10. மறுபடியும் பிரிட்டீஷ் ஆட்சி!

லீ காதல் ஆரோகணத்தில் பயணித்துக்கொண்டிருந்த அதே வேளை. உலகப்போரில் ஜப்பான் அவரோகணத்தில். பர்மா மூலமாக, இந்தியாவின் கொஹிமா, இம்பால்

லீ
காதல் ஆரோகணத்தில் பயணித்துக்கொண்டிருந்த அதே வேளை. உலகப்போரில் ஜப்பான் அவரோகணத்தில். பர்மா மூலமாக, இந்தியாவின் கொஹிமா, இம்பால் ஆகிய பகுதிகளை ஜப்பான் தாக்கியது. தோல்வி. பிரிட்டிஷ் படைகள் ஜப்பானியரைப் புறம் தள்ளி முன்னேறத் தொடங்கினார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சிங்கப்பூரிலும் ஜப்பான் ஆட்சி கவிழ்ந்துவிடும், மறுபடியும் பிரிட்டிஷ் ஆட்சி மலரும் என்று லீ கணித்தான். 21 வயது இளைஞனுக்குப் பிரமிக்கவைக்கும் மனப்பக்குவம்! இரண்டு முக்கிய முடிவுகள் எடுத்தான்.

தொடர்ந்து ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தி விளம்பரத் துறையான ஹொடோபு – வில் வேலை பார்த்தால், அடுத்த பிரிட்டிஷ் அரசு அவன்மீது 'ஜப்பானிய ஏஜெண்ட்' என்று முத்திரைக் குத்திவிடும். அதன் பிறகு, எதிர்காலம் இருள்மயம்தான். வேலையை விடவேண்டும். இதிலும் ஒரு பிரச்சனை. வேலையை விடுவதற்கு சரியான காரணத்தை அரசாங்கத்துக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் திருப்தி அடையாவிட்டால், பிரிட்டிஷ்  உளவாளியாகி விட்டான் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவன் குடும்பமே நடுத்தெருவில் நிற்கும். அல்லது சிறைக்கம்பி எண்ணும். லீ இருதலைக் கொள்ளி எறும்பானான். என்ன செய்யலாம், என்ன செய்யலாம்? மனத்தில் எண்ணற்ற குழப்பங்கள், தயக்கங்கள், கலக்கங்கள்.



லீக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது. ஹொடோபு வேலையை விடவேண்டும், சிங்கப்பூரைவிட்டு வேறு எங்காவது ஒன்று, இரண்டு வருடங்களுக்குப் போய்விடவேண்டும். அதற்குள், சிங்கப்பூர் ஜப்பான் கைகளில் தொடருமா அல்லது பிரிட்டிஷாருக்குத் திரும்பி வருமா என்று தெளிவாகத் தெரியும். அதற்குப் பிறகு தாயகம் திரும்பவேண்டும்.

ஒன்று, இரண்டு வருடங்களுக்கு எங்கே போகலாம்? கேள்விகள், கேள்விகள்.....  அவன் மனதில் முதலில் வந்த நாடு அண்டைய மலாயா. குத்து மதிப்பாகக் குருட்டாம் போக்கில் முடிவெடுப்பது லீ வழக்கமில்லை. மலாயா போய், அங்குள்ள நிலவரங்களை நேரடியாகக் கண்டறியவேண்டும். பினாங்கு நகரம், கேமரன் மலை (Cameron Highlands) ஆகிய இரு பகுதிகளிலும் அவனுக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’

முதலில் பினாங்கு போனான். நண்பன் வீட்டில் தங்கினான். அங்கு ராணுவ நடமாட்டம் சிங்கப்பூரைவிடக் குறைவாக இருந்தது. ஆனால், அந்த அமைதி, புயலுக்கு முன் வரும் அமைதி என்று அவன் மனக்குறளி சொன்னது. பிரிட்டிஷ் – ஜப்பான் மோதலில் பிரிட்டிஷ் படை இந்தியாவிலிருந்து மலாயா வழியாகத்தான் சிங்கப்பூர் வருவார்கள். அப்போது, சிங்கப்பூருக்கு முன்னால் போர்க்களமாகப் போவது பினாங்கு போன்ற மலாயாவின் நகர்ப்பகுதிகள்தாம்  என்று கணக்குப்போட்டான். சிங்கப்பூரிலிருந்து பினாங்குக்குப் புலம் பெயர்வது, கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் அடுப்பில் விழுவதுபோல. பினாங்கு வேண்டாம் என்று லீ முடிவெடுத்தான்.

