4. வளரும் நாடு: குமுறும் பிரச்னைகள்

1824-ல், இங்கிலாந்தும் நெதர்லாந்தும் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

1824
-ல், இங்கிலாந்தும் நெதர்லாந்தும் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். ஆங்கில-டச்சு ஒப்பந்தம் அல்லது லண்டன் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, தென்கிழக்கு ஆசியாவில் இரண்டு தனிப்பட்ட அதிகார மையங்களை ஏற்படுத்தியது. மலாக்கா ஜலசந்தியின் (Straits of Malacca) வடக்குப் பகுதியில் டச்சுக்காரர்கள் ஆட்சி. தெற்கே, பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் பிரிட்டீஷாரின் கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சி. பிரிட்டீஷ் பகுதிகள் ஜலசந்திக் குடியேற்றங்கள் (Straits Settlements) (Straits என்றால், இரண்டு கடல்களையோ அல்லது பரந்த நீர்ப்பரப்புகளையோ இணைக்கும் குறுகிய நீர்ப்பாதை. தமிழில் ஜலசந்தி அல்லது நீரிணை என்று சொல்கிறோம்) என்று அழைக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகள் இந்தக் குடியேற்றங்களைத் தனிப்பகுதிகளாகக் கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வகித்தது. 1830-ம் ஆண்டில், நிர்வாக வசதிக்காக இங்கிலாந்து இவற்றைத் தன் கட்டுப்பாட்டில் இருந்த வங்க மாநிலத்தின் ஒரு பகுதியாக்கியது. ஆமாம், அப்போது சிங்கப்பூர், பாரத மணித் திருநாட்டின் ஒரு அங்கம்!

சிங்கப்பூர் பிறந்த நேரம் பொன்னான நேரம். அதை உருவாக்கிய ராஃபிள்ஸ் கை, ராசியான கை. வளர்ச்சி வாய்ப்புகள் கொட்டின. 1813-ம் ஆண்டில், கடல் பயணத்துக்கான உலகின் முதல் நீராவிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. அடுத்த சில பத்து வருடங்களில், கடல்களில் நீண்ட நெடும்பயணம் செய்யும் நீராவிக் கப்பல்கள் வாடிக்கையாயின. பன்னாட்டு வணிகத்தைச் சுலபமாக்கின. சிங்கப்பூர் உள்ளிட்ட எல்லாத் துறைமுகங்களிலும் சரக்குக் கப்பல்கள் வரத்து அதிகமானது. சிங்கப்பூரில் கட்டணம் வேறு கிடையாதா? கப்பல்கள் வரிசையில் நின்றன. பிரிட்டீஷ் அதிகாரிகள் இலவசத்தை வழங்கியதோடு நிறுத்தாமல், அற்புதமான வசதிகளும், வாடிக்கையாளர் சேவையும் தந்தார்கள்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உதவிய இன்னொரு முக்கிய அம்சம், சீனப் பொருளாதாரம். அன்று தொழில் உற்பத்தியில் சீனா முன்னணியில் நின்றது. உருக்கு உற்பத்தி, பட்டுத் தொழில், பீங்கான் பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றில். உலக நெம்பர் 1 சீனாதான். காகிதம், ஜவுளி, வெடி மருந்துகள் ஆகிய துறைகளில் சீனாவின் தொழில்நுட்பம் பிறர் எட்டாத உயரத்தில். ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தன. தொழிலாளிகளின் சம்பளம் மிகக் குறைவு. ஆகவே, குறைவான உற்பத்திச் செலவு.

இதனால், சீனப் பொருள்களுக்கு எல்லா நாடுகளிலும் ஏகப்பட்ட கிராக்கி. குறிப்பாக இந்தியா, மலாயா, அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகள், சீனப் பொருள்களை ஏராளமாக வாங்கின. அதிலும் இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் சீனப் பட்டு, பீங்கான் சாமான்கள் மீது  வெறித்தனமான ஆசை வைத்திருந்தார்கள். இவற்றை மிகவும் விரும்பி வாங்கினார்கள். மாற்றாக, இங்கிலாந்து தன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு நல்ல மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களை ஏற்றுமதி செய்தது. தங்கள் பொருளாதார வளர்ச்சிக்குப் இங்கிலாந்தை சீனா பெருமளவில் நம்பியிருந்தது.  

