3. சிங்கப்பூரின் அம்மையப்பர்

பெப்ருவரி 6, 1819. ராஃபிள்ஸ், சிங்கப்பூரின் ஜனனத்துக்கு மருத்துவச்சியாக மட்டும் இருக்கவில்லை, பிறந்த நாட்டை வளர்த்து ஆளாக்கும்

 பெ

ப்ருவரி 6, 1819. ராஃபிள்ஸ், சிங்கப்பூரின் ஜனனத்துக்கு மருத்துவச்சியாக மட்டும் இருக்கவில்லை, பிறந்த நாட்டை வளர்த்து ஆளாக்கும் பாசத்தாயாக, அவற்றில் முந்தியிருக்கச் செய்யும் பொறுப்பு மிகுந்த தந்தையாக இருந்தார். சிங்கப்பூரின் குழந்தைப் பருவ அம்மையப்பர் ராஃபிள்ஸ்தான். 

ராஃபிள்ஸ், சிங்கப்பூரின் நிர்வாகியாக, மேஜர் வில்லியம் ஃபார்க்ஹர் (Major William Farquhar) என்பவரை நியமித்தார். இவரோடு, சிறிய பீரங்கிப் படை. படை வீரர்கள் எங்கிருந்து தெரியுமா? பிரிட்டீஷ் ஆட்சியில் அப்போது இருந்த இந்தியாவிலிருந்து! ஆமாம், சிங்கப்பூரின் பிரம்மாண்ட வளர்ச்சியில், ஆரம்ப காலத்திலிருந்தே நமக்கும் பங்கு இருக்கிறது. ஃபார்க்ஹர் வெகு வேகத்தில் புதிய துறைமுகம் நிறுவினார். அன்றைய கடல் வாணிபத்தில் பிரபலமாக இருந்த மலாயா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாட்டுத் துறைமுகங்களுக்குச் சவால் விடும் வசதிகள்.

அந்தத் துறைமுகங்களுக்குப் போய்க்கொண்டிருந்த ஏராளமான சரக்குக் கப்பல்களை, புதுத் துறைமுகமான சிங்கப்பூருக்கு வரவழைக்க ராஃபிள்ஸ் பல யுக்திகளைக் களத்தில் இறக்கினார். இந்தத் துறைமுகங்கள், டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. போட்டியே இல்லாத காரணத்தால், கப்பல்களிடம் அநியாயக் கட்டணங்கள் வசூலித்தார்கள். ராஃபிள்ஸ் எடுத்துவைத்த முதல் அடியே அதிரடி, மரண அடி. சிங்கப்பூர் துறைமுகத்தை முற்றிலும் இலவசமானதாக அறிவித்தார். எந்தக் கப்பலுக்கும் கட்டணமே கிடையாது.

விரைவில் சிங்கப்பூர் வழியாக நடக்கும் வியாபாரம் எகிறியது. 1819–ல், சிங்கப்பூர்த் துறைமுகம் வழியாக நடந்த வியாபாரம் 4 லட்சம் ஸ்பானிஷ் டாலர்கள் (ஏனோ, அன்றைய மதிப்பு ஸ்பானிஷ் டாலர்களில் கணக்கிடப்பட்டது).

இதுவே, 1821–ல் 80 லட்சம் டாலர்களானது. 1825–ல் 220 லட்சம் டாலர்கள். அதாவது, ஆறே வருடங்களில், 55 மடங்காகிவிட்டது. அதுவரை முதல் இடம் பிடித்திருந்த மலாயாவின் பினாங் துறைமுகத்தைப் பின் தள்ளிவிட்டு, தென் கிழக்கு ஆசியாவின் நம்பர் 1 துறைமுகமானது. ஆறே வருடங்களில் அசுரத்தனமான வளர்ச்சி!

