25. திரிசடை

மரத்தில் ஏறிக் கொண்டிருந்த உடும்பை குறி வைத்து கீழிறிந்து கற்கள் பறந்து கொண்டிருந்தன.
25. திரிசடை

மரத்தில் ஏறிக் கொண்டிருந்த உடும்பை குறி வைத்து கீழிருந்து கற்கள் பறந்து கொண்டிருந்தன. அந்த உடும்பு மரத்தின் தடிமனான கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக மேலே ஏறிக்கொண்டிருந்தது.

வேகமாக அங்கு வந்த அச்சிறிய பெண் உணவுக் கூடத்தில் இருந்த மணியை அடித்து அவர்களின் கவனத்தை ஈர்த்தாள். உணவுக்கூடத்தின் மணியை அடித்தால் சிறப்பு உணவு வந்திருக்கிறது என்று பொருள். கல் எறிந்து கொண்டிருந்தவர்கள் கையிலிருந்த கற்களை அப்படியே போட்டுவிட்டு உணவுக் கூடத்தை நோக்கி விரைந்து வந்தனர். அங்கே எதுவும் தயார் நிலையில் இல்லாதது கண்டு மணியின் பக்கம் திரும்பி அங்கே நின்று கொண்டிருந்த திரிசடையை கோபமாக நோக்கினர். எல்லாரும் அவள் வயதை ஒத்த சிறுவர் சிறுமியர். அவளை முறைத்தவாறே ‘ஏய் திரிசடை, எதற்கு எங்கள் விளையாட்டைக் கெடுத்தாய்? உன்னால் அந்த உடும்பு தப்பி விட்டது பார். அருமையான உடும்புக்கறி விருந்து இன்று எங்களுக்கு கிடைத்திருக்கும். உன்னால் எல்லாம் கெட்டது’ என அவளை கடிந்து கொண்டனர்.

ஆனால் திரிசடை என்ற அச்சிறுமியோ எதையும் காதில் வாங்காமல், அவர்களையும் கடிந்து கொள்ளாமல் புன்னகைத்தவாறே ’அடடா! உடும்பு கறி என்னால் கெட்டுவிட்டதா? இதோ கற்கள் கீழே தானே கிடக்கின்றன, எடுத்து அடிக்கலாமே’ என்றாள்.

‘ம்ம்.. என கோபமாக பற்களைக் கடித்துக் கொண்டே ‘கற்கள் கிடக்கின்றன ஆனால் உன்னால் உடும்பு தப்பித்து மேலே போய்விட்டதே. இனி எங்கிருந்து அடிப்பது. போ’ என்று அவளைப் பழித்துவிட்டு வேறு ஏதேனும் அடிக்கக் கிடைக்குமா என பார்க்க அவ்விடத்தை விட்டு சென்றனர்.

அவர்கள் அனைவரும் அரக்ககுல சிறுவர் சிறுமியர்கள். பிற உயிரனங்களை துன்புறுத்துவது என்பது அவர்களின் பிறப்பு இயல்பாகவே இருந்தது. ஆனால் அவர்களின் செய்கை திரிசடைக்கு வருத்தத்தை அளித்தது. உடும்பின் மேல் இரக்கம் கொண்டாள். அந்த உடும்பு தன் குட்டிகளை நோக்கி போய்க் கொண்டிருந்ததை அவள் அறிவாள். தாய் இல்லாத குட்டிகளை நினைத்துப் பார்க்கவே அவள் உள்ளம் பதறியது. ஒரு கறிக்காக அதன் குஞ்சுகளை அனாதையாக்க அவள் ஒப்பவில்லை. இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கூட புரிந்துக் கொள்ளும் நிலையில் அவளது தோழர்கள் தோழிகள் இல்லை. அதனாலேயெ அவள் அவர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி தான் உடும்பைக் காப்பாற்றினாள்.

அச்சிறு வயதிலேயே அவளுக்கு இரக்க சிந்தனையும் பிற உயிர்களை துன்புறுத்தலாகாது என்ற இளகிய மனமும் வாய்த்திருந்தது. பிறப்பு அசுர குலமாக இருந்தாலும் வளர்ப்பு அவள் தந்தையுடையது. அவள் தந்தை சிறந்த சிவபக்தன், அரக்க குலத் தோன்றல் ஆனாலும் சாத்வீக குணம் உள்ளவன். நீதி, நேர்மை நியாயங்களைப் பின்பற்றுபவன். யார் இந்த திரிசடை?!.

