2. சிங்கப்பூராவுக்கு வாருங்கள்!

1959 முதல், சிங்கப்பூர் என்றாலே லீ குவான் யூதான். லீ வாழ்க்கையும், சிங்கப்பூர் வரலாறும் ஒன்றோடு ஒன்று

1959
முதல், சிங்கப்பூர் என்றாலே லீ குவான் யூதான். லீ வாழ்க்கையும், சிங்கப்பூர் வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணந்தவை. அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சிங்கப்பூரைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பின்னோக்கிப் போக வேண்டும்.

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு. நகரம்தான்.   நாடாகி இருக்கிறது. மலேசியத் தீபகற்பத்தின் தென்முனையில் இருக்கிறது. மலேசியாவிலிருந்து ஜோகூர் நீர்ச்சந்தியும், இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நீர்ச்சந்தியும், சிங்கப்பூரைப் பிரிக்கின்றன.

சிங்கப்பூரில் மனிதக் குடியேற்றம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று நிபுணர்கள் யூகிக்கிறார்கள். 13–ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுக்கு, நேரடி ஆதாரங்களோ, சான்றுகளோ கிடைக்கவில்லை. அனுமானங்கள்தாம்.

நம் முதல் வழிகாட்டி, தாலமி (Ptolemy). கி.பி.90 முதல் 168 வரை வாழ்ந்த இவர், கிரேக்கத்தில் பிறந்து எகிப்தில் வாழ்ந்தவர். கணிதம், வானியல், பூகோளம், ஜோதிடம் ஆகிய பல்வேறு துறைகளில் வல்லுநர். இவர் எழுதிய பூகோளம்  (Geographia) என்னும் நூல், உலக நாடுகளின் வரைபடங்களை அறிவியல் ரீதியாக வழங்குகிறது. இந்தப் புத்தகத்தில், ஸபானா (Sabana) என்னும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிடுகிறார். ஸபானா என்று தாலமி குறிப்பிடும் தீவு, சிங்கப்பூராக இருக்கலாம் என்பது பலர் கருத்து.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சீன ஆவணம், பூ லுவோ சுங் (Pu Luo Chung) என்னும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிடுகிறது. பூ லுவோ சுங் என்றால், மலாய் மொழியில் ‘கடைசியாக இருக்கும் தீவு’ என்று அர்த்தம். அன்றைய பூகோள அறிவுப்படி, மலேசியாவைத் தாண்டி இறுதியாக இருந்த தீவு ‘சிங்கப்பூர்’தான்.

மலாய் வரலாற்றுப் பதிவேடுகள் அல்லது மன்னர்களின் வம்சாவளி  என்னும் கற்பனை கலந்த வரலாற்றுப் புத்தகம் கி.பி.15 அல்லது 16–ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கொடிகட்டிப் பறந்த இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் பற்றிய விவரங்கள் இந்த நூலில் இருக்கின்றன.

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் தலைநகர், சுமத்ரா (Sumatra). செல்வச் செழிப்போடு நல்லாட்சி நடைபெற்ற இந்த நாடு, தென்கிழக்கு ஆசியாவின் பலம் வாய்ந்த பேரரசாக இருந்தது. தமிழகத்தோடு, குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சி செய்த பத்தாம் நூற்றாண்டில், சோழப் பேரரசோடு நெருங்கிய நட்புறவு வைத்திருந்தது. தென்னிந்தியாவோடு மட்டுமல்ல, வட இந்தியாவோடு புத்தமதத் தொடர்புகள். சீனாவோடு ஏற்றுமதி அமோகமான ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம். மத்திய கிழக்கு அரேபிய நாடுகளோடும் மதத் தொடர்புகள்.

ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் செல்வமும் செல்வாக்கும், அண்டைய ஜாவா (Java), கம்போஜம் (Kambuja), சம்பா (Champa) ஆகிய நாட்டு அரசர்களிடையே பொறாமையை எழுப்பியது. அடிக்கடி படையெடுத்து வந்தார்கள். இந்த முயற்சிகள், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பலன் கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில், கிழக்கு ஜாவாவைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாஜாபாஹித் பேரரசு (Majapahit Empire), மாபெரும் படைபலம் கொண்டதாக இருந்தது.  ஸ்ரீவிஜய நாட்டைத் தாக்கினார்கள்.

