11. இருட்டில் சில மின்னல்கள்!

மூன்றரை ஆண்டுகள் சிங்கப்பூரில் நடந்த ஜப்பானியர் ஆட்சி அராஜக ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி. நரகத்திலும் சில சொர்க்கங்கள் இருக்கும்


மூன்றரை ஆண்டுகள் சிங்கப்பூரில் நடந்த ஜப்பானியர் ஆட்சி அராஜக ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி. நரகத்திலும் சில சொர்க்கங்கள் இருக்கும் அதிசயம்; விஷங்களும் சில வேளைகளில் மருந்துகளாகும் விசித்திரம்; ஜப்பானின் காட்டுமிராண்டி ஆட்சியிலும், சிங்கப்பூருக்கு ஒரு நன்மை வந்தது. ஜப்பான் தடாலடியாக நுழைவதுவரை, வெள்ளையர்கள், அவர்களிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் மட்டுமே முதன்மைக் குடிமக்கள். அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மருத்துவ மனை முக்கிய டாக்டர்கள் போன்ற முக்கிய பதவிகள் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே. அடுத்த முன்னுரிமை. ஐரோப்பியர்களுக்கு. சீனர்கள், இந்தியர்கள், மலாய்கள் வெளிநாடுகளில் படித்து உயர் பட்டங்கள் வாங்கினாலும், வெள்ளையர் கீழ்தான் வேலை பார்க்கவேண்டும்.

பார்க்கும் வேலைகளில் மட்டுமல்ல, தங்கும் வீட்டுப் பகுதிகளிலும், இந்தப் பிரிவினை தலைவிரித்தாடியது. பிரிட்டீஷ் அரசின் சார்பாக ராஃபிள்ஸ் உருவாக்கிய ‘ஜாக்ஸன் திட்டம்’ சிங்கப்பூரை  நான்கு பகுதிகளாகப் பிரித்திருந்தது. ஐரோப்பியர்கள், ஆசியச் செல்வந்தர்கள் ஆகியோர் வாழும் ஐரோப்பிய டவுன், சீனர்கள் வசிக்கும் சீனா டவுன்,  இந்தியர்கள் வாழும் சுலியா காம்ப்பாங், மலாய், அரபு நாட்டவர், முஸ்லிம்கள் வசிக்கும் கம்ப்பொங் கிலாம்.  இது மக்களை இனவாரியாகப் பிரிக்கும் ஒருவித வர்ணாசிரம முறை. குறிப்பாக, ஐரோப்பிய டவுன் பகுதியில் ஐரோப்பியர்களும் பெரும் பணக்காரர்களும் தவிர மற்றவர்கள் வீடுகள் வாங்குவதை அரசாங்கம் தடுத்தது.

இதனால், சீன, இந்திய, மலாய் மக்கள் மனங்களில் தாழ்வு மனப்பான்மை உருவானது. ஆங்கிலேயர்களும், ஐரோப்பியர்களும் தங்களைவிட அதிகத் திறமைசாலிகள், உயர்வானவர்கள் என்னும் மாயபிம்பம் உருவானது. 

இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், சில வாரங்களில் மகா வல்லமை கொண்ட இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய எதிரி நாடுகளை நசுக்கிவிடும் என்று சிங்கப்பூரியர்கள் நிச்சயமாக இருந்தார்கள். ஜப்பானிடம் இங்கிலாந்து சரணடைந்த சேதி அவர்கள் நினைத்துப் பார்த்தேயிராத நிகழ்வு.  யாராலும் தோற்கடிக்க முடியாத இனம் பிரிட்டீஷார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்தது. சீனர்கள், இந்தியர்கள், மலாய்கள் ஆகிய நாமும் பிரிட்டிஷாருக்குச் சமமானவர்கள்தாம் என்னும் எண்ணம் பிறந்தது.

எல்லோரையும் போலவே, லீக்கும் தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் வந்தன. அவன் கற்றுக்கொண்டவை இன்னும் பல பாடங்கள்:

ஜப்பான் விளம்பரத் துறையில் அவன் வேலை பார்க்கவேண்டி வந்த நிர்ப்பந்தம் குடும்பச் சூழ்நிலையால். தனிமனிதனும், சமுதாயமும், நாடும் முன்னேற வேண்டுமானால், முரட்டுப் பிடிவாதத்தோடு இருக்கக்கூடாது, வளைந்து கொடுக்கவேண்டும் என்று லீ வாழ்நாள் முழுக்கப் பின்பற்றிய அடிப்படைச் சித்தாந்தம், இந்த அனுபவம் தந்த பாடம்தான். . 

