பணம் மட்டும்தான் முக்கியமா? (Free Men)

‘சார் பணம்தான் முக்கியம்...மத்ததெல்லாம் தானா வரும்’ என்று சொல்பவர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம். நாமே கூட அவ்வப்போது அப்படித்தானே நினைத்துக்

‘சா 

ர் பணம்தான் முக்கியம்... மத்ததெல்லாம் தானா வரும்’ என்று சொல்பவர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம். நாமே கூட அவ்வப்போது அப்படித்தானே நினைத்துக் கொள்கிறோம்? பணம் மட்டும்தான் முக்கியமா? வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாத போது பணம் முக்கியமாகத் தெரியலாம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கமும் ஓடி வந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை விட்டுவிட்டு ஓடுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா? ஹிட்லரின் ஆட்கள் யூதர்களைத் தேடித் தேடிக் கொன்ற போது யூதர்களுக்கு பணம்தான் முக்கியமாக தெரிந்திருக்குமா? அவ்வளவு தூரம் போக வேண்டாம். சமீபத்தில் நேபாளத்தில் பூமி குலுங்கிய போது பதறியடித்துக் கொண்டு ஓடி உயிரைக் காத்துக் கொண்டவர்கள் சொத்து போய்விட்டது என்று புலம்பியிருப்பார்களா? பணம் முக்கியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியமானவை எவ்வளவோ இருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் கைது செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்படும் போதுதான் சுதந்திரம் என்பதன் அவசியத்தை உணர்வோம். அதிகாரத்தின் மிரட்டல் தனது கூரிய நகங்களை நம் மீது இறக்கிக் கொண்டேயிருக்கும் போதுதான் தப்பித்தலின் ஆசுவாசத்தை புரிந்து கொள்வோம். நம் கண் முன்னால் அடுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு உயிர் பறிக்கப்படும் போதுதான் உயிர்களின் மதிப்பை உணரத் தொடங்குவோம். வெறும் பணமும் செளகரியமுமான வாழ்க்கையும் மட்டுமே நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிடுவதில்லை.

யூனுஸ் அப்படியான கதாபாத்திரம்தான். யார் யூனுஸ்?


Free Men படத்தின் நாயகன். இது ஃப்ரென்ச் படம். 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1940களில் இருந்த பாரீஸ் நகரம்தான் கதைக்கான களம். படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக அந்தக் காலகட்டத்தில் அந்நகரத்தின் வரலாறைத் கொஞ்சமேனும் தெரிந்துக் கொள்வது நல்லது. 1940 ஆம் ஆண்டிலிருந்து 1944 வரை ஹிட்லரின் நாஜிப்படைகளிடம் பாரீஸ் நகரம் சிக்கியிருந்தது என்பது வரலாற்று உண்மை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள். அந்தக் காலக்கட்டத்தில்தான் ‘சுத்திகரிப்பு’ வேலைகளை நாஜிக்கள் கன ஜோராகச் செய்தார்கள். அப்படிச் சொல்லிக் கொண்டுதான் யூதர்களை அழித்தொழித்தார்கள். யூதர் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் - கிழவன், குஞ்சு, குளுவான் என்று எந்த பாரபட்சமும் பாராமல் துப்பாக்கித் தோட்டாக்களை இறக்கினார்கள்.  விஷவாயு அறைக்குள் தள்ளினார்கள். இப்படி ஏதாவதொரு வகையில் கதையை முடித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நாஜிக்கள்தான் ஜெர்மனியில் மட்டுமில்லாது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பாரீஸ் நகரத்திலும் யூதர்களைத் வேட்டையாடத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் மொராக்கோ, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் ஃப்ரென்ச் காலனியாதிக்கத்தில் இருந்தன. உலகப்படத்தில் பார்த்தால் தெரியும்- இந்த நாடுகள் ஃப்ரான்ஸுக்கு அருகாமையில் இருக்கின்றன. அதனால் அந்த தேசங்களிலிருந்து நிறையப் பேர் ஃப்ரான்ஸில் குடியேறியிருந்தார்கள். இந்த வெளிநாட்டவர்களையும் நாஜிக்கள் தேடத் தொடங்கியிருந்தார்கள். அவர்களில் யாராவது யூதர்கள் என்று தெரிந்தால் அழித்தொழுப்புக்கள்தான். அதோடு நில்லாமல் அந்த வட ஆப்பிரிக்க நாடுகளுக்குள் நுழையும் முஸ்தீபுகளையும் ஹிட்லரின் படைகள் மேற்கொண்டிருந்தன.