நாட்டின் இளவரசராக இருந்த சாங் நிலா உத்தமா (Sang Nila Utama), தப்பி ஓடினார். ஓடினார், ஓடினார், ‘‘கடைசியாக இருக்கும் தீவு”க்கே ஓடினார். ஆண்டவர்கள் அரியணையை இழக்கும்போது, மூச்சுத் திணறிப்போவார்கள். எப்படியாவது ஆட்சி பீடம் ஏறத் துடிப்பார்கள். உத்தமாவும் அப்படித்தான். ‘‘கடைசியாக இருக்கும் தீவின்” மன்னரைத் துரத்தினார். ஆட்சியைக் கைப்பற்றினார்.

அந்தத் தீவு, காடுகள் அடர்ந்த பகுதி. அங்கே ஏராளமான புலிகள் நடமாடிக்கொண்டிருந்தன. ராஜா ஏனோ, புலிகளைச் சிங்கங்கள் என்று நினைத்துவிட்டார். காட்டு ராஜாவான சிங்கங்களைப் பார்த்த அதிர்ஷ்டத்தால்தான் தனக்கு நாட்டு ராஜ்யம் கிடைத்தது என்று நம்பினார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம். பூரா என்றால், ஊர். இதன் அடிப்படையில், சிங்கங்களுக்கு நன்றி அறிவிப்பாக, புதிய நாட்டுக்கு (தீவுக்கு) சிங்கப்பூரா  என்று பெயர் சூட்டினார்.

காடுகள் நிறைந்த சிங்கப்பூராவில் யானைகளும் அதிகம். கி.பி.1320–ல் மத்திய ஆசியாவில் இருந்த மங்கோலியப் பேரரசர்கள், யானைகள் வாங்குவதற்காக, மலாய் நாட்டை அடுத்திருந்த Dragon’s Teeth Gate (டிராகன் என்பது ஒருவகை விலங்கு. வெளவாலுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகளுடன், நெருப்பைக் கக்கும் ராட்சசப் பல்லியாகவோ, முட்கள் நிறைந்த வாலையுடைய பாம்பாகவோ சித்தரிக்கப்படுகிறது. கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோர் டிராகனைத் தீமையின் சின்னமாகக் கருதினார்கள். ஆனால் சீனா, ஜப்பான், மலேஷியா போன்ற கலாசாரங்களில், டிராகன் நல்ல சகுனம், அதிர்ஷ்டத்தின் அடையாளம்) என்னும் துறைமுகத்துக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்கள். இந்த Dragon’s Teeth Gate, சிங்கப்பூரில் இருக்கும் கெப்பெல் துறைமுகம் (Keppel Harbour) என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

புதிய மன்னர், புதிய ஆட்சி, மக்கள் தொகை மிகக் குறைவான நிலப்பகுதி. வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் அண்டைய மலாயா, சீன நாடுகளிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்து வரத் தொடங்கினார்கள்.

வாங் டாயுவான் (Wang Dayuan) என்னும் சீனர், உலகம் சுற்றும் வாலிபர்; வியாபாரி. இந்தியா, ஸ்ரீலங்கா, மலேஷியா, ஆப்பிரிக்கா ஆகிய பல நாடுகளுக்குக் கப்பல் பயணம் செய்திருக்கிறார். தான் சென்ற ஊர்களின் விவரங்களையும், தன் அனுபவங்களையும் டயரிக் குறிப்புகளாகப் பதிவு செய்திருக்கிறார். 1349–ல் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. இவைதாம், சிங்கப்பூரா பற்றிய ஆரம்ப ஆவணங்கள். இந்தக் குறிப்புகளில், துமாஸிக் (Temasek), Dragon’s Tooth, பான்ஸூ (Banzu) என்னும் சிங்கப்பூராவின் மூன்று இடங்கள் (இந்த இடங்கள் இப்போது இல்லை. ஆனால் அகழ்வாராய்ச்சிகளில், இங்கே நகரங்களும் துறைமுகங்களும் இருந்ததற்கு அடையாளமான சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன) பற்றிச் சொல்கிறார். துமாஸிக் என்னும் கடலோர நகரத்தில் சீனர்களும், மலாய் மக்களும் நல்லிணக்கத்தோடு சேர்ந்து வாழ்ந்ததாக வாங் டாயுவான் சொல்கிறார். துமாஸிக்தான் பின்னாள்களில் சிங்கப்பூராகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கி.பி.1398. சுமத்ராவில் பலேம்பாங் (Palembang) என்னும் சிறிய நாடு இருந்தது. இதன் அரசர், சுல்தான் பரமேஸ்வரா (சுல்தான் என்பது இஸ்லாமிய அரசர்களைக் குறிப்பது. பரமேஸ்வரா என்பது இந்துப் பெயர். மாறுபட்ட இவை இவர் பெயரில் எப்படி இணைந்தன என்று தெரியவில்லை). ஜாவாவைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மஜபாஹித் பேரரசு, பலேம்பாங் மீது படையெடுத்தார்கள். பரமேஸ்வரா தோற்றார். போரில் தோல்விகண்ட எல்லோருக்கும் புகலிடம், ஏனோ சிங்கப்பூராதான். வந்தார். ஆட்சியைப் பிடித்தார்.

