தியூப்ளே வீதி: அத்தியாயம்- 3

நான் டவுண் ஹாலுக்குப் போனபோது ராத்திரி ஏழு மணி. ஒன்றும் இரண்டுமாக ஆண்கள் வர, தயங்கித் தயங்கி, தாட்டியான பெண்கள் ஏழெட்டுப் பேர் நீளப் பாவாடை அணிந்து ஒரு கூட்டமாக வந்து தனியாகவே உட்கார்ந்தார்கள்.

 நா

ன் டவுண் ஹாலுக்குப் போனபோது ராத்திரி ஏழு மணி. ஒன்றும் இரண்டுமாக ஆண்கள் வர, தயங்கித் தயங்கி, தாட்டியான பெண்கள் ஏழெட்டுப் பேர் நீளப் பாவாடை அணிந்து ஒரு கூட்டமாக வந்து தனியாகவே உட்கார்ந்தார்கள்.

விக்தோ என்னிடம் முதல் காரியமாக அந்த டவுண்ஹாலின் பெயரை எப்படிச் சரியாகச் சொல்வது என்று சொல்லிக் கொடுத்தார்.

அவர் காட்டிய பெயர்ப் பலகையில் ‘Mairie Hotel De Ville’ என்று போட்டிருந்ததை பிரெஞ்சில் பெப்பெப்பே என்று தான் சொல்ல வேண்டும் என்றாலும் எனக்கு விரோதம் ஒன்றுமில்லை.

பெரிய அறை மூலையில் மேடை அமைத்து கிதாரும், ஆர்கனும், டிரம்களுமாக வாத்தியக் குழு நின்றது. நரம்பு இழுத்துப் பார்த்தும், கட்டைகளை விட்டு விட்டு அழுத்தியும், படபடவென்று கொட்டி முழக்கியும் அவர்கள் வாத்தியங்களை தயாராக்கிக் கொண்டிருந்தார்கள்.

காராபூந்தியும் மிக்சருமாக ஒரு தட்டை யாரோ நீட்டினார்கள். நான் ஒரு பிடி எடுத்துக் கொண்டு ‘அங்கிள் சாப்பிடுங்க’ என்று தாராளமாக விக்தோவிடம் தட்டைக் கொடுத்தேன். பிரெஞ்சு நாகரிகம் தட்டோடு சாப்பிடுவதா என்று தெரியவில்லை.

‘மெர்சி. எனக்கு கொஞ்சம் நீர்க்க சாப்பிட்டுட்டுத் தான் மத்தது எல்லாம்’

அவர் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். நான் அடுத்து வந்த வெயிட்டர் கொண்டு வந்த தட்டைப் பார்த்தேன். அவர் ஒரு தயக்கத்தோடு என் பக்கம் வர, விக்தோ அவசரமாகத் தடுத்தார்.

‘வேணாம், அவங்க அப்பாகிட்டே அதெல்லாம் பையன் வாசனைப் பிடிக்கக் கூடத் தரமாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்’.

அவர் சொல்ல, கூட்டமாக நின்ற பாவாடைப் பெண்மணிகள் என்னை இளக்காரமாகப் பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

‘பால் இருக்கு மேய்ரீ ஹோட்டல் டெ வீல்லேன்னு சொன்னதுமே ரோஸலின் தலையை வலிக்குதுன்னுட்டா. ஜூலியா ஒப்பிதால் டியூட்டி இருக்குன்னு ஒரு மணி நேரம் முந்தியே கிளம்பிட்டா. பக்கத்து வீட்டு ஹெலனைக் கேட்டா, கிழங்கட்டைகளோட யார் ஆடறது அத்தைங்கறா கடன்காரி. ஜெசிந்தா வரேன்னா. ஆளே இல்லை வீட்டிலே’.

அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது புரியாவிட்டாலும், ஜூலியா, ரோசலின் போன்ற பெயர்கள் மனதுக்கு இதமாக இருந்தன. அவர்களும் வந்திருக்கலாம். கறுப்பு நிஜார் போட்டிருப்பார்களோ எல்லோரும்? இங்கே வராமல், சைக்கிள் ஓட்டி இந்நேரம் கடற்கரையில் போய்க் கொண்டிருப்பார்களோ?

ஆசிரமத்துப் பெண்கள்? அவர்கள் ப்ளூட்டோ தவிர இதர கிரகங்களுக்கு வடமொழி ஆராதனை நடத்திக் கொண்டிருப்பார்கள். நிஜாரோடு.