லீ ஆளுமையின் இன்னொரு முக்கிய அம்சத்தின் விதைகள் இளவயதில் தூவப்பட்டவைதாம். சிறுவனாக இருக்கும்போது, தாத்தா தலைக்குத் தடவும் பிரிலியன்ட்டைன்  க்ரீமை யாருக்கும் தெரியாமல் எடுத்து விளையாடி, அதை வீணாக்கியபோது, அப்பா வீட்டில் இருந்த கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுவிடுவதாக அவனை மிரட்டினாரே? தான் விஷமங்கள் செய்வதை நிறுத்தியதற்கு இந்தத் தண்டனை முக்கிய காரணம் என்று உணர்ந்தான்.

அவனுடைய இன்னொரு அனுபவம். ராஃபிள்ஸ் கல்வி  நிறுவனத்தில் படித்தபோது, தாமதமாக வரும் மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் மெக்லியாட் பிரம்படி தருவார். ஒருநாள், அவரிடம் வாங்கிய விளாசல் அவனை நேரத்துக்குப் போக வைத்தது: நேரம் தவறாமை அவன் குணமானது.

ஜப்பானியர்கள் குற்றங்களை ஈவு இரக்கமில்லாமல் தண்டித்தார்கள். உதாரணமாக, கடைகளைச் சூறையடித்தவர்களின் தலைகளை வெட்டினார்கள். பொது இடங்களில் தொங்கவிட்டார்கள். இதனால், சாப்பாட்டுக்கு மக்கள் திண்டாடிய தட்டுப்பாட்டு நாட்களில்கூட, எங்கும் திருட்டே இல்லை. ஆச்சரியம், வெளியே போகும்போது சிங்கப்பூரியர்கள் வீடுகளைப் பூட்டுவதையே நிறுத்தினார்கள். பிடிபட்டால், உயிர் போய்விடும் பயம். அப்பா, மெக்லியாட், ஜப்பான் ஆட்சி ஆகியவை அவன் இளம் வயதில் மனதில் ஆழப் பதித்த பாடம், ‘தவறுகள் செய்யாமல்  தடுக்க ஒரே வழி, கடுமையான தண்டனைகள் கொடுப்பதுதான்.’         

இதனால்தான், பின்னாட்களில் லீ சொன்னார், ‘மூன்றரை வருட ஜப்பானியர் ஆட்சியில், வேறு எந்தப் பல்கலைக் கழகமும் கற்றுக்கொடுக்க முடிந்திராத பாடங்களை நான் கற்றேன்.’

பிற்காலங்களில் சிங்கப்பூரின் முதல்வராக, உலகத் தலைவராக, சாதனைச் சிகரங்கள் தொட்டபோதும், தான் ஜப்பானியருக்கு வளைந்துகொடுத்ததையும், கறுப்புச் சந்தையில் வியாபாரம் செய்ததையும் லீ மறைக்க முயற்சி செய்யவேயில்லை. அவர் சொல்லித்தான், இந்தக் ‘கறுப்பு அத்தியாயங்கள்’ பலருக்கும் தெரியும்.  ஆமாம், லீ ஒரு நேர்மையான யதார்த்தவாதி. 

பிரிட்டீஷ் ஆட்சி திரும்பி வந்தவுடன், நம் யதார்த்தவாதி, நாட்டு நடப்பை எடை போட்டான். சிங்கப்பூரின் வருங்காலமும், தன் குடும்ப எதிர்காலமும் எந்தத் திசையில் பயணிக்கலாம் என்று கணக்குப் போட்டான். 

ஷெல் கம்பெனி திறந்தார்கள். அப்பாவுக்குப் போன வேலை திரும்பக் கிடைத்தது. ஆனாலும், குடும்பத்துக்கு உபரி வருமானம் தேவை. கறுப்புச் சந்தை வியாபாரம் முன்புபோல் இல்லை. ஏற்ற இறக்கங்கள் அதிகமாயின. ஆகவே, லீ கறுப்புச் சந்தை ஆட்டங்களை நிறுத்தினான். ஆனால், பணம் வேண்டுமே? வேறு என்ன செய்யலாம்?      

