21. சர்மிஷ்டை

நீரிலும் நிலத்திலும் மனதை கொள்ளை கொள்ளும் படி கெண்டைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன
21. சர்மிஷ்டை

நீரிலும் நிலத்திலும் மனதை கொள்ளை கொள்ளும் படி கெண்டைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. நீரில் கெண்டை மீன்கள் சரி நிலத்தில் எப்படி துள்ளி விளையாட முடியும்? மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மானைப் போல நீர் நீங்கினால் மீன் மரித்தல்லவா போய்விடும்?! இதில் துள்ளுவதும் மனதை அள்ளுவதும் சாத்தியமா? ம்.. சாத்தியம் தான். இதோ இங்கு கெண்டைகள் இருவகையில் போட்டி போட்டு துள்ளியும் மனதை அள்ளியும் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

அசுரச் சக்ரவர்த்தி விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டை, அசுர குரு சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி மற்றும் அவர்களது தோழிகள் என கெண்டை மீன்களை ஒத்த கரிய நீண்ட கண்களையும், மாந்தளிர் போன்ற அழகிய மேனியும் உடைய பருவ மங்கைகள் நீராடிக் கொண்டிருந்தனர். கரையில் ஏறியும் அங்கிருந்து நீரில் பாய்ந்து நீந்தியும் மீன்களை துரத்தியும் பிடித்தும் என அவர்களது விளையாட்டு அந்தி சாய்ந்தும் முடிந்தபாடில்லை.  

காற்று பலமாக வீச ஆரம்பித்தது. இனியும் விளையாட்டைத் தொடர்வது உசிதமில்லையென, அவரவர்கள் வேகமாக கரை ஏறி தங்களது ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தனர். அன்று சந்தியாகாலத்தில் வீசிய காற்று சர்மிஷ்ட்டையின் ஆயுட்காலம் முழுதையும்  புயலைப் போன்று புரட்டிப் போட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

அசுரகுலச் சக்ரவர்த்தி விருஷபர்வாவின் செல்ல மகள் சர்மிஷ்ட்டை. அசுர குலத்தில் தோன்றினாலும் அதீத அழகுடன் அடக்கமும் பொறுமையும் இயல்பாகவே அவளுக்கு வாய்த்திருந்தது. பின் வரும் நாட்களில் அவளுக்கு இப்பொறுமையும் நிதானமும் சுயபச்சாதாபத்தில் வாடாமல் இருப்பதற்கு அவசியம் தேவைப்படும் என்பதால் தான் பிறவியிலேயே அத்தகைய குணம் அவளுக்கு வாய்க்கப் பெற்றதோ என்னமோ?

காற்று சற்றே பலமாக வீசியதால் அவர்கள் கரையில் அவிழ்த்து வைத்திருந்த ஆடைகள் பறந்து ஒன்றன் மீது ஒன்றாகப் புரண்டு கிடந்தன. அவசரத்தில் கவனிக்காமல் சர்மிஷ்ட்டை தன் தோழியான தேவயானியின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு விட்டாள். அதைக் கண்டதும் சுக்ராச்சாரியாரின் புத்திரி தேவயானிக்கு கோபம் வந்துவிட்டது. அவளை நோக்கி ‘கண் தெரியவில்லையா உனக்கு? யாகத்துக்கான அவிசை நாய் கொண்டு செல்வது போல் என் ஆடைகளை எடுத்துக் கொண்டாயே. உன் தந்தைக்கு குருவானவர் என் தந்தை. உங்களை விட உயர்ந்தவர் நாங்கள். நீ இவ்வாறு செய்தது தாழ்ந்த குல மக்கள் வேதத்தை அப்பியாசிப்பது போல் இருக்கிறது’ என்று கூவினாள்.

தேவயானியின் இச் சொற்கள் சர்மிஷ்டையை மிகவும் புண்படுத்திவிட்டது. அவள் உடம்பில் ராஜ ரத்தம் ஓடுகிறது அல்லவா அவளுக்கும் மானம் ரோஷம் இருக்குமே? கோபம் கொண்ட சர்மிஷ்ட்டை  ‘ச்சீ.. என் தந்தையிடம் யாசகம் பெற்று வாழும் உனக்கு இத்தனை திமிரா’ என்று கேட்டு அவளை அருகில் இருந்த பாழும் கிணற்றில் தள்ளிவிட்டுத் தன் தோழிகளுடன் சென்று விட்டாள்.

