பாடம் புகட்டிய இணைய பதிலடி!

இணையத்தில் புழங்குபவர்கள் அமெரிக்காவின் ஆடம் ஹாரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹாரிஸ் யார் என்பது அத்தனை முக்கியமல்ல. அவரும்


ணையத்தில் புழங்குபவர்கள் அமெரிக்காவின் ஆடம் ஹாரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹாரிஸ் யார் என்பது அத்தனை முக்கியமல்ல. அவரும் நம்மைப்போல ஒரு இணையவாசி என்று அறிந்து கொண்டாலே போதுமானது. ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பதும், எதனால் அவ்வாறு நடந்தது என்பதையும் தெரிந்து கொள்வது தான் முக்கியம். அதோடு ஹாரிசுக்கு நிகழ்ந்தது இணையத்தில் யாருக்கு வேண்டுமானால் நிகழலாம். ஏற்கனவே பலருக்கு நிகழ்ந்திருக்கிறது.

அதாவது இணையத்தில் தாக்குலுக்கும் அவமானத்துக்கும் இலக்காவது. அப்பாவி இணையவாசிகள் முதல் பிரபல நட்சத்திரங்கள் வரை பலருக்கு இது நேர்ந்திருக்கிறது. இந்தத் தாக்குதலைத் தொடுப்பவர்கள் டிரால்ஸ் (இணைய விஷமிகள்) என குறிப்பிடப்படுகின்றனர். பின்னூட்டங்கள் வழியே குரோதத்தை வெளிப்படுத்தி மகிழ்வதுதான் இவர்கள் பொதுவாக பின்பற்றும் பாணி. வலைப்பதிவு, ஃபேஸ்புக் பதிவு, ட்விட்டர் குறும்பதிவு என பல இடங்களில் அழையா விருந்தாளிகளாக நுழைந்து கருத்துகளால் காயப்படுத்துவது இவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.  இந்தத் தாக்குதல் நடத்த அவர்களுக்கு காரணங்கள் எல்லாம் தேவையில்லை; இலக்கு மட்டுமே வேண்டும். இனவெறி, துவேஷம், குரோதம், ஆணாதிக்கம் என பலவற்றை இதன் மூலம் வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

இணையத் தாக்குதல்கள்

உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி டிரால்களினால் ஏற்படும் பாதிப்புக்கு  எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. டிரால்களால் இணையமே வேண்டாம் என விலகிச்சென்றவர்கள் இருக்கின்றனர். அவர்களோடு மல்லுக்கட்டி மேலும் மன உளைச்சலுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

டிரால்களைக் கட்டுப்படுத்த இணைய நிறுவனங்கள் இயன்றவரை கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. இணையத்தின் முகப்புப் பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணைத்யதளம் சமீபத்தில் டிரால்களின் கைவரிசையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

இப்படி ஒரு இருண்ட பின்னணியில்தான் ஆடம் ஹாரிஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது தன் மீதான இணையத் தாக்குதலை அவர் எதிர்கொண்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஹாரிஸ் இந்தத் தாக்குதலை அமைதியாக ஆனால் உறுதியாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிலடி இணைய விஷமிகளுக்குப் பாடமாக அமைந்திருப்பதுடன் இப்படி தாக்குதலுக்கு இலக்காகும் நபர்கள் அதைத் துணிச்சலாக எதிர்கொள்வதற்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது.

ஒரு அற்புத தருணம்
 


இந்தப் பின்னணி போதும். இனி ஹாரிசுக்கு நிகழந்த அனுபவத்தைப் பார்க்கலாம். ஆப்பிரிக்க அமெரிக்கரான ஹாரிஸ் 2014-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை முன்னிட்டு மணமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போதுதான் ஹாரிஸ் தன்னளவில் அற்புதம் என கருதும் அந்த அனுபவம் உண்டானது.

புகைப்பட நிகழ்வுக்கான ஒத்திகை எல்லாம் தேவையில்லை என ஹாரிஸ் கூறிவிட்டார். மனைவியாக கைப்பிடிக்க உள்ள டிசாவை மணமகள் கோணத்தில் முதல்முறை பார்க்கும் அனுபவத்தை அவர் இயல்பாக அனுபவிக்க விரும்பினார். அதன்படியே டிசா திருமணக் கோலத்தில் நம்மூர் பாரதிராஜா பட வெள்ளை தேவதை போல வந்து நிற்க, அந்தக் காட்சியைப் பார்த்ததுமே ஹாரிஸ் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மிகுதியாகி கண் கலங்கி நின்று விட்டார். ஆனந்தக் கண்ணீர் தான். கேமராவில் இந்தக் காட்சி அழகாகப் பதிவானது.

இணைய யுகத்து வழக்கப்படி ஹாரிஸ் இந்த அற்புதமான கணத்தை தனது வலைப்பதிவு மூலம் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.

வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து மண மகள் டிசா தேவதை போல இறங்கி வருவதும், அதைப்பார்த்து ஹாரிஸ் நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்க நிற்கும் படத்தையும் அருகருகே பார்க்கும் போது கவிதை போல தான் இருந்தது. நண்பர்கள் பலரும் இந்தக் காட்சியை ரசித்து மகிழ்ந்தனர்.

பாழான அற்புதம்

இது இடைவேளை வரையான திரைக்கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதன் பிறகுதான் கவிதை போன்ற இந்தப் புகைப்படத்தை களங்கப்படுத்தும் காரியம் அரங்கேறியது.

