அவமான ஏணி

அவர் ஒரு வழக்கறிஞர். இந்தியர்தான், ஆனால் லண்டனில் சட்டம் படித்து ‘பாரட்லா’, ‘பாரிஸ்டர்’ என்றெல்லாம் சொல்லப்படும் பட்டம் பெற்றவர்.

வர் ஒரு வழக்கறிஞர். இந்தியர்தான், ஆனால் லண்டனில் சட்டம் படித்து ‘பாரட்லா’, ‘பாரிஸ்டர்’ என்றெல்லாம் சொல்லப்படும் பட்டம் பெற்றவர். தென்னாப்பிரிக்காவில் இருந்த அப்துல்லா சேத் என்ற வியாபாரியின் வழக்கு சம்பந்தமாக அவர் அங்கு சென்றிருந்தார். ஆனால், வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவரல்ல அவர். இன்னும் சொல்லப்போனால், ஆள் கொஞ்சம் பயந்தாங்கொள்ளிதான். ஏதோ படித்துப் ‘பாஸ்’ செய்துவிட்டார். ஆனால் நாலு பேர் முன்னிலையில், அதுவும் கோர்ட்டில், வழக்கறிஞர்கள், நீதிபதி முன்னிலையிலெல்லாம் பேசி, வழக்கை எடுத்துரைத்து வாதாட வேண்டும் என்பதிலெல்லாம் அவருக்கு நடுக்கம்தான். ஆனால், வேறு வழியில்லாமல் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தென்னாப்பிரிக்க அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டார். பிழைப்புக்கு ஒரு வழி வேண்டுமல்லவா?

ஏற்கெனவே அப்துல்லா சேத்தின் வழக்கு தொடர்பாக ஒரு வழக்கறிஞர் குழுவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதில், இவரும் ஒருவராகச் சென்றிருந்தார். ஆள் பார்க்க நல்ல சிவப்பாக இருப்பார். லண்டனில் படித்ததனால் ‘கோட், சூட்’ ஷூவெல்லாம் போட்டு மாப்பிள்ளை மாதிரி இருப்பார்.

இந்தக் கதை நடக்கும்போது அவர் தங்கியிருந்த நகரம் டர்பன். அங்கிருந்து அவர் பிரிட்டோரியா என்ற இன்னொரு நகரத்துக்குப் போகவேண்டி இருந்தது. ஏனெனில் பிரிட்டோரியாவுக்கு வாருங்கள் அல்லது உங்கள் பிரதிநிதியை அனுப்புங்கள் என்று அப்துல்லா சேத்துக்கு வக்கீலிடமிருந்து கடிதம் வந்திருந்தது. தன் பிரதிநிதியாக நம் பாரிஸ்டரை அனுப்ப சேத் முடிவு செய்தார். நம் நோஞ்சான் பயந்தாங்கொள்ளி வக்கீலும் போவதற்கு ஒப்புக்கொண்டார். இப்போது அவர் கொஞ்சம் விபரமாகியிருந்தார். கொஞ்சம் அனுபவமும், கொஞ்சம் துணிச்சலும் வந்திருந்தன. ஆனால் கொஞ்சம்தான்.

‘நீங்கள் எங்கே தங்க வேண்டும்?’ என்று அப்துல்லா சேத் கேட்டார்.

‘நீங்கள் எங்கு தங்கச் சொல்கிறீர்களோ அங்கேயே தங்குகிறேன்’ என்று சொன்னார் நம் பாரிஸ்டர்.

