9.காதல் பிறந்தது

தட்டுங்கள், திறக்கப்படும், கேளுங்கள், கொடுக்கப்படும். லீ அப்பா ஜப்பான் அரசுக் கதவுகளைத் தட்டினார். அவருடைய முந்தைய வேலை பெட்ரோலிய விநியோகம் செய்த பிரபல ஷெல் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக. இந்த


ட்டுங்கள், திறக்கப்படும், கேளுங்கள், கொடுக்கப்படும். லீ அப்பா ஜப்பான் அரசுக் கதவுகளைத் தட்டினார். அவருடைய முந்தைய வேலை பெட்ரோலிய விநியோகம் செய்த பிரபல ஷெல் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக. இந்த அடிப்படையில், அரசாங்கத்தின் பெட்ரோலிய விநியோகத் துறையில் அதே போன்ற வேலை பெற்றார். அவருடைய சம்பளம் குடும்பத்தேவைகளுக்குப் போதவில்லை. அவன் அம்மா கெட்டிக்காரப் பெண்மணி. வரவு எட்டணா, செலவு பத்தணா என்று கடைசியில் துந்தணா ஆக அனுமதிக்கவில்லை. வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாட்களை ஓட்டினார்.

லீ படித்த கல்லூரியை மூடிவிட்டார்கள். அவன் வயது 19, அவனும் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். சம்பாதிக்கும் இரண்டு கைகள் நான்காகும், குடும்ப பாரத்தைச் சுமக்க உதவும். லீ தன்னையே எடை போட்டான். பிரிட்டீஷ் ஆட்சி போய் விட்டபின், அரசில் ஆங்கிலத்துக்கு இடமே இல்லை. அவன் ஆங்கில அறிவு விழலுக்கு இறைத்த நீர். ஒருவேளை, சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆட்சி நீடித்தால், ஆங்கில அறிவு ஏட்டுச் சுரைக்காய்தான். வேலை கிடைக்க உதவாது. ஜப்பானிய மொழியில் தேர்ச்சி இருக்கவேண்டும் சீனமும், அதைவிட முக்கியமாக ஜப்பானிய மொழியும் தெரியவேண்டும்.

சீனம் அவன் தாய்மொழி. எனவே, முதலில் சீனம் படிக்க முடிவு செய்தான். சியாங் கெர் சியூ (Chiang Ker Chiu)  எழுதிய Mandarin made easy புத்தகம் வாங்கினான். 30 பக்கங்களில் மாண்டரின் கற்றுகொடுக்கும் புத்தகம். 700 சீன வார்த்தைகளை எப்படி எழுதுவது, எழுத்துக்களை எப்படிக் கோர்த்து வார்த்தைகளாக்குவது என்னும் சூட்சுமங்களை வசப்படுத்த உதவியது. சில வாரங்களில் 700 சொற்களையும் கரைத்துக் குடித்த லீ, அடுத்த நான்கு நிலைப் புத்தகங்களையும் வாங்கினான். கற்பூர புத்தி. சீக்கிரமே, அத்தனையும் உள்வாங்கிக்கொண்டான்.

சீன நாட்டின் மொழியான சீன மொழி பேச்சிலும், எழுத்திலும் பல வடிவங்கள் கொண்டது. பேச்சில் ஏழு வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள். தலைநகர் பெய்ஜிங் நகரத்தில் பேசப்படும் வட்டார மொழி மாண்டரின். பெரும்பாலான சீன மக்கள் பேசும் மாண்டரின் சீனாவின் அதிகாரபூர்வப் பேச்சு மொழியாக இருக்கிறது.      அடுத்து ஜப்பானிய மொழிப் படிப்பு. 1942 மே மாதத்தில் அரசாங்கம் ஜப்பானிய மொழிப் பயிற்சிக்கூடம் தொடங்கினார்கள். அதில் சேர்ந்த ஆரம்ப மாணவர்களுள் ஒருவன் லீ. மூன்று மாதப் பயிற்சியை முடித்தான். சான்றிதழ் கையில்: ஜப்பானிய மொழி அறிவு மூளையில். சீன மொழியைவிட ஜப்பானிய மொழி அவனுக்கு எளிதாக இருந்தது.
 