கேமரன் மலை (Cameron Highlands) என்னும் மலை ஊர்களைக்கொண்ட பிரதேசம்.  மலைப்பகுதிகளில் போர் பரவும் சாத்தியம் குறைவு. அங்கே, கல்லூரியில் உடன் படித்த இன்னொரு நண்பன் வீட்டில் தங்கல். அவன் வசித்த இடம் 3200 அடி உயரத்தில் மலைமேல் இருந்த கிராமம். கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றுவிட்டவுடன், நண்பன் படிப்புக்கே முழுக்குப் போட்டுவிட்டுச் சொந்த ஊரில் விவசாயத்தில் இறங்கிவிட்டான். காய்கறிகள், மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயிர். தேவையான வருமானம், அமைதியான வாழ்க்கை, பிரிட்டிஷ் – ஜப்பான் போர் வரும் வாய்ப்புக் குறைவு. சிங்கப்பூர் வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு கேமரன் வந்து விவசாயத்தில் ஈடுபட லீ முடிவெடுத்தான்.

(அதுசரி, அன்றாடச் செலவுகளுக்கே லீ குடும்பம் திணறியதே? நண்பர்களோடு  தங்கியதால், ஹோட்டல் செலவும், சாப்பாட்டுச் செலவும் இல்லை. ஆனால், பயணச் செலவு? அங்கேதான் இருந்தது லீயின் சாமர்த்தியம். பினாங்கிலும், கேமரன் மலைப்பகுதியிலும் எந்தெந்தப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்று பயணம் புறப்படும் முன்னால் ஹோம் ஒர்க் பண்ணினான். விவசாயிகள் நிறைந்த கேமரன் மலைப்பகுதியில் மண்வெட்டிகள் கிடைக்கவில்லை. சிங்கப்பூரிலிருந்து நிறைய மண்வெட்டிகளைத் தன்னோடு சுமந்துகொண்டு போனான். கேமரன் மலையில், விவசாயிகள் கைகளில் மண்வெட்டிகள்: லீ பர்ஸில் பணம், லாபம். செலவுகள் அத்தனையும் போக, வீட்டில் அம்மாவிடம் கொடுக்கும் அளவுக்கு லாபம்.)

வீடு மதுரை. அம்மாதான் முக்கிய முடிவுகள் எடுப்பார். கேமரன் மலைக்குக் குடி பெயர்வது பற்றி அம்மாவோடு கலந்து ஆலோசித்தான். அவரும் சம்மதித்தார். அவர்கள் வீடு வாடகை வீடு. அன்றைய சிங்கப்பூரில் வீடுகள் வாடகைக்குக் கிடைப்பது சிரமம். ஆகவே, அன்றைய வழக்கப்படி, நெடுநாட்களாக ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பவர் காலி செய்யும்போது, புதிதாகக் குடிக்கு வருபவர் முந்தையவருக்குப் பெரும்தொகை* தரவேண்டும்.

*மும்பை போன்ற ஊர்களிலும் இந்த வழக்கம் இருக்கிறது. இந்தத் தொகை பகடி என்று சொல்லப்படுகிறது.

ஜப்பானியர்கள் சிலர் சேர்ந்து வாடகைக்கு வரச் சம்மதித்தார்கள். பெரிய தொகையான 60,000 டாலர்கள் வாழைப்பழ நோட்டுக்கள் பகடியாகத் தந்தார்கள். லீ தன் ஹொடோபு வேலையை ராஜிநாமா செய்தான். ஒரு மாதத்தில், தன்னைப் பணியிலிருந்து விலக்குமாறு கேட்டுக்கொண்டான். ஒத்துக்கொண்டார்கள்.

வேலையின் கடைசி நாள். ஹொடோபு அலுவலகத்துக்குக் குட்பை சொன்னான். மனம் முழுக்க நிம்மதி. இனிமேல் கூலிக்கு மாரடிக்கவேண்டியதில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள். கேமரன் மலை.  குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக மண் வெட்டலாம், செடிகள் நடலாம், நீர் ஊற்றலாம், கிழங்குகள் பிடுங்கலாம், காய்களும், பழங்களும் பறிக்கலாம். அப்படியே சாப்பிடலாம். அமைதியான சூழல், குடும்பத்தோடு சந்தோஷ வாழ்க்கை

'சார்’

லிஃப்ட் இயக்கும் பையனின் குரல் லீ கனவுகளைக் கலைத்தது.

