8. டாக்டர்களுக்குள் என்ன வேறுபாடு?

ரங்கராஜன் என்பவரின் உடல் எடை ஏனோ தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது. எவ்வளவு சாப்பிட்டாலும், என்ன மருந்து சாப்பிட்டும் எடை குறைவது

ங்கராஜன் என்பவரின் உடல் எடை ஏனோ தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது. எவ்வளவு சாப்பிட்டாலும், என்ன மருந்து சாப்பிட்டும்  எடை குறைவது மட்டும் நிற்கவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். மருத்துவர் சொன்னதன் பேரில் ‘இன் பேஷண்ட்’ ஆகச் சேர்த்து விட்டார்கள்.

ஒவ்வொரு நாளும்  வெவ்வேறு மருத்துவ நிபுணர்களைப் பார்த்தார்கள். பல பரிசோதனைகள் செய்தார்கள்.  பத்து நாட்கள் கடந்தபின்  ஒரு மருத்துவர் ரங்கராஜனின் மனைவிடம், ‘உங்கள் கணவருக்கு கேன்சர் அம்மா ’ என்று சொன்னார்.

மனைவி மயங்கிவிட்டார். ரங்கராஜன் காதிலும் விழுமாறுதான் அந்த மருத்துவர் சொன்னார் என்பதால், ரங்கராஜனுக்கும் பயங்கர அதிர்ச்சி. பின்பு ஒரு வழியாக சமாளித்துக்கொண்டு, தெரிந்தவரிடம் சொல்லி, சிபாரிசு வைத்து டிஸ்சார்ஜ் வாங்கிக்கொண்டு வீடு வந்தார்கள். ரங்கராஜனுக்கு வயது நாற்பது. மனைவிக்கு 38. இரண்டு பிள்ளைகள்.

குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கூடி யோசித்தார்கள்.நண்பர் வலியுறுத்தியதன் பேரில் வேறு ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். அந்த மருத்துவர் வயதானவர். நெப்ராலஜிஸ்ட். சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்

குடும்பத்தினர் கொடுத்த பைல்களை வாங்கி மேசை மீது ஓரமாக் வைத்துவிட்டார். ரங்கராஜன் மனைவி சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டு ரங்கராஜனை கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு தொட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இடையில் மனைவி ஏதோ சொல்ல முற்பட்டபோது பேசவேண்டாம் என்று கையமர்த்தினார். ரங்கராஜனிடம் மட்டும் அவ்வப்போது சின்னச் சின்ன க் கேள்விகள் கேட்டு விவரங்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிதானமாக கவனமாக  ஆராய்ந்தார். சுமார் நாற்பது  நிமிடங்கள் அவர் அப்படி ஆராய்ந்திருக்கலாம்.

வாஷ் பேசினில் கையைக் கழுவிவிட்டு, துண்டில் கையைத் துடைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். நிதானமாக ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,

‘அவருக்கு கேன்சர் இல்லை’

‘அந்த ஹாஸ்பிட்டலில்..’

‘கண்டிப்பா கேன்சர் இல்லைம்மா. நான் நல்லா செக் பண்ணிடேன். அவருக்கு இருக்கும் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான். வெள்ளை அணுக்கள் தொடர்பானது. அதற்கு…………… என்று பெயர். மருந்திலேயே குணமாக்கிடலாம்’

‘டெஸ்ட் செய்யனுமா டாக்டர்’

‘தேவையில்லை’

அதற்கடுத்த  ஒரு மாதத்தில் ரங்கராஜன் குணமாகிவிட்டார்.

ரங்கராஜனை விட்டுவிடுவோம்.  ‘விவரங்கள்’ தான் நமது ’சப்ஜெக்ட்’. அது தொடர்பானவற்றை சொல்லவே ரங்கராஜன் உதாரணம். இப்போது ஒரு கேள்வி.

மேலே பார்த்தவற்றில் முக்கியமான பகுதி எது என்று நினைக்கிறீர்கள்?

வல்லவராவதற்குத் தேவையான மற்றொன்றை வரும் அத்தியாயங்களில் இனி ‘டீடெயிலாக’ப் பார்க்கப்போகிறோம் என்று சென்ற அத்தியாயத்தில் சொல்லியது நினைவிருக்கலாம்.  அந்த ஒன்றைத்தான் ரங்கராஜனை சோதித்த டாக்டர்  செய்தார். அதுதான் முக்கியமான பகுதி.

அவர் என்ன செய்தார் என்பதைச் சொல்லும்முன், வேறு ஒரு மருத்துவர் செய்த பரிசோதனை (Diagnosys) யையும் பார்த்துவிடலாம். அந்த வேறுபாடு விவரம் சொல்லும்.

அவர் ஒரு தோல் மருத்துவர். சென்னையில் புரசைவாக்கம் போன்ற பரபரப்பான பகுதி ஒன்றில் கிளினிக் வைத்திருக்கிறார். அவரைப் பார்க்க ஏகப்பட்ட நோயாளிகள் வருவார்கள். அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் அவரைப் பார்க்கமுடியாது. அவர் அறைக்கு வெளியே ஒரு சிறு ஆபீஸ். அங்கு அமர்ந்திருக்கும் ரிசப்ஷனிஸ்ட்தான் ஒவ்வொருவரையாக அப்பாயிண்ட்மெண்ட் படி உள்ளே அனுப்புவார்.  

பேஷண்ட் உள்ளே வந்ததும் அவருக்கு என்ன பிரச்சனை கேட்பார். ஆனால் நோயாளி சொல்வதை முழுமையாகக் கேட்கமாட்டார்.  காதில் கொஞ்சம் வாங்கியதுமே, பிரச்சனை இருக்கும் இடத்தைக் காட்டச் சொல்லுவார். உடனடியாக  அவரது ப்ரிஸ்கிருப்ஷன் பேப்பரை எடுத்து மருந்து எழுத ஆரம்பித்துவிடுவார்.

