காய்ந்த மனங்கள் - (THE DESERT)

ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினேன். தனிமையில் ஓரிரு நாள்கள்


ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினேன். தனிமையில் ஓரிரு நாள்கள் ஒரு அறைக்குள்ளேயே கிடக்க வேண்டும். தொலைபேசி, செய்தித்தாள், தொலைக்காட்சி என்ற எந்தத் தொடர்பு சாதனமும் இருக்கக்கூடாது. வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். வெளிச்சம்கூட அவசியம் இல்லை.

இப்படி இருப்பதால் மனநிலையில் மாறுதல் உருவாகுமா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு சுமாரான விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். உணவு நேரத்தில் மட்டும் கதவைத் தட்டிக் கொடுத்து விடுவார்கள். மற்ற நேரத்தில் சிறைதான். வலுக்கட்டாயமான சிறை.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அலறிவிடுவேன். அப்படி இருந்தது அந்த மனநிலை. எவ்வளவு நேரம்தான் தூங்க முடியும்? தூங்கி எழுந்தால் எதைச் செய்வது? நேரம் ஆக ஆக பதறத் தொடங்கியிருந்தேன். இது சில நாள் கூத்து. அப்படியே வாழ்க்கை அமைந்துவிட்டால்?

வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத வாழ்க்கை. வெளியில் மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறவே முடியாது. அப்படியொரு சூழலில் மூன்று பேர் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வீட்டைச் சுற்றிலும் நிறைய மைக்குகளை பொறுத்திவைத்திருக்கிறார்கள். வெளியில் ஏதாவது ஓசை கேட்டால், வீட்டுக்குள் இருக்கும் ஸ்பீக்கர்களில் சத்தம் கேட்கும்.

துப்பாக்கியை வெளியே நீட்டுவதற்கென துளைகளை வைத்திருக்கிறார்கள். அது வழியாகப் பார்த்துச் சுட்டுக் கொல்ல வேண்டும். யார் வந்தாலும் சுட்டுக் கொன்றுவிட வேண்டியதுதான். கருணை எதுவும் பார்க்க வேண்டியதில்லை. வீட்டைச் சுற்றிலும் பிணங்கள் கிடக்கின்றன. ஜன்னலைக்கூட திறந்துவைக்க முடிவதில்லை. திறந்தால் போதும் - பிணங்களின் மீது ஒட்டியிருக்கும் ஈக்கள் வீட்டுக்குள்  வந்துவிடுகின்றன.

அந்த வீட்டுக்குள் அக்ஸெல், ஜோனதன் அவர்களோடு ஒரு பெண் - அனா. மூன்று பேர் மட்டும்தான் இருக்கிறார்கள். இன்னமும் எவ்வளவு நாள்களுக்கு இப்படியே இருக்க வேண்டும் என்று தெரியாது. பொழுது போக வேண்டாமா?

ஒவ்வொருவரும் தங்களது  ஆழ்மன வேட்கைகளையும் எண்ணங்களையும் அந்த வீட்டில் முன்பு இருந்த யாரோ விட்டுப் போயிருந்த வீடியோவில் பதிவு செய்து ஒரு பெரிய பெட்டிக்குள் ஒவ்வொரு கேஸட்டாக போட்டுவைக்கிறார்கள். அதைப் பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. ஒருவிதத்தில், அதுதான் வடிகாலாக இருக்கிறது. உணர்ச்சிகளைக் கொட்டிவைக்கிறார்கள். ஆனால், இப்படியே காலத்தை ஓட்டிவிட முடியுமா?

சோற்றுக்கு ஏதாவது வழி செய்வதற்காக, எல்லாவிதமான பாதுகாப்புகளுடனும் குறிப்பாக துப்பாக்கியுடன் அவ்வப்போது வெளியில் சென்று தேவையான பொருள்களை வீட்டுக்குள்  எடுத்து வருகிறார்கள்.

ஒருமுறை அப்படிச் செல்லும் அக்ஸெலும் ஜோனதனும் ஒரு நடைபிணத்தைப் (zombie) பிடித்து வருகிறார்கள். அதற்கு ஒரு பெயரையும் வைக்கிறார்கள் - பிதாகரஸ். கிரேக்கப் பெயர்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம். The Desert என்ற அர்ஜெண்டினா படம் இது. Christoph Behl இயக்கிய படம்.

முதல் முறை பார்க்கும்போது சரியாகப் புரியவில்லை. ஆனால், நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்கவும் தோன்றவில்லை. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் கதையும் சரி, இசையும் சரி, ஒளிப்பதிவும் சரி - பிடித்து வைத்துக் கொள்கின்றன.

இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பார்க்கத் தோன்றியது. அப்பொழுது இன்னும் நிறைய விஷயங்கள் பிடிபடத் தொடங்கின. மூன்றாவது முறை, இன்னமும் சில. இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய படம் என்று முடிவு செய்து மூடி வைத்துவிட்டேன்.

Existentialism – இருத்தலியல் - அதுதான் படத்தின் சரடு. தாங்கள் வாழும் இடத்தில் மனிதர்கள் யாரும் இல்லை. வெளியில் அதிபயங்கரமான ஆபத்துகள் சூழ்ந்திருக்கின்றன. வீட்டை விட்டு நினைத்தபடி வெளியேற முடியாது. இயல்பான வாழ்க்கைக்கான அத்தனை வாய்ப்புகளும் அருகிப்போய்விட்ட சூழலில், இந்த வீட்டைத் தவிர வேறு வழியில்லை. அப்படியான சூழலில், மூன்று மனிதர்களின் மனநிலை எப்படி உருமாறுகிறது என்பதுதான் இப்படத்தில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது.

