மஹர் என்று ஒதுக்கப்பட்ட மஹா ஆளுமை

இரண்டு சிறுவர்கள். பத்துப் பதினோறு வயதிருக்கும். சகோதர்கள். அண்ணன் பெயர் ஆனந்த். தம்பி பெயர் பீம். அது ஒரு கோடைக்காலம்.


ரண்டு சிறுவர்கள். பத்துப் பதினோறு வயதிருக்கும். சகோதர்கள். அண்ணன் பெயர் ஆனந்த். தம்பி பெயர் பீம். அது ஒரு கோடைக்காலம். குர்காவோன் என்ற ஊரில் காசாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரரான தங்கள் தந்தை ராம்ஜியைப் பார்க்க, சகோதரர்கள் இருவரும் விரும்பினர். தாங்கள் வருவதாக அவருக்கு ஏற்கெனவே கடிதம் ஒன்றை எழுதிப் போட்டுவிட்டு, சிறுவர்கள் இருவரும் ரயிலில் கிளம்பிவிட்டனர், அப்பாவையும் புது ஊரையும் பார்க்க. ரயில், மசூர் என்ற ஊர் வரை சென்றது. அங்குதான் அவர்களுடைய அப்பா வந்து அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். எனவே, மசூரில் இருவரும் இறங்கிக்கொண்டனர். ஸ்டேஷன் ப்ளாட்ஃபாரத்தில் காத்துக்கொண்டே இருந்தனர். அப்பா வரவில்லை. அவருக்குத்தான் பிள்ளைகள் அனுப்பிய கடிதம் போய்ச்சேரவே இல்லையே. பின் எப்படி அவர் வருவார்? ஆனால், அது பிள்ளைகளுக்குத் தெரியாதே! அவர்கள் காத்திருந்தனர்.

அழகான இரண்டு சிறுவர்கள் அங்கே வெகு நேரம் இருப்பதைக்கண்டு ஸ்டேஷன் அதிகாரி வந்து விசாரித்தார். பையன்கள் விஷயத்தைச் சொன்னார்கள். அவருக்கு இரக்கம் வந்தது. ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்தார். போகிறபோக்கில், நீங்கள் என்ன ஜாதி என்று ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார். ‘நாங்கள் மஹர்’ என்று சிறுவர்கள் அப்பாவித்தனமாக உண்மையைச் சொன்னார்கள்.

அவ்வளவுதான்! அதிகாரியின் முகம் கருத்துவிட்டது. ஏதோ, கேட்கக்கூடாதைக் கேட்டுவிட்ட மாதிரி, பார்க்கக்கூடாததைப் பார்த்துவிட்ட மாதிரி ஆனார் அவர். அவரிடமிருந்து கொஞ்ச நேரத்துக்குமுன் பீறிட்ட மனிதநேயம், இரக்கம் எல்லாம் எங்கே வடிந்துபோனது என்று தெரியவில்லை. ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

மாலையாகிவிட்டது. இருட்ட ஆரம்பித்துவிட்டது. சிறுவர்களை அப்படியே விட்டுவிட அதிகாரிக்கு மனம் வரவில்லை. இரக்கம் மீண்டும் தலைதூக்கியது. போனால் போகிறதென்று, ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்துகொடுத்தார். பையன்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு சென்றனர். ஆனால், கொஞ்ச நேரம்தான். கொஞ்ச தூரம்தான். ஏன்? அழகான உடை உடுத்தியிருந்தாலும், அவர்கள் மஹர் ஜாதி சிறுவர்கள் என்று தெரிய வந்ததுமே, வண்டிக்காரனுக்குக் கோபமாகவும் அருவருப்பாகவும் வந்தது. ஏனெனில், அவன் ‘உயர் ஜாதி’யாம்! அந்தச் சிறுவர்களால், தானும், தன் வண்டியும், தன் மாடும்கூட தீட்டாகிவிட்டதாக அவன் நினைத்தான்!

