5. உடலில் காய்ச்சல் ஏற்படும் விதங்கள்..

டாக்டரை பார்த்து அன்று இரவே மாத்திரை வாங்கிப் போட்டு குணமாகி, மறுநாள் ஃப்ரெஷ்ஷாக அலுவலகம் போயே ஆக வேண்டும் என்றால் முடியுமா!?
5. உடலில் காய்ச்சல் ஏற்படும் விதங்கள்..

காய்ச்சல் வந்தால் அதை உடனே சரி செய்துகொள்ள வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர, அது எந்த வகையான காய்ச்சல், எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தெரிந்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

மனித உடலில் காய்ச்சல் பல்வேறு விதமாக ஏற்படுகிறது என்பதையும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆகவே, மனித உடலில் காய்ச்சல் எவ்வாறெல்லாம் ஏற்படுகிறது என்பதையும், அவற்றில் முக்கியமான வகைகள் குறித்தும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

தொடர் காய்ச்சல் (CONTINUOUS FEVER)

ஒரு குறிப்பிட்ட தினத்தை எடுத்துக்கொண்டால், அந்த நோயாளிக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒரு டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். ஆனால், காய்ச்சல் குறைந்து ‘நார்மல்’ என்று சொல்லும் அளவுக்கு வருவதில்லை. இதைத்தான் தொடர் காய்ச்சல் என்று சொல்கிறோம்.

டைபாய்டு காய்ச்சல், நிமோனியா, இதய உட்சுவர் அழற்சி, மூளை (உறை) பாதிப்பு காய்ச்சல், டைபஸ் காய்ச்சல், ப்ரூசெல்லா நோய், சிறுநீரக வழித்தடப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் காய்ச்சல் போன்றவை தொடர் காய்ச்சலுக்கு உதாரணங்களாகும். இத்தகைய காய்ச்சல் வந்தவர்களுக்கு, 24 மணி நேரமும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

பெல் - எப்ஸ்டைன் காய்ச்சல் (PEL - EBSTEIN FEVER)

இக் காய்ச்சல் வந்தவர்களுக்கு, ஓரிரு வாரங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். அதைத் தொடர்ந்து, ஓரிரு வாரங்களுக்கு காய்ச்சல் குறைந்து, காய்ச்சல் இருக்காது.

இந்த வகைக் காய்ச்சலை ‘பெல்’, ‘எப்ஸ்டைன்’ என்ற இரு மருத்துவர்கள் கண்டறிந்து வகைப்படுத்தியதால், இக் காய்ச்சலுக்கு அவர்கள் பெயரே வைக்கப்பட்டது.

ஹாட்ஜிகின் லிம்போமா (HODGKIN LYMPHOMA) வகை புற்றுநோய் இருந்தாலும், சில வகை வைரஸ் பாதிப்பினாலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு காசநோய் ஏற்பட்டிருந்தாலும் இந்த வகை காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

டெர்டியன் காய்ச்சல் (TERTIAN FEVER)

ஒருநாள் விட்டு ஒருநாள் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். அதாவது, திங்கள்கிழமை காய்ச்சல் இருந்தால், செவ்வாய்க்கிழமை இருக்காது. ஆனால், மீண்டும் புதன்கிழமை காய்ச்சல் ஏற்படும். அடுத்து வியாழக்கிழமை இருக்காது, வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்படும். இது போன்ற காய்ச்சல், மலேரியா காய்ச்சலிலும் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலுக்கு காரணமான ஒட்டுண்ணியான ப்ளாஸ்மோடியம் வைவாக்ஸ் (P.vivax), மற்றும் ப்ளாஸ்மோடியம் ஓவேல் (P.ovale) வகை ஒட்டுண்ணிகளால் இந்தக் காய்ச்சல் ஏற்படும்.

