பகுதி 6: கொலஸ்டிரால் எனும் நண்பன்!

கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள்.

கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா?

கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள். அதிலும் முட்டை, சிகப்பு இறைச்சி (Red meat), பன்றிக்கொழுப்பு, வெண்ணெய் என்றால் அவ்வளவுதான். உடனே வரும் கேள்வி – இவற்றைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் அல்லவா?’

சிகப்பு இறைச்சியும், நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்குக் கெடுதலானவை என்று பலரும் நினைப்பது நம் இதயத்துக்குத் தெரிந்தால், விழுந்து விழுந்து சிரிக்கும். ஏன் எனில், நம் இதயமே மிகப்பெரிய சிகப்பு இறைச்சித் துண்டுதான். முழுக்க முழுக்க சிகப்பு இறைச்சியாலும், நிறைவுற்ற கொழுப்பாலும் ஆனதுதான். இதயம் மட்டுமல்ல, மனித உடலே அப்படித் தான். அதிலும் மனித மூளை என்பது மிகப்பெரிய கொலஸ்டிரால் பந்து. உள் உறுப்புக்களில் மிக அதிக அளவில் கொலஸ்டிராலைத் தேக்கி இருக்கும் மனித உறுப்பு, மூளையே. வேறு எந்த உறுப்புக்களை விடவும் பத்து மடங்கு அதிக கொலஸ்டிரால் நம் மூளையில் உள்ளது.

கொலஸ்டிரால் நம் தோழன். அதிலும் உற்ற தோழன். நம் உயிர் காத்து, ஆண்களுக்கு ஆண்மையையும், பெண்களுக்குப் பெண்மையையும் அளித்து, மாரடைப்பின் பிடியில் இருந்து நம்மைக் காக்கும் தோழன். கர்ணனுக்கு துரியோதனன் போல, அவ்வைக்கு அதியமான் போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா போல நமக்கு உற்ற நண்பன். கொலஸ்டிரால் இல்லையென்றால் நாம் இல்லை, நம் சந்ததி இல்லை, மனித இனம் மட்டுமல்ல, பாலூட்டிகள் என்கிற இனமே இல்லை.

கொலஸ்டிரால் என்பது பசை மாதிரி உள்ள ஒரு வகைப் பொருள். பலரும் நினைப்பது போல அதில் கலோரி எல்லாம் கிடையாது. கொலஸ்டிரால் உடலுக்குத் தேவையான மிக, மிக முக்கியமான ஒரு மூலப்பொருள். நம் உடல் இயங்க பல ஹார்மோன்கள் அவசியமானவை.

உதாரணமாக ஆண்களுக்கு ஆண்மையை அளிப்பது டெஸ்டோஸ்டிரான்  (Testosterone) எனும் ஹார்மோன். இந்த ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. ஆண்களுக்கு முடி வளர்வது முதல் விந்தணு உற்பத்தி வரை அனைத்துக்கும்  மூலக்காரணி டெஸ்டோஸ்டிரான் தான். ஆண்களுக்கு வலிமையை அளிப்பதும் இதுதான். அதனால்தான் பெண்களை விட ஆண்களுக்கு அதிக உடல் வலு உள்ளது.

பெண்களுக்குப் பெண்மையை அளிப்பது ஈஸ்ட்ரோஜென் (Estrogen) எனும் ஹார்மோன். ஈஸ்ட்ரோஜெனால்தான் பெண்கள் வயதுக்கு வருகிறார்கள், மார்பக வளர்ச்சியைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு, கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம்.

கொலஸ்டிராலுக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே உள்ள உறவு வெண்ணெய்க்கும், நெய்க்கும் இடையே உள்ள உறவு போன்றது. அதாவது உடலால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து ஹார்மோன்களுக்கான மூலப்பொருளே கொலஸ்டிரால்தான். உடலில் வேறு எந்த மூலப்பொருள் தட்டுப்பாடு வந்தாலும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், கொலஸ்டிரால் உற்பத்தி மட்டும் தடைபட்டால் அவ்வளவுதான். பல ஹார்மோன்களின் உற்பத்தி நின்று, உடலே ஸ்தம்பித்துவிடும்.