‘புனிதத்தை’க் கெடுத்த பையன்களை என்ன செய்யலாம் என்று யோசித்தான் வண்டிக்காரன். வண்டியைக் குடைசாய்த்து, சிறுவர்களைக் கீழே தள்ளிவிட்டான். ஆனால், சிறுவர்கள் விவரமானவர்கள். தங்களை மசூர் கொண்டுபோய் விடுவதானால், அவனுக்கு இரண்டு மடங்கு பணம் தருவதாகக் கூறினார்கள்! ஒரு நிபந்தனையின் பேரில், வண்டிக்காரன் அதற்கு ஒப்புக்கொண்டான். வண்டியை சிறுவர்களே ஓட்டிக்கொண்டு போக வேண்டும்! அப்படியானால் அவன்? அவன் வண்டியின் பின்னால் நடந்தே வருவான்! அதுவும், மாலையிலிருந்து நள்ளிரவு வரை! ஜாதி உணர்வு எந்த அளவுக்கு மனித மனத்தை சாக்கடையாக்கியிருந்தது என்பது இதிலிருந்து விளங்கும். ஆனால், பணம் கொடுத்தால் ஜாதி உணர்வைக் கொஞ்சம் தள்ளிவைக்கவும் தயார்! பணம் பாதாளம் வரை பாயும், ‘மணி’ மஹர் ஜாதி வரை சாயும்?!

சிறுவர்களுக்கு நாக்கு வறண்டது. தண்ணீர் கிடைக்காமல் இல்லை. ஆனால், யாருமே கொடுக்கத் தயாராக இல்லை. பொதுமக்கள் புழங்கும் எந்த நீர் நிலையிலும், தண்ணீர் குடிக்க சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கேபோய் தண்ணீர் கேட்டாலும், ‘போ போ’ என்று விரட்டினார்கள். அல்லது அழுக்கு நீர்நிலைகளில் குடிக்கும்படிக் கூறினர்.  தாங்கள் தீண்டப்படாத ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அழுகியவற்றை உண்ணுவதும், அசுத்தமான நீரைக் குடிப்பதும்தான் தங்கள் விதி என்று தெரியவந்தபோது, சிறுவர்களுக்கு இடி விழுந்தமாதிரி இருந்தது. ஆறாத காயத்தை அவர்கள் மனத்தில் அது ஏற்படுத்தியது.

குறிப்பாக தம்பி பீமுக்கு, மேலும் மேலும் அந்த அவமானம் தொடர்ந்தது. ஒருநாள் ரொம்ப தாகமாக இருந்ததால், யாருக்கும் தெரியாமல் பொது நீர்நிலையில் அவன் தண்ணீர் குடித்துவிட்டான். அதற்காக, மக்கள் அவனைக் கடுமையாக அடித்து விரட்டினார்கள். ஒரு நாவிதன்கூட பீமுக்கு முடியிறக்க மறுத்துவிட்டான். அவர்களுடைய முடி பட்டால், தன் சவரக்கத்தி தீட்டாகிவிடும் என்று அவன் கருதினான்! ஜாதிவெறிக் கற்பனையின் உச்சகட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும். தம்பிக்கு அண்ணனே முடிதிருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!

பள்ளிக்கூடத்திலும் ஜாதிக்கொடுமை தொடர்ந்தது. ஆசிரியர்கள், பீமை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ஏன்? பீம் நல்ல அறிவாளி, எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலைச் சொல்லிவிடுவான் என்பதாலா? அல்ல. அவன் சொல்லும் பதில் தங்கள் செவிகளில் விழுந்தால், தாங்கள் தீட்டாகிவிடுவோமோ என்ற அச்சம் அவர்களுக்கு! ஒரு அழுக்குக் கோணித்துணியை உதறிப்போட்டு, சிறுவர்கள் இருவர் அதில் உட்கார்ந்துகொள்வார்கள். அதுதான் அவர்களது ஆசனம்! மற்ற மாணவர்களோடு சேர்ந்து உட்கார முடியாது! ரொம்ப தாகமெடுத்துத் தண்ணீர் கேட்டால், ஒரு புனலை எடுத்து வாய்க்கு மேல் பிடித்து, அதன் வழியாக மற்றவர்கள் ஊற்றுவார்கள்!