‘சரி, நான் அங்கிருக்கும் நம் வக்கீலுக்கு எழுதுகிறேன். நீங்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார்’ என்று அப்துல்லா சேத் சொன்னார். அதன்பிறகு நம் வக்கீல், ரயிலில் பிரிட்டோரியா செல்வதற்காக முதல் வகுப்பு டிக்கெட் எடுக்கப்பட்டது. படுக்கை வேண்டுமென்றால், அதற்காக ஐந்து ஷில்லிங் பணம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். அதையும் செய்துவிடலாம் என்று சேத் கூறினார். ஆனால், நம் வக்கீல் நோஞ்சான் மட்டுமல்ல, சிக்கனம் என்ற பெயரில் அவசியமான சுகங்களைக்கூட வேண்டாமென்று மறுப்பவர். அது அடுத்தவர் பணத்தில் என்றாலும்! எனவே, ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் படுக்கை வேண்டாமென்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ரயிலும் கிளம்பிவிட்டது. இரவு ஒன்பது மணிக்கு, ரயில் மாரிட்ஸ்பர்க் என்ற நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்டேஷனில்தான் பிரயாணிகளுக்குப் படுக்கைகளைக் கொண்டுவந்து வைப்பார்கள். ஒரு சிப்பந்தி வந்து படுக்கை வேண்டுமா என்று நம் பாரிஸ்டரைக் கேட்டார். பந்தாவாக, வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். அதன்பிறகு இன்னொருவர் வந்தார். அவர் சிப்பந்தி அல்ல. அவர் ஒரு பயணி. வந்தவுடன் இவரை ஏற இறங்கப் பார்த்தார். பார்வையில் ஒரு வெறுப்பும் ஏளனமும் இருந்தது. அவருடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

பாரிஸ்டருக்குப் புரிந்துவிட்டது. தான் ஒரு இந்தியன் என்பதை அந்தப் பயணி புரிந்துகொண்டுவிட்டார். தென்னாப்பிரிக்காவில், இந்தியர்கள் எந்தவிதமான அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் ‘கூலி’களாகவே கருதப்பட்டனர். இந்தியர்கள் என்றால் அவ்வளவு கேவலம். ஏன், இந்தியாவில்கூட பஹர்தலி ஐரோப்பிய க்ளப் என்ற க்ளப் ஒன்றில், ‘நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை’ என்று எழுதிய ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்துப் போராடிய பிரீதி லதா என்ற வங்காளிப் பெண் போராளிகூட அதற்காக உயிரிழந்தார். ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தில், நம் நிலை இப்படித்தான் இருந்தது. ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்ட மதிப்புகூட நமக்கு இல்லாமல் இருந்தது. காரணம், நாம் கருப்பு, நமக்கு ஆங்கிலம் தெரியாது, இத்யாதி இத்யாதி.

முதல் வகுப்பில் ஏறிய அந்தப் பயணி, நம் இந்திய வக்கீலை அப்படிப் பார்த்துவிட்டுப்போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் கோபத்தோடு வெளியேறிய அவர், அப்படியே போய்விடவில்லை. இரண்டு அதிகாரிகளை அழைத்து வந்தார்! ஒரு அதிகாரி நம் பாரிஸ்டரைப் பார்த்து, ‘இங்கே வா, நீ போய் சரக்கு ரயிலில் ஏறிக்கொள்’ என்றார்!

அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்! ஆனால், நம் வக்கீல் உணர்ச்சிவசப்படாமல் ரொம்ப தர்க்கரீதியாகப் பேசினார்.

‘என்னிடம் முதல் வகுப்புக்கான டிக்கெட் இருக்கிறது’ என்று எடுத்துக்காட்டினார்.

‘அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் சொல்கிறேன், நீ சரக்கு ரயிலில் போய் ஏறிக்கொள்’ என்று அதிகாரமாகச் சொன்னார் அந்த அதிகாரி. அதிகாரி என்றால் அதிகாரம் மட்டும்தான் இருக்க வேண்டும். அறம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஆங்கிலேயே கலாசாரம்! ஆனால், நம் பாரிஸ்டருக்கும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. கொஞ்சம்தான் வந்தது என்றாலும் கோபம் கோபம்தானே!

‘இல்லை, இந்தப் பெட்டியில் நான் பயணம் செய்வதற்கு டர்பனில் இருந்தே எனக்கு அனுமதி உண்டு. எனவே, நான் இதில்தான் பிரயாணம் செய்வேன்’ என்றார் பாரிஸ்டர்!