விநோதமான பிரெஞ்சுப் பெயர்களோடு சிவத்த, கருத்த, மாநிறத்தில் பட்ட முக்கால் வயோதிகர்கள் வந்த மணியமாக இருந்தார்கள். அதில் சில பேரைப் பெயர் சொல்லி என்னைக் கைகுலுக்கச் சொன்னார் விக்தோ. ஒருத்தர் ஒபித்தால் தொக்தொ, அதாவது ஹாஸ்பிடல் டாக்டர். அடுத்தவர் சொல்தா வைத்தி. அதாவது சோல்ஜர் வைத்தி. மேஜராக ராணுவத்தில் இருந்து ரிடையர் ஆனவர். இன்னொருத்தர் வியத்னாமில் இருந்து சைக்கிள் இறக்குமதி செய்தும், அதைச் சீர்திருத்தி இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்தும், கழித்துக் கட்டினதை இங்கே இருக்கப்பட்டவர்கள் தலையில் கட்டியும் வியாபாரம் செய்து காசு பார்ப்பவர் என்று அந்த மனிதர் அந்தாண்டை போன பிறகு விக்தோ சொன்னார்.  பேங்கில் கடன் வேண்டுமென்று கேட்டபடி இருக்கிறார் என்றாலும் அவரும் அப்பாவும் தரப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார். அப்போது அவர் தலை நிதானமில்லாமல் ஆட ஆரம்பித்திருந்தது.

மெலிந்து கருத்த ஒரு இளம்பெண் தயக்கத்தோடு பார்த்துப் படியேறி உள்ளே வர, ஆணும் பெண்ணும் உற்சாகமாகக் கூவினார்கள் –

‘ஜோசஃபின்.. ஜோசஃபின் இங்கே வா..  உனக்குத் தான் காத்திருக்கோம்’.

என்னை விட ஏழெட்டு வயது மூத்தவள். எல்லா விளக்கும் சேர்ந்து ஒளிர்ந்த வெளிச்சத்தில் கண்களே முகமாக அவள் தெரிந்தாள். ஜோசஃபின் என்னைப் பார்த்தபோது மூச்சு முட்டியது எனக்கு. இவளிடம் பேச நான் கற்ற பிரெஞ்ச் உதவட்டும்.

‘பான்ழ்ஜூர்’ என்றேன் கையை நீட்டியபடி.

அவள் கலகலவென்று சிரித்தாள். என் கையை தன் கைகளுக்கு இடையே வைத்துப் பிடித்தபடி என்னைக் கண்ணில் பார்த்துக் குறும்போடு சொன்னாள் –

‘இப்போ ராத்திரி. இனிமே விடிஞ்சு தான் பான்ழ்ஜூர் எல்லாம்’.

நான் மெர்சி என்றேன். அது நன்றி என்பதற்கு நேரான வார்த்தை என்று யூகித்திருந்தேன்.

’பியாவென்யூ’.

அவள் அழகாகச் சொன்னதற்கு வெல்கம் என்று அர்த்தம் என்று அவளே சொன்னாள்.

எல்லா நேரத்திலும் பியாவென்யூ சொல்லலாமா என்று கேட்க அவள் செப்பு மாதிரி உதட்டைக் குவித்து அழகாக உய் என்றாள்.

அந்த உய்க்குப் பொருள் ஆமா என்று ஊகித்தேன். இன்னொரு தடவை அவளை உய் சொல்லச் சொல்லிப் பார்க்கணும் என்று தோன்றியது.

‘ராபர்ட்டை கூட்டி வந்திருக்கலாமே. ஊர்லே இல்லியா?’

விக்தோ அங்கிள் ஜோசஃபினைக் கேட்க அவள் ஒரு வினாடி தயங்கினாள் என்னைப் பார்த்து விட்டு, பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவள் மெதுவாகச் சொன்னது எனக்குக் கேட்டது –

‘இப்போ வீராஸோட இருக்கேன். சோல்தா பிரான்ஸ் போய்ட்டார்’

வாத்தியங்கள் சேர்ந்து முழங்க ஆரம்பித்தன.  எல்லோரும் எழுந்தார்கள். ஆச்சரியகரமாக அங்கே இருந்த ஆண்கள் எல்லோருக்கும் ஆடப் பெண் துணை இருந்தது.

எல்லோரும் ஜோசஃபினை ஆடக் கூப்பிட அவள் புன்சிரிப்போடு கோப்பையில் நிறைத்து வாங்கிய சிவப்பு ஒயினை மெல்லச் சுவைத்தபடி இருந்தாள். நான் அவள் பக்கத்து பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து அருகில் வைத்த தட்டில் இருந்து பிடிப்பிடியாகக் காராபூந்தி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ராப்பசி உச்சத்தில் இருந்தது. பால் என்றால் பட்டினி என்று தெரியாமல் போய்விட்டது.