எப்போதுமே அவரால் பேஷண்ட் சொல்லுவதை  முழுமையாக கேட்க இயலாது. சில சமயங்களில் பேஷண்ட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரது செல்ஃபோன் ஒலிக்கும். பேசுவார். உடன், அவரது ரிசெப்ஷனிஸ்டைக் கூப்பிடுவார். ஏதாவது கேட்பார். மீண்டும் எதிரில் அமர்ந்திருக்கும் பேஷண்டைப் பார்ப்பார். அவர் ஏதாவது சொல்ல அல்லது கேட்டக் ஆரம்பித்தால், காதில் வாங்காமலேயே  ‘இதைச்  செய்யுங்க. பிறகு வந்து பாருங்க’  என்று எழுதிய சீட்டைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டு, ‘நெக்ஸ்ட் பேஷண்ட் பிளீஸ்’ என்பார் அழைப்பு மணியை அழுத்தியபடி.

அதே பேஷண்ட் அடுத்த முறை வந்து பிரச்சனை தீரவில்லை என்றாலும் அப்போதும் என்ன ஏது என்று முழுமையாக கேட்கமாட்டார்.  பேச விடமாட்டார். அப்படியா என்று கேட்டுவிட்டு, விறுவிறுவென்று வேறு மாத்திரைகள் மருந்துகள் எழுதிக்கொடுப்பார். வாசல் கதவைப் பார்த்தபடி ‘நெக்ஸ்ட்  பெஷண்ட் பிளீஸ்’என்பார் வேகமாக.

வேறுபாடு புரிந்திருக்கும். அப்சர்வேஷன் என்ற  கவனித்தல்தான் வித்தியாசம். ரங்கராஜனை சோதித்த மருத்துவர் எவ்வளவு நிதானமாக, வேறு இடையூறுகளைத் தவிர்த்துவிட்டு, பொறுமையாக வேண்டிய அளவு நேரம் எடுத்துக்கொண்டு, ஆராய்ந்திருகிறார். நோயாளியிடம் மட்டும் தேவைப்பட்ட விவரங்கள் வாங்கிக்கொண்டு கவனம் பிசகாமல் கவனித்துப் பார்த்திருக்கிறார்!

ஆனால், அடுத்துப் பார்த்த அந்த தோல் மருத்துவர், நோயாளியிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்பது தவிர, அந்த விஷயத்தில் அந்த நேரம் முழுமையாக இல்லை. அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஏனைய விஷயங்கள் அவர் மனதில் வந்துபோயிருக்கின்றன. செய்த வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை. கான்செண்ட்ரேஷன் கிடையாது.

இதுதான் இருவருக்குள்ளும் வேறுபாடு.

ரங்கராஜனை முதலில் பார்த்த மருத்துவமனையிலும், தோல் மருத்துவர் பார்த்த விதமாகத்தான் பார்த்திருப்பார்கள் போல. அதனால்தான் அவர்களால் சரியான நோயைக் கண்டறிய முடியவில்லை.

வல்லவர்கள் அவர்கள் துறையில் நன்கு ‘அப்சர்வ்’ செய்பவர்கள்.

விஷயம் OBSERVATION தான்- இதே அப்செர்வேஷன் பற்றி முன் அத்தியாயங்களிலும் பார்த்திருக்கிறோம். எழுத்தாளர் ஜெயகாந்தன், சா. கந்தசாமி, சத்ஜித்ரே என்கிற படைப்பாளிகள் செய்யும் அப்செர்வேஷன்கள் எப்படி என்று  பார்த்தோம்.

படைப்பாளிகள் மட்டுமில்லை. எந்தத் துறையில், என்ன வேலை செய்பவராக இருந்தாலும் அப்சர்வெஷன் முக்கியம்.

நோயாளி  ரங்கராஜனை சோதித்தது இருவேறு இடங்களில், ஒரு சில மருத்துவர்கள்.

உடல்நலக்குறைவில் அவதிப்பட்டுகொண்டிருந்த  ரங்கராஜன் எவர் கேட்டாலும் தகவல்கள் கொடுத்திருப்பார். அவர் குடும்பத்தாரும் கொடுத்திருப்பார்கள். ரங்கராஜனை எந்த மருத்துவர் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சோதனை செய்திருக்கலாம். அவர் இடம் கொடுத்திருப்பார். ஒத்துழைத்திருப்பார்.

இரண்டு இடங்களில் அவரைப் பார்த்த மருத்துவர்களும் நன்கு படித்தவர்கள்தான். திறமை உள்ளவர்கள்தான். ஆனால், ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். மற்றவர்கள் தவறவிட்டுவிட்டது மட்டுமில்லாமல், இல்லாத ஒன்றை, கேன்சர் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

தோல் மருத்துவரும் அப்படித்தான் பலருக்கும் வைத்தியம் செய்துகொண்டிருக்கிறார். அவர் படிப்பும் திறமையும் உயர்வானவைதான். ஆனால்.. அவருடைய குறைபாடும் கண் எதிரே இருப்பவற்றைக் கவனிக்காததுதான்.

விஷயம் என்னவெனில், எல்லோரும் கவனிப்பதில்லை. கவனிக்கவேண்டியவற்றைக் கவனிப்பதில்லை. அந்த நேரத்தில் வேறு எதிலோ கவனம். 

கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரை இந்த நேரம் நான் குறிப்பிட  விரும்புகிறேன். எதற்காக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? யூகிக்க முடிகிறதா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com