வகுப்பு முடிந்து மூன்று வாரங்கள். அப்பா வழித் தாத்தா ஹூன் லியாங் நோய்வாய்ப்பட்டார், மரணமடைந்தார். 71 வயது ஆனபோதும், ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால், இங்கிலாந்து ஜப்பானிடம் சரணாகதி அடைந்ததும், பிரிட்டீஷ்காரர்களே உலகம், தெய்வம் என்று வாழ்நாள் முழுக்க நம்பிய அவருக்குப் பிரபஞ்சமே நொறுங்கிவிட்டது. இந்த அதிர்ச்சி அவர் மரணத்தை வேகப்படுத்தியிருக்கலாம். லீ அவருக்குச் செல்லக் குழந்தை. தாத்தா மரணம் அவனுக்கு நிரப்பமுடியாத வெற்றிடம். செல்லப் பேரனுக்குச் செத்தும் கொடுத்த சீதக்காதியாகத் தாத்தா உதவினார். அவருடைய நண்பர் ஷிமோடா (Shimoda) கம்பெனி ஒன்று நடத்திவந்தார். ஜவுளிப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம், வேலைகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த அந்தக் காலகட்டத்தில், தன் நண்பனின் பேரனுக்கு வேலை தந்தார். கிளார்க், டைப்பிஸ்ட் பணி.

பொருளாதார நெருக்கடியால் அவன் வேலைக்குச் சேர்ந்த ஒரே வருடத்தில் ஷிமோடா தன் கம்பெனியை மூடவேண்டி வந்தது. நல்ல காலமாக, உடனேயே அவனுக்கு இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த நிறுவனம். ஜப்பானியக் கரென்சியில் சம்பளம் தந்தார்கள். தேங்காய், வாழைப்பழம் ஆகிய படங்கள் போட்ட ஜப்பானிய நோட்டுக்கள். இவற்றிற்கு அதிக மதிப்பு இருக்கவில்லை. வாழைப்பழ நோட்டுக்கள் (Banana Notes) என்று மக்கள் கேலி செய்யும் அளவுக்கு அவற்றின் மதிப்பு இருந்தது. ஆனால், வேலையில் ஒரு வசதி - பகுதிச் சம்பளத்தை அரிசி, சர்க்கரை, உப்பு என்று பொருட்களாகத் தந்தார்கள். வீட்டில் அடுப்பு எரியவும், வயிறுகளை நிறைக்கவும் மளிகைச் சாமான்கள் உதவின.        

இந்த வேலையில் எட்டு மாதங்கள். ஒழுங்காகச் சம்பளப் பணம் கிடைக்கும் வேலையை லீ தேடினான். ஹொடோபு (Hodobu) என்னும் ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தி விளம்பரத் துறை, ஆங்கில மொழி அறிவு கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று பத்திரிகை விளம்பரம் கொடுத்திருந்தார்கள். லீ அந்த அலுவலகத்துக்குப் போனான். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு ஜப்பானியர் நேர்முகப் பேட்டி நடத்தினார். வேலை கிடைத்தது. 

என்ன வேலை? பல்வேறு வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் போர்ச் செய்திகளைத் தந்தி அனுப்பும் மார்ஸ் சங்கேத மொழி (Mars Code) யில் அனுப்புவார்கள். இந்தப் பரிமாற்றத்தில் குறுக்கிட்டுச் செய்திகளை (திருட்டுத்தனமாகப்) பெற ஜப்பானிய அரசு வானொலி ஆப்பரேட்டர்களை அமர்த்தியிருந்தார்கள். மதியமும், மாலையும் இந்த சிக்னல்கள் பலவீனமாக இருக்கும். சில வார்த்தைகள் தெளிவில்லாமல் இருக்கும் அல்லது தொலைந்துபோகும். விடுபட்ட இடங்களை நிரப்பி, கோர்வையான செய்திகளை ஜப்பானிய அதிகாரிகளுக்குத் தருவதுதான் லீ வேலை. ஆமாம், ஜப்பானிய ஆட்சியை முழுமனதாக வெறுத்தவன், அந்த அரசியல் எந்திரத்துக்கே அடி பணிந்தான். 

போரில் தானும், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருப்பதாக ஜப்பான் விளம்பர டமாரம் அடித்துக்கொண்டிருந்தது. ஆனால், வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் உபயத்தால், இது பொய், ஜப்பான் எப்போதும் மண்ணைக் கவ்வலாம் என்னும் உண்மை லீக்குத் தெரியும். ஆனால், ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தி விளம்பரத் துறை ஊழியர் என்னும் வேலை, பொய்களை உண்மைகளாகத் திரிக்கும் வேலை. தொடர்ந்து செய்தான். 