அரசியலில் பந்தாடப்படுவதே சிங்கப்பூராவின் தலைவிதியாக இருந்தது. மலாயாவில் இருந்த துறைமுகங்கள் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளோடு நடந்த வர்த்தகத்துக்கு மையப்புள்ளியாக இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். மலேயாவைப் பிடித்தவர்கள், சிங்கப்பூராவையும் சதிராடினார்கள். சிங்கப்பூர் முதலில் தாய்லாந்து வசம் போயிற்று. அடுத்தபடியாக, மாஜாபாஹித் பேரரசு கைகளில்.

தென்கிழக்கு நாடுகளின் ஆட்டம் 150 வருடங்கள்தான் நீடித்தது. ஐரோப்பிய நாடுகளின் கச்சேரி ஆரம்பம். 1511–ல், போர்த்துக்கீசியர்கள் மலாய் நாட்டின் மலாக்கா பகுதியைப் பிடித்தார்கள். அடுத்து சிங்கப்பூராவும் அவர்கள் வசமானது. இந்தத் தீவால் எந்தப் பயனும் இல்லை என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தார்கள். சிங்கப்பூராவில் இருந்த வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். துறைமுகத்தில் எல்லா வியாபாரத்தையும் நிறுத்தினார்கள். சிங்கப்பூரா என்னும் தேசமே மறக்கப்பட்டுவிடும் நிலை.

அடுத்து டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து நாட்டுக்காரர்கள். ஹாலந்து என்றும் இந்த நாடு அழைக்கப்படுகிறது), மலாயா மற்றும் சிங்கப்பூரா பகுதிகளைப் போர்த்துக்கீசியரிடமிருந்து தட்டிப் பறித்தார்கள். டச்சுக்காரர்களும் சிங்கப்பூராவுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. இந்தச் சோகம் சுமார் 200 ஆண்டுகள் தொடர்ந்தது.

கி.பி.1819. வந்தார், சிங்கப்பூராவின் மீட்பர். ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் (Stamford Raffles). சுமத்ரா பகுதியில் இருந்த பிரிட்டீஷ் காலனியின் லெஃப்டினன்ட் கவர்னர்.

ராஃபிள்ஸ், அற்புதமான மனிதர். வறுமையான குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்போடு கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயம். 1795–ம் ஆண்டு, தன்னுடைய பதினான்காவது வயதில், கிழக்கிந்தியக் கம்பெனியில் கிளார்க் வேலையில் சேர்ந்தார். முதலில், லண்டனில் வேலை. அப்போது, மலாயாவில் வேலை பார்க்க ஏராளமான ஊழியர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். அங்கே, இங்கிலாந்துபோல் வசதிகள் கிடையாது. ஆனால், பணம் சேமிக்க முடியும். இந்தக் காரணத்தால், மலாயா போக ராஃபிள்ஸ் சம்மதித்தார். மலாயாவின் பினாங் நகரின் கவர்னருக்கு உதவிச் செயலாளராகப் பணி.

அன்றைய நாள்களில், பிரிட்டீஷாருக்கு உயர்வு மனப்பான்மை இருந்தது. உள்ளூர் மக்களைத் தாழத்தப்பட்டவர்களாக நடத்தினார்கள், அவர்களோடு பழகுவதையும், ஏன் பேசுவதையுமே தவிர்த்தார்கள். நிர்வாக விஷயமாகப் பேச வேண்டிய நேரங்களில், பிரிட்டீஷார் ஆங்கிலத்தில் பேசுவார்கள். உள்ளூர் ஆசாமி, அந்த ஊர் மொழியில் பேசுவார். ஒருவர் மொழி அடுத்தவருக்குப் புரியாது. புரிதலுக்காகத் துபாஷி என்னும் மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டார்.