ஏன் இந்தக் கொடுமைகள்? கர்ணப் பரம்பரையாக வர்ணாசிரம ‘தர்மம்’ என்ற பெயரில் நிலவிய ‘அதர்மம்’ அது. இன்னும் இந்திய மண்ணைவிட்டு இந்த அவலம் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை என்பதற்கு, கடந்தகால வரலாறும், அன்றாட நிகழ்வுகளுமே சான்று. உழைப்புக்கும் வீரத்துக்கும் பெயர்பெற்ற மஹர் ஜாதி மக்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டனர். ஒரு மஹரைத் தொட்டாலோ, பார்த்தாலோ, அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ உயர்ஜாதி தீட்டுப்பட்டுவிடும். அதன் ‘புனிதத்தன்மை’யின் கற்பு அழிந்துபோகும் என்று கருதிய காலம் அது! சமூகத்தின் அங்கமாக மஹர் ஜாதியினர் பார்க்கப்படவே இல்லை. ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து இந்தப் புனிதப் பூமிக்கு இறங்கி வந்துவிட்ட பன்றிகளைப் போல்தான் அவர்கள் பார்க்கப்பட்டனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் இருந்த அம்பவாடே என்ற கிராமத்தில், 1891-ல் பிறந்தவன், மேலே நாம் பார்த்த அந்தப் பையன் பீம். அவன் கதையைத்தான் முக்கியமாக நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். 

மஹர்களுக்குத் தீண்டாமைக் கொடுமை ரொம்ப காலத்துக்குத் தொடர்ந்தது. 1918-ம் ஆண்டு, பம்பாயில் இருந்த சைடன்ஹாம் கல்லூரியில், பேராசிரியராக பீமுக்கு வேலை கிடைத்தபோதுகூட, சக பேராசிரியர்கள் சிலர், தாங்கள் தண்ணீர் குடிக்கும் ‘ஜக்’கில் இருந்து அவரும் தண்ணீர் குடிப்பதை எதிர்த்தனர்!

சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று பீம் விரும்பினார். ஆனால், பள்ளிக்கூடத்தில் அவர் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏன்? தாழ்ந்த ஜாதிக்காரர்கள் அதைப் படிக்கவோ, மற்றவர்கள் படித்தால் அருகில் நின்று கேட்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது! பீம் அவருடைய விருப்பத்துக்கு மாறாக, பாரசீக மொழியைப் படிக்கவேண்டி இருந்தது. அதிலும் ஒரு வெறுப்பு அரசியில் ஒளிந்துகொண்டிருந்தது. பாரசீக மொழி, முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரபலப்படுத்தப்பட்ட மொழி. அது முஸ்லிம்களுடைய மொழியாக அறியப்பட்டது. உர்து மொழி அதிலிருந்துதான் பெறப்பட்டது. வெறுக்கப்படவும் ஒதுக்கப்படவும் வேண்டியவர்கள் வரிசையில், தலித்துகளும் முஸ்லிம்களும் வைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால், எந்தச் சூழ்நிலையும் படிப்பதில் இருந்து பீமைத் தடுக்க முடியவில்லை. கல்வி ஒன்றுதான் தனக்கு விமோசனம் வழங்கும் என்று அவர் உள்மனம் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தது. அவருடைய வாழ்க்கை நமக்குச் சொல்லும் முக்கியமான பாடங்களில் ஒன்று அது. அவருடைய படிப்பு வெறிக்கு - ஆம் அதை வெறி என்றுதான் சொல்ல வேண்டும் -  துணையாக நின்றவர், பீமின் அப்பா ராம்ஜி. தன் மகள்களுடைய நகைகளை அடகுவைத்து, மகனுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த தந்தையை எங்காவது பார்த்திருக்கிறோமா? ஆனால், பீம் படிக்க வேண்டும் என்பதற்காக, ராம்ஜி அதைச் செய்தார்! மிகச்சிறிய வயதிலேயே, ஆங்கில அறிவை அபாரமாக வளர்த்துக்கொண்டார் பீம்.

பரோடா மன்னரின் அனுமதியின் பேரில், 11.5 பவுண்டு மாதாந்தர உதவித்தொகையில், அமெரிக்கா சென்று அங்கிருந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்றார் பீம். பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல், வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களிலும் தேர்ச்சிபெற்றார். மஹர் ஜாதியிலிருந்து அப்படி ஒரு அரிய வாய்ப்பைப் பெற்ற முதல் மாணவர் அவர்தான்.