வியாபார வளர்ச்சி வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியது. நாட்டில் ஆயிரம் பேர்தானே இருந்தார்கள்? ஆட்கள் போதவில்லை. ஃபார்க்ஹர் அண்டை நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியா, மலாயா, சீனா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமானோர் வரத் தொடங்கினார்கள். 1819–ல், சிங்கப்பூரின் மக்கள் தொகை 1000. 1821–ல் 5000. 1825–ல் 10,000.

ஃபார்க்ஹர், அற்புதமான சாதனை செய்துவிட்டார். அவர் கரங்கள் திறமையானவையாக மட்டும் இருக்கவில்லை, கறைகள் படிந்தவையாகவும் இருந்தன. அவர் பற்றிய பல புகார்கள் ராஃபிள்ஸ் காதுகளில் விழுந்தன. 1822–ல் சிங்கப்பூர் வந்தார். விசாரித்தார். புகார்கள் அத்தனையும் முழுக்க முழுக்க நிஜம்.

ஃபார்க்ஹர், சிங்கப்பூரை மட்டும் வளர்க்கவில்லை. தன் சொத்துக்களையும் கணக்கில்லாமல் வளர்த்திருந்தார். துறைமுகத்தின் வளர்ச்சியால், தேசத்தில் மக்களிடம் ஏராளமாகப் பணம் புழங்கியது. இவர்களின் சபலங்களை ஃபார்க்ஹர் சொந்தக் காசாக்கிக்கொண்டார். சூதாடும் விடுதிகள் நடத்த அனுமதி கொடுத்தார். தெருவுக்குத் தெரு, பணம்கட்டி விளையாடும் சேவல் சண்டைகள். அடுத்துக் கஞ்சா விற்பனை ஆரம்பித்தது. ஃபார்க்ஹர் தன் பைகளை நிரப்பிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டார். மக்கள், போதைக்கும் சூதாட்டத்துக்கும் அடிமைகளாகிக்கொண்டிருந்தார்கள். செல்வத்தில் உயர்ந்து கொண்டிருந்த சிங்கப்பூர், ஒழுக்கத்தில் சறுக்கிக்கொண்டிருந்தது.

ராஃபிள்ஸ் தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். அவரைப் பொறுத்தவரை, நாடு வல்லரசாக மட்டுமல்ல, நல்லரசாக இருக்க வேண்டும். வளர்ச்சி முக்கியம். அதைவிட, நல்லொழுக்கமும் கட்டுப்பாடும் முக்கியம். கஞ்சாவையும் சூதாட்டத்தையும் தொடரவிட்டால், சிங்கப்பூர் சீரழிந்துவிடும். உடனடியாக அவற்றைத் தடை செய்தார்.

சிங்கப்பூரை ஒரு திட்டமிட்ட நாடாக உருவாக்க ராஃபிள்ஸ் விரும்பினார். திடீர் வளர்ச்சி காணும் இடங்களில், பல பிரச்னைகள் தலை தூக்கும். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து மக்கள் குடியேறுவார்கள். இவர்களின் பின்புலங்கள், வாழ்க்கை முறைகள், மனோபாவங்கள், கலாசாரம் ஆகியவற்றில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும். பிறந்த மண்ணின் மீது ஆழமான பாசம் இருக்கும். இதனால், பிழைக்க வந்த நாட்டோடு ஒட்டமாட்டார்கள். அதேசமயம், பிறந்த நாடும் இவர்களை அந்நியர்களாக நடத்தும். ஆகவே, இவர்கள் வேரில்லாத மரங்களாக உணர்வார்கள். மனங்களில் எப்போதும் பாதுகாப்பின்மை பயமுறுத்தும். மது, மாது, சூதாட்டம் என்று வடிகால்கள் தேடுவார்கள். வேலை பார்க்கும் நாடுகளில் கட்டுப்பாடுகள் இல்லையென்றால், புலம் பெயர்ந்தவர்கள் சமூக விரோதிகளாகவும் மாறும் சாத்தியங்கள் அதிகம். புலம் பெயர்ந்த நாடு கிரிமினல்களின் கூடாரமாகிவிடும்.