'லீ, நீங்கள் திடீரென வேலையை விட்டதால், அலுவலகத்தில் உங்கள்மீது சந்தேகப்படுகிறார்கள். வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளை அரசாங்கம் தணிக்கை செய்திருக்கிறது, அவற்றைத் தினமும் கேட்கும் வாய்ப்பு உங்களைப் போன்ற ஒரு சிலருக்கே இருக்கிறது. ஆகவே, ஜப்பான் போரில் அடைந்துவரும் தோல்விகள் உங்களுக்குத் தெரியும். இதனால், நீங்கள் பிரிட்டிஷார் பக்கம் சாய்ந்துவிட்டீர்கள், அதனால்தான் வேலையை ராஜிநாமா செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறார்கள்.’

'இது உண்மையில்லை. அது சரி, இதற்காக என்ன செய்யப்போகிறார்கள்?’

'24 மணி நேரமும் உங்களை உளவு பார்க்கப்படப்போகிறீர்கள். நீங்களும், உங்கள் குடும்பதாரும் மிகவும் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால், உங்கள் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து.’

எது நடக்கக்கூடாது என்று லீ நினைத்தானோ, அது நடக்கிறது. எதைக் கேட்டாலும், அது உண்மையா என்று தீர விசாரிப்பது லீ வழக்கம். லிஃப்ட் இயக்கும் பையன் சொன்ன சேதி வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்று சந்தேகமில்லாமல் தெரிந்துகொள்ளவேண்டும். ஆராய்ச்சி தொடங்கினான். தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்மையாகக் கவனித்தான். இரண்டு ஜப்பானியர்கள் எப்போதும் வீட்டுக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் ஒளிந்திருந்தார்கள். எப்போது வருகிறார்கள், எப்போது போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு நாள், அதிகாலை 3 மணிக்கு வீட்டு பால்கனிக்கு வந்தான். வேகமாக வந்த ஒரு கார் அவன் வீட்டுக்கு அருகே திடீர் பிரேக் போட்டு நின்றது. தன்னைப் பிடிக்க ஜப்பானிய உளவுத் துறையினர் வந்திருக்கிறார்களோ என்று பயந்து நடுங்கி, வீட்டுக்குள் போய்ப் படுத்துக்கொண்டான். அன்று அவர்கள் அவனுக்காக வரவில்லை. ஆனால், என்றும், எப்போதும் வரலாம் என்னும் அச்சம் தொடர்ந்தது.

ஒருவேளை, தன் அனுமானம் தவறாக இருக்கலாமோ என்று சந்தேகம். தன் தம்பிகளிடம் சோதிக்கச் சொன்னான். தன் ராலே சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். கொஞ்ச தூரம் ரவுண்டு அடித்தான். திரும்பி வந்தான். மறைந்திருந்து தம்பிகள் துப்பறியும் வேலை பண்ணினார்கள். அவன் பின்னாலேயே இருவர் தொடர்ந்ததாகச் சொன்னார்கள். ஆகவே, ஜப்பானிய உளவுத் துறை அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது என்பது நிஜம்.    

சிங்கப்பூரை விட்டுப் போக முயற்சித்தால், மோப்பம் பிடித்துவிடுவார்கள். அவர்கள் கைகளில் சிக்கியவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, நடு வீதிகளில் சுட்டுக் கொல்லப்படும் ஏராளமான அனுபவங்களை அவன் கேட்டிருக்கிறான், ஹொடோபுவின் ரகசிய அறிக்கைகளில் படித்திருக்கிறான். கேமரன் மலைக்குப் போவதும், விவசாயம் செய்வதும் இனி நடக்காத விஷயங்கள். வாழ்வும், சாவும் சிங்கப்பூரில்தான்.

ஊரைவிட்டுப் போகப்போவதில்லை என்று முடிவானவுடன், பகடிப் பணத்தைத் திருப்பிக்கொடுத்தான். அவனுக்கு வேலை இல்லை. பசை பிசினஸையும் மூடிவிட்டான். வேறு வருமான வழிகள் தேடவேண்டும். லீ பழகுவதில் கெட்டிக்காரன். புதியவர்களிடம் தயக்கமே இல்லாமல் பேசுவான். பரிச்சயங்களை நட்பாக மாற்றுவான். அவர்களோடு தொடர்பு வைத்திருப்பான். ஆகவே, அவனுடைய நட்பு வட்டம் விசாலமானது. ஒரு சீன நண்பரைச் சந்தித்தான். அவர் வீடு கட்டும் கான்ட்ராக்டர். பல ஜப்பானியர்களுக்குக் கட்டடங்கள் கட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு ஜப்பானிய மொழி தெரியாது. அதனால், வாடிக்கையாளர்களோடு பேசச் சிரமப்பட்டார். ஜப்பானிய மொழி தெரிந்த லீயைத் தன் கூட்டாளியாக்கிக்கொண்டார்.

