பகுதி - 11 டமால்... டுமீல்...

மகாராஷ்டிராவில், துறவிகள் முன் உட்கார்ந்திருந்த பெண் நிருபரை பின் வரிசைக்குப் போகச் சொன்னார்களாம்..


மகாராஷ்டிராவில், துறவிகள் முன் உட்கார்ந்திருந்த பெண் நிருபரை பின் வரிசைக்குப் போகச் சொன்னார்களாம்..


விஸ்வாமித்திரர் மேட்டருக்குப் பிறகு துறவிகள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள் போலிருக்கு.

***

தரங்கம்பாடிக் கட்டடத்தைக் கட்டும் எல்லா தொழிலாளர்களும் பெண்களாம்.

கட்டாயம் மே-ஸ்திரியும்  ஒரு பெண்ணாகத்தான் இருப்பார்.

***

பள்ளியில் பயிலும் மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தார்.

கெமிஸ்ட்ரி அமர்க்களமா ஒர்க்கவுட் ஆயிருக்கும்.

***

தற்கொலை செய்யும் உழவர்கள் கோழைகள் - ஹரியானா அமைச்சர்.

இந்தமாதிரி உளறும் அமைச்சர்கள் தைரியசாலிகள்.

***

அமளியில் கல்லெறிந்த மகனை பளாரென்று அறைந்த அமெரிக்கத் தாய்.

‘இளமையில் கல் என்பது இதுவாடா?’ என்ற சீற்றத்துடனா?

***

தன்னைப்போல சாம்பார் சாதம் பிடிக்கும் கணவர்தான்  ஸ்ருதிஹாசனுக்கு அமையவேண்டுமாம்.

‘தான்’ என்கிற ஐட்டமே இல்லாத வெறும் சாம்பாராகவும் இருக்க வேண்டுமா?

***

கேரம் போர்டு வியாபாரி செம்மர பதுக்கலில் ஈடுபட்டார்.

செம்மரத்திலே பூந்து விளையாடி பேக்கெட்டிலே போட்டிருப்பாரே?

***

திருச்சி சுங்க இலாகாவிடமிருந்து மேலும் 15 கிலோ தங்கம் மாயமாம்.

கம்பியா தங்கத்தை நீட்டலாம். தங்கத்துடன் கம்பியும் நீட்டலாம்தானே?

***

ஆண் குழந்தை தரும் மருந்தை பாபா ராம்தேவ் விற்பதால் சர்ச்சை.

சுரிதார் அணிந்து ராம்லீலா மைதானத்திலிருந்து பெண்ணாக தப்பியவர் இப்படிச் செய்யலாமா?

***

கொரியாவில் திருமணச் சடங்கின்போது மணமகளின் கண்களை பிளாஸ்திரி போட்டு ஒட்டி விடுவார்களாம்..

இவ்வாறு கண்ணை மூடி மணக்கும் பெண் ஒரு மக்குப் பிளாஸ்திரிதானே?

***

90 வகை உணவுகளுடன் சென்னையில் பலாச்சுளை திருவிழா.

பலாப்பழ மசக்கை உடைய பெண்கள் போய் சக்கை போடு போடலாம்.
***

வேதநாராயணன் கோயிலில் உள்ள பெருமாள், வேதங்களைத் தலையணை யாக வைத்து பள்ளிகொண்டு இருக்கிறார்.

அவருடைய பக்தர்களில் பலரோ  வேதனைகளைத் தலையணையாக வைத்து புரண்டு புரண்டு படுக்கிறார்கள்.

***

ஆறு மாதக் குழந்தைக்கு ஸ்மார்ட்போனை உபயோகிக்கத் தெரிந்து விடுமாம்.


பக்கத்து வீட்டு பாப்பா ஃப்ரெண்டுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமா?

***

சிம்பன்ஸியின் முதுகுத்தண்டு அமைப்புடைய மனிதர்களுக்குத்தான்  முதுகுவலி வருமாம்.

தொடர்ந்து வாழைப் பழத்தைத் தின்று வந்தால் குணமாகலாம்.

***

கோயம்பேடு சந்தையில் மல்லிகைப்பூ, மாம்பழம் விலை குறைவு.

அல்வாவின் விலையும் குறைந்தால் இன்னும் கிளுகிளுப்பாக இருக்குமே!

***

இறந்த நோயாளிகளின் உறவினர்களிலிருந்து டாக்டர்களைக் காப்பாற்ற மருத்துவமனைகளில் பௌன்ஸர்கள் (அடியாட்கள்) பணிஅமைப்பு.

யமனோடு போராடித் தோற்ற டாக்டர்கள் நரனோடு போராட உதவியாகவா?
***
நுழைவுத் தேர்வு எழுத ஜம்மு-காஷ்மீரில் மாட்டுக்கு ஹால் டிக்கெட்.

விஷயங்களை அசைபோட்டு ஜீரணிக்கும் மாடு பரீட்சையில் பாஸாகிவிடும்.
***

காத்மண்டுவில் நிலநடுக்கத் துயருக்கு இடையே எளிமையாக திருமணம்.

மண வாழ்வில் விரிசல்கள் விழுந்தால் அசர மாட்டார்கள் அல்லவா?

***

நானோடிகிரி என்பது பன்னிரண்டே மாதங்களில் படித்துப் பெறும் பட்டம்.

ஜன்னல் வழியாகப் பணம் கொடுத்து உடனே வாங்குவது கவுன்டர்டிகிரிதானே.
***

உட்கொண்ட இருபது நிமிடங்களில் தேன் ரத்தத்தில் கலந்துவிடுமாம்.

வந்-தேனே வந்-தேனே என்கிற ராஜபார்ட் பாடலைப் பாடிக்கொண்டா?

***

கவிழ்ந்த  டைட்டானிக் கப்பலின் சாய்வு இருக்கை ரூ 1 கோடிக்கு ஏலம் போனதாம்.

அதில் உட்கார்ந்தவுடன் கை தானாகவே கன்னத்தைத் தாங்க ஆரம்பித்துவிடுமா?

***

அதிக புகை கக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

பிடிபட்டால் கழண்டு வர நிறைய ‘கக்க’ வேண்டி இருக்கும்.

***

19 நாட்களில் 57 மாடி கட்டடம் கட்டி சீனாவில் சாதனை.

கனவில் வேண்டுமானால் நாம் கட்டலாம். ஆனால் கனவு முடிவதற்குள்  விழுந்துவிடாதோ?

***

பேப்பர் கண்டுபிடிக்கும் முன்னால் ஆடுகளின் தோலின்மேல் எழுதிவந்தார்களாம்.

‘காடுகளை வெட்டாதீர்கள்’ என்பதற்குப் பதில் ‘ஆடுகளை வெட்டாதீர்கள்’ என்ற முழக்கம் போடப்பட்டிருக்குமா?

***

மழை நீரைத் துடைக்கும் காரின் வைப்பரைக் கண்டுபிடித்தவர் ஒரு பெண்.

கண்களை அடிக்கடி துடைக்கும் ஒரு பெண்ணால்தான் இது சாத்தியமாகி இருக்கும்.


***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com