கிணற்றில் விழுந்த தேவயானி நீண்ட நேரம் யாரேனும் வந்து தன்னைக் காப்பாற்றும் படி குரல் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அச்சமயம் வேட்டையாடிவிட்டு தாக சாந்திக்காக அவ்விடம் வந்த யயாதி என்ற அரசன் அக்குரலைக் கேட்டு கிணற்றின் அருகே வந்தான். கிணற்றினுள் ஈன ஸ்வரத்தில் வந்த குரலை நோக்கி ‘யாரது? இந்தப் பாழும் கிணற்றினுள் எப்படி விழுந்தாய்’ எனக் கேட்டான். முதலில் என்னைக் கிணற்றிலிருந்து மேலேற்றி காப்பாற்றுங்கள். பின் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்ளலாமே என்று பயத்துடன் பதிலுரைத்தாள் தேவயானி.

‘ம். ஆகட்டும். இப்போதே உன்னை வெளிக்கொண்டு வருகிறேன்’

‘என்னை எப்படி இப்போது வெளியே கொண்டு வருவீர்கள்’

‘அதைப்பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை பெண்ணே. நான் கற்ற 'தனுர் வேதம்' நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை’ என்றவன் வில்லில் நாணேற்றி சரமாரியாக தொடுத்து அம்பினால் ஒரு தாமரை போன்ற கூடை செய்து, அதை கொடிகளில் கட்டி கீழே இறக்கினான். அதில் ஏறிக் கொண்டாள் தேவயானி. மெல்ல அக்கூடையை கிணற்றிலிருந்து மேலே தூக்கினான். அவள் வலக்கையை பிடித்து அம்புக் கூடையில் இருந்து வெளியே இறக்கி விட்டான். வெளியே வந்த தேவயானி தான் கிணற்றினுள் விழுந்த கதையை அவனிடம் சொல்லி முடித்து அவளை காப்பாற்றியதற்கு நன்றி கூறி விடை பெற்றாள்.

தன் குடிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதே அவள் மனதில் அத்திட்டம் உருவாகியது. அதற்கு யயாதியின் பரந்த தோளும், திண்னென்ற மார்புகளும், கிறங்கடிக்கும் உயரமும் நிமிடத்துக்குள் அம்புகள் எய்து மலர்கூடையாக்கி அவளை காப்பாற்றிய விவேகமும் கூடுதல் காரணங்களாக அமைந்தது.

தந்தையிடம் நடந்ததைக் அழுகையும் ஆற்றாமையும் கோபமுமாக கூறி முடித்தாள் தேவயானி. சுக்ராச்சாரியாருக்கு ஏற்கனவே முணுக்கென்றால் கோபம் வரும். அதிலும் தன் பிரியமான மகள் வேதனைக்குள்ளாகிறாள் என்றால் சும்மா இருப்பாரா? தன் மகளுக்காக தன் வயிற்றுக்குள் சாம்பலாகிச் சென்ற கசனை சஞ்சீவினி மந்திரம் சொல்லி தன்னுயிரையும் மதிக்காமல் வெளிக் கொண்டு வந்தவரல்லவா?

உன்னை அவமானப்படுத்தியவள் இருக்கும் இந்நகரில் இனியும் நாம் இருக்க வேண்டாம். வா மகளே என்று சொல்லி தன் மகளையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பினார் சுக்ராச்சாரியார். தன் குல குருவாக இருக்க வந்தவர் கோபம் கொண்டு தன் நாட்டை விட்டு போவது கண்டு பயந்து போனான் விருஷபர்வன். பிராமண சாபம் குலம் நாசம் என்பதை உணர்ந்த மன்னன் உடனே அவர் காலில் விழுந்து அவரை போக வேண்டாம் எனத் தடுத்தான். முடிவு தன் கையில் இல்லை என்றும் தன்னை சமாதானப் படுத்துவதை விட புண்பட்ட தன் மகள் தேவயானிடம் பேசி அவளை சமாதானப் படுத்தும் படியும் கூறிவிட்டார் சுக்ராச்சாரியார்.

