்.

அவர் தலை மறைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் உருவம் கொண்டு குடிலின் கதவைத் தட்டினான் இந்திரன். கதவைத் திறந்து ‘இத்தனைச் சுருக்கில் திரும்பிவிட்டீர்களா?’ என்று கேட்டபடியே அரையிருட்டில் போலி கௌதமரைப் பார்த்து கேட்டவாரே அதிசயித்த அகலிகை, அதற்கான காரணத்தை அவன் இழுத்து வளைத்து அணைத்த வேகத்தில் உணர்ந்து வெட்கினாள்.

பல ஆண்டுகள் கழித்து அவள் உடல் வேதனைக்கு கிடைத்த மருந்து அலைவுற்ற ஆத்மாவிற்கு கிடைத்த சாந்தி அவளை அமைதி கொள்ளச் செய்தது. கங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமர் இன்னும் இருள் விலகவில்லையே என ஆச்சரியம் அடைந்து, காலம் தவறாக கணிக்கப்பட்டுவிட்டதை அறிந்து தன் குடிலை நோக்கித் திரும்பினார்.

அகலிகையை அழைத்தவாரே கதவைத் தட்டியவருக்கு உள் நிகழ்ந்த செயல் நிழல் போல திருஷ்டியில் தெரிய கோபத்தால் எட்டி உதைத்தார் குடிலின் கதவை. வெளியில் தன் கணவன், தன் அருகிலும் தன் கணவன் என இருவரையும் ஓர் உருவத்தில் கண்ட அகலிகை பதறிப் போனாள். அதற்குள் குட்டு வெளிப்பட்டுவிட்ட பயத்தில் இந்திரன் பூனை உருவெடுத்து குடிலின் கூரை வழியாக தப்பியோடினான்.

கொண்டவனுக்கும் வந்தவனுக்கும் வித்தியாசம் அறியாமல் இந்திரனுடன் கூடிய பாவத்திற்காக அகலிகையை ஊண் உணவு உறக்கம் இல்லாமல் கல்லாகக் கிட என்ற சாபத்தை இட்டார் கௌதமர். தப்பியோடிய இந்திரனும் அவர் சாபத்தில் இருந்து தப்பவில்லை. எந்தச் சுகத்துக்காக அலைந்து பிறன் மனையைக் கூடினானோ அந்த சுகம் இனி அவனுக்கு கிடைக்காத வண்ணம் அவனை ஆண்மையற்றவனாக போகக் கடவது என்று அவனையும் சபித்தார் முனிவர்.

அகலிகையின் இச்செயல்பாடு இரண்டுவிதமாகப் பார்க்கப்படுகிறது.

ஒன்று, விரக தாபத்தில் தகித்துக் கொண்டிருந்ததால் அவள் போலி கௌதமரை அடையாளம் காணமுடியாமல் கணவன் என நம்பி ஏமாந்திருக்கலாம். அத்தனை ஆண்டுகளுக்குப் பின் தன் நினைவு தன் கணவனுக்கு வந்ததே, என்ற தவிப்பும் எதிர்ப்பார்ப்பும் அவளை மயங்கச் செய்திருக்கலாம். ரிஷி பத்தினி என்றாலும் அவளும் ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் கொண்ட பெண் தானே.

அடுத்து. காலடி ஓசையைக் கொண்டே வருபவன் தன் கணவனா மாற்றானா என்பதை உணர்ந்து கொள்வாள் பத்தினி. அவன் வாசம், அவன் தொடுதல், அவன் இயல்பு என எதுவுமே அறியாமலா இத்தனை ஆண்டுகள் இல்லறம் நடத்தி இருப்பாள்? ஒருவேளை வந்தவன் தன் கணவனல்ல என்றறிந்து கொண்டே, தன் உடல் தேவையை நிறைவேற்றிக் கொண்டாளா? அப்படி என்றால் அகலிகை கற்பிழந்தவளாக, கீழ் மகளாக கருதப்பட வேண்டியவளா?

அவள் செய்தது தவறென்றால் காமத்தை அடக்கி தப வாழ்க்கை வாழ விதித்திருக்கும் முனிவனுக்கு அப்ஸரஸ் போன்ற பேரழகி எதற்கு? குல விருத்திக்கு சாதாரண பெண் போதாதா? அகலிகையின் அழகு தானே இந்திரனை பிறன்மனை ஆன போதும், முனியின் பத்தினியான போதும் அவளை அடையத் தூண்டியது.

