11. அடுத்த வேலை என்ன?

புத்த பிக்கு ஒருவரிடம் சேர்ந்து பலவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன் புத்த மடம் ஒன்றில்போய்ச் சேர்ந்தான். சேர்ந்த அவனுக்கு அங்கு


திருக்குறள்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)


புத்த பிக்கு ஒருவரிடம் சேர்ந்து பலவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன் புத்த மடம் ஒன்றில்போய்ச் சேர்ந்தான். சேர்ந்த அவனுக்கு அங்கு வகுப்பு ஏதும் எடுக்கப்படவில்லை. மாறாக அவனை அங்கே வேலை செய்யச்சொன்னார்கள். தரைக் கூட்டுவது, கழுவுவது, கதவுகளின் துடைப்பது போன்ற வேலைகள் செய்தான். ஒரு மாதம் ஆயிற்று.குருவான பிக்குவிடம் போய்  எப்போது எனக்கு பாடங்கள் ஆரம்பிக்கும் என்று கேட்டான். அதற்கு பதில்  ஏதும் சொல்லாமல், கொடுத்த வேலையைச் செய் என்று சொன்னார்.

செய்தான். மேலும் ஒரு மாதம் ஆயிற்று. ஏதும் சொல்லித் தராமல் இப்படி வேலை வாங்குகிறார்களே என்று அவனுக்கு கோபம். மீண்டும் பிக்குவிடம் போய்க் கேட்டான். இந்த முறை அவர் பதில் ஏதும் சொல்லாமல் கொடுத்த வேலையைப் பார் என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

எரிச்சலுடன் போனான். என்னடா இங்கு வந்தோம். இது நமக்குத் தேவையா. ஏதும் கற்றுத்தராமல் வேலை மட்டும்வாங்குகிறார்களே என்று  மனதிற்குள் புழுங்கினான். வருத்தம் மேலிட்டது. ஆனாலும் சொல்லப்பட்ட வேலையை தொடர்ந்து செய்தான்.

அன்று மாலை அவன் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென அவனை யாரோ பின்பக்கமிருந்து ஒரு அடி கொடுத்தார்கள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால்… யாரையும் காணோம். சுற்றிமுற்றிப் பார்த்தான். அவன் அடிவாங்கியதை சிலர் பார்த்தது தெரிந்தது. அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. ஆனாலும் வேலையைத் தொடர்ந்தான். அடுத்த இரண்டு மணிநேரத்தில் யாரோ அவனை பின்பக்கம் இருந்து திடீரென உதைத்தார்கள்.  யார் என்று அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இப்படியாக அடுத்தடுத்து அவன் எதிர்பாராத நேரங்களில் அவனுக்கு அடியும் உதையும் கிடைத்தது. வலி,  அவமானம், கோபம் மூன்றும் சேர்த்து அவனை வதைத்தது .

கொஞ்சம் யோசித்ததில் எல்லாம் அந்த புத்த பிக்குவின் வேலையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. யுத்தக் கலை சொல்லித்தரக் கேட்டு வந்தால், சொல்லித் தராததுடன், வேலை வாங்குகிறார். அதைக் கேட்டால், கண்டபடி, அதுவும் மறைந்து நின்று அடிக்கிறார்.  இனி இங்கிருந்து பலனில்லை. போய்விடவேண்டியதுதான். ஆனால்,  அதற்குமுன், அந்தப் பிக்குவை சரியாக ஒரு அடியேனும் அடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று முடிவு செய்தான். சரியான தருணத்திற்காக  காத்திருந்தான்.

அந்தத் தருணம் அடுத்த நாளே வந்தது. 

பிக்கு பெரிய பத்திரம் ஒன்றில் அன்றைய  உணவிற்காக எதையோ காய்ச்சிக்கொண்டிருந்தார்.  அவன் சத்தம் வராதவாறு அடிமேல் அடி வைத்து, அவருக்கு பின்பக்கம் போய் நின்றுகொண்டான். அவன் கையில் ஒரு கனத்த துடுப்பு.  பிக்குவை தலையில் அடிப்பதற்காக  துடுப்பை ஓங்கினான். துடுப்பை வேகமாக பிக்குவின் தலையில் அடிக்க எத்தனித்தான். துடுப்பு அவர் தலையில் அடிப்பதற்கு முன்பாக அவர்  துடுப்பை பிடித்துத் தள்ளிவிட்டார். இதை பிக்கு பின்புறம் திரும்பிப் பார்க்காமலேயே செய்தார்.

அவனுக்கு வியப்பு தாங்கவில்லை.

'அதெப்படி பின்பக்கம் நடந்ததை பார்க்காமலேயே உணர்ந்து கொண்டீர்கள்?' என்று பிக்குவிடமே கேட்டான்.

'தம்பி உனக்கு வகுப்பு ஆரம்பம் ஆகிவிட்டது. இதுதான் உனக்கு முதல் பாடம்' என்றார்.