இதெல்லாம் படத்துக்கான பின்னணி.

இந்தச் சூழலில் ஜெர்மானியர்களின் வேட்டைக்கு பயந்து வெளிநாட்டவர்களும் யூதர்களும் பாரீஸ் நகரத்தில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறார்கள். பாவம். சாப்பாட்டுக்குத்தான் வழியில்லை. இங்குதான் நம் நாயகன் யூனுஸ் வருகிறான். நகரில் மறைந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு உணவு, சிகரெட் ஆகியவற்றைக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். Black Market. ரிஸ்க் அதிகம்தான். ஆனால் கொழுத்த வருமானம். தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காக யூனுஸ் இந்த நகரத்துக்கு வந்திருந்தான். ஆனால் போரின் காரணமாக வேலை போய்விட்டது. வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டிய தேவை இருப்பதால் இந்த வேலையைச் செய்கிறான். இது பெரிய குற்றச் செயல்தான். ஆனால் வருமானம் வருகிறது என்பதால் பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எண்ணூறு ஃப்ராங்க் (அந்தக்காலத்தில் ஃப்ரெஞ்ச் பணம்) பெறுமானமுள்ள டர்புக்கா என்னும் இசைக்கருவியை வெறும் ரொட்டிக்கும் சிகரெட் பாக்கெட்டுக்குமாக கொடுத்துவிடுகிற சிரமம் ஒளிந்து வாழ்கிறவர்களுக்கு. அதை யூனுஸ் பயன்படுத்திக் கொள்கிறான்.

இந்த இடத்தில் சலீம் ஹலாலியைப் பற்றி சொல்லிவிட வேண்டும். அல்ஜீரிய பாடகர். வட ஆப்பிரிக்க இசையை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர் என்று பாராட்டுகிறார்கள். அவருடைய பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன. இந்தப் படத்தில் சலீமுக்கு முக்கியமான பாத்திரம் உண்டு. அவர் உண்மையில் இஸ்லாமியர் இல்லை. மசூதிகளிலும் பாரீஸ் நகர விடுதிகளிகும் பாடிக் கொண்டிருக்கிறார். ஜெர்மானியர்களிடம் சிக்கினால் பிரச்சினை வரும்தானே? வருகிறது.

ஹிட்லரின் ஆட்களைப் பொறுத்தவரை யூதர்கள்தான் குறி. இஸ்லாமியர்கள் பிரச்சினையில்லை. விசாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள். இதைத்தான் பாரீஸ் நகரத்தின் மசூதியில் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியவர் பயன்படுத்திக் கொள்கிறார். பெங்காபிரிட் என்னும் அவர் மனிதாபிமானமிக்கவர். வட ஆப்பிரிக்காவிலிருந்து வருகிற யூதர்களுக்கு இஸ்லாமியர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்குகிறார். போலிச் சான்றிதழ்கள்தான். தெரிந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள். ஆனாலும் அவர் சான்றிதழ்களை வழங்கியும் தனது மசூதியில் யூதர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டம் வரை  இவரை மதித்துக் கொண்டிருந்த ஜெர்மானிய ராணுவத்தினர் அதன்பிறகு பெரியவரையும் அவரது மசூதியையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள். அந்தப் பெரியவரையும் படத்தின் பாத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.

சலீமிடமும் ஒரு போலிச் சான்றிதழ் உண்டு. அதை வைத்துக் கொண்டுதான் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

