4. எது சிறப்பு? அதிகமா, குறைவா?

வீரபாண்டிய கட்டபொம்மன்  மற்றும் முதல் மரியாதை படங்களில் சிவாஜி அவர்களின் நடிப்பில் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்?

நம் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணிய விவரங்கள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன.

W.G.செபால்ட், வெர்டிகோ

வீரபாண்டிய கட்டபொம்மன்  மற்றும் முதல் மரியாதை படங்களில் சிவாஜி அவர்களின் நடிப்பில் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்? எத்தனையோ விதமாக பதில் சொல்லலாம். சிலர் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், நாம் இங்கே யோசித்துக்கொண்டிருக்கிற ‘விவரங்கள்’ (Details) என்ற கோணத்தில் இருந்து பார்த்தால், வீரபாண்டிய  கட்டபொம்மனில் அவர் செய்தது மிகையான நடிப்பு எனவும், முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் செய்தது என்பது, ’நடிப்பு’ என்ற வகையில் மிகவும் குறைவு என்றும் சொல்லலாம்.

செவாலே சிவாஜி அவர்களின் திரைப்படங்களை விரும்பிப் பார்த்தவன் நான். அவர் நடிப்பை ரசித்தவன். அதெல்லாம் வேறு. இங்கே நடிகர் திலகத்தை விமரிசனம் செய்யவில்லை. பேசும் பொருளை புரிந்துகொள்வதற்காக உதாரணமாக அதை எடுத்துக்கொள்கிறோம். அவ்வளவுதான். அதனால், உதாரணம் பற்றி அதிகம் விவாதித்து முக்கிய விஷயத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம். சிவாஜிக்கு சற்று பின்னால் வருவோம். அதற்கு முன்னர் அதே போன்று மேலும் இரண்டு எடுத்துகாட்டுகள். 

இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு வில்லன் நடிகர் அவர். தமிழ் தவிர பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் பிரபலமாக இருப்பவர். ஆரம்ப காலத்தில் ஆ.. ஊ என்று அதிக இரைச்சலாக நடித்தவர். 20  ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படம் வெள்ளி விழாவையும் தாண்டி ஓடியது.   அந்தப்படத்தில் அந்த வில்லன் நடிகரின் நடிப்பும் பாராட்டுப்பெற்றது. அந்த வில்லன் நடிகர் பின்பு ஒரு பேட்டியில் கூறினார், ‘சில இயக்குனர்களுக்கு என்னிடம் இருந்து எதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரியும். அதை மட்டும் கேட்பார்கள்’ என்று.

விஷயம் இதுதான். அந்தப் படத்தின்  இயக்குநர், வில்லனிடம் அவரது படத்தில் அதற்கு முந்தைய படங்களில் செய்த அளவு ஆர்ப்பாட்டமாய் நடிக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது குறைத்துக் கேட்டிருக்கிறார். அந்த நடிகரும் அதனால்தான் அந்தப்படத்தில் அவர் நடிப்பு  வெற்றி என்று சொல்லுகிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் செய்த அளவு நடிக்கிறார் என்று சொல்ல முடியாத குறைந்த அளவே முதல் மரியாதையில் சிவாஜி  நடித்தார். அதற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் தனுஷ் கூறுகையில், இப்படி குறைவாக ‘நடிப்பது’தான்  சிரமம் என்றார். அவரும்  நடிப்பிற்காக தேசிய விருந்து வாங்கியவர்.

கால ஓட்டத்தில் என்ன நடந்திருக்கிறது?

'நடிப்பின் அளவு’ குறைந்திருக்கிறது. ஆனால் அது முன்னேற்றமாகத் தெரிகிறது.

என்ன இது?  சிவாஜி  என்ற நடிகர்  போகப் போக  நடிப்பைக் குறைத்துவிட்டாரா?  அந்த வில்லன் நடிகர் நடிக்காமலேயே பெயர் வாங்கிவிட்டாரா? இதென்ன தனுஷ் நடிக்க வேண்டாம் என்று சொல்லுகிறாறே!  என்றெல்லாம் தோன்றுகிறதா?