‘ராமாயணத்தில் அதிகம் அறியப்படாத, அறிந்து கொள்ளாமலேயே தவறாகவும் பார்க்கப்பட்ட பாத்திரங்களுள் ஒருத்திதான் திரிசடை. திரிசடை ராவணனின் தம்பி விபீஷணன் மற்றும் சரமைக்குப் பிறந்த பெண். ராவணனைப் போலவே விபீஷணனும் சிறந்த சிவ பக்தன். திரிசடை என்றால்  வில்வம் என்று  பொருளுண்டு. (வடமொழியில்)

மூன்று இலைகளைக் கொண்டது வில்வக் கொத்து. அதுதான் திரி + சடை. வில்வம் சிவபெருமானுக்கு மிகவும் உரியது. அவருடைய  திரி-சூலமே, திரி-சடை ஆனது என்ற கதைகளும் உண்டு.  சிவனுக்கு மட்டுமில்லை திருமகள் மஹாலஷ்மிக்கும் வில்வம் உரியது. ‘ஓம் வில்வ தள வாசின்யை நம’ என்று வில்வத்தால் அன்னையையும் பூஜிக்கிறோம். விபீஷணனும் தன் சகோதரன் ராவணனைப் போலவே பெரும் சிவபக்தன் ஆனதால் தன் குழந்தைக்கு ஈசனுக்குப் பிரியமானதையே பேராக வைத்தான்.

திரிசடையைப் பற்றி ராம காவியத்தில் அதிக பக்கங்கள் இல்லை. மிக சொற்ப இடங்களில் தான் அவள் பங்கு இருக்கிறது ஆனால் அத்தனையும் மிக முக்கியமான இடங்கள். சில பகுதிகளில் மட்டுமே அவள் இடம் பெற்றாலும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைத் தருகிறாள்.

பிறப்பால் திரிசடை அரக்க குலத்தைச் சேர்ந்தவள். ஆனால் அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், கம்ப ராமாயணத்தில் திரிசடையை கம்பன் தாய்க்கு நிகராக அறிமுகம் செய்கிறான். அன்னை சீதா தேவியே திரிசடையை (சீதையின் வயதினினும் திரிசடை இளையவளாகக் கூட இருந்திருக்கலாம்) அன்னை அன்னை அன்னை என மூன்று இடத்தில் விளித்து தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறாள்.

சீதை ஜனகரின் மகள் என பல இடங்களில் சொல்லப்பட்டிருகிறது. ஆனால் சீதையின் தாய் குறித்த குறிப்புகள் இடம் பெறவில்லை. சீதாதேவி பூமியில் இருந்து உதித்தவளாகவும் கூறப்படுகிறாள்.  அயோத்தி வாசத்திலும் கோசலை, கைகேயி, சுமித்திரை இவர்களை அன்னை என்று அழைத்ததாகத் தெரியவில்லை. வனம் சென்றபோது சுமந்திரனிடம் செய்தி சொல்லி அனுப்புகிறாள். அப்பொழுது ‘அரசர்க்கு, அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பி’ என்றுதான் சொல்கிறாள். வனத்திலே தசரதன் இறந்த செய்தி கேட்ட போதும் அன்னையே என்று அழைத்து ஆறுதல் சொன்னதாகத் தெரியவில்லை.

அப்படிப்பட்ட சீதை ஆத்மார்த்தமாக அரக்கர்குலத்து மகளை தன் அன்னைக்கு ஒப்பாகக் கருதி அன்னையே என்று விளிக்கும் அளவு மாசற்ற அன்பும் சீதையின் பால் இளகிய மனமும் கொண்டிருந்திருக்கிறாள் திரிசடை. அதுவே அவளது இயல்பாகவும் இருந்திருக்கிறது.

அனுமன் சீதையைத் தேடி இலங்கை நகரில் சுற்றிக் கொண்டிருந்த போது விபீஷணனின் அரண்மனைக்குள் செல்கிறானாம். அம்மாளிகை வனப்பும் அழகும் பெற்றிருந்ததாம். அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக் கண்டான் என்று கம்பன் கூறுகிறான். கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் அனுமனால் காண முடிந்தது. நீதியும் அறமும் அவனிடம் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்ததாம். ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்து கொண்ட அனுமன் அம்மாளிகைக்கு எவ்வித தீங்கும் செய்யாமல் கடந்து செல்கிறான். அப்படிப்பட்ட சிறந்த நியாயவானால் வளர்க்கப்பட்ட பெண் அல்லவா திரிசடை.