குவார்டான் காய்ச்சல் (QUARTAN FEVER)

இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, அதாவது ஒவ்வொரு மூன்றாவது நாளும் காய்ச்சல் ஏற்படும். அதாவது, திங்கள்கிழமை காய்ச்சல் இருந்தால், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குறைந்து மீண்டும் வியாழக்கிழமை வரும். இவ்வகை காய்ச்சலும் மலேரியாவில்தான் ஏற்படும். ப்ளாஸ்மோடியம் மலேரியே (P.malariae) வகை ஒட்டுண்ணியால் இந்தக் காய்ச்சல் ஏற்படும்.

விட்டு விட்டு வரும் காய்ச்சல் (INTERMITTENT FEVER)

இவ்வகை காய்ச்சல் ஏற்பட்ட நோயாளிக்கு காய்ச்சல் எப்போதும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்காது. காய்ச்சல் இருக்கும், குறையும். பிறகு காய்ச்சல் வரும், மீண்டும் குறையும். இத்தகைய மாற்றம் 24 மணி நேரத்துக்குள்ளாகவே உடலில் ஏற்படும். அதாவது, காலையில் காய்ச்சல் இருக்கும். மதியம் நார்மலாகிவிடும். பிறகு மாலையிலோ அல்லது இரவிலோ மீண்டும் காய்ச்சல் ஏற்படும். இதனால்தான், இக் காய்ச்சலை விட்டு விட்டு வரும் காய்ச்சல் என்றோ, இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் என்றோ சொல்கிறார்கள். இப்படி காலையில் காய்ச்சல், மதியம் நார்மல், பிறகு மாலை அல்லது இரவில் மீண்டும் காய்ச்சல் என்று, தினமும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.

ரத்தத்தில் கிருமித்தொற்று அதிகமாகும்போதும் (SEPTICAEMIA), சீழ்த்தொற்றினாலும் (PYEMIA), மலேரியா காய்ச்சலின்போதும் இத்தகைய காய்ச்சல் ஏற்படும்.

குறைந்தும் கூடியும் வரும் காய்ச்சல் (REMITTENT FEVER)

நோயாளிக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். திடீரென்று குறையும், திடீரென்று அதிகரிக்கும். தினமும் நடைபெறும் நிகழ்வாக இது இருக்கும். காய்ச்சல் கூடுவதோ, குறைவதோ 2 டிகிரி அளவுக்கு இருக்கும். ஆனால், நார்மல் அளவுக்கு வருவதில்லை.

உதாரணத்துக்கு, காலையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் இருந்தால், மாலையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகலாம். அடுத்த நாள் காலையில் மீண்டும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகலாம். இதனால், நார்மலுக்கு வராமல் அதே நேரம், தினமும் குறைந்தும் கூடியும் வரும் காய்ச்சலாக இது இருக்கும். டைபாய்டு காய்ச்சல், இதய உட்சுவர் அழற்சி (INFECTIVE ENDOCARDITIS) பாதிப்புகளால் இந்த வகைக் காய்ச்சல் வரலாம்.

மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் (RELAPSING FEVER)

முதல் நான்கைந்து நாள்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். பிறகு ஒரு சில நாட்களில் காய்ச்சல் குறையும். அதன் பிறகு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்கள் இருக்கும். பிறகு மீண்டும் சில நாட்கள் குறைந்து, மீண்டும் சில நாட்களில் காய்ச்சல் ஏற்படும்.

இவ்வகைக் காய்ச்சல் ஒரு வகை சுருள் கிருமியால் (SPIROCHETES) ஏற்படுகிறது. இந்தக் கிருமி, பேன்கள் மூலமோ, சில பூச்சியினங்கள் மூலமோ மனிதர்களுக்குப் பரவுகிறது.

இப்படி, பல்வேறு வகையாக மனிதர்களுக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. பல்வேறு விதமாகவும் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, மாலையில் மருத்துவமனை அல்லது கிளினிக்குக்கு போய் டாக்டரை பார்த்து அன்று இரவே மாத்திரை வாங்கிப் போட்டு குணமாகி, மறுநாள் ஃப்ரெஷ்ஷாக அலுவலகம் போயே ஆக வேண்டும் என்றால் முடியுமா!?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com