இங்கேதான் விடயம் இருக்கிறது. சின்ன எறும்பு. அதன் குட்டியூண்டு தோலை உரிப்பது என்ன பெரிய வேலையா என்று கேட்பதைப் போன்றதுதான் இந்தக் கேள்விகளும். ஆரப்பாட்டமான நடிப்பு என்பது எந்த ஆரம்ப நிலை நடிகனும் செய்யக்கூடியது. மெலிதாக செய்தே அதே தாக்கத்தைக் கொடுப்பதுதான் சிரமம். அதுதான் முன்னேற்றம். அதுதான் மேன்மை. அதுதான் சாதனை.  இந்த அளவுகோல் நடிப்பில் மட்டுமில்லை.

நூறு அல்லது ஆயிரம் வார்த்தைகளில் சொல்லுவதை இரண்டு வரிகளில் (எடுக்கவோ கோர்க்கவோ என்பது போல, தோள் கண்டார் தோளே கண்டார், எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் என்பது போலெல்லாம்)  சொல்வதுதானே சிறப்பு! அதுதானே போற்றுதலுக்கு உரியது. அதைச் செய்யத்தானே கவிஞன் தேவை.

பல்வேறு இசைக்கருவிகளுடன் கத்தி முழங்கி குதியாட்டம் போட வைப்பது இசையில் ஒரு நிலை என்றால், கைகளால் தொடையில் தட்டியபடி வேறு எந்த இசைக்கருவியையும் வாசிக்காமல்  ‘பருவமே.. புதிய பாடல் பாடு..' என்று பாடி ஜெயிப்பது வேறு ஒரு நிலை அல்லவா? அதைச் செய்ய ஒரு தைரியம் மட்டுமல்ல தனித்திறமையும் வேண்டுமல்லவா?   'ராசாத்தி என் உசிரு என்னுதில்லை...’.. என்ற பாடலும் அந்த வகைதான். இப்படி இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன. 

நெய், தக்காளி, வெங்காயம், முந்திரி, பட்டை லவங்கம், சோம்பு, ஏலம், தேங்காய், கசகசா என்று ஏகப்பட்டவற்றைப் போட்டு ஒரு பண்டம் சமைப்பது ஒரு நிலை என்றால், ஒரு தக்காளி, உப்பு, மிளகு கொஞ்சம் கொத்துமல்லி மட்டும் போட்டு ஒரு அற்புதமான ரசம் வைப்பது அதற்கு நேர் எதிரான ஆனால், உயர்வான நிலை அல்லவா?

குறைத்து செய்வதிலே அற்புதம் நிகழ்த்துவதுதானே முன்னேற்றம். அதற்குத்தானே கூடுதல் புரிதல் தேவை. கிரிக்கெட்டில் ஓங்கி அடிக்காமல்.. பந்தை மட்டையால் சின்னதாகத் திருப்பி, கிளான்ஸ் செய்து பவுண்டரி அடிப்பதுதானே  பார்ப்பவரை  ‘அட!’  சொல்ல வைக்கும்!

ஆக இங்கே இரண்டு தகவல்களைப் பற்றிப் பார்க்கிறோம். முதலாவது, போற்றுதலுக்குரியவை என்பவை பெரிதாக, ஆர்ப்பாட்டமானதாக, அதிக பொருட்செலவில் செய்யப்படுபனவாக இருந்தாக வேண்டும் என்பதில்லை. குறைந்த நேரம், குறைந்த பொருட்கள், குறைவான செயல், செலவு, ஆகியவற்றுடன் கூட செம்மையானவற்றைச் செய்யமுடியும்.

இரண்டாவது தகவல், ஆனால் அந்தவிதமாக எல்லோராலும் செய்ய முடியாது. குறிப்பாக  ஆரம்ப நிலையில் இருப்பவர்களால் செய்ய முடியாது.

எதில் ஆரம்ப நிலை?