சீதையை கவர்ந்து வந்த ராவணன் அசோக வனத்தில் சீதையை சிறைவைத்து அவளுக்கு காவலாக அரக்கிகளை வைத்துவிட்டுச் செல்கிறான். அசோகவனத்தில் சீதைக்குக் காவல் இருந்த அரக்கியர்

‘வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்

குயிற்றிய விழியினர் கொடிய நோக்கியர்

எயிற்றினுக்கு இடை இடை யானை, யாளி, பேய் என

துயில் கொள் வெம்பிலன் என தொட்ட வாயினர்’ – என

பார்த்தாலே அருவெறுப்பு வரும் கோர தோற்றங்களை உடைய அரக்கியர்கள் சீதைக்கு காவல் இருந்தனர். அவர்களின் வாய் குகை போன்று பிளந்தும், வளைந்து குறுகிய  நெற்றியை உடையவர்களாகவும், வயிறு பெருத்து யாளியைப் போன்ற உயர்ந்த தோற்றத்தை கொண்டவர்களாகவும் பார்க்கும் போதே பயம் தோன்றும் விதத்தில் கோர பற்களைக் கொண்டிருப்பவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் ராவணனின் ஆணைப்படி சீதாதேவியை அவனை ஏற்றுக் கொள்ளும் படி பல விதத்திலும் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.

அவர்களின் நடுவே முற்றிலும் மாறுபட்டவளாக அன்னை சீதைக்கு உற்ற தோழியாகவும், ஆறுதல் கூறும் அன்னையாகவும் செயல்பட்டவள் திரிசடை. ராமனின் நினைவாலும் ராவணனின் பலவந்தங்களாலும் ஒவ்வொறு முறையும் சீதை துன்பத்தில் உழலுகையில் அவளை அணைத்து அரவணைத்து தேறுதல் கூறி, ராமன் உனை வந்து மீட்பான் என்ற நம்பிக்கை கொடுத்தவள் திரிசடை.

ராவணன் இடத்தே கடிந்து பேசியும், சுற்றி தன்னை பயமுறுத்தும் அரக்கிகள் கூட்டத்திடம் அமைதி காத்தும், எதிலும் ஒட்டாமல் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட சீதை தனது தவிப்பையும் அனுபவத்தையும் திரிசடையிடம் மட்டுமே சொல்லி ஆறுதல் தேடுகிறாள். திகிலோடிருக்கும் சீதைக்கு உற்ற தோழியாக விளங்குகிறாள் திரிசடை.  அவளிடம் சீதை

 “என் துணைவி ஆம் தூய நீ கேட்டி,” என்று சொல்லத் தொடங்குகிறாள்:

முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்

துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும்

இனியன துடித்தன, ஈண்டும் ஆண்டு என

நனி துடிக்கின்றன,ஆய்ந்து சொல்வாய்

திரிசடை, விசுவாமித்திர முனிவரோடு ராமன் மிதிலைக்கு வந்த அன்றும் இதேபோல் என் இடது கண்ணும், புருவமும், தோளும் துடித்தன. இன்றும் அதே போலத் துடிக்கின்றன. தம்பி பரதனுக்கு நாட்டை அளித்துவிட்டு  நாங்கள் வனம் புகுந்த நாளிலும், கொடும் நெஞ்சுடைய ராவணன் தன்னை வஞ்சமாகக் கவர்ந்து இங்கு இழுத்து வந்த நாளிலும் என் வலம் துடித்தன. ஆனால் இன்று என் இடப்பக்கங்கள் துடிக்கின்றன. அப்படி என்றால் எனக்கு ஏதேனும் நன்மை வருமா?’ சொல்லம்மா என்று குழந்தையைப் போல சீதை திரிசடையிடம் விளக்கம் கேட்கிறாள். தனக்குத் தோன்றும் ஒவ்வொன்றையும் மறவாது மறைக்காது பகிர்ந்து கொள்ளும் உற்ற தோழியாகவே திரிசடையைக் காண்கிறாள் சீதை.

இதைக் கேட்ட  திரிசடை அவளின் கலக்கத்தைப் போக்கும் விதமாக  ‘தேவி, உனக்கு நல்ல சகுனங்கள் தென்படுகிறது. நீ நிச்சயம் உன் கணவனைச் சேரப் போகிறாய். உன் காதிலே பொன்நிறத் தும்பி வந்து ஊதிப் போனதை நான் பார்த்தேன். நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமை வருவதும் நிச்சயம். உனக்கு மங்களங்கள் வந்து சேரும் நாள் தொலைவில் இல்லை’ என்று தேறுதல் சொல்கிறாள்.