யுத்தத்தாலும், குறிப்பாகக் குண்டுத் தாக்குதல்களாலும், அலுவலகங்கள் கடைகள், பாலங்கள், வீடுகள் ஆகியவை இடிந்த நிலை. அவற்றையெல்லாம் மறுபடி எழுப்பவேண்டும். ஆகவே, கட்டடத் தொழில்தான் பரபரப்பானதாக இருந்தது. இதற்கான ஆட்கள் கிடைக்காமல் கான்ட்ராக்டர்கள் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கு ஆட்கள் சப்ளை செய்யும் தொழிலில் லீ இறங்கினான். தோள் கொடுக்கத் தம்பி டென்னிஸ். அவன், வரவு செலவு, பண வசூல், சம்பளப் பட்டுவாடா ஆகியவற்றைக் கவனித்துக்கொண்டான். தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது. நல்ல வருமானம் பார்க்கத் தொடங்கினார்கள்.

ஒரு நாள். டென்னிஸ் வேலை தொடர்பாக, வழக்கம்போல் தன் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். வேகமாக வந்த ஒரு லாரியில் மாட்டிக்கொண்டான். வெகுதூரம் லாரி அவனை இழுத்துக்கொண்டு போனது. முகத்திலும், தோள்பட்டையிலும் படுகாயங்கள். பதறி ஓடிவந்த லீ தம்பியை மருத்துவமனையில் சேர்த்தான். அறுவை சிகிச்சைகள் நடந்தன. பல மாதங்களுக்கு டென்னிஸால் எழுந்து நடக்கவே முடியவில்லை. அவன் மட்டுமில்லை, அவர்கள் பிசினஸும் படுத்தது. தனி மனிதனாக லீயால் நிர்வகிக்க முடியாத காரணம்.

இதுமாதிரியான தற்காலிக பிசினஸ்கள் போதும் என்று லீ தொலைநோக்கில் சிந்திக்கத் தொடங்கினான். சட்டம் படிக்க முடிவு செய்தான். ராஃபிள்ஸ் கல்லூரிப் படிப்பு ஜப்பானிய ஆக்கிரமிப்பால் மூன்று வருடங்கள் தடைப்பட்டுவிட்டது. சிங்கப்பூரில் கல்லூரிகள் திறக்க இன்னும் ஒரு வருடமாகும், அதற்குப் பிறகும், சாதாரணமாக இயங்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை. இங்கேயே காத்திருந்தால், கிடைக்கும் சின்ன வேலை, கறுப்புச் சந்தை பிசினஸ்கள் என்று வாழ்க்கை எதிர்காலமே இல்லாத ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிடும். தன் திறமைச் சிறகுகளோடு வெற்றி வானில் வல்லூறாக வட்டமிட்டு, சூரியனையே தொட்டுப்பார்க்க அவன் ஆசைப்பட்டான். ஆகவே, மேல் படிப்பு சிங்கப்பூரில் இல்லை. லண்டன் போகவேண்டும்.

லண்டனின் முன்னணிச் சட்டக் கல்லூரிகளில் அட்மிஷன் வாங்க அவனிடம்  அற்புதமான ஆங்கிலப் பேச்சுத் திறமையும், எழுத்தாற்றலும் இருந்தன. ஒன்றே ஒன்றுதான் தட்டுப்பாடு. அது – பணம். அவனும், அம்மாவும் கலந்து ஆலோசித்தார்கள். குடும்பத்தின் மொத்த சேமிப்பு, நகைகள் ஆகிய அனைத்தையும் பலமுறை கூட்டிக் கழித்துப் பார்த்தார்கள். சமாளிக்க முடியும்.

லண்டனின் பிரபலச் சட்டக் கல்லூரிகளுக்கு அப்ளை செய்யத் தொடங்கினான். இந்தத் தயார்ப்படுத்தலில் ஈடுபட்டபோதிலும், எப்போதும் மனதின் ஓரத்தில் காதல். விழித்திருக்கும் நேரமெல்லாம், சூ கண் சிமிட்டிச் சிரித்தாள். வேலை கிடைத்தால், அவள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். ராஃபிள்ஸ் நூலகத்தின் தலைமை அதிகாரியான நூலகரைச் சந்தித்தான். பிறரை மயக்கும் பேச்சில் அவன் மன்னன். சூவுக்குத் தற்காலிக வேலை தர நூலகர் சம்மதித்தார்.           

சூ- வுக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை: அவனுக்கும் கிடைத்தது. தினமும் மாலை, வேலை முடியும் நேரம் அவளைச் சந்திக்கவேண்டும். அவள் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும், இருவரும் நடந்தபடி, காதல் மொழி பரிமாறியபடி. சில சமயங்களில் வழியில் மைதானத்தில் உட்காருவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். நேரம் பறக்கும்.