மூன்று பேரும் நண்பர்கள்தான். ஆனால், அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த அழுத்தம், நட்பின் மீது விழுகிறது. விரிசல் விழத் தொடங்கும் அல்லவா? அதை அற்புதமாகப்  படமாக்கியிருக்கிறார்கள்.

ஜோனதனுக்கு அனாவுடன் காதல். உறவுகொள்கிறார்கள். அதே வீட்டில்தான் பக்கத்துக் கட்டிலில் அக்ஸெலும் இருக்கிறான். காமம் அவனை அலைக்கழிக்கிறது. அனாவை வக்கிரமாக பார்க்கத் துவங்குகிறான். மறைந்து நின்று பார்க்கிறான். காமவேட்கை கொள்கிறான். தனிமையும் காமமும் அக்ஸெலை காய்ச்சி எடுக்கின்றன.. தவித்துப்போகிறான். தன்னைத்தானே மற்ற இருவரிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்திக்கொள்கிறான். இதை ஜோனதனால் புரிந்துகொள்ள முடிகிறது. அனாவை அவனுடன் பேசச் சொல்கிறான். ஆனால், அவள் தவிர்த்துவிடுகிறாள். அக்ஸெல், ஈக்களின் படத்தை தினமும் பச்சைக் குத்திக்கொண்டிருக்கிறான். கைகள், முதுகு, கழுத்து என ஈக்களின் பச்சையானது, மெள்ள மெள்ள உடல் முழுவதும் ஆக்கிரமிக்கிறது.

அனா மீதான தனது காமத்தை அக்ஸெல் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அதனால், தனது வீடியோ பேச்சுகளில் பதிவு செய்து வைக்கிறான். அக்ஸெல் தன்னை கவனிப்பது குறித்து அனாவுக்குத் தெரியும். வக்கிரத்துடன் பார்க்கிறான் என்று அவள் நம்புகிறாள். தனது வீடியோ பேச்சுக்களில் அதை அனா பதிவு செய்து வைக்கிறாள். அனாவின் கேஸட்களை அக்ஸெல் பார்க்கிறான். அக்ஸெலின் கேஸட்களை அனா பார்க்கிறாள். ஆனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை. அக்ஸெல், தனது அத்தனை அழுத்தத்தையும் அந்த நடைபிணத்திடம் காட்டுகிறான். குத்துகிறான். அடிக்கிறான். அந்த நடைபிணம் உறுமிக்கொண்டே இருக்கிறது.

இப்படியே படம் முழுக்க சுவாரஸியமான காட்சிகள் நிரம்பிக் கிடக்கின்றன. இதை வெறும் சுவாரஸியம் என்று சொல்லிவிட முடியாது. மனித மனத்தின் இண்டு இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சுவது போன்றதான ஒரு எண்ணம் வருகிறது. மேம்போக்காகப் பார்த்துவிட்டு தாண்டி விட முடியாத படம் இது.

சில படங்களைப் பார்க்கும்போது அதோடு மறந்துவிடுவோம். ஆனால், சில படங்கள் அப்படியில்லை. படம் பார்க்கும்போது ஒருவிதமான புரிதல் கிடைக்கும். பிறகு யோசிக்கும்போது இன்னொரு புரிதல். அதை நண்பர்களிடம் விவாதிக்கும்போது இன்னொரு விதமான புரிதல். The Desert, அப்படியான படம்தான்.

வெளியிலிருந்து அழுத்தம் விழும்போதும் மனித மனம் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதை நினைக்கும்போது விசித்திரமாக இருக்கிறது. அலுவலகத்தின்  அழுத்தத்தை  வீட்டில் காட்டுவது  மாதிரிதான்.

ஆனால், இந்த மூன்று பேரின் அழுத்தம் வீரியமானது. மிகக் குரூரமானது. அன்பு, கருணை, நட்பு என்பதையெல்லாம்  கோபமும் காமமும் சிதைத்துவிடுகின்றன.

இந்த இரண்டு எண்ணங்களும்தானே எந்த ஒரு உயிரிக்கும் அடிப்படையானது? எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள கோபமும், தனது இனத்தை காப்பாற்ற காமமும் அவசியமாகின்றன. அவைதான் காலங்காலமாக அத்தனை உயிர்களையும் வழிநடத்துகின்றன. இவை இரண்டுக்கும் பிறகுதானே பிற அத்தனை உணர்ச்சிகளும்!

அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது என்று நினைக்கிறேன். படத்தை பார்த்த பிறகு நம்மால் புரிந்துகொள்ள முடியாத எண்ணங்கள் அலைகழிக்கச் செய்கின்றன. அத்தகைய விசித்திரமான மனநிலையை காட்சிகளாகப் பார்க்கும்போது மனம் தவித்துப் போய்விடுகிறது.

அதிரடிக் காட்சிகள் எதுவும் இல்லாத படம். முரட்டுச் சண்டைகள் இல்லை. வெறித்தனமான  தாக்குதல்கள் இல்லை. விதவிதமான லொகேஷன்கள் இல்லை. ஒரே வீடு. வெறும் மூன்று பேரை வைத்துக்கொண்டு - அவர்களின் மனநிலையைச் சித்திரமாக்கி, ஒரு படத்தை நகர்த்துவது என்பதும் அதை இவ்வளவு விறுவிறுப்பாகக் கொண்டுபோவதும் சாதாரண காரியமில்லை. தூள் கிளப்பியிருக்கிறார்கள்   என்றுதான்  சொல்ல வேண்டும்.

                               ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com