1943 ஆண்டின் இறுதிவாக்கில், ஜப்பானியக் கடற்படை தொடர் தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கியது. சிங்கப்பூருக்குக் கணிசமான உணவுப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்துதான் வரவேண்டும். இந்த வரத்து குறைந்துகொண்டே வந்தது. விலைகள் எகிறின. அதிகப் பணம் கொடுத்தாலும், உணவுப் பொருட்களும், பிற அத்தியாவசியச் சாமான்களும் கிடைக்கவில்லை. வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கினார்கள். கறுப்புச் சந்தையில் விற்றார்கள். கொள்ளை லாபம் அடித்தார்கள்.

லீ வீட்டில் வறுமை தாண்டவமாடியது. 18 வயதான தம்பி டென்னிஸ் வேலைக்கு அனுப்பப்பட்டான். அம்மா வீட்டில் ரொட்டி, கேக் தயாரித்து விற்பனை தொடங்கினார். அம்மா படா கில்லாடி. எக்கச்சக்கக் கற்பனா சக்தி.

கோதுமை மாவு, வெண்ணெய், சர்க்கரை  கிடைக்கவில்லை. மரவள்ளிக் கிழங்கு மாவு, அரிசி மாவு, தேங்காய்ப் பால், பனை வெல்லம் ஆகியவற்றால், ரொட்டி கேக் செய்தார்: வீட்டில் உள்ளவர்களுக்குச் சட்டை, பான்ட் வாங்கப் பணமில்லை. வீட்டு ஜன்னல் திரைகளைக் கிழித்தார். அவை அப்பா, லீ, தம்பிகள் சட்டைகளாகவும், அம்மா, தங்கையின் கவுன்களாகவும் மறுஜென்மம் எடுத்தன.

எல்லோரும் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்,  செலவுக்கும், வருமானத்துக்கும் நடுவே இருந்த இடைவெளி தொடர்ந்து மிரட்டியது.

வேலைப் பார்த்து வரும் சம்பளத்தில் தீர்வு இல்லை என்று லீக்குத் தெரிந்தது. அவன் கண்களில் பட்ட ஒரே வழி, குறுக்கு வழி. கறுப்புச் சந்தை தாதாக்களோடு தொடர்பு கொண்டான்.  பிசினஸ் அவனுக்குப் புரிந்தது. சிங்கப்பூரின் உள்ளூர் மக்களிடம் அத்தியாவசிய சாமான்கள் வாங்கவே பணமில்லை. அதே சமயம், ஜப்பானிய ராணுவ வீரர்களிடம் பணம் இருந்தது.  விஸ்கி, சிகரெட் ஆகியவற்றுக்கு லோலோ என்று அலைந்தார்கள்.

கறுப்புச் சந்தை இயங்கியது இப்படித்தான். வெளிநாட்டுக் கப்பல்களின் ஊழியர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும். இவர்கள் கப்பல்களிருந்து விஸ்கி, சிகரெட் திருடுவார்கள். குறைந்த விலையில் லோக்கல் ஆட்களுக்கு சப்ளை செய்வார்கள். இவற்றை அதிக விலை தரக் காத்திருக்கும் ஜப்பானிய ராணுவ வீரர்களுக்குத் தரவேண்டும். விற்கும் அதிக விலை – வாங்கும் அடிமாட்டு விலை = கொழுத்த லாபம்.

லீ கணக்குப் போட்டான். விஸ்கி, சிகரெட் ஆகிய பிசினஸ்களில் பெரும் முதலைகள் இருந்தார்கள். ஏகப்பட்ட முதலீடும் தேவை. மதுவும், சிகரெட்டும் தனக்கான வியாபாரங்கள் இல்லை. வேறு என்ன செய்யலாம்? ஜப்பானியர்கள் ஆசைப்பட்டு வாங்கிய இன்னொரு ஐட்டம், சின்னச் சின்ன நகைகள். பணத் தட்டுப்பாட்டால் ஏராளமான பணக்காரக் குடும்பங்கள் தங்கள் குடும்ப நகைகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். நகைகளை விற்பது வெளியாருக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைத்தார்கள். விற்பதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே நகைகளை விற்றார்கள். இதனால், நகைகளை வாங்க சமுதாயத்தின் உயர்மட்டத்தினரோடு தொடர்புகள் முக்கியம். விற்பது சுலபம். ஜப்பானியர்கள் க்யூவில் நிற்பார்கள்.