இத்தனை முக்கிய மூலப்பொருளான கொலஸ்டிராலை, நம் உடல் தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் சக்தி உள்ளது. இருப்பினும் நமக்குத் தேவையான கொலஸ்டிராலை நம் உணவு மூலமாகவும் பெறலாம். அதாவது இறைச்சி, முட்டை, பால், மீன் போன்ற உணவுகளில் கொலஸ்டிரால் உண்டு. அதே சமயம் எந்த ஒரு தாவர உணவிலும் கொலஸ்டிரால் கிடையாது.

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள் உள்ள சவ்வை (Membrane) உற்பத்தி செய்ய கொலஸ்டிரால் அவசியமாகிறது. மேலும், ஒவ்வொரு செல்லிலும் நீர் புகாதபடி, ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக செல்களைக் காப்பாற்றுகிறது. கொலஸ்டிரால் இல்லையெனில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான் (Progesterone), டெஸ்டோஸ்டிரான் (Testosterone), அட்ரினலின் (Adrenaline), கார்ட்டிசோல் (Cortisol) ப்ரக்னனோலோன் (Pregnenolone) போன்ற ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது.

இதனால் நம் உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய அதிக முயற்சி எடுக்கிறது. இத்தனை பணிகளுக்கும் தினமும் 2000 மி.கி. கொலஸ்டிரால் தேவை. அதனால், கல்லீரல் (Liver) நம் உணவில் இருந்து கொலஸ்டிராலை உற்பத்தி செய்வதில் பெரும் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கிறது.

உணவில் இருந்து கொலஸ்டிராலை நம் உடல் உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. அது 30 படிகள் கொண்ட ஒரு வழிமுறை. இதைச் செய்வதால் கல்லீரலுக்கு அதிக வேலை. அதற்குப் பதிலாக, உணவின் மூலமாகவே நம் உடலுக்கு கொலஸ்டிரால் கிடைத்துவிட்டால்? கல்லீரலுக்கு அதிக ஓய்வு கிடைக்கும் இல்லையா! இதனால் அது புரதத்தை ஜீரணம் செய்தல், பைல் ஆசிட் (Bile acid) எனப்படும் ஜீரண ஆசிட்டை உற்பத்தி செய்தல் போன்ற வேறு வேலைகளில் ஈடுபடும்.

ஆக, எத்தனைக்கு எத்தனை கொலஸ்டிரால் நம் உணவில் அதிகமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நம் கல்லீரல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்கும்.

உணவின் வழியாக கல்லீரலுக்கு கொலஸ்டிராலைக் கொடுப்பது என்பது தினமும் ஐந்து மணிநேரம் கையால் துணி துவைக்கும் இல்லத்தரசிக்குச் சலவை இயந்திரம் வாங்கிக் கொடுப்பது மாதிரி.

நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்டிராலுக்கும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் கொலஸ்டிராலுக்கும் துளி வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. முட்டையில் உள்ள கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று சொன்னால், நம் கல்லீரல் மாங்கு மாங்கு என்று உற்பத்தி செய்யும் கொலஸ்டிராலும் கெடுதலானது என அர்த்தம் வரும் இல்லையா? உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருளை எதற்காக நம் கல்லீரல் உற்பத்தி செய்யவேண்டும்? கொஞ்சம் யோசியுங்கள்.

நம் உடலுக்குத் தினமும் தேவைப்படும் கொலஸ்டிரால் அளவு - 2000 மிகி. அதாவது கிட்டத்தட்ட பத்து முட்டைகளில் உள்ள அளவு. தினமும் எட்டு முட்டைகள் சாப்பிட்டால், நம் கல்லீரலுக்குச் சுமார் 1600 மி.கி. கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் வேலை மிச்சம் ஆகும். மீதமுள்ள நானூறு மி.கி. கொலஸ்டிராலை மட்டும் அது உற்பத்தி செய்துவிட்டு ஹாயாக ஓய்வெடுக்கும். எனவே, கொலஸ்டிரால் உள்ள உணவுகளை உண்டால் ஆபத்து என்று எச்சரிப்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது இல்லையா?

