பகுதி 9: சர்க்கரை நோயும் சிறுநீரகப் பாதிப்பும்!

சர்க்கரை நோய் (டைப் 2), குணப்படுத்தக்கூடிய வியாதியே, பேலியோ டயட் மூலம் இது சாத்தியமாகும் எனச் சென்ற வாரப் பதிவில் கண்டோம்.

ர்க்கரை நோய் (டைப் 2), குணப்படுத்தக்கூடிய வியாதியே, பேலியோ டயட் மூலம் இது சாத்தியமாகும் எனச் சென்ற வாரப் பதிவில் கண்டோம்.

ஆனால், டைப் 2 சர்க்கரை நோயால் அவதிப்படும் பல கோடி இந்தியர்களுக்கு பேலியோ என்கிற ஒரு வார்த்தை இருப்பதே தெரியாது. டைப் 2 சர்க்கரை நோய்க்கும், அதற்குப் பரிந்துரைக்கப்படும் தானிய அடிப்படையிலான உணவுமுறைக்கும் உள்ள தொடர்பின்மையை அவர்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை. டைப் 2 சர்க்கரை நோய் வரக் காரணம் ‘உடல் பயிற்சி செய்யாதது, அதிகமாகச் சாப்பிடுவது, பரம்பரை வியாதி’ என அவர்களுக்குத் தவறான பாடம் கற்பிக்கப்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒன்று, அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும் என நோயாளிகள் நம்பவைக்கப்படுகிறார்கள். இதன் பின்னே இருப்பது மிகத் தவறான அறிவியலும், அரசியலும், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் மருந்து கம்பனிகளின் பேராசையுமே.

டைப் 2 சர்க்கரை நோய்க்கான வைத்தியமாக உடற்பயிற்சியும், டயட்டாக சப்பாத்தியும் பரிந்துரைக்கப்படுகின்றன. மக்கள் ஆண்டுக்கணக்கில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். தொடர்ந்து சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி போன்ற சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். கடைசியில் எந்த நிவாரணமும் கிடைக்காமல் ‘இது பரம்பரை வியாதி, 40 வயதைத் தாண்டினால் எல்லாருக்கும் சர்க்கரை நோய் வரும்’ என்பது போன்ற சமாதானங்களைச் சொல்லி ஆறுதல் அடைகிறார்கள்.

டைப் 2 சர்க்கரை நோய் ஒரு பரம்பரை வியாதி என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உணவுப்பழக்கம் தான் பிரச்னையே ஒழிய, நம் முன்னோர் யார் என்பது டைப் 2 சர்க்கரை நோய்க்கான காரணம் அல்ல. நம் பெற்றோர் இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிட்டதால் நாமும் அதைச் சாப்பிடுகிறோம். பதிலாக பீட்சா, பர்கர் சாப்பிட்டிருந்தால் அதையே தானே பின்பற்றியிருப்போம்! அதனால் அவர்களுக்கு வரும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை நமக்கும் வருகின்றன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரே உணவுப் பழக்கத்தால் சர்க்கரை நோய் ஒரு பரம்பரை வியாதி என தவறாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை வியாதி என்கிற காரணத்தை விடவும் உணவுப்பழக்கம் தான் உங்கள் சர்க்கரை நோயைத் தீர்மானிக்கிறது.

நம் உடலில் நல்லது, கெட்டது என அனைத்து வகை மரபணுக்களும் உள்ளன. அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மரபணுக்கள் தவறான உணவாலும் நன்மை விளைவிக்கும் மரபணுக்கள் சரியான உணவாலும் தூண்டப்படுகின்றன. ஆக, மரபணுக்கள் மேல் பழியைச் சுமத்துவதை விட நம் தொல்மரபுசார்ந்த உணவுகளை உட்கொண்டு வியாதிகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே சிறப்பானது.

டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, டைப் 2 சர்க்கரை நோயால் ஏற்படும் பல்வேறு வகையான ஆபத்தான வியாதிகளுக்கும் பேலியோ டயட் நிவாரணம் அளிக்கிறது. உதாரணமாக டைப் 2 சர்க்கரை நோய், ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அத்தகைய சிறுநீரக வியாதியை டயபடிக் நெப்ரோபதி (Diabetic nephropathy) என அழைப்பார்கள்.

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதுதான் டயாபடீக் நெப்ரோபதி. (நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது அதன் பெயர், டயாபடீக் நியூரோபதி; கண்கள் பாதிக்கப்படும்போது - டயாபடீக் ரெட்டினோபதி.)

மருத்துவப் பேராசிரியர் ஜோர்கன் நெல்சன் (Jorgen Nielsen) தலைமையில் நிகழ்ந்த ஒரு மருத்துவ ஆய்வில் பேலியோ டயட்டுக்கும், டயபடிக் நெப்ரோபதிக்கும் இடையே உள்ள உறவு ஆராயப்பட்டது. இதன் ஆய்வறிக்கை நியூட்ரிஷனல் மெடபாலிசம் (Nutritional metabolism) எனும் மருத்துவ ஜர்னலில் 2006-ம் ஆண்டு வெளியானது.

இந்த ஆய்வின் முடிவில் நெல்சன் கூறுவதாவது:

‘ஹெச்பிஏ1சி ((HbA1c) அளவுகளுக்கும் நெப்ரோபதிக்கும் இடையே உள்ள தொடர்புகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை நோய் முற்றிய நோயாளிகளுக்குக்கூட மாவுச்சத்து உள்ள உணவுகளே தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவதால் அவர்களுக்கு இதனால் ஹைபர்கிளைசீமியா (Hyperglycemia, ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்தல்) ஏற்பட்டு, அதீத அளவில் இன்சுலின் சுரந்து, உடல் பருமன் அதிகரிக்கின்றன. இப்படி அதிகரிக்கும் உடல் பருமனால் சிறுநீரகத்தின் செயல்திறன் கெடுகிறது.

இந்த ஆய்வில் ஆறுவருடமாக டைப் 2 சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு பேலியோ டயட் மூலமாக நெப்ரோபதி வியாதியைக் குணப்படுத்தினோம். அந்த நோயாளியின் வயது 60. 1989-ம் ஆண்டு அவர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்களில் பலரும் உடல் பருமனாலும், சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 90-களின் மத்தியில் அவர் சிறுநீரக வியாதியான நெப்ரோபதியால் பாதிக்கப்பட்டார். அனைத்து வகை நவீன மருந்துகளை அவருக்குக் கொடுத்து, லேசர் சிகிச்சை அளித்தும் சிறுநீரகப் பாதிப்பு சரியாகவில்லை.

இந்தக் காலகட்டத்தில் நோயாளியின் எடை 85 முதல் 89 கிலோ வரை இருந்தது. அவருக்கு வழக்கமான மாவுச்சத்துள்ள தானிய உணவே அக்காலகட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளும்போது அவருடைய எடை இறங்கும், அதன்பின் மறுபடியும் ஏறும். இப்படியே எடை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது.

அப்போது அவரது சிறுநீரில் அல்புமின் எனும் புரதத்தின் அளவுகள் அதிகரித்தன. இது சிறுநீரகம் கெடத் தொடங்குவதற்கான அறிகுறி என்பதால் மருத்துவர்கள் எச்சரிக்கை ஆனார்கள். அவருக்கு இன்சுலின் மருந்தை ஊசி மூலம் செலுத்தத் தொடங்கினார்கள். இன்சுலின் ஊசி செலுத்தத் தொடங்கியதும் ஹெச்பிஏ1சி அளவுகள் தற்காலிகமாகக் குறைந்தன. ஆனால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. 90 கிலோ எனும் அளவை எட்டியது. 125/90 என்ற அளவில் இருந்த ரத்த அழுத்தம் 145/90 என அதிகரித்தது. 116 எனும் அளவில் இருந்த அல்புமின் புரத அளவுகள் 2000 எனும் அளவை எட்டின (இயல்பான அளவு 55). இதன்பின் ரத்த அழுத்தம் 160/90 ஆக உயர்ந்தது.