ராஃபிள்ஸ், ஆட்சியாளருக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு உருவாக, பொதுவான மொழிதான் பாலம் என்று நம்பினார். மலாய் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டார். இந்த மலாய் மொழிப் பேச்சு, அவரிடம் மக்களுக்கு அபார நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மனிதநேயம் கொண்ட ராஃபிள்ஸின் வெல்வெட் உறைகளுக்குள் இரும்புக் கரங்கள் இருந்தன. தேவைப்படும்போது களத்தில் இறங்கின. டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும், இங்கிலாந்தின் வியாபாரம் தென்கிழக்கு ஆசியாவில் வளருவதை விரும்பவில்லை. வியாபாரத்தை ஆரம்பமாக வைத்துப் பணபலத்தைப் பெருக்குவது, உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைப்பது, கோஷ்டிகளை உருவாக்குவது, அவர்களுக்குள் சண்டையை உண்டாக்கி, நாடு தளரும்போது ஆட்சியைப் பிடிப்பது... இவைதாம் பிரிட்டீஷாரின் அரசியல் வியூகங்கள். நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குறிக்கோளும் இதுவேதான். ஆகவே, இவர்கள் இருவரும் இணைந்தார்கள். இங்கிலாந்தின் வியாபார வளர்ச்சியைத் தடுக்க அத்தனை முயற்சிகளையும் எடுத்தார்கள்.

இந்தோனேஷியாவின் ஜாவா நகரத்தில் டச்சு, பிரெஞ்சுப் படைகள் முகாம் இருந்தது. ராஃபிள்ஸ், ஜாவா மீது தாக்குதல் தொடங்கினார். எதிரிகள் கோட்டை, தகர்க்க முடியாத இரும்புக் கோட்டை. 45 நாள்கள் பிரிட்டீஷ் தாக்குதல் நடந்தது. அதிசயம் நிகழந்தது. இங்கிலாந்துக்கு மாபெரும் வெற்றி! எதிரிப் படைத் தளபதி கைது செய்யப்பட்டார். ராஃபிள்ஸ், தளபதி கர்னல் ஜில்லெஸ்பிக் (Colonel Gillespic) ஆகிய இருவரும் வெற்றியின் முக்கிய சூத்திரதாரிகள் என்று இங்கிலாந்து அரசு அங்கீகரித்தது. ராஃபிள்ஸுக்குப் பதவி உயர்வு - சுமத்ரா பகுதியின் லெஃப்டினன்ட் கவர்னர். இங்கிலாந்து மகாராணியாரும் அரசின் உயர்ந்த விருதான “ஸர் (Sir)” என்னும் பட்டம் வழங்கினார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வியாபாரத்தைப் பெருக்க இங்கிலாந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலாயா ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. இந்திய - சீன வணிகத்தின் கழுத்தை நெரிக்க நினைத்த அவர்கள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கினார்கள். அநியாய வரிகள்  போட்டார்கள். சில சமயங்களில், துறைமுகத்துக்குள் நுழைவதற்கே அனுமதி மறுத்தார்கள்.

இங்கிலாந்து திணறியது. வியாபாரம் ஊசலாடியது. தீர்வு காணும் பொறுப்பு ராஃபிள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. மனிதர் மகா கில்லாடி. எந்த வேலையைக் கொடுத்தாலும், மேலெழுந்தவாரியாகச் செய்யமாட்டார். விவரங்களைத் தேடுவார். அவற்றை அலசி ஆராய்வார். வித்தியாசமாகச் சிந்திப்பார். இந்தோ-சீனக் கடல் பாதையில், ஒரு புதிய துறைமுகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பல துறைமுகங்களை நேரடியாகப் பார்வையிட்டு, அவற்றுள் எது இந்தோ-சீன வியாபாரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எடை போடும் வேலையைத் தொடங்கினார்.

ஜனவரி 29, 1819. (ராஃபிள்ஸ், இந்தத் தேதியை பெப்ருவரி 29, 1819 என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தவறு. ஏனென்றால், 1819 லீப் வருடமல்ல. ஆகவே, பெப்ருவரி மாதத்தில் 29–ம் தேதி கிடையாது). சிங்கப்பூராவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள். நாட்டின் தலைவிதி மாற்றி எழுதப்பட்ட நாள். ராஃபிள்ஸ், சிங்கப்பூரா துறைமுகத்தைப் பார்வையிட்டார். சிதிலமாகிக் கிடந்தது. சுமார் இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத சிதிலம். மீன்பிடிப்பவர்கள் மட்டுமே மும்முரமாக இருந்தார்கள். ஊர் – ஊரா அது? சதுப்பு நிலமும், காடுகளும் நிறைந்த பகுதியாக இருந்தது. வேறு யாரவது இருந்திருந்தால், மறுபார்வை பார்க்காமல் திரும்பிப் போயிருப்பார்கள். ராஃபிள்ஸ் வித்தியாசமானவர். அவர் உள்ளுணர்வு சொன்னது - “இங்கிலாந்து தேடிக்கொண்டிருக்கும் துறைமுகம் இதுதான்”.