’என்ன படிக்கறே’

ஜோசஃபின் மென்மையாகக் கேட்டாள். காலேஜில் அடுத்த வாரம் பிசிக்ஸ் டிகிரி கோர்ஸ் சேருவதாகச் சொன்னேன். அவள் என்ன படித்திருக்கிறாள்? ராபர்ட் என்ன படித்தவன்? இன்னொரு பெயர் சொன்னாளே அவனுக்கு என்ன உறவு?

‘இது முடிஞ்சு தான் பார்ட்டியா?’

அவளைக் கேட்க அவள் அதிசயம் சொல்லக் கேட்ட பாவனையில் கண் அகல இன்னொரு தரம் என்னைப் பார்த்தாள். இன்னொரு முறை பூவாகச் சிரித்தாள்.

’அய்யாச்சாமிக்குக் கல்யாணம் அவங்கவங்க வீட்டுலே சாப்பாடுன்னு கேட்டிருக்கியா?’

இல்லை என்றேன்.

‘பசிக்குதா?’

’ஆமா’

‘என்னைச் சாப்பிடு’

உடம்பு முழுக்க லகரி நிரம்பி வழிய ஆரம்பித்தது எனக்கு. குரலில் படபடப்பை மறைத்துக் கொண்டு மெர்சி என்றேன்.

அவள் திரும்ப பியாவென்யூ என்று குயில் கூவலாகச் சொல்ல மாட்டாளா என்று இருந்தது இப்போது. 

அடுத்த கோப்பை மது கேட்டு வாங்கிக் கொண்டாள் ஜோசஃபின். ஒவ்வொருவராக வயதானவர்கள், விக்தோ அங்கிள் உட்பட அவளைத் தங்களோடு ஆடும்படி வற்புறுத்தி அது நடக்காமல் திரும்பி வேறு யாரோடோ நடனமாடப் போனார்கள்.

கையில் வைத்திருந்த கோப்பை அரைக்கு நிரம்பி இருக்க, ஜோசஃபின் அதை வைக்க இடம் தேடினாள். நான் வாங்கிக் கொள்ள, கைப்பையில் இருந்து பூப்போட்ட கைக்குட்டையை எடுத்து மூக்கில் வைத்து தும்மினாள்.

’பாத்ரூம் போய்ட்டு வரேன்’

அவள் கிளம்பிப் போனாள். என்னமோ தோன்ற அந்த எச்சில் மதுக் கோப்பையில் இருந்த ஒயினை நான் முழுக்கக் குடித்தேன். புளித்தது. மணத்தது. பிடித்திருந்தது.

ஜோசஃபின் திரும்பி வந்து கோப்பைக்காகக் கை நீட்டினாள். நான் சிரித்துக் கொண்டே வெறும் கோப்பையைக் கொடுக்க, பொய்க் கோபம் காட்டினாள்.

‘குடிச்சிட்டியா?’

‘ஆமா’.

பியரர் இன்னொரு கோப்பை எடுத்து வந்தபோது நான் தைரியமாக எனக்கும் என்றேன். திரும்பப் போய் இரண்டாகத் தட்டில் ஏந்தி வந்தார் அவர்.

முதல் கோப்பையை ஜோசஃபினிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு மெர்சி என்றாள். நான் பியாவென்யூ என்றேன். பாராட்டுகிறது போல் அவள் சிரித்தாள். நான் இன்னொரு கோப்பையை எடுத்து உதட்டில் வைத்தபடி சியர்ஸ் சொன்னேன்.

பசித்தாலும்  பரவாயில்லை. இந்த ராத்திரி இனிமையானது தான்.

‘நாம வால்ட்ஸ் ஆடலாமா?’

திடீரென்று என்னைக் கேட்டாள் ஜோசஃபின்.

நான் கோப்பையை முழுசாக ஒரே மடக்கில் காலி செய்தபடி மறுத்தேன்.

‘ஐயோ, எனக்கு ஆட்டமெல்லாம் வராது’

‘நான் கத்துக் கொடுக்கறேன். வா’

திரும்ப அவளுடைய மதுக் கோப்பையை நான் பக்கத்து குட்டி மேஜையில் வாங்கி வைத்ததும் என் கையை வலுவாகப் பற்றி இழுத்து நிறுத்தி இடுப்பை அணைத்து என்னையும் அப்படியே செய்யச் சொன்னாள்.

கூச்சமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. மேகலாவைக் கூட இப்படி அணைத்துப் பிடித்ததில்லை.

அவள் மெல்ல அசைந்து ஆட ஆரம்பித்தபடி சொன்னாள் –

‘இது முதல் மூவ். ஒன்’.

நானும் அவள் மாதிரி அசைந்தேன். இடுப்பில் இறுகிய கையை அவள் எதிர்க்கவில்லை.