இதன்பின் 2004-ம் ஆண்டில் அவரது உணவில் இருந்த மாவுச்சத்தின் அளவுகள், தினமும் 90 கிராம் எனக் குறைக்கப்பட்டன. அவருக்குக் காய்கறிகளும், புரதமும் கொழுப்பும் நிரம்பிய உணவுகளும் வழங்கப்பட்டன. அவரது உணவில் 20% மாவுச்சத்து, 50% கொழுப்பு, 30% புரதம் இருந்தன.

அதன்பின் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இரு வாரங்களில் அவருக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது நின்றது. பேலியோ உணவால் 19 கிலோ எடை குறைந்து ஹெச்பிஏ1சி அளவுகள் 8.5 எனும் அளவில் இருந்து 6.5 எனும் அளவுக்கு இறங்கியது. இதன்பின்னரே அவரது சிறுநீரகத்தின் செயல்திறன் அதிகரித்தது. இரண்டரை ஆண்டுகள் கழித்து அவரது சிறுநீரகப் பாதிப்பு விலகியது. அவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்.

எனவே பேலியோ டயட் - டயபடிக் நெப்ரோபதி, ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு, உடல் எடைக் குறைப்பு போன்றவற்றுக்கு சிறப்பான தீர்வாக அமையும்...’ என்கிறார் ஜோர்கன் நெல்சன். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1523335/)

(ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சாப்பிடும் உணவு, க்ளுகோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. மேலும், நம் கல்லீரலும் க்ளுகோஸை உற்பத்தி செய்கிறது. இந்த க்ளுகோஸ், உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. க்ளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இந்த ரத்தச் சிவப்பு அணுக்கள் 8 முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகே அவை அழிக்கப்படும். எனவே, ரத்தச் சிவப்பு அணுவைப் பரிசோதனை செய்வதன் மூலம், 8 முதல் 12 வாரங்களில் ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.)

ஆனல்ஸ் ஆஃப் மெடிசின் (Annals of Medicine) எனும் புகழ் பெற்ற மருத்துவ ஜர்னலில் 2014-ம் ஆண்டு மருத்துவப் பேராசிரியர் லீனா ஜொனாசன் (Lena Jonasson) தலைமையில் நடந்த ஆய்வு ஒன்றில் பேலியோ டயட்டும், மாவுச்சத்து அதிகமுள்ள குறைந்த கொழுப்பு டயட்டும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. சர்க்கரை நோய் உள்ள நோயாளிகள் இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயத்தால் பாதிப்புக்குள்ளாவது வழக்கம். இந்த உள்காயமே மாரடைப்பு, அல்சர், முடக்குவாதம் போன்ற பலவகை வியாதிகளுக்குக் காரணம் என்பதை முந்தையப் பகுதிகளில் கண்டோம்.

பேராசிரியர் லீனா ஜொனாசன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் சர்க்கரை நோயாளிகளுக்குக் குறைந்த கொழுப்பு உள்ள சாதாரண டயட்டால் உடல் எடை குறைகிறதே ஒழிய அவர்கள் உள்காயம், சர்க்கரை அளவுகள் போன்றவற்றில் மாறுதல் ஏற்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டது அதேசமயம் உணவில் உள்ள மாவுச்சத்தை குறைக்கும் பேலியோ டயட்டைப் பின்பற்றிய சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் பருமன் குறைந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் குறைந்தன. இன்ஃப்ளமேஷன் எனப்படும் உள்காயமும் பெருமளவில் குறைந்ததை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4025600/ )

