20. யசோதரை

சித்தார்த்தனுக்கும் யசோதரைக்குமான இனிமையான இல்லற வாழ்வில் ராகுலன் என்ற குமாரன் பிறந்தான்.
20. யசோதரை

சித்தார்த்தனுக்கும் யசோதரைக்குமான இனிமையான இல்லற வாழ்வில் ராகுலன் என்ற குமாரன் பிறந்தான். ஒரு நாள் நடு இரவில் தனக்குப் பிறந்த மகவையும் மனைவி யசோதரையையும் நீங்கி துறவரம் மேற்கொள்ள அரண்மனை விட்டு வெளியேறினான். இவ்வாறாக தனது 29-வது வயதில் வெளியேறிய சித்தார்த்தன் பல இடங்கள் சுற்றித் திரிந்து, 12 வருடத் தேடலுக்குப் பின் போதி மரத்தடியில் ஞானம் பெற்று புத்தராக மாறினார். நம் எல்லோருக்கும் இதுவும் இதற்கு மேல் அதிகமாகவும் புத்தரின் வாழ்க்கையும் துறவரமும் போதனைகளும் அவருடைய இறப்பும் கூட தெரிந்திருக்கும்.

அன்று அரண்மனையில் அவர் விட்டுச் சென்ற யசோதரை என்ன ஆனாள். புத்தரின் மனைவி என்பதைத் தாண்டி யசோதரையைப் பற்றிய விபரங்கள் என்ன என்பது அதிகம் பேர் அறியாதது. இல்லற வாழ்க்கையை துணிவுடன் துறந்து, பந்த பாசத் தளைகளை அறுத்து வெளியேறியதால் அல்லவா சித்தார்த்தன் புத்தனாக முடிந்தது? அதற்குத் தடையாக இருந்ததாகவே பல இடங்களில் யசோதரையைக் குறித்த கருத்துக்கள் உள்ளன. அதாவது துறவரம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு இல்லறம் அதிலும் மனைவி என்பவள் ஒரு பெரும் தடைக்கல்லாகவே தோன்றுகிறாள்.

புத்தருக்கு அரண்மனை துறந்து, மனைவி மக்கள் துறந்து, நாட்டைத் துறந்து பந்த பாசங்கள் துறந்து சுக வாழ்வு துறந்து போதி மரத்தடியில் கிடைத்த ஞானம், அவர் தன் துறவர பாதைக்குத் தடை என்று விட்டுச் சென்ற யசோதரைக்கு எவ்வாறு கிடைத்தது தெரியுமா? வசந்த காலத்தில் வீசும் தென்றலைப் போல மிக மிருதுவாகவும், கரையில் அலைகள் அடித்துக் கொண்டிருந்தாலும், உள்ளே நிச்சலனமாக இருக்கும் கடலின் ஆழத்தைப் போலவும் ஞானம் பெற்றாளாம்.

துறவரத்துக்கு தடை என்பது எதுவும் இல்லை மனம் தான் காரணம் என்பதை சத்தமில்லாமல் வாழ்ந்து காட்டியதால் தானோ அவள் சிறப்பும் ஆர்ப்பாட்டமின்றி ஓரம் கட்டப்பட்டுவிட்டது. புத்தர் ஞானம் பெற்ற கதை பிரபலமான அளவு, யசோதரை இந்த உலகுக்கு உணர்த்திய பாடம் பிரபலமாகவில்லை.

யசோதரை அரசர் சுப்பபுத்தருக்கும் தாய் பமிதாவிற்கும் பிறந்த பெண். அழகும் தேஜஸும் நிரம்பப் பெற்றவள். கல்வியிலும் சிறந்தவள். அவள் அழகுக்கு நிகராக எதையுமே கூற முடியாதாம். இளவரசி யசோதரையின் தாய் பமிதா புத்தரின் தந்தை சுத்தோதனரின் சகோதரி ஆவார். இவர் கோலிய வம்சத்தைச் சேர்ந்த சுப்பபுத்தரை மணந்தார். கோலிய வம்சமும் சாக்கிய வம்சமும் இஷ்வாகு (சூரிய குலம்) குலத்தின் உட் பிரிவுகள். இவர்கள் வாழ்ந்த காலமானது ஆறாம் நூற்றாண்டாகும்.