ஒரு நாட்டை நல்ல நாடாக உருவாக்க வேண்டுமானால், இந்த மாதிரியான பிரச்னைகளை முளைக்கும் முன்னாலேயே கிள்ளிவிட வேண்டும். நல்ல மக்கள் உருவாக, நல்ல நாட்டைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும். இத்தனை ஆழமாக, அறிவியல்ரீதியாகச் சிந்திக்கும் தலைவர், ஆரம்ப காலத்திலேயே கிடைத்தது சிங்கப்பூருக்குக் கிடைத்த அபூர்வ வரம்.

ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கட்டும் கட்டடம்போல், நகரில் எங்கெங்கே வீடுகள், எப்படிப்பட்ட வீடுகள் அமைய வேண்டும், வீதிகளை எப்படி அமைக்க வேண்டும், கடைகள், பொழுதுபோக்கு இடங்கள் எங்கே வந்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும், ‘பளிச்’ சுத்தமாக நகரத்தைப் பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும், பொதுமக்களிடம் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும், கடமை உணர்வும், தேசப்பற்றும் கொண்ட குடிமகன்களாக அவர்களை எப்படிச் செதுக்க வேண்டும் என்று ராஃபிள்ஸ் ஆழமாகச் சிந்தித்தார். ஒவ்வொரு துறை மேதைகளிடமும் கலந்துரையாடினார். அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டார்.

திட்டத்தை உருவாக்கும் பணியை, பிலிப் ஜாக்ஸன் என்னும் கடற்படைப் பொறியியல் வல்லுநரிடம் ஒப்படைத்தார். சில மாதங்களில் பக்கா ப்ளான் ரெடி. இந்தத் திட்டம் ‘ஜாக்ஸன் திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ராஃபிள்ஸ் திட்டம்’ என்றும் சொல்வதுண்டு.

ஜாக்ஸன், நகரத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்.

1. ‘ஐரோப்பிய டவுன்’ - ஐரோப்பியர்கள், ஆசியச் செல்வந்தர்கள் ஆகியோர் வாழும் பகுதி.

2. ‘சீனா டவுன்’ - சீனர்கள் வசிக்கும் இடம்.

3. ‘சுலியா காம்ப்பாங்’ (Chulia Kampong) என்னும் பகுதி - இந்தியர்கள் (அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்) உறைவிடம்.

4. ‘கம்ப்பொங் கிலாம்’ (Kampong Kilam) என்னும் கிராமப்புறம் போன்ற இடங்களில் மலாய், அரபு நாட்டவர், முஸ்லிம்கள்.

இவை அத்தனையும் மக்கள் தங்கும் இடங்கள். ஐரோப்பிய டவுனுக்கு மேற்குப் புறத்தில், அரசாங்க அலுவலகங்களும், கடை வீதிகளும் இருந்தன. (மக்களை இனரீதியாகப் பிரிக்கும் இந்தக் கட்டமைப்பு, அன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதாக இருந்தது. பிறகு, காலப்போக்கில் மாறியது. எல்லோரும், எங்கேயும் வசிக்கும் சுதந்திரம் வந்தது).

நாட்டின் தோற்றத்தை மாற்றும் முயற்சிகள் இவை. மக்கள் மனங்களை மாற்ற வேண்டுமானால், நீதி நிர்வாகம், கல்வி ஆகிய இரண்டு துறைகளிலும் கட்டமைப்புகள் தேவை. ராஃபிள்ஸ் தன் கவனத்தை அடுத்தபடியாக ஒருமுகப்படுத்தியது இவற்றில்தாம். இந்த அடிப்படையில், சிங்கப்பூரின் முதல் அரசியல் திட்டம் அவர் கைவண்ணத்தில் பிறந்தது.