இன்னொரு ஜப்பானிய நண்பர். ராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும் சப்ளை செய்துகொண்டிருந்தார். அவரும், லீயைத் தன் பிசினஸில் சேர்த்துக்கொண்டார். இரண்டு பிசினஸ் குதிரைகளை ஓட்டியபோதும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்ததால், லீக்கு ஓரளவுதான் வருமானம் வந்தது. தவிர கறுப்புச் சந்தைத் தரகராகவும் தொடர்ந்தான். எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு. ஆகவே, கையில் உபரிப் பணம் வந்தவுடன், அதைக் காசாகவே வைத்திருக்கமாட்டான். ஏதாவது பொருளாக்கிவிடுவான். சில வாரங்கள் பொறுத்தால், அவை நிச்சயமாகக் கொள்ளை லாபத்தில் விற்றுப்போகும்.


சில மாதங்கள் ஓடின. ஏப்ரல் 1945. இத்தாலி இரண்டாம் உலகப்போரில், தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இங்கிலாந்திடம் சரணடைந்தது. அடுத்தபடியாக ஜெர்மனியின் தோல்வி. 30 – ம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். இரண்டே நாட்கள். மே 2. ஜெர்மனியும் இங்கிலாந்தின் காலடியில். எல்லோர் மனங்களிலும் கேள்வி - ஜப்பான் விழப்போகிறதா என்றல்ல, எப்போது விழப்போகிறது என்று. சிங்கப்பூரில் ஜப்பானின் நாட்கள் எண்ணப்பட்டன.

தன் துணையாளிகள் இருவரும் விழுந்துவிட்டபோதிலும், ஜப்பான் முரண்டு பிடித்தது, சரணடைய மறுத்தது. போரைத் தொடர்ந்தது. அமெரிக்கா ஜப்பானின் அறுபத்து ஏழு நகரங்கள் மேல் குண்டுமழை பொழிந்தது. 24 மணி நேரமும், ஜப்பானில் சைரன் எச்சரிக்கைகள், குண்டு வெடிப்புக்கள், பொருட் சேதங்கள், உயிர் இழப்புக்கள். நாடே சிதிலமாகிக்கொண்டிருந்தது. ஆனால், ஜப்பான் பணிய மறுத்தது. அமெரிக்கா விடுத்தது இறுதி எச்சரிக்கை – 'நிறுத்திக்கொள் உன் போரை, தடுத்துக்கொள் உன் அழிவை.’ ஆனால், ஆதிக்க மோகம் தலைக்கு ஏறிவிட்ட ஜப்பான் காதுகளில் இது விழவேயில்லை.

இப்போது தொடங்கியது ஊழியாட்டம். அமெரிக்கா எடுத்தது பிரம்மாஸ்திரம். ஆகஸ்ட் 6. திங்கட்கிழமை காலை மணி 8.15. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசினார்கள். உலக வரலாற்றில் முதல் அணுகுண்டு வெடிப்பு. 90,000 கட்டடங்கள் தரை மட்டமாயின. 70,000 உடனடி மரணம்: இன்னும் 70,000 பேர் பாதிப்பு.  

ஜப்பான் அதிர்ந்தது. ஆனால் பணியவில்லை. மூன்று நாட்கள் நகர்ந்தன. ஆகஸ்ட் 9. அமெரிக்கா வீசியது இன்னொரு அணுகுண்டு. இது நாகசாகி நகரத்தில்.73,884 பேர் மரணம்: 74,909 பேர் படுகாயம்: 30,000 பேர் பாதிப்பு. 

ஆகஸ்ட் 15. ஜப்பானியப் பேரரசர் வானொலியில் மக்களுக்கு அறிவித்தார், 'என் கண்ணீரை விழுங்கிக்கொண்டு சரணாகதிக்குச் சம்மதிக்கிறேன்.’


ஏனோ, ஜப்பான் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிரிட்டீஷ் படைகள் சிங்கப்பூருக்கு வரவில்லை. எப்போதும் போலவே, ஜப்பானிய சிப்பாய்கள் ரோந்து வந்தார்கள். பிரிட்டிஷ் வெற்றியைக் கொண்டாடியவர்களை அடித்து உதைத்தார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று லீ அவர்களிடம் பாராட்டிய ஒரு அம்சம், தோல்வியிலும் அவர்கள் தலை குனியவில்லை.

மூன்று வாரங்கள்தான் இந்த நிலை நீடித்தது. பிரிட்டிஷ் படைகள் சிங்கப்பூருக்கு வந்தன. செப்டம்பர் 12. சரணாகதி நிகழ்ச்சி அரங்கேறியது. மறுபடியும் சிங்கப்பூர் ஆங்கிலேயர் ஆட்சியில்.

 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com