அதன்பின் தான் ஒரு கனவு கண்டு கொண்டிருந்ததாகவும் அதன் முடிவு நெருங்குகையில் நீ என்னை எழுப்பிவிட்டாயம்மா. அதனால் முடிவு தெரியவில்லை. இதுவரை  கண்ட கனவை நான் உனக்குச் சொல்கிறேன் கேள் என சீதைக்கு தன் கனவை விவரிக்கிறாள்:

ராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில் தென்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன் மக்களும் சுற்றமும் கூடப் போனார்கள். நகரில் இருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன. யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரண கும்பத்திலிருந்த புனித நீர் கள்ளைப் போல் பொங்கி வழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்று வீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்ந்து சுறு நாற்றம் நாறின.

‘இன்னும் கேள். இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள் வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர் செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்த மயிலும் பறந்து போனது. அதே நேரம் ஓர் அழகான பெண் ராவணன் அரண்மனையிலிருந்து அடுக்கு தீபம் ஏந்தியபடி விபீஷணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் நீ என்னை எழுப்பி விட்டாய்’ என்கிறாள்.

இதைக் கேட்ட சீதை அக்கனவின் உட்பொருளை ஒருவாறு உணர்ந்து கொள்கிறாள். ராவணன் குலத்தோடு அழியப்போகிறான். இரண்டு சிங்கங்களும் ராம இலக்குவர்களைக் குறிக்கின்றன, அந்த மயில் தன்னைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறாள். அவள் கவலையெல்லாம் பறந்து சென்ற மயில் எங்கே போனது? எனவே கனவின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கை கூப்பி ‘அன்னையே! இன்னும் துயில்க, அதன் குறைகாண்’ என்று வேண்டிக் கொள்கிறாள். மீண்டும் உறங்கினால் அதே கனவு தொடரப் போவதில்லை என்ற போதும், அவளை அன்னையே என்று விளித்து இவ்வாறு வேண்டிக் கொள்வது சீதாப்பிராட்டி திரிசடை மேல் வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையையும் அவள் சொல்லில் அவள் அடைந்த ஆறுதலையும் நமக்கு உணர்த்துகிறது.

ராவணன் மீண்டும் சீதையிடம் வந்து தன்னை மணம் புரிந்து கொள்ளும் படி யாசிக்கிறான். சீதையின் கொடுஞ்சொல்லால் கோபமுற்ற ராவணன், இதோ இப்போதே சென்று உன் கணவனையும் அவன் தம்பியையும் கொன்றொழித்து வருகிறேன். அப்படியே மிதிலையும் சென்று உன் பெற்றோரையும் சுற்றத்தையும் பூண்டோடு அழித்து பின் உன்னையும் வந்து கொல்வேன் என்று சொல்லி ஆத்திரத்துடன் கிளம்புகிறான். அதைக் கேட்டு பதைத்த சீதைக்கு திரிசடை

‘தாயே நான் முன்பு கண்ட கனவின் முடிவைப் பற்றி முன்னமே சொன்னேன் அல்லவா? அப்படியிருக்க மீண்டும் ஏன் மனம் கலங்குகிறாய்? மனம் கலங்குவது தகாது’ என்று அறிவுறுத்துகிறாள். அதனால் மனம் தேறிய சீதை ‘அன்னே! நன்று’ என்று தேறுதல் அடைகிறாள். அரக்கியரும் அடங்கி விடுகிறார்கள். 

திரிசடை சீதைக்கு கனவின் தன்மை பற்றிக் கூறியதோடு கூடவே, ஒரு முக்கியமான, சீதைக்கு மிகவும் உபயோகமான, அவளுக்கு நம்பிக்கையும் தைரியமும் தரக் கூடிய செய்தியையும் சொல்கிறாள். தன்னை விரும்பாத பெண்ணை ராவணன் தொட்டால் அவன் தலை வெடிக்கும் என்று ஒரு சாபம் இருப்பதை சீதைக்குச் சொல்கிறாள். இது சீதைக்கு எவ்வளவு முக்கியமான செய்தி! தினம் தினம் என்ன நடக்குமோ என்று அஞ்சும் அவளுக்கு உயிர் வாழ்வதற்கு வேண்டிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்தச் செய்திதான். இதை அனுமனிடமும் தெரிவிக்கிறாள்.

