3. ஊர்மிளை

ஊர்மிளை. ராம காவியத்தில் அதிகம் பேசப்படாத, உண்மையைச் சொன்னால் பேசவேபடாத பாத்திரம்.
3. ஊர்மிளை

மரவுறி தரித்து ராமன் முன்னேற

பத்தினித் தெய்வமென சீதையும்

பின் தொடர்ந்தாள்..

அண்ணன் திருவடி தொழும் சேவகனாய்

உடன் சென்றான் தமையனவன்

மீளாத் துயர் கொண்டிருந்தாலும்

சத்ரியக் குலமகளாய்

சுமித்திரையும் விடை கொடுத்தாள்...

மாளாத் துயரடைந்த தசரதனும்

சொல் காக்க வழியணுப்பினான்..

அவரவர் கடன் அவரவர் கடமை

அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..

தமக்கை மணம்புரிந்ததனால்

தானும் ம(ன)ணம் புரிந்து கொண்டு

இலவச இணைப்பாகவே இலக்குவனனை

சேர்ந்த போதும் சோரவில்லை அவள் மனது..

மாளாக் காதலிலும் அன்பிலும் கொண்டவனைக்

அவள் கண்டிருக்கையிலே

தாளாத பிரிவொன்று தானாகவே வருமென்று

பேதை அவள் கனவினிலும் நினையவில்லை...

ஈரேழு புவனத்திலும் சிறந்தவன் நீயென்று

இனி என் அன்னை நீ தந்தை நீ

கொண்டவன் நீ உற்றவன் நீ சொந்தம் நீ பந்தம் நீ

உயிர் மூச்சு நீ என் சகலமும் நீ என நம்பிக்

கைப் பிடித்தவன் தன் துணை மறந்து

இல்லறம் துறந்து துற வரமாய் வேண்டி

ஈரேழு வருடங்கள் உனைப் பாரேன் என

தமையனுடன் சென்ற போதும்...

தாயாய் தந்தையாய் காதலனாய்

கணவனாய் காவலனாய்

கடைசி வரை உனைப் பிரியேன்

என அக்னி வலம் வந்தவனை

மனக் கடலில் மூழ்கச் செய்ய

அவன் கண்ணீராய் வெளியேறிய போதும்

துயருரவில்லை அவள் இதயம்

பிரிவு நெருப்பில் தன் ஆற்றாமை எரித்து

புடம் போட்ட தங்கமென ஒளிர்ந்தனள்

மணாளனின் மானசீகக் கட்டளையால்

அரண்மனையில் அடங்கிப் போன

அடிமை இவள்

நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த

மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

கண்களிலும் காண்பதிலும் கனவினிலும்

கணவனையேக் கண்டு

தனைக் கரைத்து தன் நாமம் மறந்து

ஒரு போதும் தன் நிலை மாறா

வைராக்கிய யோகி இவள்..

உடன் பிறந்தவள் கணவனுடன் சென்றுவிட

ஊடாகப் பிறந்த மற்றவளும்

தன்னவனுக்குத் துணையிருக்க

தன் துணையை வழியனுப்பி

துணையற்ற தனிமரமாய் தானாகி

ரகுவம்சத்தின் களங்கம் கழுவிய

தியாகச் சுடர் இவள்..

காதலை காமத்தை தாபத்தை

விரகத்தை மோகத்தை இளமையை

அடக்கிய வைராக்கிய வீரி இவள்..

வஞ்சிக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு


சிறிதும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத

கற்புக்கரசியாம் தியாகச் சுடராம்

ஊர்மிளையை இங்காவது சிதைக்காமல்

சிந்திப்போம் சிறப்பிக்க....

சீதை! நளாயினி! கண்ணகி! சாவித்திரி!

மாதவி! அகலிகை! வாசுகி!...

கொண்டவரின் அருகிருந்து

உறவாலே உடலாலே உடனிருந்து

கற்பிதம் ஓம்பியவர்கள் கற்புக்கரசிகள் எனில்..

கொண்டவன் உடன் உறையாமல்

உளத்தால் மட்டும் உணர்ந்திருந்து

கற்பை சிறந்தோம்பிய இவள்

கற்புக்கு பேரரசி...