இவ்விரு குலங்களுக்கு நிகராக வேறு குலங்கள் கருதப்படாததால், இவர்கள் உறவுக்குள்ளாகவே திருமணம் செய்து கொண்டனர். அதன் படியே ஒரே நாளில் பிறந்த சித்தார்த்தனுக்கும் யசோதரைக்கும் அத்தை மகள் மாமன் மகன் என்ற உறவு முறையில் அவர்களது 16-வது வயதில் திருமணம் நடந்தது. மகனின் பிறப்பின் போதே அவன் உலகம் போற்றும் துறவி ஆவான் என்ற தெய்வவாக்கு இருந்ததால் சுத்தோதனருக்கு தன் மகன் எங்கே துறவியாகிவிடுவானோ என்ற பயம் இருந்தது. அவனை இல்லற இன்பத்தில் ஆட்படுத்தி அரண்மனை சுகங்களில் லயிக்க வைத்து துறவரம் எண்ணம் தோன்றாதபடிக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  தனக்கு அடுத்து சித்தார்த்தனே அரசாள வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு மேலோங்கி இருந்தது.

இத்தனையும் அறிந்தும் தோழிகளும் மற்ற உறவினர்களும் துறவரம் பூணும் விதி உடையவனை நீ மணக்க வேண்டுமா எனப் பலவாறு எடுத்துக் கூறியும் தன்னவனாக சித்தார்த்தனை மனதார வரித்துக் கொண்டாள் யசோதரை. அப்போதே அவள் மனதளவில் எது நடந்தாலும் ஏற்கத் தயாராக இருந்தாள். திருமணம் முடிந்து அவர்களது இல்லற வாழ்க்கை மிக இனிதாக போய்க் கொண்டிருந்தது. அவர்களது ஒப்பற்ற காதலின், அளவற்ற அன்பின் அடையாளமாக ராகுலன் என்ற மகன் பிறந்தான்.

மகன் பிறந்த ஏழாவது நாள், நள்ளிரவில் சித்தார்த்தன் உலகப் பற்றைத் துறந்து துறவரப் பாதையில் போக எண்ணி இளமையின் வாயில் பூத்து நின்ற தனது அழகிய மனைவியையும் தன் ரத்தத்தில் உதித்த ஆருயிர் அரசிளம் குமாரனையும் பிரிந்து வெளியேறினான். அப்போது சித்தார்த்தனுக்கு வயது 29.

இவ்வாறு சித்தார்த்தர் தன் மனைவி யசோதரையை விட்டு, சொல்லிக் கொள்ளாமல் கூட அரண்மனை நீங்கிச் சென்ற போது யதோதரைக்கும் இளம் வயது. நல்ல அழகு. உறவினர்களும், நண்பர்களும் அவளை மறுமணம் செய்துகொள்ளுமாறு சொன்னார்கள். பலர் அவளை மணம் செய்து கொள்ளவும் விரும்பி அணுகினார்கள். ஆனால், யசோதரையின் லட்சியம் தன் மகனை நல்லபடியாக வளர்த்து உலகம் மெச்சும் ஆண் மகனாக வளர்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.

அவள், சித்தார்த்தனின் துறவர முடிவுக்கு எதிராகவோ அவன் ஞானம் பெற தடையாகவோ ஒரு போதும் இருக்கவில்லை. மாறாக தன் கணவன் சென்ற பாதையிலேயே தன்னையும் புகுத்திக் கொண்டாள். அதே சமயம் தன்னுடைய எந்தக் கடமையில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவில்லை. அரண்மனையில் இருந்து கொண்டே தன் மகனை நன்மகனாக வளர்தெடுக்கும் தாயாகவும், தன் புகுந்த வீட்டை எவ்விததிலும் தாழ்வுபடுத்தாத  நல்ல மருமகளாகவும், மகனை இழந்து தவிக்கும் தன் மாமனார் சுத்தோதனருக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தாள். மறுமணத்திற்காக அத்தனை அரசிளம் குமாரர்கள் முன் வந்தும், சித்தார்த்தனை ஏற்றிருந்த அவள் மனம் வேறு ஒருவரையும் ஏற்கவில்லை.