இந்த முடிவை, ராஃபிள்ஸ் உணர்ச்சிபூர்வமாக எடுக்கவில்லை; அறிவுபூர்வமாக எடுத்தார். பல காரணங்கள் – மலாய் தீபகற்பத்தின் தெற்கு எல்லையிலும், மலாக்கா நீர்ச்சந்தியின் அருகிலும் இருந்த பூகோள அமைப்பு, ஆழமான இயற்கைத் துறைமுகத்துக்கான கடல், சுற்றுமுற்றும் கப்பல்கள் கட்டவும் பராமரிக்கவும் அவசியப்படும் மரங்களின் அடர்த்தி... சுமார் ஆயிரம் பேரே வசித்தார்கள். மக்கள் அடர்த்தி குறைவாக இருந்ததால், துறைமுகத்தை நிர்மாணிக்கவும், நிர்வகிக்கவும் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளிகளைக் கொண்டு வந்தால், அவர்கள் தங்கவும், அங்கே புதுவாழ்க்கை அமைக்கவும் பிரச்னைகளே இருக்காது.

ஒரே ஒரு சிக்கல்தான். சிங்கப்பூரா தீவு, மலாயாவின் ஒரு பகுதியான  ஜோஹோர் (Johor) ராஜ்யத்தின் கீழ் இருந்தது. ஜோஹோரை டெமங்காங் அப்துல் ரஹ்மான் ஆண்டுவந்தார். இவர், டச்சுக்காரர்களின் கைப்பாவை. இந்தக் கோட்டையில் ஒரு ஓட்டையை ராஃபிள்ஸ் கண்டுபிடித்தார். அப்துல் ரஹ்மானுக்கு ஹூஸைன் ஷா என்னும் அண்ணன் இருந்தார். அண்ணா தம்பிக்குள் பதவிச் சண்டைகள். உயிருக்குப் பயந்த அண்ணன், அண்டைய இந்தோனேஷியாவில் அடைக்கலம் புகுந்திருந்தார். ராஃபிள்ஸ், ஹூஸைனைத் தொடர்புகொண்டார். ‘‘உங்கள் தம்பிக்கு ஹாலந்து உதவுகிறதா? உங்களுக்கு மகாபலம் பொருந்திய இங்கிலாந்து துணை நிற்கும்” என்று வாக்குறுதி தந்தார்.

இங்கிலாந்துப் படையினர், ஹூஸைனை பாதுகாப்போடு சிங்கப்பூராவுக்கு அழைத்து வந்தார்கள். “இவர்தான் ஜோஹோர் ராஜா” என்று பிரகடனம் செய்தார்கள். இவர் ராஜா வாழ்க்கை நடத்த, இங்கிலாந்து மகாராணி ஒவ்வொரு வருடமும் பணம் தருவார்.

உயிருக்குப் பாதுகாப்பு, ராஜா பட்டம், ஆடம்பர வாழ்க்கை நடத்த மொத்தச் செலவு, இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் ஹூஸைன் சுல்தானுக்கு? கைம்மாறாக, ராஃபிள்ஸ் என்ன எதிர்பார்த்தார்? ஒரே ஒரு கையெழுத்து; ஒரே ஒரு ஒப்பந்தத்தில். உடன்படிக்கை ஷரத்துக்கள் பற்றியும் ஹூஸைன் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. சிங்கப்பூரா ஊரை, இங்கிலாந்து நாட்டுக்கு எழுதிவைக்க வேண்டும். அவ்வளவுதான்.

பெப்ருவரி 6, 1819. ஹூஸைன் கையெழுத்துப் போட்டார். சிங்கப்பூரா என்னும் புராதனப் பெயர், ஆங்கிலேயர் வாயில் நுழைந்து சிங்கப்பூர் ஆனது. நகரத்தில், இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடி ஏறியது. கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டு, லட்சக்கணக்கான சீன, இந்திய, மலாய் மக்களுக்கு வாழ்வாதாரம் தரும் விருட்சம், முதன்முதலாக முளை விட்டது அன்றுதான். ஆமாம், சிங்கப்பூர் பிறந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com