அகலிகையின் ஒரு நாள் சறுக்கல் வரலாறாகியது. கோபம் குறைந்து சுயம் உறுத்திய முனியின் மனம் தன் மனைவி சாப விமோசனம் பெற வேண்டும் எனத் தவித்தது. ‘ஆயிரம் ஆண்டுகள் கல்போல தவ வாழ்வு மேற்கொண்ட பின், அயோத்தியில் தசரதனின் மைந்தனாக கோசலை வயிற்றில் ராமர் பிரான் பிறந்து வளர்ந்து, இப்பக்கம் வரும் போது அவன் பாதத் தூளி என்று உன் மேல் படுகிறதோ அன்று உனக்கு சாப விமோசனம்’ என்று சொல்லிச் சென்றுவிடுகிறார்.

அன்றிலிருந்து அகலிகை கல் போல மண்ணோடு மண்ணாக படிந்து ஊண் உறக்கம் உணவின்றி தபஸ் செய்ய ஆரம்பிக்கிறாள். கல் போன்ற இதயம் கொண்ட மனிதர்களிடையே வாழ்வதைவிட கல்லாகக் கிடப்பதே பேறு என்று வாளாவிருந்துவிட்டாள் அந்த வனிதை. காலம் கரையக் கரைய அக்கல்லின் மீது தூசிகள் படிந்து, புற்கள் அடர்ந்து, உடலற்று, மனமற்று, உணர்வற்று கல் போலவே அப்பேதை தனை மறந்து கிடக்கிறது.  ஆண்டுகள் பல கடக்கின்றன. விஸ்வாமித்திர முனிவருடன் ராம லக்குவணர் அவ்வழி வருகின்றனர். ராமர் அவ்விடத்தைக் கடக்கையில் அவரின் பாதம் பட்ட தூசி ஒன்று காற்றில் பறந்து கல்லான அகலிகையின் மீது பட்டவுடன் அவள் சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாகிறாள்.

அகலிகையின் கதையே வினோதமானது. முரண்கள் நிறைந்தது. வெவ்வேறு கருத்தியல்களுக்கு ஆட்பட்டது. இத்தனை முரண்களுக்குப் பிறகும் இதிகாசத்திலும் ராமகாவியத்திலும் அவள் பத்தினியாகத்தான் பார்க்கப் படுகிறாள். பத்தினிகளின் வரிசையில் அவள் சீதா பிராட்டியையும் முந்தி முன்னே வருகிறாள்.

ஜீவனால் ஆன உடலானது சபலங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டது. அகலிகை தெரிந்தோ தெரியாமலோ கற்பு நெறி பிறழ்ந்துவிட்டாள். அதே சமயம் தவறு உணர்ந்து பரமாத்மாவோடு ஒன்றி ஐம்புலன்களையும் அடக்கி தன் தவத்தாலும் தியாகத்தாலும் அக்களங்கத்திலிருந்து மீள்கிறாள். அப்படி மீண்டவளை உலகம் அவளது தவறை மறந்து போற்றுகிறது.

ஒரு கணம்  மாயப் பிசகினால் அவள் ஓராயிரம் வருடங்கள் கல்லாய் சமைந்து தவமிருக்க நேர்ந்தது. தவத்தில் சிறந்தவரும் முக்காலத்தையும் உணர்ந்தவருமான சப்தரிஷிகளுள் முதன்மையானவருமான கௌதம முனிவருக்கான ஒரே ஒரு கேள்வியை அவள் கல்லாய் இருந்த ஆயிரம் வருடங்களும் மனதில் சுமந்திருந்தாள்’

கணவனின் தீண்டுதலுக்கும் பிற ஆடவனின் தீண்டலுக்கும் வித்தியாசம் அறியாதவள் என்று சாபம் இட்டீர்களே? நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர், சிறந்த தபஸ்வி. ஞான திருஷ்டி படைத்தவர். சேவலின் கூவலுக்கும் சந்திரனின் கூவலுக்கும் உள்ள வித்தியாசத்தை தாங்கள் அறியவில்லையா மாமுனியே?...

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com