பகுதி - 6 டமால்... டூமில்...

தமிழகத்தில் 12 ஆயிரம் பசுக்கள் 6 லட்சம் ஆடுகள் இலவசமாகத் தரப்படுமாம்.



தமிழகத்தில் 12 ஆயிரம் பசுக்கள் 6 லட்சம் ஆடுகள் இலவசமாகத் தரப்படுமாம்.

மாடுகள் அம்ம்ம்மா…. என்றும் ஆடுகள் அம்மேஏஏஏ… என்றும் குரல் கொடுக்குமே!


***

இந்தியா வெற்றி பெற, இளைஞர் நாக்கை வெட்டி பிரார்த்தனை.

‘நாக் அவுட்’ போட்டி என்பதை தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாரோ?


***

தமிழகக் கோயில்களில் தங்கப்  புதையல் கிடைக்க வாய்ப்பு   இல்லையாம்.

அதான், டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து கிடைக்கிறதே.

***

விராத் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு காதலி அனுஷ்கா காரணமாம்.

ஆனாலும், அனுஷ்காவிடம் அவர் ‘கா’ விடவில்லை.

***

இங்கிலாந்தில், மனிதக் கழிவுகளின் வாயுவால் இயங்கும் பஸ் அறிமுகம்.

இந்தப் பேருந்தின் தடம் எண் நம்பர் 2 தானே?

***

ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்யால் கொப்பளித்தால் பற்குழிகள் மறையுமாம்.

பற்கள் விழுந்து கன்னங்களில் குழி விழ வைத்துவிடாதே…

***

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள்.

பெண்களின் நிறம் பற்றி ஆராயும் சரத் யாதவ் இதற்கு என்ன சொல்லுவார்?

***

நோயாளி இறந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதியக்கூடாது — மருத்துவச் சங்கம்

‘1000 பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் எனும் பழமொழி’யின் படியா?

***

போக்குவரத்துத் துறையில், இறந்தவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சிவலோகப் பதவியைவிட மேலானதா?

***

புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி தர வேண்டும் – லல்லு பிரசாத்.

அது சரி! விடை எங்கே இருக்குன்னு யார் சொல்லுவாங்களாம்?

***

530 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் மூன்றாம் ரிச்சர்ட்டின் உடல் நல்லடக்கம்.

ஆற அமர உறுதி செய்துகொண்டு, இறுதியாக காரியத்தில் இறங்கினார்களா?

***

நாய் வளர்ப்பு சம்பந்தமாகப் பத்திரிகை ஒன்று வெளிவருகிறது.

காலையில், ஜிம்மி பாய்ந்துபோய் இந்தப் பத்திரிகையை கவ்விக்கொண்டு வருமா?

***

லண்டன் உணவு விடுதி ஒன்றில் நரிகளுடன் உணவு அருந்தலாமாம்.

குள்ளநரிகளோடா? அல்லது ஆர்டினரிகளோடா?

***

டில்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள 8500 குரங்குகளை விரட்ட முயற்சி...

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தினால் ஓடிப்போய்விடுமே!


***

மக்களின் 2000 கோடி ரூபாய் வரிப்பணம், திரும்பப் பெறப்படாமல் தூங்குகிறதாம்.

உண்டியில் போட்டுவிட்டதாக நினைத்து தலை முழுகிவிட்டார்களா?

***

புதிய மாம்பழ வகைக்கு ‘மோடி மாங்கோ’ என்று பெயர்.

பெயர் ராசியாலே, உடனே வெளிநாடுகளுக்கு ஏற்றமதியாகக் கிளம்பிவிடுமே.

***

இளவரசர் சார்லஸ், மனைவியுடன் லண்டனில் ஆட்டோரிக்ஷாவில் பயணம்.

ராஜாவாகி கோச்சில் போக வேண்டியவர் ரிக்ஷாவில் போவது விதி.

***

கயாவில் உள்ள பிச்சைக்கார்களுக்காக பேங்க் உள்ளதாம்.

வாடிக்கையளர்களுக்கு, கஸ்டமர் ஐடி எண் பொறித்த திருவோடு வழங்கப்படுமா?

***

குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாதாம்.

அப்படி இருந்தால், தோற்ற பணத்தை கக்க வைத்திருப்பேனே என்கிறார் ஒரு ரேஸ் பிரியர்.

***

கவுண்டமணி இல்லாத ‘கலப்படம்’ படத்தில் செந்தில் கலக்க வருகிறார்.

ஒரு வாழைப்பழம் இதோ! இன்னொரு வாழைப்பழம் எதோ?


***

கைத்துப்பாக்கியை அரசு வழங்க வேண்டும் - நீதிபதிகளின் சங்கம் கோரிக்கை.

நீதியை சீண்டினால் அது சுட்டுவிடும் என்று உணர்த்தவா?

***

ஹரியாணாவில் உள்ள உயரமான ஆண் கழுதையின் விலை மூன்று லட்சம் ரூபாய்.

இது சாதாண கழுதை அல்லவாம். பல கோவேறு கழுதைகளின் நைனாவாம்.

***

பால் விலை உயர்வால் ஏழைகளுக்குப் பாதிப்பு இல்லை —  பன்னீர் செல்வம்

சரக்கு விலை உயர்ந்தால்தான் பாதிப்பு.

***

கர்நாடகாவில் தேளுக்கு உள்ள கோயிலில் பாலபிஷேகம் செய்கிறார்களாம்.

பாம்புக்குதான் பால் வார்ப்பார்கள். தேளுக்குமா?

***

அலுவலக ஊழியர்கள் கதவைப் பார்த்து உட்கார்ந்தால் நலம் என்று  ஃபெங் சுயீ சொல்கிறது.

கடிகாரத்தைப் பார்க்காமல் உட்காருவதே நலம் என்கிறார் ஒரு மேலதிகாரி.

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com