சீதையை ஆறுதல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தன் பெரியப்பாவையும் அவள் விட்டுக் கொடுக்காமல் காக்கிறாள். அறிந்தது அறியாதது என எதையும் மிகைப்படுத்திக் கூறாமல் தன் இனத்தைப் பற்றியோ குடும்ப ரகசியங்கள் பற்றியோ எதையும் வெளியிடாமல், சீதையின் துக்கம் நீங்க எவ்வளவு தகவல்கள் தேவையோ அதை மட்டும் உரைக்கிறாள். தன் பெரிய தகப்பனின் செய்கை நியாமற்று இருந்தாலும் அவனை தூற்றி ஒரு வார்த்தை கூறினாள் இல்லை.

அனுமன் வந்து சென்றபின் சீதை ஒருவாறு மனம் தேறியிருந்தாலும் அவளுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் ராவணன். சீதையை மீட்க ராம லஷ்மணர் வந்து போர் ஆரம்பமாகிறது. அதன் நடுவே ராவணன் தன் மந்திரவலிமையால் சீதையின் தந்தையைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை வருவித்து (மாயா ஜனகன்) அவரை சங்கிலியால் பிணைத்து துன்புறுத்தியபடி அழைத்து வந்து சீதையின் முன் நிற்க வைக்கிறான். ஜனகனின் வாயிலாகவே ராவணனின் ஆசைக்கு சீதையை இணங்கிப் போகச் சொல்லும்படி செய்கிறான். இதைக் கேட்ட சீதை அதிர்ந்து போகிறாள். பெற்ற தந்தையின் வாயால் தன் பெண்ணை மாற்றான் ஆசைக்கு இணங்கிப் போ என்பதைக் கேட்பதா என வெகுண்டு மாயா ஜனகனைக் கடிந்து பேசுகிறாள். ‘இப்படிப்பட்ட தந்தை இருந்தால் என்ன? இறந்தால் தான் என்ன? என்கிறாள்.

ராவணன் மாயா ஜனகனைக் கொல்லப் போவதாக வாளை உருவுகிறான். அதே நேரம் போர்க்களத்தில் கும்பகர்ணனின் இறந்த செய்தி வருகிறது. சீதையை அழவைத்த ராவணன் கதறிக் கொண்டேசென்று விடுகிறான். அவளருகில் வந்த திரிசடை சீதையிடம் உண்மையைச் சொல்கிறாள்.

‘உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே

வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்

அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கனாம் எனா

சிந்தையின் உணர்த்தினாள் அமுதின் செம்மையாள்’

தந்தையே தனக்குத் துரோகம் இழைத்து விட்டானே என்று சீதை மிகவும் மனம் கசந்து போயிருந்த சமயத்தில் அவளுக்கு ஆறுதலாகத் திரிசடை, உயிர்போகும் தறுவாயில் அமுதம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி உயிர் பிழைப்பிக்கிறாள். அதனால் அவளை அமுதின் செம்மையாள் என்கிறான் கம்பன்.

போர்களத்தின் ராம லஷ்மணர் மற்றும் இந்திரஜித்தின் இடையே  கடுமையான போர் நிலவுகிறது. உயிர்களின் நன்மை கருதி பிரும்மாஸ்த்திரத்தை ஏவ வேண்டாம் என ராமர் கூறியதால் லக்‌ஷமணன் தன்னிடமிருந்த பிரும்மாஸ்த்திரத்தை ஏவாமல் போர் புரிந்தான். ஆனால் இந்திரஜித்தோ எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு தன்னிடமிருந்த பிரும்மாஸ்த்திரத்தை ஏவி விடுகிறான்.

அதனால் அனைத்து வானர வீரர்களும் வீழ்ந்து விடுகின்றனர். லஷ்மணனும் வீழ்ந்து விடுகிறான்.  இதைக் கண்ட ராமன் மிகவும் வருந்திப் புலம்புகிறான். தாங்க முடியாத துயரத்தில் மூர்ச்சையாகி விடுகிறான். ராமனும் மரணமடைந்து விட்டதாக நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சேதி சொல்கிறார்கள்.  

அதைக் கேட்ட ராவணன் உவகை கொண்டு ’இனி நீ என்னவள். உன் கணவன் போரில் மாண்டுவிட்டான். அதை நீயே நேரில் சென்று கண்டு வருக’ எனச் சொல்லி  அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்று அங்கு ராம லஷ்மணர் இறந்துகிடப்பதை காட்டி வரச் சொல்லி அரக்கிகளுடன் அனுப்புகிறான்.