ஆக, பேலியோ டயட், சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து என்பதையும் தாண்டி சர்க்கரை நோயால் விளையும் சிறுநீரக நோய்களில் இருந்தும் நோயாளிகளைப் பாதுகாக்கிறது என்பதை அறிய முடிகிறது. சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. எடையைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, ஹெச்பிஏ1சி அளவுகளைக் குறைக்கிறது. ஆபத்தான வியாதிகளை வரவழைக்கும் உள்காயத்தைக் குணப்படுத்தி, சிறுநீரகத்தின் செயல்திறனையும் அதிகரித்து, கெட்டுப்போகும் நிலையில் இருந்த சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கும் கொண்டுவருகிறது. இத்தனை முன்னேற்றங்கள் பேலியோ டயட்டால் உண்டாகின்றன.

இந்நிலையில் பேலியோ டயட் இதயத்துக்குக் கெடுதலானது, மாரடைப்பை வரவழைக்கக்கூடியது என அஞ்சுவதில் ஏதேனும் பொருள் உண்டா? ஆண்டுக்கணக்கில் மருந்து, மாத்திரை உட்கொண்டு, லேசர் சிகிச்சையால் குணமாகாத வியாதிகள் எல்லாம் பேலியோ டயட்டால் குணமானதாக மருத்துவ ஜர்னல்களில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றன. இதை விடவும் வலுவான ஆதாரம் வேற என்ன வேண்டும்? இதற்குப் பிறகும் சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குத் தானிய உணவுகளையும், மாவுச்சத்து உள்ள பிஸ்கட், சப்பாத்தி போன்றவற்றையும் கொடுப்பதில் ஏதேனும் அர்த்தமுண்டா?

சரி, டைப் 1 டயபடிஸ் எனப்படும் பிறப்பில் வரும் சர்க்கரை நோய்க்கு இதனால் பலன் உண்டா?

டைப் 1 சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

இதற்கான காரணங்கள் மருத்துவ உலகால் சரிவர விளக்கப்படவில்லை. ஆனால் இவ்வியாதி உள்ளவர்களுக்கு சிறுவயதிலேயே பாதிப்புகள் ஏற்படும். சிறுவயதிலேயே உடலின் இன்சுலின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுவிடும். இதனால் உணவில் உள்ள மாவுச்சத்தை சரிவரக் கையாளும் திறனை உடல் இழந்துவிடும். விளைவு - சிறுவயதிலேயே இன்சுலின் ஊசி எடுக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாவார்கள்.

பேலியோ டயட், டைப் 1 சர்க்கரை நோயைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது. பிறப்பால் வருவது என்பதால் இதை முழுவதும் உணவால் குணப்படுத்துதல் சாத்தியமில்லை. ஆனால், பேலியோ உணவால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. டைப் 1 சர்க்கரை நோயாளிகள் எடுக்கும் இன்சுலின் ஊசி அளவையும் இது குறைக்கிறது. மேலும் அவர்களுக்கு ஏற்படும் உள்காயம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற பலவகை வியாதிகளையும் கட்டுக்குள் வைக்க பேலியோ டயட் உதவுகிறது.

ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுவில் உள்ள அதன் மூத்த உறுப்பினர் சிவராம் ஜெகதீசன் டைப் 1 சர்க்கரை நோயை பேலியோ உணவுமுறை மூலம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருபவர். அவர் தன் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்:

கடந்த 29 வருடங்களாக டைப் 1 சர்க்கரை நோயுடன் இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு வாழ்ந்து வருபவன். 1986-ல், +2 மாணவனாக இருந்தபோது எனக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. உடற்சோர்வுடன் நடப்பதே சிரமமாக இருந்த காலகட்டம். தொடர்ச்சியான எடை இழப்புக்குப் பிறகு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என் எடை 37 கிலோ! மருத்துவமனையில் இருந்த இரண்டு மாதத்தில் தினமும் ஐந்து ஊசிகள்! ஆனால் ஒன்றும் பயனில்லை. எடை கொஞ்சம் ஏறி 39 கிலோவாக ஆனது! 