விருஷபர்வன் தேவயானிடம் சென்று அவள் எதைச் சொன்னாலும் அதற்கு சம்மதிப்பதாகக் கூறி இருவரையும் நாட்டை விட்டு போக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டான். இதற்கு தானே ஆசைப்பட்டாள் பாலகுமாரி அதாவது நம் தேவயானி. தன்னை அவமானப்படுத்தி கிணற்றில் தள்ளிய சர்மிஷ்டையை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தவளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது.

தான் ராஜகுமாரி என்ற மமதையுடன் அவள் நடந்து கொண்டதால், இனி அவள் ஆயுசு முழுவதும் தனக்கு அடிமையாகி சேவகம் செய்ய வேண்டும் என்றாள். தான் திருமணமாகி போகும் போதும் அவளும் ஆயிரம் தோழிகளும் அடிமைகளாக தன்னுடன் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள். குலகுருவின் கோபம் தன் குலத்துக்கும் குடிக்கும் நல்லதல்ல என்று விருஷபர்வன், அவர்களை காக்க தன் மகளை பலிகடாவாக்க சம்மதித்துவிட்டான்.

உடனேயே ஆள் அனுப்பி சர்மிஷ்டையிடம் விஷயம் சொல்லப்பட்டது. நிகழப் போகும் ஆபத்துக்களை உணர்ந்து தான் தந்தை இம்முடிவை எடுத்திருப்பார் என்று புரிந்து கொண்ட சர்மிஷ்டை மறுகணமே தேவயானியின் அடிமையாக இருப்பதற்கு சம்மதித்தாள். வார்த்தை விளையாட்டுகள் இருவருக்குள்ளும் நடந்தது. தோழமை மறந்து இருவருமே எல்லை மீறி நடந்து விட்டனர்.  சர்மிஷ்டையின் மனம் புண்படும் படி முதலில் பேசியவள் தேவயானியே. சில மணிகள் கிணற்றுக்குள் தள்ளிய சர்மிஷ்டையை வாழ்நாள் முழுதும் அடிமை எனும் பாழுங்கிணற்றில் இருக்கும்படி செய்துவிட்டாள் தேவயானி. யாரை நொந்து என்ன பயன்? விதி வலிது அல்லவா.

தான் நினைத்தபடியே விளையாட்டின் முதல் கட்டம் முடிந்து விட்டதை அறிந்த தேவயானி அடுத்த காயை நகர்த்தத் தொடங்கினாள். கிணற்றுக்குள் இருந்து தன்னை காப்பாற்றும் போது யயாதி தன் வலக்கையைப் பற்றி தூக்கி விட்டதால், அவனையே தன் கணவனாக வரித்துக் கொண்டு விட்டதாகவும், யயாதிக்கே தன்னை மணம் செய்து வைக்கும்படியும் தந்தையிடம் வேண்டினாள்.

பாசம் மிகுந்த தந்தை சுக்ராச்சாரியார், மகளின் விருப்பப்படியே யயாதிக்கு அவளை மணம் புரிந்து வைத்தார். அசுர குருவாயிற்றே பாசத்தோடு விஷய ஞானமும் உள்ளவர். யயாதியின் பெண் மோகம் அவர் அறிந்ததே. தன் மகள் அழகி தான், ஆனாலும் அவளுக்கு நிகரான அழகுடைய சர்மிஷ்டை கூடவே அடிமையாகப் போகிறாளே. அடிமை என்றாலும் அரசகுமாரி அல்லவா? எனவே யயாதியின் மனம் அவள் பால் சென்றுவிடும் என்று அறிந்திருந்தார்.