அரண்மனை வாசத்தில் இருந்தாலும் அவள் பட்டாடை உடுத்தவில்லை, அறுசுவை உணவுகள் உண்ணவில்லை, பஞ்சு மெத்தையில் உறங்கவில்லை. அரண்மனைத் தோட்டத்தில் ஒரு குடில் அமைத்து அதை தனது இருப்பிடமாக்கிக் கொண்டாள். பெண் துறவிகள் அணியும் எளிய ஆடைகளையே அணிந்தாள். பெயருக்குக் கூட ஆபரணங்களை அணியவில்லை. சித்தார்த்தன் எங்கு எவ்விதம் இருக்கிறார் என்பதை தூதுவர்கள் மூலம் அறிந்து கொண்டு அவரது போதனைகளை தானும் உள்வாங்கி ஒரு புத்த பிக்குணி போலவே வாழ்ந்தாள். தன் கணவன் ஒருவேளை உணவைக் கூட பிட்சை பெற்று உண்கிறான் என அறிந்து அவளும் தனது எளிய உணவையும் ஒரு வேளையாகக் குறைத்துக் கொண்டாள். எந்தளவுக்கு புத்தருடனும் புத்தரின் வாழ்க்கை நெறிமுறைகளுடனும் பொருந்திப் போக முடியுமோ அந்த அளவுக்கு அவள் தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டாள்.

புத்தரைப் போன்று வெளிப்படையாக அறியப்படாமல் அவள் யார் கண்ணுக்கும் புலப்படாத துறவியாகவே வாழ்ந்தாள். ஞானத்தைத் தேடி எங்கும் அலையாமல் தான் இருக்கும் இடத்திலேயே ஞானம் தன்னைத் தேடி வந்து அடையும் படி வாழ்ந்தாள் யசோதரை.

தந்தையின் கண்டிப்பும் அரவணைப்பும் இன்றி தாய் மட்டும் வளர்க்கும் அரசிளங்குமாரன் கேட்பார் பேச்சைக் கேட்டு தான் போன போக்கில் வளர்ந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாள். அன்பும் கருணையும் தைரியமும் நிறைந்தவனாகத் தன் மகனை வளர்த்து வந்தாள். தங்களது வாழ்க்கையின், மகவு ஈன்ற சந்தோஷத் தருணத்தின் ஆரம்பத்திலேயே அவன் தந்தை அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதை ஒரு போதும் எதிர்மறையாக அவனுக்கு போதிக்கவில்லை. மாறாக புத்தரின் பெருமைகளையும் அவரது உபதேசங்களையும் அவனுக்கு அறிவுறுத்தி வளர்த்தாள்.

அரச குமாரனான அவனை சகல சுகங்களையும் அனுபவிக்கும் படி வளர்த்திருக்கலாம். அதற்கான உரிமையும் தகுதியும் யசோதரைக்கும் உண்டு ராகுலனுக்கும் உண்டு. அவற்றைத் தடுப்பார் யாரும் இல்லை. ஆனாலும் அவனை தந்தையின் பாதையின் வழி எளிமையான வாழ்க்கைக்கே பழக்கினாள். தனக்கு சுகபோக வாழ்வு இல்லாவிட்டாலும் தன் மகனாவது சுகமாக வாழட்டும் என நினைப்பதே தாயுள்ளத்தின் பலவீனம். ஆனால் இதில் யசோதரை மிகத் தெளிவான முடிவெடுத்து திடமாக தன் மகனை நன்மகனாக எளிமையாகவே வளர்த்தெடுத்தாள். இதன் மூலம் மிகச் சிறந்த தாயாக நம் கண்முன் உயர்ந்து நிற்கிறாள் யசோதரை.

அவள் சித்தார்த்தனின் மேல் வைத்திருந்தது நிபந்தனை அற்ற அன்பு. எல்லையற்ற நேசம். அதனால் தான் மறுமணம் புரியாமலும், தன்னை விட்டு நள்ளிரவில் சொல்லாமல் சென்றதை குறை காணாமலும் அவளால் இருக்க முடிந்தது. அவன் பிரிவை மனதார ஏற்றுக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவனது கடமைகளையும் சேர்ந்த்து துளியும் குறை இல்லாமல் அவளால் நிறைவேற்ற முடிந்தது. புத்தரின் மேல் அவள் கொண்ட அன்பும்  பக்தியும் எத்தகையது எனபது, சித்தார்த்தனாக அவர்கள் இருவரையும் விட்டுப் பிரிந்த பின் அவள் மேற்கொண்ட வாழ்க்கை முறையிலேயே நமக்குப் புரிகிறது.