அங்கு சென்ற சீதை புஷ்பக விமானத்தில் இருந்து குதித்து உயிர்விடத் துணிகிறாள். அவளைத் தடுத்த திரிசடை சமயோஜிதமாக உண்மையை ஆராய்ந்து சீதைக்கு எடுத்து இயம்புகிறாள்.

அவளை அணைத்து ‘தாயே இந்த அரக்கர்களின் மாயம் நீ அறியாததா? மாயமானை விடுத்ததும் மாயாஜனகனை உன்னிடம் அனுப்பியதையும், நாகபாசம் அழிந்து போனதையும் எண்ணிப்பார். நன்றாக உற்று கவனித்துப்பார். ராமன் உடம்பில் அம்புகள் தைக்கவில்லை.  லஷ்மணன் உடலில் அம்புகள் இருந்தாலும் கூட அவன் முகம் இன்னமும் சூரியன் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. ராமன் உயிருக்கு இறுதி நேர்ந்தால் இந்த உலகம் இன்னமும் இயங்குமா? உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு தானேயிருக்கிறது? ஏன்? ராமன் உயிரோடு இருப்பதால்தான்.

இன்னொன்றையும் எண்ணிப்பார். இன்று போல் என்றும் இருத்தி என்று நீ வாழ்த்தியதால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற அனுமனுக்கு முடிவு ஏது? தேவி உன் கற்புக்கு அழிவு உண்டோ? மேலும் தேவர்கள், ராம லக்ஷ்மணரை வணங்குவதைக் கண்டேன். தேவர்கள் உன்னைப் போல் கலக்கமடையவில்லை. அதனால் அவர்கள் உயிருக்கு ஒன்றும் நேர வில்லை என்று தெரிந்துகொள். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் புஷ்பகவிமானம் மங்கலநாண் இழந்த கைம்பெண்களைத் தாங்காது. நான்சொன்ன இத்தனை கருத்துக்களையும் நன்றாக ஆராய்ந்து எண்ணிப் பார்’ என்று விரிவாகச் சொல்கிறாள்

ராமன் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சியிலும் துன்பத்திலும் ஆராய்ந்து அறியும் நிலையை இழந்த சீதைக்கு திரிசடையின் சொற்கள் தேனைப் போல் காதில் பாய்ந்தன. தன் நிலை திரும்பிய சீதை திரிசடையை அணைத்துக் கொண்டு கண்ணீர் ததும்ப

‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே

உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்’

தாயே, நீ பலமுறை எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறாய்..ராம தூதுவன் வருவான், ராமன் வருவான் என்றெல்லாம் நீ கூறிய வார்த்தைகள் எதுவும் பொய்யாகப் போனது இல்லை. இப்படி நீ சொன்னது எல்லாம் நடந்ததால், உன்னையே தெய்வமாக நான் நினைத்து இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன். நான் உயிரை விட என்றோ முடிவு செய்து விட்டேன். நீ சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் இன்று வரை உயிர் வாழ்ந்தேன் என்றாள்.

போரில் வெற்றிபெற்று ராமனுடன் அயோத்திக்கு கிளம்பும் முன் சீதை திரிசடையிடம்

வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு

இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு

அணங்கு தான் என இருத்தி‘ என்று, ஐயன் மாட்டு அணைந்தாள்!

(மீட்சிப் படலம்: 10243)

திரிசடை சீதையை தன் மகளாக பாவித்து காக்கிறாள். அசோகவனத்தில் சீதையின் காவல் தெய்வமாக இருந்த அவள் பின்னாளில் இலங்கையின் காவல் தெய்வமாக சீதையால் ஆசிர்வதிக்கப்படுகிறாள். அரக்கியின் வார்த்தைகள் திருமகளான சீதையின் உயிரை காத்தது. திரிசடை மட்டும் இல்லை என்றால் சீதை அசோக வனத்தில் உயிருடன் இருந்திருக்க மாட்டாள். தற்கொலையில் இருந்து ஒரு முறை காக்கிறாள் ஆனால் பலமுறை அவளுக்கு மன தைரியம் அளித்து ராமன் வந்து அவளை மீட்டுச் செல்லும் வரையில் எந்த வகையிலும் மனம் தளர்ந்து விடாமல் பாதுகாக்கிறாள். சீதை எனும் தாயாருக்கே தாயாக இருந்த பெருமை பெற்றவள் திரிசடை.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com