1834 வரை இங்கிலாந்து-சீன வணிகம், கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையாக இருந்தது. தனியான ஒரு கம்பெனி, மாபெரும் வியாபாரத்தைச் சமாளிக்கத் திணறியது. இதைப் பயன்படுத்தி, டச்சுக்காரர்கள் உள்ளே புகுந்துவிடக்கூடாது என்று பயந்த இங்கிலாந்து அரசு, ஏகபோக உரிமையைப் பின்வாங்கினார்கள். எல்லாப் பிரிட்டீஷ் கம்பெனிகளும் சீனாவோடு வியாபாரம் செய்யலாம் என்று வணிகக் கொள்கையைத் தளர்த்தினார்கள். இங்கிலாந்து-சீன வணிகம் சிகரம் தொட்டது. இந்த உறவு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெருமளவு உதவியது. சீனாவிடம் 1,30,000 சரக்குக் கப்பல்கள் இருந்தன. பிரிட்டீஷாரிடமும் டச்சுக்காரர்களிடமும் இதில் பாதி எண்ணிக்கை கப்பல்கூடக் கிடையாது. பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தை நம்பியிருந்த அத்தனை சீனக் வணிகக் கப்பல்களுக்கும், சிங்கப்பூர்தான் துறைமுகம்!

எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி, எதிர்பாராத சமூகப் பிரச்னைகளை உருவாக்கியது. சீனா, மலாயா, இந்தியா ஆகிய நாட்டு மக்கள், வேலை வாய்ப்புகள் தேடிப் புதிய பூமிக்கு வந்தார்கள். 1825-ல் 10,000 ஆக இருந்த மக்கள் தொகை 60,000 ஆனது. நாளுக்கு நாள் பெருக்கம். புலம் பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். முதலில் குடியேறிய சீனர்கள், பணம் படைத்த வியாபாரிகளும், அவர்கள் குடும்பத்தாரும். இவர்கள் துறைமுக வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட அடிமட்டத் தொழிலாளிகள், கூலிகள், எடுபிடிகள் ஆகியோரைச் சொந்த நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து, கல்வியறிவு அற்ற ஏழைகளை மந்தையாகக்  கூட்டிவந்தார்கள். அடிமாட்டுச் சம்பளம் கொடுத்தார்கள். இவர்களை மிருகங்களிலும் கேவலமாக நடத்தினார்கள். பெண்களை விபசாரத்துக்குத் தள்ளினார்கள். 

சீனர்களுக்கு அடுத்தபடியாகப் பெருவாரியான மலாய் மக்கள், சிங்கப்பூருக்கு வந்தார்கள். இவர்கள் கூலிகள், கொத்தர்கள், தச்சர்கள் போன்றோர். இந்த வரிசையில், மூன்றாவதாக வந்தவர்கள் இந்தியர்கள். இவர்களில் சிலர் வியாபாரிகள். இன்னும் சிலர், சிங்கப்பூரின் பாதுகாப்புக்காக, இங்கிலாந்து அரசால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியப் படைவீரர்கள். இவர்கள், சிங்கப்பூரிலேயே நிரந்தரமாகத் தங்கினார்கள்.

இங்கிலாந்து அரசு இன்னொரு காரியமும் செய்தது. சிங்கப்பூரில் காடுகளையும், சதுப்பு நிலங்களையும் சீரமைத்து ரோடுகள் போடும் கடும் உழைப்பு வேலைக்கு ஆள்கள் வேண்டிவந்தது. இந்தியச் சிறைகளில் அடைபட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து, சிங்கப்பூருக்கு ‘நாடு கடத்தினார்கள்’. அடர்ந்த காடுகள் இருந்த இடங்களில் அட்டகாசக் கார்கள் பறக்கும் ராஜபாட்டைகள். சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களில், அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள் - இவை அத்தனையும், நம் இந்தியச் சகோதரர்களின் உழைப்பு, வியர்வை, ரத்தம்.     

சீனர்கள், மலாய்கள், இந்தியர்கள், மூன்று வேறுபட்ட பின்புலங்கள், கலாசாரங்கள். மூவரும் மூன்று தீவுகளாக வாழ்ந்தார்கள். இங்கிலாந்து அரசு, வணிகத்தை வளர்ப்பதில் காட்டிய கவனத்தில் சிறுபகுதியைக்கூட நாட்டு நிர்வாகத்தில் காட்டவில்லை. மிக மிகக் கவனத்தோடு ராஃபிள்ஸ் உருவாக்கிய ஜாக்ஸன் திட்டம், வெறும் காகிதமானது. நகரெங்கும் குடிசைகள். நாய்கள், பன்றிகள் உலாவந்தன. பெரும்பான்மையாக இருந்த ஏழைத் தொழிலாளிகளிடம் சுத்தம், சுகாதாரம் ஆகிய உணர்வுகளும், பழக்கவழக்கங்களும் இருக்கவில்லை. அரசாங்கமும், அடிப்படைச் சுகாதார, மருத்துவ வசதிகள், ஆகியவற்றை நிறுவவில்லை. மருத்துவர்கள், மருத்துவமனைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலவே. இதனால், காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின. கொள்ளை நோய்களுக்கு முதல் பலி, குடிசைவாசிகள்தாம்.   