அதற்கு இடம் கொடுக்கா வண்ணம், யயாதியை அழைத்து ‘என் மகளை உனக்கு மணம் செய்வித்ததில் எனக்கு மிக்க சந்தோஷம். அவள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு. மேலும் அவளுடன் அவள் அடிமைகளாக வரும் சர்மிஷ்டையையும் அவள் தோழிகள் ஆயிரம் பேரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு எக்களங்கமும் நேராமல் பார்த்துக் கொள்வதும் உன் பொறுப்புதான்’ என்று எச்சரிக்கை விடுத்தே அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு யயாதி, இந்திரனின் நகரத்தைப் போன்ற தனது நகரத்திற்குத் திரும்பி, தனது அந்தப்புரத்திற்குள் மனைவி தேவயானியை அமர்த்தினான். பிறகு தேவயானியின் வழிகாட்டுதலின்படி செயற்கை வனமான அசோக மரங்களைக் கொண்ட நந்தவனத்திற்கு அருகில் ஒரு மாளிகையைக் கட்டி விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையை குடி வைத்தான்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர்களின் இனிமையான தாம்பத்தியத்தின் பலனாக தேவயானி கருவுற்று அடுத்தடுத்து யது மற்றும் துர்வசு என்ற இரண்டு ஆண் மகவுகளைப் பெற்றாள். அடிமையாக வந்த சர்மிஷ்டைக்கு  திருமண வயது வந்தும், தன் வயதை ஒத்தவளாக இருந்தும் அவளுக்கு மணம் செய்து வைக்கும் எண்ணம் தேவயானிக்கு வரவில்லை. அவள் முன்பாகவே தங்களது இல்லற வாழ்வின் இனிமைகளைப் பற்றி சளைக்காமல் பேசி அவளை ஏங்க வைத்தாள் தேவயானி.

தகுந்த பருவம் அடைந்தும், சிறந்த குலத்தில் பிறந்தும் தான் இன்னும் கன்னியாகவே இருப்பதை எண்ணி வருந்தவில்லை சர்மிஷ்டை. ஆனால் தான் நற்குலத்தில் பிறந்து, அழகும் பண்பும் வாய்த்திருந்து, எல்லா தகுதிகளும் இருந்தும் குலம் தழைக்க வைக்கும் சிறந்த காரியத்தை தன்னால் செய்ய முடியாமல் போவது குறித்து ஏங்கினாள். நன் மைந்தர்களை தன் வயிற்றிலும் சுமந்து பெற வேண்டும் என்ற அவா அவளுக்கு மிகுதியானது.

அது குறித்த தீவிர சிந்தனையில் அவள் ஆழ்ந்திருந்த போது தெய்வ சித்தம் போல அவ்வனத்திற்கு யயாதி வந்து அவள் முன் நின்றான். அவனுக்கும் அவளின் நிலையை எண்ணி வேதனையாக இருந்தது. ராஜகுமாரியாக அரண்மனையில் அதிகாரமாக வாழ வேண்டியவள் இங்கு வசதிகளுடன் இருந்தாலும் பெயருக்கு தோழியாக உண்மையில் அடிமையாகத் தானே இருக்கிறாள் என்ற பச்சாதாபம் ஏற்பட்டது. இந்நிலையிலும் கிஞ்சித்தும் குறையாத அவளது மாசற்ற அழகு அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுவே அவள் மீது ஈர்ப்பாகவும் மாறியது. ஆனால் சுக்ராச்சாரியரின் எச்சரிக்கையும் அவர் மீதிருந்த பயமும் அவனை இத்துனை நாட்கள் எல்லை தாண்ட விடவில்லை.

அவனது எண்ண ஓட்டம் புரிந்தவளாக ‘ஓ மன்னா! நான் அழகானவள் என்பதையும், நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதையும் நீர் அறிவீர். நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பருவ காலம் எனக்கு வந்துவிட்டது. அது வீணாகாமல் பார்த்துக் கொள்வீராக’ என்றாள்

அதற்கு யயாதி, ‘நீ நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதை நான் நன்கறிவேன்.. நீ அழகானவளும் கூட. நிச்சயமாக, நான் உனது குணத்தில் எந்தக் களங்கத்தையும் காணவில்லை. நான் தேவயானியுடன் இணைந்த போது, அவளது தந்தையான சுக்ராச்சாரியர், விருஷபர்வனின் மகளை நீ உனது படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்று பதிலுரைத்தான்.