அதன்பின் என் தந்தையின் நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் கோவை ராம் நகரில் உள்ள டயபடிஸ் ரிசர்ச் சென்டருக்குச் சென்றோம். அதை நடத்திக் கொண்டிருந்த டாக்டர் முனிரத்னம் செட்டி என்ற சேவை மனப்பான்மையுள்ள மாமனிதர்தான் இன்று நான் உயிருடன் இருக்கக் காரணம். அவருடைய ஆய்வகத்தில் நாம் உண்ணும் இட்லி முதல் அனைத்து உணவுகளுக்குமான மருத்துவக் குறிப்பும் அதன் கலோரி அளவுகளும் விளக்கப்பட்டிருந்தன. அவர் நீரிழிவுக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை விடவும் நோயாளிகளுக்கு நீரிழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினார் என்றே சொல்ல வேண்டும். அங்குதான் இனி வாழ்க்கை முழுதும் ஊசி போட வேண்டும் என்பதைச் சொல்லி எப்படித் தொடையிலும் வயிற்றுப் பகுதிகளிலும் தானே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது என்பது குறித்தும் கற்றுக் கொடுத்தார்கள். இரண்டு வகையான மருந்தைக் கலந்து தொடையில் ஊசி போட வேண்டும். இப்போது இருப்பதைப் போல டிஸ்போசபிள் ஊசிகள் அப்போது கிடையாது. காலையில் 70 யூனிட் மாலையில் 60 யூனிட். அப்போது இனிப்பு மட்டும் சாப்பிடாமல் மற்ற அனைத்தையும் சாப்பிட்டு இன்சுலினும் போட்டுக் கொள்வேன். முனிரத்னம் செட்டியிடம் மருத்துவம் பார்த்த பிறகு ஒரு மாதத்தில் என் எடை 55 கிலோவாக ஆனது.

அந்த மருத்துவ மையத்தின் மூலமாகத்தான் எந்த உணவை உண்டாலும் சர்க்கரை அளவுகள் அதிகமாகும் என்பதையும் இன்சுலின் போடுவதால் எப்படி ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என்பதையும் கற்றுக் கொண்டேன். சர்க்கரை அளவு குறைவதை உடனடியாக சரி செய்ய எப்போதும் 50 கிராம் சர்க்கரையைப் சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பேன். 

இதனிடையே படிப்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணம் ஆகி, குழந்தைகளும் பிறந்தார்கள்.

அப்போது மாட்டின் கணையத்தில் (pancreas) இருந்து எடுக்கப்பட்ட இன்சுலின் உபயோகத்தில் இருந்தது. 1998-ம் ஆண்டு அமெரிக்கா வந்த பிறகு ஹியூமன் இன்சுலின் (Human insulin) அறிமுகமானது. செயற்கையான முறையில் பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்படும் இன்சுலின் அது. 2000-ம்  வருடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முழு ரத்தப் பரிசோதனை எடுத்துக் கொண்டும், உடற்பயிற்சி, இன்சுலின் உதவியுடன் காலம் ஓடிக்கொண்டிருந்தது. பிறகு 2006-ல் இன்சுலின் பேனா (Insulin pen) அறிமுகம் ஆனது. (இன்சுலின் பேனா என்பது டிஸ்போசபிள் ஊசி. சாதா ஊசியில் மருந்தைத் தனியாக எடுத்து அளந்து ஊசி போட வேண்டும். இதில் ஏற்கனவே ஊசியில் இன்சுலினை ஏற்றி வைத்திருப்பார்கள். நாம் ஊசி போட்டுக்கொண்டு பிறகு மூடிவைத்துவிடலாம். நாலைந்து தடவை பயன்படுத்தலாம். மருந்து தீர்ந்தபின் வீசிவிடலாம்.)