ஹாரிசை முன்பின் அறிந்திராத பலர் இந்தப் புகைப்படத்தை எடுத்து ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இன்னும் பிற வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பகிர்வின் நோக்கம் நல்லவிதமாக இருக்கவில்லை. அந்தப் புகைப்படத்தின் கவித்துவமான அம்சத்தை குலைக்கும் வகையில் குறிப்புகளை எழுதினார்கள். ஹாரிஸ் பல பெண்களுடன் பழகியவர் என்பது போலவும், அவர்களை எல்லாம் விட்டு விட்டு ஒரு பெண்ணுடன் வாழ வேண்டியிருக்கிறதே என எண்னி கலங்குவது போலவும் இந்தப் புகைப்படக் குறிப்புகள் அமைந்திருந்தன. ஒரு அப்பாவி தனிமனிதர் மீதான இந்தத் தாக்குதல் போதாது என்பது போல அவரது கருப்பின பின்னணியையும் குறிப்பிட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குணத்தையும் பொதுமைப்படுத்தி இழிவு படுத்தினர்.

பரவிய வில்லங்கம்

இந்தப் புகைப்படங்கள் இணையவெளி முழுவதும் பரவின. மனதில் குரோதமும் ஆதிக்கமும் கொண்டவர்கள் இதை ரசித்து மகிழ்ந்தனர். ஹாரிசின் திருமணப் புகைப்படம் இப்படி அலங்கோலமாக்கப்படுவது பற்றி அவரது மைத்துனி தான் முதலில் கண்டறிந்து தெரிவித்தார்.

ஹாரிஸ் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை வர்ணிக்காமலே புரிந்து கொள்ளலாம். வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் இனிமையாகப் பதிய வேண்டிய திருமணக் காட்சியை இணைய விஷமிகள் இழிவுபடுத்திக்கொண்டிருந்தனர்.

இணையத்தில் ஹாரிஸ் என்று தேடினால், அவரது குணாதிசயத்தை குலைக்கும் குறிப்பு கொண்ட இந்தப் புகைப்படம் வந்து நிற்கும் என்பது இன்னும் கூடுதல் வேதனையானது. ஆக நிகழ்காலத்துடன் நிற்காமல் எதிர்காலத்திலும் இந்த அவமானம் தொடரப்போகிறது.

அழகான பதிலடி
 


இதனிடையே இணையத் தாக்குதலுக்கு புகழ்பெற்ற பெண்ணுரிமைக்கு எதிரான மெனினிஸ்ட் எனும் விஷமக்குழுவும் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வில்லங்கமான முறையில் கருத்து தெரிவித்திருந்தது.

எந்தத் தவறும் செய்யாத நிலையில் ஒருவர் இத்தகைய அவமானத்துக்கு இணையத்தில் இலக்காக நேர்ந்தால் அவரால் என்ன செய்ய முடியும்? ஆனால், ஹாரிஸ் ஆவேசப்படவில்லை, தன்னை நொந்துக்கொள்ளவில்லை, இணையத்தை விட்டும் விலகிச்செல்லவில்லை. நேர்மையும் ,கண்ணியமும் மிக்க வகையில் நடந்து கொண்டு அமைதியாக பதிலடி கொடுத்தார். அந்தப் பதிலடி அழகாக இருந்தது. மிகவும் வலுவாகவும் இருந்தது.

அவர், தான் மறந்து விட்ட பெண்களை எல்லாம் நினைத்து கலங்குகிறார் என்பது போல அமைந்திருந்த மெனினிஸ்ட் பகிர்வை அப்படியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதன் கீழ், .. அல்லது நான் என் மனைவி பற்றி தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது உங்களுக்குத் தெரியுமா? என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தன் மீதான களங்கத்தை கவித்துமாகவே துடைத்தெறிந்தார். இனி, இணையத்  தேடலில் இந்தப் புகைப்படமும் வந்து நிற்கும். என்ன நடந்தது என்பதையும் தெளிவாக உணர்த்தும். இணைய விஷமிகளுக்குப் பாடம் புகட்டும் வகையிலும் இது அமைந்திருந்தது.

பதிலடிக்குப் பாராட்டு

ஹாரிஸ் கொடுத்த இந்தப் பதிலடியை இணையவாசிகள் மனதார பாராட்டி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதை தங்கள் வலைப்பின்னலில் பகிர்ந்து கொண்டனர். இணைய தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஹாரிஸ் இந்த ஆதரவால் நெகிழ்ந்து போய் தனது வலைப்பதிவில் இது பற்றி சிறிய விளக்கம் அளித்திருந்தார். ஒரு மனிதரால் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் உறுதியாக நிற்க முடியும் என காட்டுவதற்காகவும், தவறான ஒன்றுக்கு பதில் அளித்து அதைச் சரியாக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

எந்தத் தவற்றையும் பொறுத்துக்கொண்டு போகாமல், உறுதியாக நில்லுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய விஷமிகளின் தாக்குதல் அதிகரிக்கும் காலகட்டத்தில் இணையவாசிகளுக்கு இத்தகைய உறுதி தான் தேவை.

ஆடம் ஹாரிஸ் வலைப்பதிவு: blacksisyphus.tumblr.com/post/120032713489/to-clear-a-few-things-up

                                    ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com