கஞ்சா கடத்தலும் விற்பனையும், ஏராளமானவர்களின் முழுநேரத் தொழிலாயின. போதையோடு, தெருக்களில் ஈக்கள் மொய்க்க மனிதர்கள் விழுந்துகிடப்பது வாடிக்கைச் சமாசாரமானது. கட்டுப்படுத்தவே முடியாத பழக்கமாக கஞ்சா போதை பரவியது. ஏன் தெரியுமா? நாட்டு மக்கள் தொகை 60,000. இதுபோக, அடிக்கடி வந்துபோகும் அந்நிய வியாபாரிகள், சும்மாவே வரும் பயணிகள்... இவர்களோடு, அயல்நாடுகளில் குற்றங்கள் செய்துவிட்டுத் தப்பி ஓடி வரும் கிரிமினல்களும் இருந்தார்கள். இத்தனை பேருக்கான சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற, நாட்டில் இருந்த மொத்தம் போலீஸ்காரர்கள் பதினாறே பேர்தான்! ஆமாம், பதினாறே பேர்தான்! திருட்டுகள், தெருச் சண்டைகள் அத்தனையும் சிங்கப்பூர்த் தெருக்களில் இடைவெளியில்லா தினசரிக் காட்சிகளாயின. நல்லவர்கள் இரவில் வெளியே வருவதைத் தவிர்த்தார்கள். ஏன், பகலில் நடமாடவே பயந்தார்கள். 

பரவலாக இருந்த இரண்டு குற்றங்கள் - விபசாரம், கள்ள உறவுகள். இதற்கு அரசாங்கத்தின் அன்றைய கொள்கைதான் காரணம். சிங்கப்பூர், உழைக்கும் கரங்கள் வேண்டும் என்பதற்காக ஆண்களை அனுமதித்தது. ஆனால், பெண்கள் நுழையவும் தங்கவும் ஏராளமான தடைகள் விதித்தது. ஒரு காலகட்டத்தில்,  ஆண் - பெண் விகிதம் நூற்றுக்கு ஒன்று என்னும் அளவில் இருந்தது. உடல் தேவைகளுக்காக, அநேகர் விலைமாந்தரையும், வேலி தாண்டிய உறவுகளையும் தேடினார்கள்.       

காலனி அரசு, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்தது. ஆனால், இவையெல்லாம், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்குக் கஷாயம் கொடுக்கும் கதைதான். நாட்டின் வளர்ச்சியைத் தொடர, தொழிலாளிகள் தேவைப்பட்டார்கள். சீனா, மலாயா, இந்தியா (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருந்தார்கள். இவர்களுக்குத் தேவையான வீடுகள், சுகாதாரம், மருத்துவம் போன்ற கட்டமைப்பு வசதிகளைத் தரமுடியாமல் நிர்வாகம் தள்ளாடியது, தடுமாறியது.

சமூகப் பிரச்னைகள் இன்னொரு பூதாகர வடிவம் எடுத்தன. பதினெட்டாம் நூற்றாண்டில், சீனாவில் பல ரகசியக் குழுக்கள் (Secret Societies) உருவாயின. இவர்கள், சமுதாய விதிமுறைகளை எதிர்க்கும் போராளிகள். இதன் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் தோளோடு தோள் கொடுத்துப் போராடவும், கொள்கைக்காக உயிர் கொடுக்கவும், கையைக் கத்தியால் கீறி, பொங்கிவரும் ரத்தத்தில் உறுதிமொழி எடுப்பார்கள். சீன அரசாங்கம் இவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியது. இவர்கள் பாதுகாப்பான புகலிடம் தேடினார்கள். சீரில்லாத சட்டம் ஒழுங்கு, எண்ணிக்கை குறைவான போலீசார், ஏராளமான உள்ளூர்ச் சீனர்கள் - வேறென்ன வேண்டும் இந்தப் போராளிகளுக்கு? தங்கள் மையங்களைச் சிங்கப்பூருக்கு மாற்றினார்கள். 1865-ல், சிங்கப்பூரில் 50,043 ரகசியக் குழு அங்கத்தினர்கள் இருந்ததாக உளவுத் துறை சொன்னது. போலீசார், 385 பேர்தான்.