ஒரு அமெரிக்கருக்கு அவரது உணவின் மூலம் தினமும் 400 மி.கி. அளவுள்ள கொலஸ்டிரால் கிடைக்கிறது (அமெரிக்க அரசின் பரிந்துரை 300 மி.கி.). இந்திய அரசு, உணவில் தினமும் 365 மி.கி. மட்டுமே கொலஸ்டிரால் இருக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரைகள் அபத்தமானவை.

2000 மி.கி. கொலஸ்டிராலை உணவின் மூலமாகவே அடைய முடியுமா? பலராலும் முடியாது என்பதே உண்மை. உதாரணமாக சைவர்கள் தினம் 2 கப் பால் மட்டும் அருந்தினால் கிடைக்கும் கொலஸ்டிரால் அளவு வெறும் 50 மி.கி. தான். அதே நாலு முட்டையை உணவில் சேர்த்தால் 800 மி.கி. கொலஸ்டிரால் கிடைக்கிறது. உடன் அரை கிலோ சிக்கன் சேர்த்தால் கூடுதலாக 500 மி.கி. கொலஸ்டிரால்.

சைவ உணவை விட அசைவ உணவில் அதிக அளவிலான கொலஸ்டிரால் உள்ளது. இதனால்தான் சைவர்களுக்கு அதிக அளவில் ஹார்மோன் பிரச்னைகள், ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்புமிக்க கல்லீரல் பிரச்னைகள் (கொழுப்பானது கல்லீரலில் படிந்து கல்லீரலின் பருமன் அதிகரிப்பதே ஃபேட்டி லிவர்.) போன்றவை ஏற்படுகின்றன.

கல்லீரலில் இருந்து உடலெங்கும் உள்ள செல்களுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு சேர்ப்பது, கெட்ட கொழுப்பு (LDL- Low density Lipoprotein). செல்களில் படிந்திருக்கும் கொலஸ்டிராலை, மீண்டும் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று வெளியேற்ற உதவுவது, நல்ல கொழுப்பு (HDL - High density Lipoprotein).

உங்கள் கொலஸ்டிரால் அறிக்கையில் எல்டிஎல் அதிகமாக இருந்தால் ‘கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகிவிட்டது’ என மருத்துவர் கூறுவார். நீங்களும் பதறுவீர்கள். ஆனால் கெட்ட கொலஸ்டிரால் எனப் பெயர் வாங்கியுள்ள இந்த எல்டிஎல், உண்மையில் கொலஸ்டிராலே அல்ல. அது ஒருவகை புரதம் மட்டுமே. கொழுப்பு, நீரில் கலக்காது என்பதை நினைவில் கொள்க. அதனால் கொலஸ்டிராலை எல்டிஎல் எனும் புரதத்துக்குள் ஏற்றும் நம் கல்லீரல், ரத்தத்தின் மூலமாக உடலின் செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது.

இந்த எல்டிஎல், இதுபோல கொலஸ்டிராலைச் சுமந்து செல்வதால்தான் ஹார்மோன்கள் உற்பத்தி அனைத்தும் தவறாமல் நிகழ்கிறது. எல்.டி.எல் தான் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்களையும் செல்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறது. உடலில் கொலஸ்டிரால் அளவுகள் குறைந்தால் பைத்தியம் பிடித்தல், தற்கொலை எண்ணம் தோன்றுதல், ஹார்மோன் குறைபாடு, ஆண்மைக் குறைபாடு, மாரடைப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.

இதுவரை படித்து வருபவர்களுக்கு ஒரு கேள்வி நிச்சயம் தோன்றும். கொலஸ்டிரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பது மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும் தெரியாதா? பிறகு ஏன் கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று இத்தனை நாளாக எச்சரித்து வந்தார்கள்?

ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை என்று வைத்துக்கொள்வோம்.