காதலியை எப்படியாவது அசத்திவிட லீ திட்டமிட்டான். ஒரு நாள், அவள் முன்னால் ஸ்டைலாகக் கார் ஓட்டிக்கொண்டு வந்தான். தள்ளு மாடல் வண்டிதான். தன்னோடு நேரம் செலவிட அவன் கார் வாங்கியதை நினைத்துச் சூ வானவெளியில் பறந்தாள். இந்த அதி சாமர்த்தியசாலி கொஞ்ச நாட்களில் அந்தத் தள்ளுமாடல் காரைக் கொஞ்சம் ரிப்பேர் செய்தான். லாபத்துக்கு விற்றான். ராணுவத்திடமிருந்து நல்ல கண்டிஷனில் இருந்த இன்னொரு கார் வாங்கிவிட்டான்.

லீ, சூ நெருக்கம் தொடர்ந்தது. அவன் மனதில் ஒரு பயம், லண்டனுக்குப் படிக்கப் போகிறோம். மூன்று வருடப் படிப்பு. நடுவில் ஊருக்கு வரக் காசு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மூன்று ஆண்டுகள் சூ காத்திருப்பாளா? அவளுக்கு 25 வயது ஆகிறது. ஒருவேளை அவள் காத்திருக்கத் தயாராக இருந்தாலும், அவள் குடும்பம் அதற்கு அனுமதிக்குமா?  அல்லது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அவனையும், ‘தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை வேறோர் கை தொடலாமா? இன்னொரு கைகளிலே.. யார், யார், யார், நானா? ’ என்று அவளையும் சோககீதம் பாட வைத்துவிடுவார்களா?

கேள்விக்குறிகளில் லீ வாழ்வதில்லை. சூவிடம் நேரடியாகக் கேட்டுவிடவேண்டும். ஒரு நாள், கடற்கரைப் பக்கம் இருக்கும் நண்பன் வீட்டில் பார்ட்டி. ஏராளமான இளசுகள் கூட்டம். அதில் பலர் காதல் ஜோடிகள்.  லீ சூ கையைப் பிடித்தான். தோட்டத்துக்கு வந்தான். செடிகள், அவற்றின் நடுவே கண்ணாமூச்சி ஆடிவரும் வெளிச்சம், காற்றில் கலந்துவரும் பார்ட்டி இசை, பூத்துக் குலுங்கும் மலர்களின் நறுமணம். ரோமான்டிக் மூடு எகிறும் சூழல்.       

தான் படிப்பதற்காக மூன்று வருடங்கள் லண்டன் போவதை லீ சொன்னான். சூ அதிர்ந்தாள். லீ பேசினான். ஊராரையே பேச்சில் மயக்குபவனுக்குக் காதலியை வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டுமா?

‘சூ, நான் மூன்று வருடங்கள் கழிந்தபிறகுதான் திரும்பி வருவேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?’

‘லீ, எனக்கு உன்னைவிட எனக்கு இரண்டரை வயது அதிகம் என்று உனக்குத் தெரியும். அதை நினத்துப் பார்த்தாயா? லண்டன் போனபின் உன் மனம் மாறிவிடாதா?’

‘சூ, நான் எல்லாக் கோணங்களிலும் நம் திருமணம் பற்றி ஆலோசித்துவிட்டேன். அறிவில் எனக்கு சமமான, என் ரசனைகளையும், கனவுகளையும் பகிர்ந்துகொள்ளும் பெண்தான் என் மனைவியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்தப் பெண், நீதான்!’

சூ கன்னத்தில் படர்ந்த நாணச் சிவப்பு, மூன்று வருடங்கள் மட்டுமல்ல, காலமெல்லாம் லீ வரக் காத்திருக்கும் ஆத்மார்த்தக் காதலின் அடையாளம்.

இத்தனை ஆழமாகக் காதலித்தாலும், இருவருக்கும் வீட்டில் சொல்ல பயம். தன் உயிருக்கு உயிரான அம்மாவிடம் லீ மறைத்த சமாச்சாரம் தன் காதல் மட்டும்தான்.       