அப்போதிருந்து பேலியோ உணவுமுறைக்கு மாறும்வரை எனது இன்சுலின் அளவுகளில் மாற்றம் நிகழவில்லை. எடையும் கிட்டத்தட்ட 70 கிலோ என்கிற அளவிலேயே இருந்து கொண்டிருந்தது. வழக்கமான உணவுடன் ஹெச்பிஏ1சி-யையும் ரத்தச் சர்க்கரையையும் கட்டுக்குள் வைத்திருந்தேன்.

2014-ம் ஆண்டு பிற்பகுதியில்தான் ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமம் அறிமுகமானது. முதலில் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. முழுக்க முழுக்க தவறான உணவுமுறையாகப் பட்டது. இருந்தாலும் தொடர்ந்து அதைப் பற்றி படித்ததால், பேலியோ டயட் பற்றிய புரிதல் உண்டானது. குறைந்த அளவிலான மாவுச்சத்து, அதிகக் கொழுப்பு - பேலியோ டயட்டின் இந்த அறிவியலைப் புரிந்துகொண்டேன்.  

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நானும் பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன். காலையில் வழக்கம்போல 70 யூனிட் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் போட்டுக்கொண்டு பிறகு 100 பாதாம் சாப்பிட்டேன். சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு 145. என் கணக்குப்படி 100 பாதாம் 700 கலோரிகள். அதாவது 5 இட்லி, சாம்பார் - சட்னியுடன் சாப்பிடும் அளவு. இது சாதாரணமாக 4 மணி நேரத்துக்குத் தாங்க வேண்டும் (அடுத்தவேளை வரை). ஆனால் நடந்தது வேறு.  30 நிமிடத்திலேயே லோ சுகருக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஒன்றும் புரியாமல் சர்க்கரைப் பரிசோதனை செய்தபோது அது 64 எனக் காட்டியது.  உடனடியாக ஐஸ்கிரீம், சாக்லேட் எனச் சாப்பிட்டு அதை அதிகரித்தேன். பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தபோது இன்சுலின் அளவைக் குறைக்காதது என் தவறு. மிகவும் பதற்றமாகி நியாண்டர் செல்வனிடம் ஆலோசனை கேட்டேன். பிறகுதான் நான் செய்த தவறு புரிந்தது.

அதன்பிறகு, பேலியோ உணவுமுறையால் இன்சுலின் அளவைப் பாதியாகக் குறைத்தேன். சில வாரங்களில் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்த பிறகுதான் ஓரளவு லோ சுகர் கட்டுக்குள் வந்தது.  மூன்று மாதம் கழித்து எடுத்த ரத்தப் பரிசோதனையில் பயப்படும்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொலஸ்டிரால் சிறிது அதிகமாகியிருந்தது. அடுத்த இரு பரிசோதனைகளில் கொலஸ்டிராலும் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வந்தன.

காலையில் பாதாம், மதியம் முட்டை, இரவு இறைச்சி. பால், காய்கறிகளையும் சேர்த்துக்கொள்கிறேன். இதுதான் என் பேலியோ டயட் (தற்போது வாரம் ஓரிரு வேளைகள் மட்டும் தென்னிந்திய உணவுகள்.) டைப் 1 சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், மூன்றில் ஒரு பங்காக இன்சுலின் அளவுகளைக் குறைத்துக்கொண்டது பெரிய விஷயம். மேலும் எடை அதிகமாகும் என்கிற பயமும் இப்போது இல்லை. என் அனுபவம், வாசிப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமத்தில் ‘உன்னை வெல்வேன் நீரிழிவே’ என்ற தொடரை எழுதி வருகிறேன். பேலியோ டயட்டின் ஆதரவில் என் பயணம் தொடர்கிறது.

(தொடரும்)

***

வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com