சிங்கப்பூரில் தெளிவான சட்டங்களே இருக்கவில்லை. ஏதாவது குற்றங்கள் நடந்தால், அவை மலாயாவில்தான் விசாரிக்கப்பட்டன. இதனால் கால தாமதங்கள் ஏற்பட்டன. பெரும்பாலான சமயங்களில், குற்றவாளிகள் தப்பினார்கள். அப்பாவிகள் தண்டனை அடைந்தார்கள். பொதுமக்களுக்கு, நீதிமன்றங்களில் நம்பிக்கையே போய்விட்டது. மக்களின் இந்த மனக்குறையை ராஃபிள்ஸ் உணர்ந்தார். உள்ளூரில் ஒரு நீதிபதியை நியமித்தார்.

அன்றைய சிங்கப்பூரில் அடிமைத்தனம் பரவலாக இருந்தது. பல வீடுகளில், ஏழைகள் உழைக்கும் எந்திரங்களாக உறிஞ்சப்பட்டார்கள். ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக நடத்தப்பட்டார்கள். மனிதனை மனிதன் அடிமையாக வைப்பது சட்ட விரோதம் என்று நீதிபதி அறிவித்தார். அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நீதிபதி முடிவுகட்டிய இன்னொரு அநியாயம், அடகுவட்டிக் கடைக்காரர்களின் அராஜகம். சூதாட்டங்களில் பணத்தை இழந்த மக்கள், இவர்களிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கினார்கள். வட்டியைக்கூடக் கொடுக்கமுடியாமல் வாழ்க்கையை இழந்தார்கள். இதைத் தடுக்க, அரசாங்கத்தின் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே வட்டிக் கடைகள் நடத்த முடியும் என்னும் சட்டத்தை நீதிபதி அமலுக்குக் கொண்டுவந்தார். யாராவது அநியாய வட்டி வாங்கினால், அவர்கள் வட்டியை எண்ணமுடியாது, கம்பிதான் எண்ண வேண்டும்.

வறுமையில் பிறந்த தான், வாழ்வில் சிகரங்கள் தொட்டது தன் கல்வியால்தான் என்து ராஃபிள்ஸுக்குத் தெரியும். கல்வி விளக்கை ஏற்றிவைத்தால்தான், ஆயிரக்கணக்கான ஏழை வீடுகளில் அடுப்பு எரியும் என்பதை அனுபவபூர்வமாக அறிவார். சிங்கப்பூர் நிறுவனம் (Singapore Institution) என்னும் கல்விச்சாலை தொடங்கினார். கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து நிதி உதவி ஏற்பாடு செய்தார். நிபுணர்கள் குழு ஒன்று அமைத்து, கல்வித்திட்டம் வகுத்தார். மக்களிடமும் மாணவர்களிடமும் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக, சிங்கப்பூர் நூலகம் (Singapore Library) என்னும் பொது நூலகமும், கல்வி நிலைய வளாகத்தில் தொடங்கினார். சிங்கப்பூரின் முதல் பொது நூலகம் இதுதான். சிங்கப்பூர் நிறுவனம், சிங்கப்பூர் நூலகம் ஆகிய இரண்டும் மாபெரும் வளர்ச்சி கண்டிருக்கின்றன. இவற்றின் இன்றைய பெயர்கள் ராஃபிள்ஸ் நிறுவனம்  (Raffles Institution), தேசிய நூலகம் (National Library).

நகர வடிவமைப்பு, சட்ட ஒழுங்கு, கல்வி, அறிவுத் தேடல் ஆகிய சிங்கப்பூரின் வளர்ச்சித் தூண்கள் அத்தனையும் நிறுவிய ராஃபிள்ஸ், தன் கடமையைத் தொடரும் பொறுப்பை, சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை, ஜான் க்ராஃபோர்ட் (John Crawford) என்னும் நேர்மையான, திறமைசாலியான நிர்வாகியிடம் ஒப்படைத்தார்.