புது வருடம் பிறந்தது. 1946. லண்டனில் இருந்த பிரபல லண்டன் பொருளாதாரப் பள்ளி (London School of Economics) யிலிருந்து அழைப்பு வந்தது. நேரில் போய்ச் சந்தித்தால், அட்மிஷன். லண்டனுக்கு எப்படிப் போவது? நம் சமயோசித மன்னனிடம் எந்தப் பிரச்சனைக்கும் கைவசம் தீர்வு உண்டு. தனக்குப் பழக்கமான ஒரு பிரிட்டிஷ் ராணுவ மேஜரைச் சந்தித்தான்.  அட்மிஷன் கடிதத்தைக் காட்டினான். லண்டன் போக அவர் உதவினால், தன் குடும்பத்தின் வாழ்வு ஒளிமயமானதாகும் என்று வேண்டினான். அந்த நல்லவர் கை கொடுத்தார்.

ஏராளமான பிரிட்டிஷ் படைவீரர்கள் யுத்தம் முடிந்துவிட்டபடியால், தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகத் தனிக் கப்பல்களை இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்திருந்தது. ராணுவத்தினருக்கே மட்டுமேயான அந்தக் கப்பல்களில் பிறர் பயணிக்க அனுமதி கிடையாது. மேஜர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். கப்பல் கேப்டனிடம் பேசினார். லீ இங்கிலாந்து வரை கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

லண்டன் குளிர்ப் பிரதேசம். ஆகவே, உல்லன் ஆடைகள், ஸ்வெட்டர்கள், கோட்டுகள் கட்டாயம். இவை எல்லாமே விலை அதிகமானவை, லீ குடும்ப வசதியை மிஞ்சியவை. அம்மா இதற்கும் வழி கண்டுபிடித்தார். போரில் வீரர்கள் பயன்படுத்திய பழைய உடைகள் விற்கும் கடைகள் இருந்தன. அம்மாவும், மகனும் இந்தக் கடைகளுக்குப் போனார்கள். வாங்கினார்கள்.

லண்டனில், மகன் ஏதாவது ‘வெள்ளைக்காரியை’  லவ் பண்ணிவிடுவானோ என்று அம்மாவுக்கு பயம். ஊரைவிட்டுப் போகும் முன் அவனுக்குக் கால்கட்டுப் போட முடிவு செய்தார். பெண் பார்க்கத் தொடங்கினார். இப்போது வேறு வழியில்லை. லீ அம்மாவிடம் தன் காதலைச் சொன்னான். 

அம்மாவுக்கு சூ பற்றித் தெரியும். தன் புத்திசாலி மகனை விடக் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அதி புத்திசாலிப் பெண், பசை உற்பத்திக் கூட்டாளியின் கொழுந்தி. இரண்டு மூன்று முறை சூவையும், அவள் குடும்பத்தாரையும் பார்த்திருக்கிறார். பாரம்பரியம் மிக்க சீனக் குடும்பம், வங்கி அதிகாரி அப்பா, குடும்பத் தலைவி அம்மா. லீ அம்மா பச்சை விளக்குக் காட்டினார். ஆனால், இப்போதும் சூ வீட்டில் காதலைச் சொல்லும் துணிச்சல் அவளுக்கும், அவனுக்கும் வரவில்லை.

இன்னும் கொஞ்ச நாட்களில் பிரிவு. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் சந்திப்பு. முடிந்த நேரமெல்லாம் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். ஏராளமான போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்கள். பிரிவின் வீரியத்தைக் குறைக்க, இந்தப் போட்டோக்களின் ஞாபகத் தாலாட்டுக்கள் உதவும்.

செப்டம்பர் 23, 1946, லீயின் இருபத்து மூன்றாம் பிறந்த நாள். சூ, லீயின் மொத்தக் குடும்பம், சில நண்பர்கள் துறைமுகத்துக்கு வந்தார்கள். பிரிட்டானிக்

என்னும் கப்பல் நீரைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாகப் புறப்பட்டது. கரையிலிருந்து டாட்டா சொன்னார்கள். கப்பலின் மேல்தளத்திலிருந்து அவனும் கை அசைத்தான். பொங்கிய கண்ணீரில் காணும் காட்சிகள் மங்கலாகத் தெரிந்தன. குடும்பம், நண்பர்கள், காதலி, பிறந்த பொன்னாடு, அனைத்தையும் முதன் முதலாகப் பிரிந்து ஆயிரக்கணக்கான மைல் தூரம் போகும் சோகத்தில் நெஞ்சு கனத்தது.

இன்று அவனுக்கு 23 வயது தொடங்குகிறது. வயதில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் புத்தம் புது அத்தியாயங்கள் திறக்கப்போகின்றன, புதிய அனுபவங்கள் வரப்போகின்றன.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com