ஊர்மிளை. ராம காவியத்தில் அதிகம் பேசப்படாத, உண்மையைச் சொன்னால் பேசவேபடாத பாத்திரம். சிவ தனுசை நாணேற்றுபவனுக்கே தன் மகள் சீதை என்ற ஜனகரின் நிபந்தனைக்காக தன் வாழ்வையும் சேர்த்தே பணயம் வைத்த நொடியிலிருந்து தொடங்குகிறது பாவப்பட்ட அப்பெண்ணின் கதை. ராமன் நாணேற்றியது மட்டுமல்லாமல் சிவதணுசை இரண்டாக ஒடித்து தன் பராக்கிரமத்தை காட்டி சீதையை மணந்தான். அங்கே அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி காதல் சங்கமித்து இரு மனமும் திருமணத்தில் ஒன்றாகியது. ஆனால் லக்குவன், அண்ணனின் நிழலாக ஒரு சேவகனாக நின்றானே அன்றி அவன் சீதையின் தங்கையான ஊர்மிளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

தமக்கையுடன் உறுதுணையாக லக்குவனின் மனைவி என்ற பெயரில் ஊர்மிளை அனுப்பப்பட்டாள். தமையனுக்கு சேவகம் செய்யவே பிறவி கொண்ட லக்குமணனுக்கு ஊர்மிளை மீதான காதலை விட, அண்ணனின் மீதான கடமை உணர்வே மேலோங்கி இருந்தது. அவர்கள் இருவர் நடுவிலும் காதல் மிக அரிதாகவே அரும்பி இருக்க வேண்டும்.

தந்தையின் கட்டளையால் ராமன் மரவுரி தரித்து காட்டுக்குக் கிளம்ப, அடுத்த கணமே தானும் மரவுறி தரித்து உடன் கிளம்பிவிட்டான் லக்குவன். ராமனாவது சீதையிடம் போய்வருகிறேன் என்று சொல்லி பிரிவுத் துயர் ஆற்றிக் கொள்ள அந்தப்புரம் சென்றான். இவன் எந்தப்புறமும் செல்லவில்லை.

ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி, கணவன் இருக்கும் இடமே மனைவிக்கு சுகம் அது காடானாலும் சரி குப்பை மேடானாலும் சரி என வாதித்து, பிடிவாதம் பிடித்து தானும் கிளம்பிவிட்டாள் சீதை.  தன் துணையை பிரியாத வண்ணம் உடன் கிளம்பிய சீதைக்கும் எப்படி புரியாமல் போயிற்று தன் தங்கை ஊர்மிளையும் மனைவி தான் லக்குவனுக்கு என்பது. 

காவல்காரனாக கிளம்பி ஊர்மிளையின் முன் நின்ற லக்குவன், போய் வருகிறேன் என்பதை தகவலாகக் கூறினான். போய் வரட்டுமா எனக் கேட்கவில்லை. தன் பிரிவு அவளை வருத்துமா என யோசிக்கவில்லை. அண்ணனுடன் அண்ணி வருகிறாளே இவளும் தன்னுடன் வர ஆசைப்படுவாளோ? அதனால் தன் கடமை தவற நேருமோ என்ற அச்சம் மட்டுமே இருந்தது அவனுக்கு.

ராமனுக்கும் சீதைக்கும் இடையில் இருந்த ஆழ்ந்த அன்பும் அளப்பரிய காதலும் சீதையை சுதந்திரமாக ராமனுடன் பேச வைத்தது. அதே காதல் தான் பிடிவாதம் செய்து உடன் சென்றமைக்கும், காட்டில் மாயமானை பிடித்து வரும்படி கூறியதற்கும் அடித்தளமாக அமைந்தது. ஆனால் ஊர்மிளைக்கும் லக்குவனுக்கும் இடையே என்ன இருந்தது? அவளால் ஏன் போகிறாய்? அண்ணனுக்குத் தானே வனவாசம், உனக்கு ஏன் என்று கேட்கவும் முடியவில்லை, நானும் உடன் வருகிறேன் என்ற உரிமையையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

சீதையை ராமன் தன்னுடனேயே மறக்காமல் காட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனதற்கும், ஆனால் லக்குவன் மட்டும் அவளை எந்த அக்கறையும் இன்றி அயோத்தியிலேயே தவிக்க விட்டுப் போனதற்கும் என்ன நியாயங்கள் இருக்க முடியும்? சீதையை அடைய ராமன் ஒரு பெரிய வில்லை உடைக்க வேண்டியிருந்தது போலவே, ஊர்மிளையை அடையக் குறைந்தபட்சம் ஒரு அம்பையாவது எய்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஜனகர் போடாதது காரணமோ? பிரயத்தனங்கள் எதுவுமின்றி, அக்கா சீதையோடு உபரியாக அயோத்திக்கு வந்தவள் தானே என்ற அலட்சியம் காரணமோ? அவள் அருமையை உணராமல் போனதன் காரணம் இது தானோ.