யூனுஸ், பெங்காபிரிட், சலீம்- இவர்கள்தான் படத்தின் முக்கிய பாத்திரங்கள். ஜெர்மானியர்களின் வேட்டை, அவர்களிடம் சிக்கியிருக்கும் பாரீஸ் ஆகியன அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி. இதில்தான் கதை சூடு பிடிக்கிறது. ஏற்கனவே சொல்லியிருந்தபடி ஆரம்பத்தில் யூனுஸுக்கு பெரிய அரசியல் புரிதல் எதுவும் இல்லை. ‘பணம் வந்தா சரி’ என்றிருக்கிறான். சிகரெட், ரொட்டி விற்று காசு சேகரிப்பதோடு அவனுடைய வேலை முடிந்துவிடுகிறது. யூனுஸின் உறவுக்காரன் ஒருவனோடு அறையில் தங்கியிருக்கிறான். அந்த உறவுக்காரன் ஒரு போராளி. நாஜிக்களை எதிர்த்து சண்டையிடும் ஃப்ரென்ச் ரெஸிஸ்டன்ஸ் எனப்படும் இயக்கங்கள் ஒன்றில் இணைந்திருக்கிறான். வேட்டிக்குள் ஓணான் இருப்பது யூனுஸுக்கு தெரிவதில்லை. திடீரென்று போராளியைத் தேடிவரும் போலீஸார் யூனுஸை பிடித்துச் சென்றுவிடுகிறார்கள். கன்னத்தைக் கிழித்த பிறகுதான் இவன் ஒரு டம்மி பீஸ் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். சிறுதுரும்பும் பல் துலக்க உதவும் அல்லவா? அந்த லெப்டினெண்ட் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறான். அந்த மசூதியில் நடக்கும் அத்தனை விவரங்களையும் உளவு பார்க்கச் சொல்கிறான். இந்த வேலைக்கு ஈடாக பெரிய பணம் தருவதாகச் சொல்கிறான். யூனுஸூக்கு பணம்தான் முக்கியம் என்பதால் ஒத்துக் கொள்கிறான்.

உளவு பார்க்கத் தொடங்குகிறான். இப்படி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் தனக்கு கிடைக்கும் டர்புக்காவை விற்பதன் வழியாக சலீமுடன் நட்பாகிறான். இதனிடையே மசூதியில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறான் - அதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஒரு ஈர்ப்பு.  அதே சமயத்தில் பெற்றோரை இழந்துவிட்ட இரண்டு யூதக் குழந்தைகளை அழைத்து மசூதியில் தங்க வைக்கிறான். ஜெர்மானியர்களின் அழிச்சாட்டியங்கள் யூனுஸை கிளறுகின்றன. சூழலின் வெக்கையை உணரத் தொடங்குகிறான் யூனுஸ். தான் காதலிக்கும் பெண் போராளி என்று தெரிய வருகிறது. அவளைக் சுட்டுக் கொல்வதற்காக ஜெர்மானியர்கள் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். தூரத்தில் இருந்து பார்க்கிறான். இப்படியாக சலீம், இசுலாமியப் பெரியவர், யூதக் குழந்தைகள், அறைத் தோழன், காதலி என எல்லோருக்குமே சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன என்பது யூனுஸை மாற்றுகிறது. அதுவரை பணம் மட்டுமே பிரதானம் என்று வியாபாரியாகவும், உளவாளியாகவும் சுற்றித் திரியும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான். பணத்தைத் தாண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை உணர்கிறான். அறைத் தோழன் மற்றும் அவனுடைய புரட்சி நண்பர்களுடனும் சேர்ந்து சுற்றுகிறான். ஒரு சமயத்தில் நாஜிப்படை வீரனைச் சுட்டுக் கொல்கிறான். நாஜிக்களுக்கு உளவாளியாக இருக்கும் ஓமர் என்கிற மருத்துவரையும் சுடுகிறான். யூதக் குழந்தைகளைக் காப்பாற்றுகிறான். ஜெர்மானியர்களிடமிருந்து சலீமைக் காப்பாற்றுகிறான். அவன் முழுமையான போராளியாகிறான்.

1944 ஆம் ஆண்டு ஜெர்மானியர்களிடமிருந்து பாரீஸ் நகரம் மீட்கப் படுவதோடு படம் முடிகிறது.

வெளிநாட்டு படத்தைப் புரிந்து கொள்வது என்பது அந்த நாட்டின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அரசியலையும் தெரிந்து கொள்வது என்பார்கள். அதனால் படத்துக்கான பின்னணிகளையும் தெரிந்து கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் படத்தோடு சேர்த்து ஒரு வரலாற்றுத் துளியையும் பருகிக் கொள்ளலாம். நான் பருகிக் கொண்டேன்.
                              ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com