பகுதி - 9 டமால்... டுமீல்...

நெல்லையில் ஒரு ஓட்டலில், அட்சய திருதியை அன்று விற்பனையான தங்க தோசையின் விலை 555 ரூபாய்.

நெல்லையில் ஒரு ஓட்டலில், அட்சய திருதியை அன்று விற்பனையான தங்க தோசையின் விலை 555 ரூபாய்.

சேதாரம், செய்கூலி தனிதானே?

***

சென்னையில், பாம்பு பிடிக்கப் பயிற்சி முகாம்.

துணைப்பாடமாக மகுடி வாசிக்கவும் கற்றுத் தருவாங்களா?

***

பிடித்த சர்ஜனை, பிடித்த ஆஸ்பிடலுக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரலாமாம்.

பிடித்த நர்ஸையும் அழைத்து வர அனுமதி உண்டா?

***

இந்திரா பாட்டியின் புடைவையில் பேத்தி பிரியங்கா வந்து அசத்தினாராம்.

போட்டியாக, நேரு தாத்தா தொப்பியை அணிந்து ராகுலும் வந்திருக்கலாமே.

***

1330 குறள்கள் பொறித்த திருக்குறள் பலூன், வரும் பொங்கலில் விடப்படுமாம்.

எட்டாத உயரத்தில் குறளை வைக்க இவர்களுக்கு அதிகாரம் உண்டா?

***

மீரட் வாக்காளர் பட்டியல்படி, ஹரி சிங் என்பவரின் வயது 747.

போயிங் 747 விமான வேகத்தில் பறந்து வந்து வாக்களிப்பாரா?

***

13 குழந்தைகளுக்குத் தாயான 65 வயது பெண்மணியின் தற்போதைய கர்ப்பத்தில் நான்கு குழந்தைகளாம்.

பதினாறுக்கு மேல் பெற்று பெருவாழ்வு வாழ்கிறவர் போலிருக்கு.

***

தியோடன்ட் பற்பசையின் விலை 20 ஆயிரம் ரூபாயாம்.

முப்பத்தியிரண்டும் தங்கப் பற்களாக இருந்தாலும் இதை வாங்க மனசு வருமா?

***

பெட்டிக் கடைகளில் கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட் கிடைக்கும்.

இதற்கும் க்வார்ட்டர் என்ற பெயர் வந்துவிடுமா?

***

தேர்வுக்குப் பின் காதலருடன் மாணவிகள் ஓடுவது அதிகரிப்பு.

எந்தத் தேர்வு? பொதுத் தேர்வா, காதலன் தேர்வா?

***

பிரிட்டனில் சமையல் செய்யும் ரோபோ உருவாக்கம். விலை, 6.5 லட்ச ரூபாய்.

காதல், கல்யாணம், பின்னர் ஜீவனாம்சத்துக்கு ஆகும் செலவைவிட இது பரவாயில்லை என்று பலர் ரோபாவின் கைப்பிடிக்கலாம்.

***

திருமணம் முடிந்த கையோடு, சுரேஷ் ரெய்னா தமிழ்நாட்டு நவக்கிரகக் கோயில்களில் வழிபட்டார்.

ஒன்பது திக்குகளிலும் சிக்ஸர்கள் பறக்க வேண்டும் என்கிற வேண்டுதலுடனா?

***

புலிக்குப் பதில் சிங்கத்தை தேசிய விலங்காக மாற்ற முயற்சி.

மாற்றினால், சிங்கங்களின் எண்ணிக்கை ‘கிர்’ என்று உயர்ந்துவிடுமா?

***

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் சம்பளம் அனுப்புவதில் குளறுபடி.

‘இவர்களைத் திருத்தவே முடியாது’ என்று ஆசிரியர்கள் புலம்பியிருப்பார்களே?

***

ஆண்டுக்கு 100 நாள் கட்டாயம் சேலை அணியும் திட்டம், இரு பெண்களால் பெங்களூரில் அறிமுகம்.

புடைவைகளின் மேல் உள்ள ஈர்ப்பு அவர்களது ஜீன்ஸில் இருக்கும் போலிருக்கு,

***

இந்தியாவில் செம்மரக் கட்டைகள் வாங்குபவர்களில் பாபா ராம்தேவும் உண்டாம்.

மருந்தாகப் பாவித்தால், முடி கருகருவென்று அடர்த்தியாக வளரும் போலிருக்கு.

***

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய நீரில், வழக்குரைஞர்கள் காகிதக் கப்பல்கள் மிதக்கவிட்டுப் போராட்டம்.

உள்ளே தேங்கி நிற்கும் வழக்குகளை விரைவில் முடிக்க, போராட்டம் ஏதும் இல்லையா?

***

உலகிலேயே அகலமான நாக்குகளை உடைய அப்பாவும் பெண்ணும் அமெரிக்காவில் இருக்கிறார்களாம்.

இவர்கள் நாக்கை அளந்து பேச வேண்டும்.

***

அமெரிக்காவில் ஆடு ஒன்று வரைந்த வண்ணப் படங்கள் 1600 ரூபாய்க்கு விலை போகிறதாம்.

ஆட்டுத் தாடி ஓவியர்கள்தான் வரைவார்கள். அட, ஆடே வரைகிறதா?

***

நியூயார்க் நீதிபதியாக, பரதநாட்டியம் தெரிந்த சென்னைப் பெண்மணி ராஜராஜேஸ்வரி தேர்வு.

சட்டத்தை மீறி தப்பான ஸ்டெப் வைக்கும் குற்றவாளிகளின் ஆட்டம் இவரிடம் இனி எடுபடாது.

***

சரியான சைஸ் பிரா அணியாவிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுமாம்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சுதானே இது?

***

நெப்போலியன், ஆரம்பக் காலத்தில் கட்டட சித்தாளாக இருந்தாராம்.

பின்னர், ஃப்ரான்ஸின் பெரியாளாக ஆகி சரித்திரம் படைத்தார் அல்லவா?.

***

மோடி அரசு யோகா பயிற்சியை ‘ஓம்’ உச்சரிப்பின்றி செயல்படுத்துமாம்.

ஆம் ஆத்மி ஓம் ஆத்மி ஆகிவிடத் தேவையில்லை என்றுதானே.

***

உ.பி. பெண்மணி, மின்வெட்டின்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட மறுத்த கணவனை விட்டுப் பிரிந்தார்.

மின்சாரமும் போச்சு, சம்சாரமும் போச்சா?

***

துபாயில் 40 மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஆப்பிள் போனில், சிறு கீறல்கூட விழவில்லையாம்.

நியூட்டன் போன்ற விஞ்ஞானியின் தலையில் விழுந்திருந்தால், புதியதாக ஒன்றை கண்டுபிடித்திருப்பார்.

***

வளர்ப்பு வீட்டிலிருந்து தப்பிய 109 வயதான ஆமை, ஒரு வருடம் கழித்து வீடு வந்து சேர்ந்ததாம்.

‘சே! வழியிலே எத்தனை ஸ்பீட் பிரேக்கர்கள்’ என்று அலுத்துக்கொண்டதா?

***

போப்பாண்டவர், பாஸ்தா சாப்பிடுவதைக் குறைக்க மருத்துவர்களின் கட்டளை.

இதை பதினோராவது கட்டளையாக மேற்கொள்ளுவாரா?

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com