தன் பிசினஸ் சிறு நகைகள்தான் என்று லீ முடிவு செய்தான். இதற்கு முக்கிய காரணம் - அப்பா வழியிலும், அம்மா வழியிலும், அவன் குடும்பம் பாரம்பரியப் பணக்காரக் குடும்பம். அதிலும், அவன் அம்மாவுக்குப் பல உயர்மட்டப் பெண்களோடு நெருங்கிய நட்பு இருந்தது. ஆகவே, நகைகள் வாங்குவது சுலபம். விற்பதோ பிரச்சனையே இல்லை. பிசினஸில் இறங்கினான். அம்மாவின் தோழிகள் நகைகள் கொடுத்தார்கள். அவற்றைத் தரகர்கள், பொற்கொல்லர்கள் ஆகியோரிடம் கொடுப்பான். பணம் வந்தது. ஆனால், அவன் எதிர்பார்த்த அளவுக்குக் கொட்டவில்லை.

லீ எப்போதுமே வாய்ப்புகள் வந்து தன் வாசற்கதவுகளைத் தட்டும் என்று காத்திருக்கமாட்டான். காதுகளையும் மனதையும் திறந்து வைத்திருப்பான். புதிய கருத்துக்களை யாராவது சொன்னால், உடனேயே நிராகரிக்கமாட்டான், உதறித் தள்ளமாட்டான். இதனால், வியாபாரிகளும், தரகர்களும் புதிய ஐடியாக்களை அவனோடு பகிர்ந்துகொள்வார்கள்.

பஸ்ராய் பிரதர்ஸ் (Basrai Brothers) என்னும் கம்பெனி இந்தியர்களால் நடத்தப்பட்டு வந்தது. பேப்பர், பசை, பேனா, இங்க் போன்ற எழுதுபொருட்கள் விற்பனை செய்தார்கள். அதன் முதலாளி அவனுக்குப் பரிச்சயமானவர். ஒருநாள் கேட்டார், ‘லீ, தாள் ஒட்டும் பசை (Stationary Gum) பயங்கரத் தட்டுப்பாடாக இருக்கிறது. நீ சப்ளை செய்யமுடியுமா?’

முடியாது என்னும் வார்த்தை லீ அகராதியில் கிடையாது. எந்த வாய்ப்பில் பணம் கொட்டும் வானவில் இருக்குமோ, என்னும் ஆக்கத்தனமான மனம்.

‘முயற்சிக்கிறேன்.’

லீ மனதில் முதலில் வந்தவன், ராஃபிள்ஸ் கல்லூரியில் உடன் படித்த யோங் நியுக் லின் (Yong Nyuk Lin). அறிவியல் பாடத்தில் வல்லவன். கல்லூரி மூடியவுடன், ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தான். பகுதி நேரங்களில் கறுப்புச் சந்தை வியாபாரி.

நியுக் லின் வித்தியாசமாகச் சிந்தித்தான்.

‘லீ, நாம் ஏன் தாள் ஒட்டும் பசையை இங்கிலாந்துக் கப்பல்களிலிருந்து கடத்திக் கொண்டுவரவேண்டும்? நாமே தயாரிக்கலாமே?’

‘என்ன, நாமே தயாரிக்கலாமா? நல்ல ஐடியா. ஆனால், நிஜமாகவே உனக்குப் பசை தயாரிக்கத் தெரியுமா?’

‘மரவள்ளிக் கிழங்கு மாவையும், கார்பாலிக் அமிலத்தையும் கலந்து தயாரிக்கவேண்டும். மிகச் சுலபமாகச் செய்யலாம்.’

‘தொழிற்சாலை...?’

‘தொழிற்சாலை வேண்டாம். வீட்டிலேயே தயாரிக்கலாம்.’