தொடர்ந்து அவர்கள் ஒருவருகொருவர் நியா அநியாயங்களை அலசி ஆராய்ந்தனர். முடிவில் சர்மிஷ்டை யயாதியை நோக்கி, ‘ஓ மன்னா! பாவத்திலிருந்து என்னைக் காப்பீராக. எனது அறத்தைக் காப்பீராக. உம்மால் தாயாகி, என்னை உலகத்தின் சிறந்த அறத்தைப் பயிலச் செய்வீராக. மனைவி, அடிமை, மகன் ஆகியோர் சுயமாகச் செல்வம் ஈட்டக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஈட்டுவது அனைத்தும் கொண்டவனுக்கே (தலைவனுக்கே) சொந்தம். உண்மையில் நான் தேவயானியின் அடிமை. நீர் தேவயானிக்கு தலைவனாகவும், குருவாகவும் இருக்கிறீர். எனவே, தேவயானிக்குப் போலவே, நீரே எனது தலைவனும், குருவும் ஆவீர். எனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாள்.

யயாதி அவளது பேச்சில் இருந்த உண்மையை எண்ணிப் பார்த்தான். எனவே அவன் சர்மிஷ்டையின் அறத்தைக் காப்பாற்றி அவளைக் கௌரவப்படுத்தினான். அவர்கள் சிறிது காலத்தைச் சேர்ந்தே கழித்தனர். அதன் பலனாக சர்மிஷ்டை கருவுற்றாள். உரிய காலத்தில் தேவர்களைப் போன்ற காந்தியுடனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடனும் திரஹ்யு, அனு மற்றும் புரு எனும் அழகான மூன்று மகவுகளைப் பெற்றெடுத்தாள்.

சில காலங்கள் வரைதான் சர்மிஷ்டையால் அந்தக் குழந்தைகள் சிறந்த முனிவரின் அருளால் அவருடைய வாரிசாக பிறந்தன என்பதாக தேவயானியை நம்ப வைக்க முடிந்தது. ஒரு நாள் உண்மை தெரிந்ததும் தேவயானி பத்திரகாளியானாள். வழக்கம் போல் கோபத்தின் வடிகாலாக தன் தந்தையை நாடிச் சென்றாள்.

விஷயம் அறிந்த அசுரகுரு யயாதியின் மேல் எல்லையில்லாத கோபம் கொண்டார். தான் எச்சரித்தும் அதை மீறி யயாதி சர்மிஷ்டையின் மேல் மோகம் கொண்டு குடித்தனமே நடத்தி இருக்கிறானே. தன் மகளுக்கு இத்தனை பெரிய அநியாயத்தை செய்ததற்கு அவனை உண்டு இல்லை என்று செய்துவிடும் அளவுக்கு அவன் மேல் வெறி கொண்டார். யயாதி பலவாறு எடுத்துக் கூறியும் மன்னிப்பு கேட்டும் கூட அவரால் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் தன் மகளை அலட்சியப் படுத்த இயலவில்லை.

பிடி சாபம் என ‘இளமையும் ஆரோக்கியமும் இருப்பதினால் தானே உனக்கு பெண்ணுடல் மேல் இச்சை இருந்து கொண்டிருக்கிறது. அதுவே இல்லாமல் போனால் உன்னால் என்ன செய்ய முடியும் என நினைத்து. அவனுடைய இளமையை சாபத்தால் பறித்துக் கொண்டு தொண்டு கிழவனாக மாற்றி விட்டார். உள்ளம் இளமையுடனும் உடல் கிழத்தன்மையுடனுமாக மாறினான் யயாதி. பசி இருந்தும் அறுசுவை உணவுகள் பக்கத்தில் இருந்தும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது அவனுக்கு.

இச்சாபத்தைக் கண்ட தேவயானியே திடுக்கிட்டு விட்டாள். சர்மிஷ்டையை கிழவியாக்கி இருந்தால் கூட பரவாயில்லை, தன் கணவனை கிழவனாக்கி தன்னையும் அல்லவா தண்டித்து விட்டார் என விக்கித்து நின்றாள். தன் தந்தையிடம் சாபத்தை மாற்றும் படி கெஞ்சினாள். கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது என்ற சுக்ராச்சாரியார் வேண்டுமானால் விதிவிலக்கு ஒன்றை கூறுகிறேன் என்றார். யாராவது அவனுடைய முதுமையை வாங்கிக் கொண்டு தன் இளமையைத் தர சித்தமாக இருந்தால் அவருடன் மாற்றிக் கொள்ளலாம் என்று விட்டார்.

