அத்தியாயம் 12 - தீர்வின் வாசல்

இன்றைய நிர்வாகச் சூழலில் Problem Solving Skill என்பது மிக மிக அத்தியாவசியமானதாகிவிட்டது. முன்பெல்லாம், ஒரு மேலதிகாரி முடிவெடுத்துக்


ன்றைய நிர்வாகச் சூழலில் Problem Solving Skill என்பது மிக மிக அத்தியாவசியமானதாகிவிட்டது. முன்பெல்லாம், ஒரு மேலதிகாரி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று கீழுள்ளவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றோ, அனைவருமே, அனைத்துப் பிரச்னைகளையும் கையாள வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏனெனில் இன்றைய யுகத்தில், மனிதவளம்தான், Money தரும் வளம் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இயல்பிலேயே இருந்தாலும், நம் சுற்றுச் சூழலும், குடும்பமும் அந்தக் குணத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதோ, அல்லது அங்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்ட பிறகோ, ஒரு சிறு பதட்டம் வரும். அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் கூட பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அறிந்து கொள்ளலாம்.


பொதுவாகவே, தினமும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அதைத் தீர்த்துக் கொண்டே வருவதால், அந்தத் திறன் அதிகமாகத் தெரியும். ஆக, பிரச்னையைத் தீர்க்கும் திறன் என்பது பிறவிக் குணம் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது எல்லாப் பிரச்னைக்கும், ஒரே மாதிரி தீர்வாகவும் இருந்து விடக்கூடாது.

ராக்கெட் ஏவும் வேலைக்குச் சேர்ந்தாராம் மொக்கைச்சாமி! அன்று அனுப்ப வேண்டிய ராக்கெட் கவுண்ட் டவுன் டைம் முடிந்தும் கிளம்பவே இல்லை! உடனே இவர் சென்றார். ராக்கெட்டை சாய்க்கச் சொன்னார். அதன் இடுப்புப் பகுதியில் ஒரு உதை விட்டார். இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க! என்றார். எல்லா விஞ்ஞானிகளும் அதிர்ச்சியாக.. என் ஸ்கூட்டரையே இப்படித்தான் நான் ஸ்டார்ட் பண்ணுவேன். ராக்கெட் எம்மாத்திரம்! என்றார்.

ஆக, ஸ்டார்ட் ஆகாத எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான் என்ற மன நிலையும் ஆபத்தானது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு ஒரு விஞ்ஞானரீதியான, உளவியல் ரீதியான முறை ஒன்று இருக்கிறது என்று பார்த்தோம். அதற்கு டாப் என்ற பெயரும் கண்டோம்.

அதை எப்படிப் பயன்படுத்துவது?


THINK ON PAPER என்றாலே, எண்ணங்களைக் காகிதத்தில் கொண்டு வருவது தான்..நாம் நினைப்பது எல்லாவற்றையும் காகிதத்தில் கொண்டு வந்தால் சரியாகிவிடுமா? என்றால்,.. இல்லை. நாம் எப்படி நினைக்கிறோம் என்பதையும் நாம்தான் வடிவமைக்கவேண்டும்.

அதற்குத்தான், இதில் நாம் ஒரு முறையைக் கையாளப்போகிறோம்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! கீழ்க்கண்ட செயல்களை வரிசைப் படிச் செய்யுங்கள் !

  1. உங்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னைகள் மூன்றை வரிசையாக எழுதுங்கள்!

  2. அதனை, இப்போது முக்கியத்துவ அடிப்படையில் - அதாவது, எந்தப் பிரச்னையை உடனே தீர்க்கவேண்டும் என்ற வகையில் - வரிசைப்படுத்தி, அதில் தேர்வான முதல் பிரச்னையை மீண்டும் கீழே எழுதுங்கள்.

  3. இந்தப் பிரச்னை ஏன் ஏற்பட்டது என்று எழுதுங்கள்.

  4. எதற்காக இது பிரச்னையாகக் கருதப்படுகிறது என்று எழுதுங்கள். இது இப்படியே போனால் என்ன ஆகும் என்று எழுதுங்கள்.

  5. எப்படி இது ஆரம்பித்தது என்று குறிப்பிடுங்கள்.

  6. எங்கு தவறு நடந்திருக்கும் என்று சிந்தித்து அதையும் எழுதுங்கள்.

  7. யார் காரணம் என்று குறிப்பிடுங்கள்.

  8. எப்படித் தீர்ப்பது, தீர்வுக்குப் பிறகு கிடைக்க இருக்கும் பலனை எழுதுங்கள்.

  9. மனதில் தோன்றும் அத்தனைத் தீர்வுகளையும் வரிசையாக எழுத ஆரம்பியுங்கள்.

  10. அவற்றில் முக்கியமாகவும், சரி வரக் கூடியதாகவும் கருதப்படும் 3 தீர்வுகளை மீண்டும் எடுத்து எழுதுங்கள்.

  11. மூன்றையும் ஆராய்ந்து, அவற்றில் ஏதாவது ஒரு தீர்வை “இதைத் தவிர வேறுவழியில்லை” என்ற வகையில் தேர்ந்தெடுங்கள்.

  12. அதுதான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு!

இப்படித்தான் TOP வேலை செய்கிறது.

இதனை நடைமுறையில் செய்துப் பார்த்தால், உண்மையிலேயே சிறப்பான தீர்வை அடைந்துவிடலாம். பொதுவாக பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதில் செலவழிக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட, இதனைச் செய்துப் பார்க்க ஆகாது.

மேற்கண்ட பயிற்சியை எந்தப் பிரச்னைக்கு வேண்டுமானாலும் செய்துபாருங்கள்.

ஒரு சில சுவாரஸ்யங்கள் நிகழும். யார் காரணம் என்ற கேள்விக்கு பெரும்பாலோருக்கு “நான்தான்” என்று பதில் வரும்.

நீங்கள் கண்ட தீர்வை விட சிறந்த தீர்வு இருக்கவே முடியாது என்று வந்து நிற்கும். ஏனெனில், உங்கள் பிரச்னையில், அனைத்துச் சூழலும், அதன் தன்மையும், அதன் வீரியமும், அது ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அறிந்தவர் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

சரி..பிரச்னையைத் தீர்க்கும் சூட்சுமம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இத்தோடு நேர்முகத் தேர்வில் விட்டு விடுவார்களா? என்றால், இப்போது பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறோம் என்பதுதான் உண்மை…

மீதிக் கிணறை வரும் வாரங்களில் தாண்டுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com