நியுக் லின் வீட்டில் உற்பத்தி தொடங்கியது. கையில் எடுத்த வேலையைக் கனகச்சிதமாய்ச் செய்வது லீ பாணி. தங்கள் பசைக்கு Stikfas  (சீக்கிரமாக ஒட்டுவது என்பதைக் குறிக்கும் ஆங்கில Stickfast வார்த்தையின் ‘சுருக்’ வடிவம்) பெயர் வைத்தான். தன் இன்னொரு நண்பன் உதவியோடு அழகான லேபல் டிசைன் செய்தான். கவர்ச்சிகரமான பசை பாட்டில் தயார்!  விற்பனை சூடு பிடித்தது. இருவர் வீடுகளிலும் தயாரிப்பு தொடங்கியது. நியுக் லின் வீட்டில் அவன், மனைவி, மனைவியின் தங்கை மூவரும் தொழிலாளிகள்; லீ வீட்டில் அவன், அம்மா, தங்கை.

ஒரு நாள். லீ நண்பனைப் பார்க்கப்போனான். இதுவரை அவர்கள் சந்திப்பு எல்லாம் கல்லூரி, பொற்கொல்லர் கடை, பொது இடங்கள் ஆகியவைதாம். முதன் முதலாக நியுக் லின் வீட்டுக்குப் போகிறான். கட்டிடத்தைக் கண்டுபிடித்தான். அதில் நியுக் லின் வசிக்கும் குடியிருப்பு எது என்று தெரியவேண்டும். படிக்கட்டில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். வழி கேட்டான். சொன்னாள். அவள் - க்வா கியாக் சூ - ராஃபிள்ஸ் கல்லூரியில் அவனைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கி முந்தி நின்றாளே, அவனைப் பொறாமைப்படவைத்தாளே, அதே பெண்!

லீ நண்பனோடு பேசிக்கொண்டிருந்தான். சூ வீட்டுக்குள் வந்தாள். ஆச்சரியம்! அவள் நியுக் லின் கொழுந்தி, மனைவியின் தங்கை. பசை உற்பத்தி காரணமாகவும், காரணமே இல்லாமலும் லீ நண்பன் வீட்டுக்கு அடிக்கடி போனான். லீக்கு ஒரு திறமை உண்டு. சில நிமிடங்களில் தன் முன்னே இருப்பவர் புத்திசாலியா இல்லையா என்று சரியாக எடைபோடுவான். அறிவாளிகளைப் பிடிக்கும்: அவர்களோடு பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கும். அதேபோல் முட்டாள்களை வெறுப்பான், தவிர்ப்பான். சூ அறிவாளி, அத்தோடு இனக் கவர்ச்சி வேறு. தொடக்கப் பழக்கம் பரிச்சயமானது, நட்பாக வளர்ந்தது, காதலாகக் கனிந்தது.



1944. லீ வயது 21. சீன உணவு விடுதியில் டின்னருக்கு வருமாறு நியுக் லின் குடும்பத்தை அழைத்தான். உண்மையில் காதலிக்கு விடுத்த அழைப்பு. அவளை மட்டும் வெளியே கூப்பிட முடியாதே? மரியாதைக்காக, ஒப்புக்குச் சப்பாணியாக நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் அழைப்பு. ஆனால், மொத்த நேரமும், ‘பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு, தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு’ என்று இருவரும் ஒருவரை ஒருவர் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். உலகை மறந்தார்கள். தங்கள் ‘ரகசியம்’.

கூட வந்த இருவருக்கும் பரசியமாகிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே, இல்லை, அறிந்தும் அறியாத காதல் மயக்கத்திலே.

போரில் ஜப்பான் இறங்குமுகம். இங்கிலாந்துக் கூட்டணி வெற்றிப் பாதையில். சிங்கப்பூருக்கு வரும் கப்பல்கள் குறைந்தன. ஜே ஜே என்றிருந்த துறைமுகத்தில் தினமும் ஓரிரு கப்பல்கள் வருவதே அரிதானது. கம்பெனிகளின் பிசினஸ் டல். பிசினஸ் இல்லாத அலுவலகங்களுக்குப் பசை எதற்கு? வாங்குவதைக் குறைத்தார்கள், நிறுத்தினார்கள். கணிசமான லாபம் பார்த்துவிட்ட லீக்கும் நண்பனுக்கும் ஆர்டர்கள் வரவில்லை. பசை உற்பத்தியை நிறுத்தினார்கள். ஆனால், லீ தொடர்ந்து நண்பன் வீட்டுக்குப் போனான். அவனுக்கும், சூவுக்கும்தான் பசையைவிட பலமாக உறவு ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டதே?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com