‘இது அடுத்த மூவ். டூ’

மாற்றி அசைய நானும் தொடர்ந்தேன்.

’அவ்வளவுதான். ஞாபகம் வச்சுக்கோ. இது ஒன். அப்படித்தான். இது டூ. ஆமா, அதேதான்’.

நான் திரும்பத் திரும்ப  அந்த இரண்டு வகையாகவும் நகர்ந்தபடி கண்ணை மூடிக் கொண்டேன். உலகம் இப்படியே போகட்டும். என்றென்றைக்கும்.

‘பாரு, அதுக்குள்ளே நீயா ஸ்டெப் போடறே. சரி இப்போ நான் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டே அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப் போடணும் சரியா?’

அவள் என் இடுப்பில் மெல்ல வருட, கிறங்கிப் போய்ச் சிரித்தேன். எனக்குக் கிடைக்க, இந்த இரவில் இன்னும் நிறைய இருக்கும் போல.

’Here we go… one two two two one two one two two ஒன் டூ டூ டூ ஒன் டூ ஒன் டூ டூ’.

ஜோசஃபின் ஆடுகிறாள். நான் தப்புத் தப்பாகக் கூட ஆடி அவள் காலை மிதிக்கிறேன்.

மன்னிக்கிற பாவனையில் அவள் கண் விரித்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.

‘வாய் விட்டுச் சொல்லு. ஸ்டெப் தானே வரும்’

தலை சுகமாகக் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. ஒன்னாவது, டூவாவது எல்லாமே ஒன்றுதான். எல்லாமே சைஃபர் தான். ஆட நம்பரெல்லாம் எதுக்கு?

’சொல்லு. ஒன் டூ டூ டூ ஒன் டூ ஒன் டூ டூ’

எனக்குப் போக்குக் காட்டிக் கொண்டு எண்கள் குதித்து என்னைச் சுற்றிக் கும்மாளமிட்டன.

’சொல்லு. ஒன் டூ டூ டூ ஒன் டூ ஒன் டூ டூ’

ஜோசஃபின் திரும்பச் சொல்லியபடி ஆடிக்கொண்டே என் உதடுகளை மெல்லப் பிரித்தாள். நான் கண்ணைத் திறக்கப் போவதில்லை.

‘வாய் விட்டுச் சொல்லு. சொல்லிப் பாத்தாத் தான் பாடம் மனசில் படியும்’.

ஜோசஃபின், சுந்தரவல்லி டீச்சராக எப்போது ஆனாள்?

’சொல்லு’

நான் வேறேதும் நினைவுக்கு வராமல், கால்கள் தடுமாற ஒப்பித்தேன் –

ஒன் டூ டூ.. டூ டூ ஃபோர் .. த்ரி டூ சிக்ஸ்.. ஃபோர் டூ எய்ட்’

அவள் ஆடுவதை நிறுத்தினாள். வாத்திய இசையும், சிரிப்பும், கடல் காற்றும் கூட நின்று போன ராத்திரி அது.

என்னைப் பார்த்து அவள் சொன்னதை முழு மண்டபமுமே கேட்டது. அவள் சிரிக்க, மற்றவர்களும் கூடச் சேர்ந்து சிரித்தார்கள்.

நான் சட்டென்று அவள் உதட்டில் முத்தமிட்டேன். விலகினேன். சின்ன மேஜையில் அவள் மிச்சம் வைத்திருந்த எச்சில் மதுவை மறுபடியும் எடுத்துக் குடித்தேன். வாசலுக்கு ஓடினேன். சைக்கிளில் ஏறி அமர்ந்து இருட்டில்  ஓட்டிப் போனேன்.

கடல் இருட்டில் தன் தரப்பு நியாயத்தை யாரும் கேட்காமல் சொல்லிக் கொண்டிருந்தது. மேகலா, பேச வந்தவள், என் முகத்தைப் பார்த்து மரக் கதவு அடைத்து உள்மனதுக்குள் திரும்பி விட்டிருந்தாள்,

உயரமான கம்பிக் கதவுகள் அடைத்த சுங்கச் சாவடிப் பக்கம் தெருவிளக்கு இருந்தது. ஓரமாகப் பாடி நடக்கிற கடலில் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வந்து என்னை விசாரித்து விட்டுத் திரும்பின.

சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்தது.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு  நிறுத்தினேன்.

ஜோசஃபினை காற்றில் இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொண்டு சிரித்தபடி ஆடினேன். உரக்கச் சொன்னேன்.

அவள் என்னைப் பார்த்துச் சொன்னது தான் –

‘வால்ட்ஸ் ஆட வந்தியா, வாய்ப்பாடு சொல்ல வந்தியா?’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com