‘இல்லையில்லை. இதில் நீ போகக்கூடாது. பிடிவாதம் செய்தால், போலீஸை வைத்து உன்னை இறக்கிவிடவேண்டி வரும்’ என்றார் அதிகாரி.

‘போலீஸை வேண்டுமானால் அழைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் இறங்கப்போவதில்லை’ என்று உறுதியாகச் சொன்னார் பாரிஸ்டர்!

ஆனால், அந்த உறுதி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஒரு போலீஸ்காரர் வந்தார். பாரிஸ்டரை விசாரிக்கவும் இல்லை, அவருடன் எதுவும் பேசவும் இல்லை. வந்த வேகத்தில், பாரிஸ்டரின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டுபோய், ரயிலுக்கு வெளியே தள்ளிவிட்டார்! பாரிஸ்டரின் சாமான்களும் தூக்கி வெளியில் வீசப்பட்டன. ரயிலும் கிளம்பிப் போய்விட்டது. பாரிஸ்டர், சரக்கு ரயிலில் ஏறவில்லை. வெளியில் தூக்கி வீசப்பட்ட தன் சாமான்களை எடுத்துக்கொள்ளாமல், ஒரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு பிரயாணிகள் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்றார் அவர்.

அப்போது தென்னாப்பிரிக்காவில் குளிர்காலம். மாரிட்ஸ்பர்க் நகரம், கடல் மட்டத்திலிருந்து 1955 அடி உயரத்தில் இருக்கிறது! குளிர் பின்னியெடுத்தது. ரயில்வே அதிகாரிகள் வசமிருந்த தன் சாமான்களையும் போய் அவர் கேட்கவில்லை. மேலும் மேலும் அவமானப்பட அவர் விரும்பவில்லை. நடுங்கிக்கொண்டே நள்ளிரவுவரை ஓய்வறையில் ஒதுங்கிக்கொண்டார் பாரிஸ்டர். அந்த அறையில் ஒரு விளக்குகூட இல்லை! அப்போதுதான் அவர் யோசித்தார். வழக்கை முடிக்காமல் இந்தியாவுக்குத் திரும்பிவிடலாமா? வழக்கை முடித்துவிட்டுத் திரும்பலாமா? எப்படி யோசித்தாலும் ஒரு விஷயத்தைச் சுற்றியே அவர் மனம் திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி சுற்றிக்கொண்டிருந்தது. அது என்ன விஷயம்?

அதுதான் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிற மற்றும் இன துவேஷம். பாரிஸ்டர் படித்த தனக்கே இந்த நிலை என்றால், படிக்காத, உண்மையிலேயே கூலிகளாக வேலை பார்க்கும் இந்தியர்களின் கதி என்ன? அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

இப்படியெல்லாம் அவர் மனம் யோசித்தது. ரயிலோடு அந்த அவமான அனுபவம் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து பல அவமானங்கள், தென்னாப்பிரிக்காவில் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தன. ஒரு அவமானப்படலத்தினூடே அவர் பயணிக்கவேண்டி இருந்தது.

அந்த ரயிலில் ஏற முடியாமல் போன அவரால், மறுநாள் அடுத்த ரயிலில்தான் செல்ல முடிந்தது. அதுவும், அப்துல்லா சேத்துக்கும், ரயில்வே பொதுமேலாளருக்கும் நீண்ட தந்திகள் கொடுத்த பிறகுதான். ஆனால், அடுத்த ரயில் அவரை சார்லஸ் என்ற நகரில் இறக்கிவிட்டது. ஏனெனில், அதற்கு மேல் ரயில் பாதை கிடையாது. அங்கிருந்து நான்கு சக்கர குதிரை வண்டி ‘கோச்’சில்தான் பிரிட்டோரியாவுக்குப் போக வேண்டும்.

ஆனால், அதிலும் ஒரு பிரச்னை இருந்தது. அங்கும் அவருக்கு ஒரு அவமானம் காத்துக்கொண்டிருந்தது. மாரிட்ஸ்பர்க் ரயில் வண்டியில் ஏற்பட்ட அவமானத்தைவிடப் பெரிய அவமானம் அது. மிக மோசமான அனுபவம் அது. அப்படி என்ன அனுபவம்?