கணவனுடன் இருப்பதால் சீதைக்கு கானகமும் கவி பாடும் வசந்த மண்டபமாக மாறியது. பர்ணசாலையும் பூஞ்சோலையாக எழில் கொஞ்சியது. ஆனால் கணவனைப் பிரிந்து தனிமையில் வாடும் ஊர்மிளைக்கு அயோத்தியின் மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் உத்தியானவனமும் வறண்ட பாலையாக தோன்றியது. இத்தனைக்கும் லக்குவன் அவளருகில் இருந்த நேரத்தை விட ராமனின் அருகில் இருந்த நேரம் தான் அதிகம். முன் கோபத்துக்கு பெயர் போனவன் லக்குவன். ஊர்மிளைக்கு அவனிடம் இருந்த பிரியத்தைக் காட்டிலும் பயமே அதிகம் இருந்திருக்க வேண்டும். அதனால் தானோ என்னமோ தன் தமக்கையைப் போல பிடிவாதம் பிடித்து உடன் செல்லாமல் அமைதியாக தனித்திருக்க இசைந்துவிட்டாள் போலும்.

மணமான நாள் முதல் அவள் தன் கணவனுடன் இருந்த தினங்கள் மிகக் குறைவானவையே. அதிலும் அவர்களுக்கென பிரத்தியேகமான சமயங்களும் மிகக் குறைவு, தற்போது முழுமையாக எல்லாம் முடிந்து சந்நியாசி போல அண்ணன் பின் சென்ற லக்குவன் அவளுக்கும் சேர்த்தல்லவா துறவறத்தை கட்டாயத்தின் பேரில் கொடுத்துச் சென்றான். ராமன் சீதையை கைபிடிக்கையில் அவளுடைய மற்ற சகோதரிகளான மாண்டவி பரதனையும், ஊர்மிளை லக்குவனையும், சுருதகீர்த்தி சத்ருக்கனனையும் மணந்தார்கள். இதில் மாண்டவியும், சுருதகீர்த்தியும் கூட தத்தம் கணவன்மார்களோடு அயோத்தியில் இருக்க, சீதை ராமனுடன் வனவாசம் போனாள். ஆனால் ஊர்மிளை கைவிடப்பட்ட ஓடம் நதியின் போக்குக்கு இப்படியும் அப்படியும் அலைகழிக்கப்பட்டு செல்வதைப் போல தன் கணவனுடனும் போக முடியாமல், புகுந்த வீட்டை விட்டு பிறந்த வீட்டுக்கும் போக முடியாமல் தனித்தும் கணவற்ற அரணமனையில் வாழ முடியாமல் கதியற்றுக் கிடந்தாள்.

அவள் மீது யாருக்கும் அக்கறையோ அனுதாபமோ ஏற்படவில்லை. ராமனின் பிரிவால் வாடி உயிர் நீத்த தசரதனின் பாசத்தையும், தமையனுக்காக தன் சுகத்தையும் துறந்து ஒரு சேவகனாய் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட லக்குமணனின் பெருமையையும், ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என, சுகபோகமான அரண்மனை வாழ்வைத் துறந்து தானும் உடன் சென்ற சீதையின் பதிவிரதத்தையும், அண்ணனின் பாதுகையை அரியணையில் இருத்தி ஆட்சி புரிந்த பரதனின் புகழையும் பாடிப் பாடி அலுத்த இச்சமூகம் ஊர்மிளையின் தியாகத்தை பேசிடத் தயாராக இல்லை.

அதனால் தானோ யாரும் கண்டு கொள்ளாத, எவராலும் அரவணைக்கப்படாத ஊர்மிளையை தான் அரவணைக்க நித்திரா தேவி முன் வந்தாள். நிலை கொள்ளாமல் தவித்த பேதைக்கு நிம்மதி இதுதான் என கனவுகள் கூட வராத ஆழ்ந்த உரக்கத்தை பதினான்கு வருடமும் கொடுத்தாள். பதினான்கு வருடங்கள் இளமையை இனிமையை தன் பருவத்தை தொலைத்து நித்திரையில் ஆழ்ந்திருந்தவள் வனவாசம் முடிந்து வந்த பதியை எப்படி எதிர் கொண்டிருப்பாள். இனியாவது அவளது வாழ்வில் வசந்தம் வீசாதா என்ற எதிர்ப்பார்பு நிறைவேறியதா? இல்லையே.

பதினான்கு வருடமும் காட்டில் தன் அண்ணன் அண்ணியை கண் இமைக்காமலும் கூட கொட்டாமல் காவல் காத்த கடமை வீரன் அல்லவா லக்குவன். தன் கடமைக்கு பாதகமாக இருக்கும் என மனைவியைப் போலவே நித்திரையையும் அல்லவா அவன் ஒதுக்கி வைத்திருந்தான். அத்தனைக்கும் சேர்த்து இவள் விழித்தெழ அவன் உறங்கிப் போனானே?

காலம் எவ்விதமான ரணத்தையும் ஆற்றிவிடும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் இப்பேதையின் ரணத்தை எந்தக் காலம் எந்த யுகத்தில் ஆற்றப் போகிறது?

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com