க்ராஃபோர்ட், 1823–ல் ஜோஹார் சுல்தானோடு புது ஒப்பந்தம் போட்டார். இதன்படி, சிங்கப்பூரின் நிர்வாகப் பொறுப்பு, வரி வசூல் ஆகிய அத்தனை  உரிமைகளையும் பிரிட்டீஷ் அரசுக்கு சுல்தான் விட்டுக்கொடுப்பார். இங்கிலாந்துச் சட்டங்கள் அமுலுக்கு வரும். இந்தச் சட்டங்களில், மலாய் மக்களின் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புண்படுத்தும் அம்சங்கள் இருக்கக்கூடாது. இத்தனை விட்டுக் கொடுத்த சுல்தான், பதிலுக்கு என்ன கேட்டார்? மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து மகாராணியார் அவருக்கு மொத்தப் பணமாக 32,000 இங்கிலாந்துப் பவுண்டுகளும், மாதா மாதம் 1300 பவுண்டுகளும் தர வேண்டும். இரு தரப்பும் ஒப்புக்கொண்டார்கள்.

இங்கிலாந்து, ஜோஹார் சுல்தானோடு போட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், சிங்கப்பூரை தங்களுக்குத் தர வேண்டுமென்றும் டச்சுக்காரர்கள் குரல் எழுப்பினார்கள். பிரிட்டீஷ் இதற்கு மறுத்தார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 1824–ல், ஆங்கில-டச்சு ஒப்பந்தம் (Anglo-Dutch Treaty of 1824) கையெழுத்தானது. லண்டன் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையின்படி, சிங்கப்பூரை இங்கிலாந்துக்கு டச்சுக்காரர்கள் தந்தார்கள். பதிலாக, சுமத்ரா தீவைப் பெற்றார்கள். இப்போது சிங்கப்பூர், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கம்!

1819 முதல் 1823 வரையிலான நான்கு ஆண்டுகளில், ராஃபிள்ஸ் வாழ்க்கையில் தொட்டவை அத்தனையும் சாதனைச் சிகரங்கள். அதே சமயம், அவர் குடும்ப வாழ்க்கை சோதனைப் படுகுழியில். அவருக்கு லியோப்போல்ட் (Leopold), மார்ஸ்டென் (Marsden) என்னும் இரண்டு மகன்களும், ஷார்லெட் (Charlotte), எல்லா (Ella), ஃப்ளோரா (Flora)  என்னும் மூன்று மகள்களும் இருந்தார்கள். 1821–ல், இரண்டரை வயது மகன் லியோப்போல்ட் காலரா நோய்க்குப் பலியானான். ஆறரை மாதங்கள் சோகத்தோடு நகர்ந்தன. 1822. ஒன்றே முக்கால் வயது மார்ஸ்டென், குடல் வீக்க நோயால் உயிர் இழந்தான். பத்தே நாள்களில் அதே நோய் நான்கு வயது ஷார்லெட் உயிரைக் குடித்தது. பதினொரு மாதங்கள். நான்காம் இடி. இரண்டு மாதக் குழந்தை ஃப்ளோரா இறைவனடி சேர்ந்தாள்.

இரண்டே வருடங்களில் நான்கு குழந்தைகள் மரணம். எஞ்சிய ஒரே குழந்தைக்கும் ஏதாவது சம்பவித்துவிடக்கூடாதே என்னும் பயம். சோகச் சுமைகளால் கணவன், மனைவி இருவர் உடல்நலமும் கெட்டது. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று ராஃபிள்ஸும், அவர் மனைவி ஸோஃபியாவும் (Sophia), மிஞ்சிய ஒரே பெண் குழந்தை, இரண்டு வயது எல்லாவோடு இங்கிலாந்து திரும்ப முடிவு செய்தார்கள்.

அது சரி, ராஃபிள்ஸுக்கு இன்னொரு குழந்தை, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்லக் குழந்தை இருக்கிறாளே? அவளைப் பார்க்க வேண்டுமே? அவள் – சிஙகப்பூர். ராஃபிள்ஸ் அங்கே போனார், பார்த்தார். மனம் பெருமையால் விம்மியது. கப்பல், சிங்கப்பூரை விட்டுப் புறப்பட்டது. பெருகும் கண்ணீரோடு விடை கொடுத்தார்.