கோச் வண்டியில் செல்வதற்கும் முன்பதிவு செய்து இடம் பிடிக்க வேண்டும். அதுவும் செய்யப்பட்டிருந்தது. சார்லஸ் டவுனில் இருந்த வெள்ளைக்கார வண்டி ஏஜன்ட்டுக்கும் சேத் தந்தி கொடுத்திருந்தார். இந்தக் காலத்தில் அனுப்பப்படும் குறுஞ்செய்தி மாதிரி, அந்தக்காலத்தில் தந்தி இருந்துள்ளது.

ஆனால், அந்தக் குதிரை வண்டி ஏஜன்ட்டுக்கு நம்ம வக்கீலை ஏற்றிக்கொண்டுபோக விருப்பமில்லை. ஏன்? பிரயாணிகளை வண்டிக்கு உள்ளே உட்கார வைக்க வேண்டும். ஆனால், நம்ம வக்கீலோ ஒரு இந்தியக் கூலி. ஒரு கூலியை வண்டிக்கு உள்ளே வெள்ளைக்காரர்களோடு உட்கார வைப்பதா? அதுதான் அந்த ஏஜன்ட்டின் பிரச்னை. எனவே, ‘உங்கள் டிக்கெட் ரத்தாகிவிட்டது’ என்று அவர் பொய் சொன்னார். ஆனால், நம்ம ஆள் வழக்கறிஞராயிற்றே, அப்படியே கேட்டுக்கொள்வாரா என்ன? அது அப்படி இல்லை என்று தக்க பதிலடி கொடுத்தார்!

இப்போது வண்டியின் ‘தலைவ’ருக்கு சங்கடமாகிவிட்டது. வண்டிஓட்டியின் பின்பக்கமாக இரண்டு இருக்கைகள் இருந்தன. அதில் ஒன்றில் தலைவர் உட்காருவார். போனால் போகட்டுமென்று இன்னொன்றில் நம்ம பாரிஸ்டரை உட்காரச் சொன்னார். அதுவே பெரிய அநியாயம்தான். அதில் உட்காரமாட்டேன் என்று அடம்பிடித்திருந்தால், இன்னொரு நாள் வீணாகியிருக்கும். அதனால், மேற்கொண்டு பிரச்னை செய்ய விரும்பாமல், ஆத்திரமாக வந்தாலும் அடக்கிக்கொண்டு, பாரிஸ்டர் அதில் போய் உட்கார்ந்துகொண்டார். ஆனால், பிரச்னை அதோடு முடிந்துவிடவில்லை.

வண்டி, பார்டகோப் என்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது. அங்குதான் அடுத்த பிரச்னை ஆரம்பித்தது. தலைவர் சுருட்டு பிடிக்க விரும்பினார். அதுவும் நம்ம பாரிஸ்டர் உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் உட்கார்ந்து! வண்டிஓட்டியிடம் கேட்டு, ஒரு பழைய கோணித்துணியை வாங்கினார். பிரயாணிகள் கால் வைத்து ஏறும் இடத்தில் அதைப்போட்டு, அதில் பாரிஸ்டரை உட்காரச் சொன்னார்! அவ்வளவுதான். பாரிஸ்டரின் பொறுமைக் கயிறு முற்றிலுமாக அறுந்துவிழுந்தது. He was at the end of his tether என்று சொல்லலாம். அவர் கொதித்தெழுந்தார்.

‘என்ன அநியாயம் இது? நான் உள்ளே உட்காரவேண்டியவன். ஆனால் நீர் என்னை இங்கே உட்காரவைத்தீர். அதையும் பொறுத்துக்கொண்டேன். ஆனால் இப்போது, நீர் வெளியில் உட்கார்ந்து சுருட்டு பிடிப்பதற்காக நான் உம் காலடியில் உட்கார வேண்டும் என்று சொல்கிறீர். இதை நான் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், உள்ளே போய் உட்காருகிறேன்’ – இவ்விதமாகப் பேசிக்கொண்டே போனார் பாரிஸ்டர். ஆனால் அவர் பேசி முடிக்குமுன், அது நடந்துவிட்டது.

அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, அந்த வண்டியின் ‘தலைவர்’ வந்து பாரிஸ்டரின் கன்னங்களில் ஓங்கி அறைய ஆரம்பித்தார். ஒரு அறை அல்ல, பல அறைகள். தொடர்ந்து விழுந்துகொண்டே இருந்தன. பாரிஸ்டரின் கையைப் பிடித்து இழுத்து, அவரைக் கீழே தள்ளவும் முயற்சித்தார். ஆனால், தன் மணிக்கட்டு எலும்பு முறிந்தாலும் பரவாயில்லை, பிடியை விடக்கூடாது என்ற உறுதியோடு இருந்தார் பாரிஸ்டர்! அந்தத் தலைவரோ, தொடர்ந்து இவரைத் திட்டிக்கொண்டும், இழுத்துக்கொண்டும், அடித்துக்கொண்டும் இருந்தார்.

ஆனால் பாரிஸ்டர், தன் உறுதியையும் போராட்டத்தையும் விடவில்லை. ரயில் வண்டியில் ஏற்பட்ட அவமான அனுபவம் அவரை ஒரு முடிவுக்கு வரச் செய்திருந்தது. உயிரே போனாலும் உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார். கடைசியில், வண்டியின் உள்ளே இருந்தவர்கள் பாரிஸ்டருக்கு ஆதரவாகப் பேசியதும், ‘தலைவர்’ அடிப்பதை நிறுத்தினார். வேறு வழியில்லாமல், இன்னொரு வேலைக்காரரை படியில் உட்காரச் சொல்லிவிட்டு, அவனுடைய இடத்தில் அவர் அமர்ந்து சுருட்டு பிடிக்கத் தொடங்கினார். அல்லது புகையத் தொடங்கினார் என்றும் சொல்லலாம்!

இந்த மாதிரியான அனுபவங்கள் பல, தென்னாப்பிரிக்காவில் நம் பாரிஸ்டருக்கு ஏற்பட்டன. இப்படியான அனுபவங்கள், அவமானங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவர் பயன்படுத்தியது இரண்டு வழிகள்தான். ஒன்று பொறுமை, இரண்டு உரிமைக்காகப் போராடுதல். அடித்தால் பொறுத்துக்கொண்டாரே ஒழிய, திருப்பி யாரையும் அவர் அடித்ததில்லை. திட்டினால் பதில் சொன்னாரே தவிர, திருப்பி யாரையும் திட்டியதில்லை.

அவமானங்களின் ஏணியில் ஏறி அவர் உலகின் உச்சிக்கே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமா? இந்த உலகில் யாரும் செய்திடாத சாதனையை அவர் செய்தார். அது என்ன சாதனை? அஹிம்சை வழியில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்ததில் முக்கியப் பங்காற்றியதுதான்!

ஆமாம், அச்சம் கொண்ட அந்த நோஞ்சான் வக்கீல் யாருமல்ல. நம் தேசத்தந்தை மஹாத்மா காந்திதான். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்ற இலக்கை அடைய உதவும் ஏணியாக, தான் பெற்ற அவமானங்களையெல்லாம் அவர் பயன்படுத்தினார். அவர் சொல்லுக்கு இந்தியா முழுவதுமே தலை அசைத்தது. அவமானங்களை ஏணியாக மாற்றிய அஹிம்சையின் சக்தி அது! இன்று அப்படிப்பட்ட சக்தி படைத்த ஒரு தலைவர் நம்மிடையே உண்டா? ஏன் இல்லை என்று யோசித்தால் ஒரு உண்மை புரியும். 

அவமானப்பட்டால், நமக்கு பழி சொல்லத் தெரியும்.

அவமானப்பட்டால், மஹாத்மாவுக்குத்தான் அதிலிருந்து மீளும் வழி சொல்லத் தெரியும்.
                         ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com