அவள் அரண்மனையின் சுக வாழ்க்கையை தொடர்ந்திருக்கலாம், தன் மகனையும் அவ்வாறே ராஜகுமாரனாக வளர்த்திருக்கலாம். அதற்கு தடை எதுவும் இருந்திருக்கவில்லை. அவள் தன் குடும்பத்தின் மீதும் தன் கணவன் மீதும் கொண்டிருந்த அன்புக்கும் பற்றுக்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டாள்.

மிக இளவயதில் அதுவும் ஓரிரவில் மாறிவிட்ட தலைகீழ் சூழ்நிலையை சமாளித்து மீண்டும் எழுவதற்கு அவளுக்கு மிகப் பெரும் துணிவு தேவையாக இருந்தது. தனது மன திடத்தால் வாழ்வில் எச்சந்தர்ப்பத்திலும் சறுக்கி விடாமல் ஒரே நேர்க்கோட்டில் தன் பயணத்தை தொடர்ந்தாள். கணவனைப் பின்பற்றிய ஆன்மிக வாழ்க்கையையும் மகனை வளர்க்கும் பொறுப்பையும் நாட்டு அரசனான மாமனாருக்கு துணை நின்று, மக்கள் நலனுக்காக வழங்கும் அரசியல் ஆலோசனைகளையும் தராசில் நிறுத்தியது போல சமமாக நிகர் செய்வது எளிதான விஷயம் இல்லை. சேவகர்களின் மூலம் புத்தரின் இருப்பையும், போதனைகளையும் அறிந்தாளே அன்றி ஒரு போதும் அவர் முன் சென்று அவரது துறவர வாழ்க்கைக்கு தடையாக நின்றதில்லை. 

ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் சித்தார்த்தர் கெளதம புத்தராக தன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். கிரமப்படி நாட்டின் அரசனான தன் தந்தையை பார்த்து உரையாடி விட்டு, மக்களுடன் போதனைகளை பகிர்ந்துவிட்டு, பின் தன் மகனை பார்த்துவிட்டு அதன் பின்னரே மனைவியாகிய யசோதரைக்கு தரிசனம் கொடுக்க முடிந்தது புத்தரால்.

அப்போதும் யசோதரை பதற்றமே அடையவில்லை. நிதானமாக சித்தார்த்தரை நோக்கி, ‘மக்கள் இப்போது தங்களை புத்தர் என அழைக்கிறார்கள் அல்லவா அதன் பொருள் என்ன?’ என்றார். ‘அறிவாளி. ஆன்மிக ஞானம் பெற்றவன். உலகம் அறிந்தவன். உன்னதமானவன்’ என்று பதில் அளித்தார் புத்தர். யசோதரை புன்னகைத்தபடி ‘நாம் இருவருமே ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். நீங்கள் பெற்ற ஆன்மிக ஞானத்தால் உலகில் ஆன்மிக ஒளியைப் பரப்புகிறீர்கள். நான் பெற்ற பாடம் பெருமளவில் உலகைச் சென்றடையவில்லை’ என்றார். உடனே புத்தர், ‘நீ கற்றுக் கொண்ட பாடம் என்ன?’ எனக் கேட்டார். ‘தன்னம்பிக்கை உள்ள தைரியமான பெண் தன்னளவில் முழுமையடைய யாருடைய உதவியும் தேவையில்லை. அவளே முழுமையானவள்.’ என்றாள். புன்னகைத்தவாறே புத்தர் விடை பெற்றார்.

சிறந்த மனைவி, பாசமிகு தாய், கடமை தவறாத மருமகள், மக்கள் நலம் பேணும் நேர்மையான அரச குலப் பெண். எப்போதும் எங்கும் தன் கடமையை தவற விடாத கண்ணியமான பெண் யசோதரை. யசோதரையின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால் புத்தர் ஞானம் பெற்றிருப்பது அரிது என்று தான் கூற முடியும்.

புத்தருக்கு நிகரான பெருமை கொள்ள யசோதரா எவ்விதத்திலும் குறைந்தவளல்ல. தன் பிறப்பின் காரணம் அறிந்து அதைத் தெளிவுற நிறைவேற்றி, வெற்றி பெற்ற திடச் சித்தம் நிறைந்த பெண்மணி யசோதரை. அக ஒளியினால் பூரணமாகியது அவளது வாழ்வு.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com