மனத்தில் இன்னொரு ஆசை, எதிர்பார்ப்பு - புதிய நாட்டை உருவாக்கிவிட்டோம். அர்ப்பணிப்போடு, தேசபக்தியோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கனவுகளை நனவாக்கிவிட்டோம். சொந்த வாழ்க்கை சோகமாகிவிட்டாலும், கடமையில் ஜெயித்துவிட்டோம். இங்கிலாந்துக்குப் போனவுடன், பிறந்த மண் தன்னை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும். ஊடகங்கள் வெளிச்சம் போடும். மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்...

ஆயிரம் ஆசைகளோடு பயணத்தைத் தொடர்ந்தார். வாழ்க்கை நிலைக்கும், திரும்பி வருவோம் என்று அவர் நினைத்தார். ‘பாவம் இந்த மனிதர்’ என்று இறைவன் சிரித்தான்.

இங்கிலாந்து அவரை எப்படியெல்லாம் ‘கெளரவித்தது’ தெரியுமா? சிங்கப்பூரில் தில்லாலங்கடி வேலைகள் செய்த ஃபார்க்ஹர், ராஃபிள்ஸுக்கு எதிராகக் குற்றப்பட்டியல் தயாரித்தார். அரசிடம் சமர்ப்பித்தார். விசாரணைகள் தொடங்கின. ராஃபிள்ஸின் ஓய்வூதியத் தொகை நிறுத்தப்பட்டது. அவர் நிர்வாகத்தில், மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இங்கிலாந்துக்கு 22,000 பவுண்ட்கள் பணம் நஷ்டமாகிவிட்டதாகவும், அதை ராஃபிள்ஸ் ஈடு செய்ய வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டது. அவ்வளவு பணம் அவரிடம் இல்லை. அவருடைய மொத்தச் சொத்துகளின் மதிப்பு 10,000 பவுண்ட்கள் மட்டுமே. அரசாங்கம், மொத்தச் சொத்துகளையும் பறிமுதல் செய்தது. நாடு கட்டிய நாயகர், ஓட்டாண்டியானார். மனம் உடைந்தது. ஜூலை 5, 1826. தன் 45–வது பிறந்த நாளுக்கு முந்தைய தினம் மரணமடைந்தார்.

பழிவாங்கத் துடித்தவர்களின் வெறி இப்போதும் அடங்கவில்லை. அவரது உடலை, லண்டனில் இருந்த இடுகாட்டுக்குக் குடும்பத்தார்  எடுத்துப் போனபோது, அங்கிருந்த பாதிரியார், உடலை அங்கே புதைக்க அனுமதி மறுத்தார். ஏன் தெரியுமா? அந்தப் பாதிரியாரின் குடும்பம், அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. மலாயா, சிங்கப்பூரில் அடிமைகள் முறையை ஒழித்த ‘துரோகி’யை நிம்மதியாகத் தூங்கவிடலாமா? வேறு வழி தெரியாத குடும்பம், ஊர், பெயர் தெரியாத இடத்தில் அவரைப் புதைத்தார்கள். 21 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி ஊர்வலம் போகவேண்டியவர் அந்திமம், அநாதைப் பிணம்போல்!

தகதாயச் சூரியனைக் கருமேகங்கள் எத்தனை காலம்தான் மறைக்க முடியும்? சிங்கப்பூரின் வளர்ச்சி, கொட்டிக் கிடந்த செங்கலாய் இருந்த இருண்ட நாட்டைக் கட்டி முடித்த மாளிகையாக்கியவர் ராஃபிள்ஸ்தான் என்று இங்கிலாந்தை உணரவைத்தது. 1877–ல், அவருக்கு எட்டடியில் முழு உருவ  வெண்கலச் சிலையைச் சிங்கப்பூரில் நிறுவினார்கள். இந்த ராஃபிள்ஸ், இப்போது விக்டோரியா தியேட்டர் எதிரில் கம்பீரமாக நிற்கிறார்.