வில்லன் ஒருவரைக் கொலை செய்துவிடுகிறான். அந்த இடத்துக்கு நம் அப்பாவி கதாநாயகன் வருகிறான். கொலை செய்யப்பட்டவரின் உடலில் சொருகப்பட்டிருந்த கத்தியை எடுக்கிறான். அவன் கைரேகை அதில் படிகிறது. அப்போது அந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவர், ‘அய்யோ கொலை செய்துவிட்டாயா?’ எனச் சத்தம் போடுகிறார். அவரே போலீஸிடம் புகார் கூறுகிறார். போலீஸும் ‘கதாநாயகனின் கைரேகை கத்தியில் இருந்தது’ என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து, தண்டனை வாங்கித் தருகிறது. அதன்பின் கதாநாயகன் சிறையில் இருந்து தப்பி, தான் நல்லவன் என்பதை நிரூபிக்கிறான். உண்மையான கொலைகாரன் கூண்டில் ஏற்றப்படுகிறான்.

‘கொலஸ்டிரால் எனும் நண்பன்’ படத்தின் கதையும் இதுதான். இங்கே கொல்லப்பட்டது நம் இதயம். கொலைகாரன் என தவறாகப் புரிந்து கொள்ளபட்ட கதாநாயகன் - கொலஸ்டிரால். கொலஸ்டிரால்தான் கொலைக்குக் காரணம் என புகார் கொடுப்பவர்கள், மருத்துவர்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட கொலஸ்டிரால், தான் நல்லவன் என்பதை நிருபித்து, உண்மையான கொலையாளிக்குத் தண்டனை வாங்கித் தரும் நேரம் இது.

எனில், வில்லன் யார்?

இன்ஃப்ளமேஷன் (Inflammation) எனப்படும் உள்காயம். மாரடைப்பின் காரணி இதுவே.

அப்படியானால் உள்காயத்தால் உண்டாகும் மாரடைப்புக்கு, கொலஸ்டிரால் மீது ஏன் பழி சுமத்தப்படுகிறது? மருத்துவர்கள் ஏன் அவ்வாறு புகார் தெரிவிக்கிறார்கள்?

சினிமாவில், கதாநாயகன் கத்தியுடன் இருக்கும்போது ஒருவர் பார்த்துவிடுகிறார், போலீஸில் புகார் தெரிவிக்கிறார் என்று பார்த்தோம். இங்கும் அந்தக் கதைதான். மாரடைப்பு வந்து இறந்தவர்களின் இதய நாளங்களை திறந்து பார்த்தபோது, அதில் முழுக்க கொலஸ்டிரால் இருந்தது. கொலஸ்டிரால் இதயநாளச் சுவர்களில் படிவதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது; மாரடைப்பு நிகழ்கிறது. எனவே, எந்தளவுக்கு இதய நாளங்களில் கொலஸ்டிரால் படிகிறதோ அந்தளவுக்கு மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும். இப்படித்தான் மருத்துவர்கள் நம் கதாநாயகன் மீது பழி சுமத்தினார்கள்.

சினிமாவில், கத்தி சொருகப்பட்டிருந்தவரைக் காப்பாற்ற கத்தியை வெளியே எடுத்தான் கதாநாயகன். அதேபோல, நம் உயிரைக் காக்கவே கொலஸ்டிரால் ரத்த நாளங்களில் படிகிறது.

அதாவது, ரத்த நாளங்களில் உள்காயம் எனப்படும் இன்ஃப்ளமேஷன் உருவாகிறது. நம் தோலில் காயம் பட்டால் அங்கே எரிச்சல் வந்து புண் ஆகும். புண்ணை ஆறவைக்க மேலே தோல் படியும் அல்லவா? அதேபோல இதய நாளங்களில் உள்காயம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மேலே பூசப்படும் மருந்தே எல்டிஎல் கொலஸ்டிரால். எல்டிஎல் கொலஸ்டிரால்தான் உள்காயத்தை ஆற வைக்கிறது. ஆனால், அதே இடத்தில் உள்காயம் மேலும் மேலும் ஏற்படும்போது, மேலே அதிக அளவில் எல்டிஎல் படிகிறது. இப்படிக் காயம் ஏற்படுதலும், அதன் மேலே கொலஸ்டிரால் பூசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு வருகிறது.