நாடே எரிமலையாகிக்கொண்டிருந்தது. சிங்கப்பூர், இந்திய வங்க மாநிலத்தின் பகுதியாக இருந்த காரணத்தால், எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு கல்கத்தாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய கட்டாயம். சமூகப் பிரச்னைகளுக்கு மட்டுமல்ல, வியாபாரம் தொடர்பான சிக்கல்களுக்கும் இதே கதிதான். வியாபாரம் பாதிக்கப்பட்டது. தங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் பாதுகாப்புக்கு  வியாபாரிகளால் அரசாங்கத்தை நம்பமுடியவில்லை. சொந்தப் பாதுகாப்புப் படைகளை அமர்த்திக்கொண்டார்கள். நாட்டைவிட்டே போய்விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். சிங்கப்பூர் வளர்ச்சியின் சூத்திரதாரிகளே வியாபாரிகள்தானே? இவர்கள் விரக்தியடைய அரசு விட்டுவிடுமா?

ஏப்ரல் 1, 1867-ல், சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா ஆகிய ஜலசந்திக் குடியேற்றங்களையும் வங்கத்திலிருந்து பிரித்தார்கள். தனியான பிரிட்டீஷ் காலனியாக மாற்றினார்கள். நிர்வாகத் தலைவராக கவர்னர் நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக, உள்ளூர் மக்கள் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, கவர்னரால் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், இது ஒருவகையில் சுயாட்சியின் ஆரம்பம். ஏனென்றால், சிங்கப்பூர் மக்களுக்குத் தங்கள் நாட்டின் தேவைகள், உரிமைகள் தொடர்பாகக் குரல் எழுப்ப ஒரு மன்றம் கிடைத்தது.   

தனிக் காலனியான பிறகு, சிஙகப்பூரின் வளர்ச்சி இன்னும் அதிக வேகம் எடுத்தது. அண்டைய மலாயாவில் ரப்பர் வளர்ப்பு, தகரம் தயாரிப்பு ஆகியவை முக்கியத் தொழில்களாகிக்கொண்டிருந்தன. இவற்றுக்கு, உள்ளூர்த் தேவையைவிட உலகத் தேவைகள் பல மடங்கு அதிகம். சிங்கப்பூர் கவர்னர்தான் மலாயாவுக்கும் கவர்னராக இருந்தார். ரப்பரும் தகரமும் சிங்கப்பூர்த் துறைமுகம் வழியாக வெளிநாட்டுச் சந்தைகளுக்குப் பயணிக்க இவர் ஊக்கம் அளித்தார்.  

சிங்கப்பூர் கவர்னர், தங்கள் துறைமுகத்தில் கப்பல்களுக்குக் கரியேற்றும் வசதியை ஏற்படுத்தினார். வரும் சரக்குக் கப்பல்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமானது. கவர்னர், இங்கிலாந்து அரசோடு பேசினார். இங்கிலாந்தின் போர்க் கப்பல்களும் சிங்கப்பூரில்தான் கரி போட வேண்டும் என்னும் ஆணையை அமலுக்குக் கொண்டுவரச் செய்தார்.    

நவம்பர் 17, 1869. சிங்கப்பூருக்குக் கிடைத்தது ஒரு எதிர்பாராத வீரிய மருந்து. ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசியாவுடன் கணிசமான வியாபாரம் நடத்தினார்கள். பூகோள அமைப்பால், இந்தக் கப்பல்கள் அனைத்தும் அரேபிய நாடுகளைச் சுற்றித்தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வரமுடியும்.

1798-ல், மாவீரன் நெப்போலியன் எகிப்து மீது போர் தொடுத்தார். அப்போது, எகிப்தின் சூயஸ் என்னும் நிலப்பகுதியில், செங்கடலையும்  மத்தியதரைக் கடலையும் இணைக்கும் பழங்காலக் கால்வாய் ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தார். அந்தக் கால்வாயை மறுபடி அமைத்தால், ஐரோப்பியக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றாமல், நேரடியாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வந்துவிடலாம். கணிசமான நேரமும், கப்பல்களின் எரிபொருள் செலவும் மிச்சமாகும். நெப்போலியன், கால்வாய் அமைக்கும் பணிகளைத் தொடங்கினார். பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் அவர் கனவு அப்போது நனவாகவில்லை.

1858-ல், பிரான்ஸ், எகிப்து ஆகிய இரு நாடுகளும் நெப்போலியனின் திட்டத்தை மறுபரிசீலனை செய்தன. 1859-ல் பணி தொடங்கியது. பத்து வருடக் கட்டுமானம். 1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. ஐரோப்பாவின் தென் கிழக்கு ஆசிய வியாபாரம் புதிய பரிணாமங்கள் தொட்டது. இந்தக் கப்பல்கள் சிங்கப்பூருக்கு வந்தன, துறைமுகத்தை இன்னும் பரபரப்பாக்கின.    