*

திருச்சி பெல் நிறுவனத்தில் 1990களின் ஆரம்பத்தில்  ISO அக்ரிடிடேஷனுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் குழுவில் ல் மனித வளத்துறையின் பிரநிதியாக நானும் இருந்தேன்.  ISO சோ வின் தொடர்ச்சியாக  TQM முயற்சிகள்  நடந்தன. ஜனக் மேத்தா என்று ஒரு ஆலோசகர் எங்களை வழி நடத்தினார். அந்த புரோகிராமின் பெயர் ’டோட்டல் பிட்னெஸ் ரிவியு’

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  14 ஆயிரம் ஊழியர்கள் பணிசெய்த அந்த தொழிலகத்தின் பல்வேறு துறைகளுக்கும் ஜனக் மேத்தா எங்களை அனுப்பினார்.  அவர்  குறிபிட்டவிதமாக தேர்வு செய்த சில ஊழியர்களிடம் (சேம்பிள்) நாங்கள் பேச வேண்டும். கேள்விகளுக்கு பதில் கேட்டு எழுதிக்கொள்ளவேண்டும்.  அது சமயம் அவர்கள் சொல்லுகிற சில வாக்கியங்களை அப்படியே (வெர்பேட்டியம்) குறித்துகொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, ‘நம்ம கம்பெனிக்கு அதெல்லாம் ஒத்துவராது சார்' என்பார் ஒருவர். 'நான் ஏன் சார் செய்யணும். அதுனால எனக்கு என்ன லாபம்”   ‘ இங்கெல்லாம் செஞ்சாலும் ஒண்ணுதான் செய்யாட்டியும் ஒண்ணுதான்'

இப்படி வந்து விழும் வார்த்தைகளை அப்படியே எழுதிக்கொள்ளவேண்டும். மாலையில் கான்பிரன்ஸ் அறையில் அவரை சந்திக்கிறபோது, சேகரித்த விவரங்களை அவரிடம் கொடுக்க வேண்டும். வார்த்தை மாறாமல்.

இதை எதனால் செய்தோம். அதன் மூலம் என்ன பலன் கண்டோம் என்பது வேறு ஒரு விஷயம். இங்கே அதன்மூலம் சொல்ல வருவது, 'கவனித்தல்' பற்றிதான்.

இந்த உலகம் எவ்வளவோ தகவல்களைக் கொண்டிருக்கிறது, தருகிறது. கவனித்தால் தெரியவரும். கவனிப்பவர்களுக்குத் தெரியவரும். மற்றவர்களுக்குத் தெரியாது. பெல் நிறுவனம் என்ற உலகமும் அப்படி பல தகவல்களைக் கொண்டிருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் அந்த நிறுவனத்தின் மேன்மைக்கு சிலவர்றைச் செய்ய முடியும் என்ற நோக்கில்தான் ஜனக் மேத்தா ஊழியர்கள் சொல்லும் வார்த்தைகளை கவனிக்கச் சொன்னார்.

*

சென்ற அத்தியாயத்தில் பார்த்த டாக்டர் ஜென்னர் கவனித்தார்.

எவ்வளவோ நபர்கள் சொல்லியதை, எவ்வளவோ மருத்துவர்கள் காதில் விழுந்தவவைதான் ’மாட்டம்மை வந்துவிட்டதால் எனக்கு சின்ன அம்மை வராது’ என்ற அந்த வாக்கியம். அதைக் காதில் மட்டுமின்றி மனதிலும் வாங்கினார் ஜென்னர்.

இப்படி மனதில் வாங்க, ஒரு 'திறந்த மனநிலை' வேண்டும்.

சரி, கவனித்தாயிற்று. அது போதுமா?

கவனித்தலும் மனதில் வாங்குவதும், விதை ஒன்று கீழே விழுவதற்கு ஒப்பு. கட்டாந்தரையில் விழுந்த விதைகள் என்ன ஆகும்? அல்லது ஆற்று நீரில் விழுந்த விதைகள் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகாது. காய்ந்து போகும். அல்லது நீரில் ஊறி, பெருத்து உடைந்து சிதையும்.

ஆனால் விழுந்த  இடம் ஈரமான மண் தரை என்றால்!  அதுவும் சற்றுக் குழிவான தரை என்றால்?  விழுந்த பின் விதையை மண் லேசாக மூடினால்?

பருத்தி புடவையாய் காய்தது போல என்று தோன்றுகிறதோ.  சிலர் வாங்கும் வார்த்தைகள் அப்படித்தான் மனதில் விழுகின்றன. அங்கிருந்து முளைத்து எழுந்து விரிந்து விருட்சம் ஆகின்றன.

மரத்தில் இருந்து விடுபடும் ஆப்பிள் மேல் பக்கமாகவோ, பக்கவாட்டிலோ போகாமல் வேகமாக தரையை நோக்கிப் போகிறது என்கிற  ( மற்றவர் பார்வையில்) சாதாரண நிகழ்வை கவனித்துவிட்டார் ஐசெக் நியூட்டன்.  மனதில் வாங்கிவிட்டார்.

ஜென்னரும் அந்த மாட்டுக்காரப் பெண் சொன்ன வார்த்தைகளை  மனதில் வாங்கிவிட்டார். விதைகள் விழுந்துவிட்டன.  சரியான நிலத்தில்.

அவர்கள் இருவருமே செய்தது என்ன?

இரும்புப் பட்டரையில் எப்படி அடிக்க வேண்டிய இரும்பை பீடத்தில் அமர்த்து, சம்மட்டி கொண்டு குறி தவறாமல் அதன் தலையில் அடிப்பார்களோ அப்படி..

கடிகாரம் பழுது பார்ப்பவர் எப்படி கண்ணில் ஒற்றை லென்சை மாட்டிக்கொண்டு, கையில் ஊசி போன்ற கூரிய கருவியை வைத்துக்கொண்டு, கை கடிகாரத்தின் குறிபிட்ட பகுதியை ஆராய்வாரோ அப்படி.. அந்த விதையை.. அந்தக் கருத்தை, அந்த செய்தியை.. ஆராய்வார்கள்.

ஆக, கவனித்தலுக்கு அடுத்த கட்டம், அதில் வேலை செய்வது.

எப்படி வேலை செய்ய வேண்டும் தெரியுமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com