யயாதி தன் பிள்ளைகள் ஐவரிடமும் தன்னுடைய முதுமையை எடுத்துக் கொண்டு இளமையைத் தருமாறு வேண்டினான். அதற்கு பதிலாக அவர்களுக்கு ராஜ போகமும், ராஜாங்கமும் எதை வேண்டுமானலும் தர சித்தமாயிருந்தான். பிள்ளைகள் ஐவரில் நால்வர் எதற்காகவும் தங்களுடைய இளமையை விட்டுத் தர சம்மதிக்கவில்லை. சர்மிஷ்டையின் கடைசி மைந்தன் புரு மட்டுமே தன் தந்தைக்காக தன் இளமையை விட்டுக்கொடுக்க சித்தமாயிருந்தான்.

தாய் ஒருவழியில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தாள் என்றால் அவளுக்குப் பிறந்த மகனான புருவும் தியாக உருவாகவே இருந்தான். வருடங்கள் பல கழிந்தாலும்  ஆரம்பத்தில் தோழிகளாக இருந்த போதும்  தேவயானிக்கு சர்மிஷ்டை மீது பகை எண்ணமே இருந்தது. அது கடைசி வரை மாறவில்லை. தவறின் பங்கு இருவர் பேரிலும் இருந்த போதும், தன் கணவனுக்கு பதில் கிழத் தோற்றத்தை சர்மிஷ்டைக்கு கொடுத்திருக்கலாமே தன் தந்தை என நினைக்கும் அளவுக்கு அவள் மேல் வெறுப்பு இருந்தது.

அசுர சக்ரவர்த்திக்கு மகளாகப் பிறந்து, செல்வச் செழிப்போடு வளர்ந்து வந்தவளின் வாழ்வை விதி காற்றாக வந்து புரட்டிப் போட்டுவிட்டது. ராஜகுமாரி சர்மிஷ்டை எங்கே அடிமையாகி தேவயானியின் வேலைக்காரியான சர்மிஷ்டை எங்கே? உயரத்திலிருந்து அவள் வாழ்க்கை அதல பாதாளத்துக்கு நிமிட நேரத்தில் தள்ளப்பட்டுவிட்டது.

இருந்தாலும் எக்காரணத்தைச் சொல்லியும் அவள் மறுக்கவில்லை, தன் குடிகள் எக்கேடு கெட்டும் போகட்டும், தன் நாடு என்ன ஆனாலும் ஆகட்டும் தான் அடிமையாகி சிறுமைப்படக் கூடாது என நினைக்கவில்லை சர்மிஷ்டை. ஷத்திரிய புத்திரிகளுக்கு உரித்தான கடமையை ஏற்று அடிமை வாழ்வு வாழவும் தாயாராகி விட்டாள். அவளைப் போலவே அவள் மகனும் தியாகச் சுடராக விளங்கி யாரும் ஏற்க முடியாத முதுமைப் பருவத்தை தன் தந்தைக்காக எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் தான் ஏற்று பேரு பெற்றான்.

சர்மிஷ்டை நல்ல மகளாகவும், உற்ற தோழியாகவும், தன் நாட்டின் மேலும் குலத்தின் மேலும் அக்கறை கொண்ட சிறந்த ஷத்திரிய பெண்ணாகவும், ராஜகுமாரியாக இருந்த போதும், சக தோழிக்கே வாழ்நாள் முழுமைக்கும் அடிமையாக இருக்கத் துணிந்தவளாகவும் இருக்கிறாள். எவ்விடத்திலும் தன் நிலை இறங்காமல், தன் விருப்பத்தை நாகரிகமாக யயாதியிடம் வெளிப்படுத்தியவள். இத்தனை சிறப்புக்களை உடைய சர்மிஷ்டை ஒரு கவனிக்கப்படாத காவியப் பூவாகவே இருக்கிறாள்.   

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com