பொருளாதாரத்தோடு பிரச்னைகளும் வளர்ந்தன. கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், கடந்த 40 ஆண்டுகளின் அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்று கவர்னர் உணர்ந்தார். பெரும்பாலான சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், ரகசியக் குழுக்கள் ஆகியவை சீனர்களை மையம்கொண்டே இருந்தன. இதனால், சீனப் பாதுகாவலர் (Chinese Protectorate) என்னும் அதிகாரியை நியமித்தார். சீனர்களைக் கூட்டிவரும் தரகர்களாகப் பல ஏஜென்ட்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும், லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே கூலிகளைக் கூட்டி வரலாம் என்னும் சட்டத்தை நிறைவேறினார்.

பாதுகாவலர், ஒவ்வொரு சீனர் வீட்டுக்கும் நேரில் போனார். அங்கே வேலையாள்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று கண்டறிந்தார். உதவி தேவைப்பட்டவர்களை அரசாங்கக் காப்பகங்களில் சேர்த்தார். இந்த நடவடிக்கை, இன்னொரு விதத்திலும் உதவியது. இந்த ‘அடிமை’கள், தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க வேறு வழிகள் தெரியாமல், ரகசியக் குழுக்களில் சேர்ந்துகொண்டிருந்தார்கள் அல்லது அவர்களின் உதவியை நாடிக்கொண்டிருந்தார்கள். அரசு உதவிக்கரம் நீட்டியவுடன், இவர்களில் பலர் ரகசியக் குழுக்களிலிருந்து விலகினார்கள். இதனால், சீனப் பாதுகாவலர் நடவடிக்கை, அடிமைத்தனத்தை ஒழிப்பதோடு, தீவிரவாதத்தை அடக்கவும் உதவியது. (இவ்வாறு, கைகள் கட்டப்பட்ட ரகசியக் குழுக்கள் 1889-ல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன). சட்டம் ஒழுங்கு நிலை முன்னேறத் தொடங்கியது.  

அரசாங்கம், கல்விச்சாலைகள் திறத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற மக்கள் நலப்பணிகளைத் தொடங்கியது. ஆனால், சிங்கப்பூரின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு இந்த வேகம் ஈடுகொடுக்க முடியவில்லை. ஏனென்றால், 1880 வாக்கில் சிங்கப்பூர் முக்கியத் துறைமுகமாக மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசியாவின் வணிக மையமாகவும் மாறிவிட்டது. பிரிட்டீஷார், சீனர்கள் மட்டுமல்லாமல், இந்தியர்கள், ஐரோப்பியர்கள், அரபியர்கள், ஆர்மீனியர்கள், யூதர்கள், அமெரிக்கர்கள் எனப் பல நாட்டு வியாபாரிகள் சங்கமிக்கத் தொடங்கினார்கள். தங்கள் அலுவலகங்களைத் திறந்தார்கள்.

பெரிய பிரச்னைகள் இல்லாமல் வருடங்கள் நகர்ந்தன. 1914-ல் தொடங்கி 1918 வரை நடந்த முதல் உலக யுத்தம், பல நாடுகளின் தலைவிதியை மாற்றி எழுதியது. இந்தப் போர், பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே நடந்தது. தென் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குப் பரவாததால், சிங்கப்பூருக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

ஆனால், முதல் உலக யுத்தம், 1915-ன் சிங்கப்பூர்க் கலகம் (Singapore Mutiny 1915) ஏற்படக் காரணமாக இருந்தது. சிங்கப்பூரில், இங்கிலாந்து ராணுவம் சிங்கப்பூரில் இருந்தது. இவர்கள் இந்திய வீரர்கள். இவர்களுள் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். முஸ்லிம் நாடான துருக்கிக்கு எதிராக இவர்களை அனுப்ப இங்கிலாந்து முடிவெடுத்தது. முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் போரிட விரும்பாத இந்த வீரர்கள், கலகம் செய்யத் தொடங்கினார்கள். இவர்கள், 12 ஆங்கில ராணுவ அதிகாரிகளையும், 14 ஐரோப்பிய அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றார்கள். சில நாள்களிலேயே, அரசு இந்தக் கலகத்தை அடக்கியது. 47 ராணுவ வீரர்களைச் சுட்டுக்கொன்றது. 64 பேரை நாடு கடத்தியது. 



இப்போது வருகிறது 1923. சிங்கப்பூர் வரலாற்றில் மிக முக்கியமான வருடம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     (தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com