ஆக, கதாநாயகனான கொலஸ்டிரால், இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்காயம் ஏற்படாமல் இருந்தால் எல்டிஎல் கொலஸ்டிராலால் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. உண்மையில், மொத்த கொலஸ்டிராலின் அளவு 300, 400, 500 ஆக இருந்தாலும் எந்த ஆபத்தும் கிடையாது. நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதே உள்காயத்தால்தான், கொலஸ்டிராலால் அல்ல.

அப்படியானால் உள்காயம் ஏன் உண்டாகிறது? இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

எளிய மாவுச்சத்து உணவுகளை (கார்போஹைட்ரேட்) உண்பதால் உள்காயம் உண்டாகும். அதாவது வெள்ளை அரிசி, சர்க்கரை, மைதா போன்றவை.

மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனப்படும் செயற்கைக் கொழுப்புகளை உண்பதாலும் உள்காயம் உண்டாகும். சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை எடுத்துக்கொள்வோம். செக்கில் ஆட்டி எடுத்த சூரியகாந்தி எண்ணெயை யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம் அது அதிகச் சூடு தாங்காது. அந்த எண்ணெயை வைத்து வடை செய்ய முயன்றால், எண்ணெயைக் கொதிக்க வைத்தவுடன் அது எரிந்து புகைமண்டலத்தை வீடெங்கும் பரப்பிவிடும்.

இதற்காக சூரியகாந்தி, கனோலா, சஃபோலா, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள், லேபில் ஹைட்ரஜனேற்றம் என்கிற வேதிவினைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றின் கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவைச் செயற்கையாக உள்ளே நுழைக்கிறார்கள். இதனால் அந்த எண்ணெய்களின் கொழுப்புகள் திரிந்து டிரான்ஸ் ஃபேட் எனும் வகை கொழுப்பாக மாறிவிடுகிறது. அதன்பின் இந்த எண்ணெய்கள் ஜம் என சூடு தாங்குகின்றன. வடை, பூரி என சமையலுக்கு ஏற்றதாகிவிடுகிறது.

இதன்பின் இந்தச் செயற்கைக் கொழுப்புகள் என்ன ஆகின்றன? அவை நம் கல்லீரலுக்குச் செல்கின்றன. நம் உடலுக்கு இயற்கைக் கொழுப்புதான் நன்குப் பழக்கம்; இதுபோல உருவாக்கப்படும் செயற்கைக் கொழுப்பு வகைகளை என்ன செய்வது என்று உடலுக்குத் தெரியாது. இதனால் டிரான்ஸ் ஃபேட்டால் உள்காயம் அதிகரிக்கிறது.

மாரடைப்புக்கு மட்டுமல்ல, பல வகை வியாதிகளுக்கும் உள்காயமே காரணம். உள்காயம் இதயச் சுவர்களில் மட்டும் வராது அல்லவா? உடல் உறுப்புக்கள் அனைத்திலும் ஏற்படும். குடல் சுவர்களில் உண்டாகும் உள்காயத்தால் தீராத வயிற்றுவலி ஏற்பட வாய்ப்புண்டு. முதுகெலும்பில் ஏற்படும் உள்காயத்தால் தீராத முதுகுவலி வந்து அறுவை சிகிச்சை மூலம் முதுகுத்தண்டின் சில டிஸ்குகளை அகற்றும் நிலைக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மூட்டில் வரும் உள்காயத்தால் முடக்குவாத நோய் நம்மைத் தாக்கக்கூடும்.

வடைக்கு ஆசைப்பட்டு வியாதியை தேடிக்கொள்வது என்பது இதுதான் இல்லையா?

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?

நல்லவன் மீது சந்தேகப்படுவதும் கெட்டவனை நம்புவதும் தீராத துன்பத்தைத் தரும்.

இங்கும் அதே கதைதானே. நல்லவனான கொலஸ்டிராலை கெட்டவன் என்றோம்; ஆனால், கெட்டக் குணங்கள் கொண்ட தாவர எண்ணெய்களையும், தீட்டிய வெள்ளை அரிசியையும் நல்லது என நம்பி மோசம் போனோம். தீராத துன்பத்தை அனுபவித்தோம்.

இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com