சிங்கப்பூரில், 1819–ம் ஆண்டு ராஃபிள்ஸ் இறங்கிய இடம், நாளடைவில் வணிக மையமானது, கமர்ஷியல் ஸ்கொயர் (Commercial Square) என்று அழைக்கப்பட்டது. 1858–ல், இந்த இடத்தின் பெயரை ராஃபிள்ஸ் ப்ளேஸ் என்று மாற்றினார்கள்.

சிங்கப்பூர் மக்கள், ஏகப்பட்ட இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் ராஃபிள்ஸ் பெருமகனார் பெயர் வைத்து, தங்கள் பாசத்தைத் தெரிவித்தார்கள். ராஃபிள்ஸ் மருத்துவமனை, ராஃபிள்ஸ் ஹோட்டல், யன்ட்டாய் ராஃபிள்ஸ் துறைமுகம், ராஃபிள்ஸ் கல்லூரி, ராஃபிள்ஸ் (கல்வி) இன்ஸ்டிடியூஷன், ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கம், ஸ்டாம்ஃபோர்ட் ரோடு ஆகியவை இவற்றுள் சில.

ராஃபிள்ஸுக்குத் தாவர நூல் (Botany), விலங்கியல் (Zoology) ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இருந்தது. பதவிக் காலம் முடிந்து இங்கிலாந்து திரும்பியபின், அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். ஆதரிப்பார் யாருமில்லை. அரசியல் ஆசைகளுக்கு விடை கொடுத்தார். தாவர நூல்,  விலங்கியல் தொடர்பான துறைகளில் மனத்தை ஒருமுகப்படுத்தினார். லண்டன் விலங்கியல் கழகம் (Zoological Society of London) தொடங்கினார், அதன் முதல் தலைவரானார்.

ராஃபிள்ஸின் இந்த ஈடுபாட்டைச் சிங்கப்பூர் மக்கள் பல விதங்களில் கெளரவித்தார்கள். அரிய வகை மீன்கள், பறவைகள், செடிகள் ஆகியவற்றுக்கு அவர் பெயரை வைத்தார்கள் - Chaetodon Rafflesii மீன், Dinopium Rafflesii மரம்கொத்திப் பறவை, Protanilla Rafflesi வகை எறும்பு, Nepenthes Rafflesiana, Rafflesia செடிகள்.

காலச்சக்கரம் சுழலச் சுழல, இங்கிலாந்திலும் ராஃபிள்ஸின் சாதனை எத்தனை மகத்தானது என்று அனைவரும் உணர்ந்தார்கள். 88 வருடங்களுக்குப் பிறகு, 1914–ல் அவர் கல்லறையைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். முன்பு அனுமதி மறுக்கப்பட்ட அதே இடுகாட்டில், சகல மரியாதைகளோடும் புதைத்தார்கள்.

1972–ம் ஆண்டு, சிங்கப்பூர் ராஃபிள்ஸ் ப்ளேஸில், அவருடைய எட்டடி முழு உருவ மார்பிள் சிலை அமைக்கப்பட்டது. சிலையின் கீழே இருக்கும் கல்வெட்டில் பொறித்திருக்கும் வாசகம் –

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தில், ஜனவரி 29, 1819 அன்று ஸர். ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ், முதன் முதலாகக் காலடி எடுத்துவைத்தார். தன் அறிவுக்கூர்மை, நுண்ணுணர்வு ஆகியவற்றால், யாருக்கும் தெரியாமல் இருந்த  ஒரு மீன்பிடிக்கும் கிராமத்தின் தலைவிதியை மாற்றினார். அதை மாபெரும் துறைமுகமாகவும், நவீன நகரமாகவும் மாற்றினார்.

கல்வெட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மக்களின் மனங்களிலும் ராஃபிள்ஸுக்குக் காலம் அழிக்க முடியாத இடம் உண்டு. அவர் நிரந்தரமானவர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com