எப்படிச் செய்வது, என்னவெல்லாம் தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் ஆரம்பநிலை.

இரண்டாவது அத்தியாயத்தில் பார்த்த   ’கதவு, வாஷ் பேசின் மற்றும் டாய்லெட்’ வேலை செய்தவர்கள், நல்ல பொருட்களை வைத்துக்கொண்டும் ஏன் சுமாரான வேலை செய்தார்கள்?  அவர்களுக்கு அப்படியெல்லாம் அந்த வேலைகளைக் கவனித்துச் செய்யவேண்டும் என்று தெரியவே தெரியாது. ஆங்கிலத்தில் இக்னொரென்ஸ் (Ignorance) என்பார்கள். அறியாமை. அவர்களிடம் விவரம் இல்லை. அதுதான் புரிந்துகொள்வதில் தொடக்க நிலை.

ஒரு வாடிக்கையாளரைத் திருப்தி செய்யும் அளவு நேர்த்தியாக அந்த வேலையைச்  செய்வது என்பது,  நுட்பமானது. நல்ல பொருட்கள் கைவசம் இருந்தும் அவர்களால் செய்யமுடியாமல் போனதற்குக் காரணம்,  அவர்களுடைய வேலை பற்றிய புரிதலும் அதற்கான செய்திறனும் இல்லாமல் போனதுதான்.

பாடுவது, வரைவது, எழுதுவது, நடிப்பது, சமைப்பது, வண்டி ஓட்டுவது, நாற்று நடுவது, பழுது பார்ப்பது, உற்பத்தி செய்வது, இயந்திரம் உருவாக்குவது, பயன்படுத்துவது, விளையாடுவது,  நடனம் ஆடுவது என்று வேலை எதுவாகவும் இருக்கலாம். எதைப் புரிந்துகொள்வதிலும் பல நிலைகள் இருக்கின்றன.

புதியவர்கள் அல்லது  புரிதலில் ஆரம்ப நிலையில் இருப்பவரால் அதைக் கொஞ்சமும் உணரவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அதனால் அதைச் சிறப்பாகச்  செய்ய இயலாது. 

அவர்களால் சிறப்பாகச் செய்ய முடியாது என்பது மட்டுமில்லை. அவர்களால் சிறப்பாக செய்யப்பட்டதை அடையாளம் காணவோ, அதனால் அதைப் பாராட்டவோ கூட முடியாது. அதனால்தான்  அவ்வையாரும்  கற்றாரைக் கற்றாரே காமுறுவர்* என்றார்.

கற்றாரே என்பதில் அந்த ’ரே’ யை அவர் அழுத்திச் சொல்லுவது போல எனக்குத் தோன்றுகிறது. எல்லோருக்கும் சிறப்பானவற்றின் அருமை தெரியாது.  நம் கண் எதிரேயே பல கலைஞர்கள் காலம் தாண்டி வரவேண்டிய படைப்புகளைக் கொடுத்துவிட்டு முட்டாள் பட்டம் கட்டிக்கொள்வது இதனால்தான்.

சரி.. கற்றலில், தெரிந்துகொள்ளுவதில் ஆரம்ப நிலை என்பதை இன்னும் சற்றுக் கூடுதல் விளக்கமாகப் பார்க்கலாம். அதற்காக ஒரு கேள்வி..

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

குறிப்பாக நாம் இந்தத் தொடரில் விவாதித்துக் கொண்டிருக்கும்  விவரங்கள்  (Details)  என்ற கோணத்தில் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

சிந்திப்போமா.. சற்று.. சிந்திப்போமா ?

(‘சந்திப்போமா? கண்ணே சந்திப்போமா?’ மெட்டு) !

(தொடரும்)

------------------
 

*  அவ்வையாரின் முழுப்பாடல்

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்

காக்கை உகக்கும் பிணம்.
 

*  திருவள்ளுவர் சொல்லுவது

கற்றார்க்குக் கற்றாரைக் காமுறுதல் நீங்காமை

பற்றியுள்ளம் வேண்டல் இயல்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com