புத்தகம் படிப்பதில் அவருக்கு இருந்த ஆசையும் சந்தோஷமும் மகத்தானது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவில் இருந்தபோது, பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று அவர் வாங்கிய நூல்கள் எவ்வளவு தெரியுமா? இரண்டாயிரம்! எவ்வளவு படித்திருப்பார் என்று யோசியுங்கள்! லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் அமர்ந்து, காலை 8 மணி முதல் மாலை 5 வரை படிப்பார்! இரவில் படிக்கும்போது பசி வாட்டும். அப்போது நான்கு பப்படங்களைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு கோப்பை தேநீர் மட்டும் அருந்தி பசியைத் தணித்துக்கொள்வார்! அவருடைய தனிப்பட்ட நூலகத்தில் 50,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன! நம்முடைய ஊர் நூலகங்களில்கூட இவ்வளவு நூல்கள் இருக்காது! அவர் எழுதிய நூல்களைப் படிப்பதென்றாலே சில ஆண்டுகள் ஆகும் நமக்கு!

இதுவரை நான் யாரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கர்தான் அவர்! மேதை என்று வெறும் புகழ்ச்சிக்காக நான் சொல்லவில்லை. நான்கு முறை இந்தியப் பல்கலைக் கழகங்களிலும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் முனைவர் பட்டம் பெற்றார் என்பதற்காகச் சொல்லவில்லை. பாரிஸ்டர் பட்டம் பெற்றார் என்பதற்காகவும் சொல்லவில்லை. பின்னாளில் இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆனார் என்பதற்காகவும் சொல்லவில்லை! மேதை என்ற புகழ்ச்சிக்கு எல்லா வகையிலும் நியாயம் செய்தவர் அவர்.


இன்றைக்கு இந்தியா என்றொரு நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால், அதன் அடிப்படைக் காரணம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்தான். ஒரு அரசாங்கம் எப்படி அமைய வேண்டும், அதன் கடமைகள் என்னென்ன, அவற்றை எப்படி நிறைவேற்ற வேண்டும், அடிப்படை உரிமைகள் என்ன, குடிமக்களின் உரிமைகள் என்ன என்பதையெல்லாம் விலாவாரியாகக் கட்டமைக்க வேண்டும்.

ஃப்ரெஞ்சு அகராதியை நாற்பது பேர் சேர்ந்து நாற்பது ஆண்டுகளாக உழைத்து உருவாக்கினார்கள். ஆனால், டாக்டர் ஜான்சன் தனி ஆளாக ஒன்பது ஆண்டுகள் உழைத்து, லட்சத்துக்கு மேல் வார்த்தைகளைக் கொண்ட உலகின் முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். அம்பேத்கரின் சாதனை, டாக்டர் ஜான்சனின் சாதனைக்கு ஒப்பானது மட்டுமல்ல, அதைவிடச் சிக்கலானதும், கடினமானதும்கூட. ஏனெனில், உலக அரசியலமைப்புச் சட்டங்களிலேயே மிக நீண்டதும், ஆகப்பெரியதுமானது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான்.

இல்லையே, அதை உருவாக்க ஏழு பேர் இருந்தார்களே என்று அரைகுறையாகத் தெரிந்தவர்கள் சொல்லலாம். அந்த ஏழு பேரில் ஒருவர், ராஜிநாமா செய்துவிட்டார். இன்னொருவர், இறந்துபோனார். இன்னொருவர், அமெரிக்கா சென்றுவிட்டார். இன்னொருவர், மாகாணங்கள் தொடர்பான வேலைகளுக்காகச் சென்றுவிட்டார். மற்ற உறுப்பினர்கள், தொலைவான இடங்களில் இருந்தனர். டெல்லிக்கு வந்து பணியாற்ற அவர்களால் முடியவில்லை(யாம்). இதையொத்த காரணங்களினால், அம்பேத்கர் ஒருவரே எல்லா வேலைகளையும் செய்யவேண்டி இருந்தது.

இதுகூட நான் சொல்லவில்லை. கைத்தான் என்ற உறுப்பினர் இறந்துபோனதால் அவர் இடத்தை நிரப்ப, வரைவுக் குழுவில் இடம்பெற்ற புதிய உறுப்பினரான டி.டி.கிருஷ்ணமாச்சாரிதான் இதைச் சொல்கிறார்!

ஆங்கிலத்தில் Herculean Task என்றும், தமிழில் இமாலயச் சாதனை என்றும் சொல்வார்கள். அது இதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படாமல் போயிருந்தால், இந்தியா சுதந்தரம் பெற்ற பின்னும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றிருக்கும். கல்லால் ஆன அகலிகையின் மீது ராமனின் காலடி மண்பட்டு அவளுக்கு உயிர்வந்த மாதிரி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி  இந்தியாவுக்கு அம்பேத்கர் உயிர் கொடுத்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, இந்திய விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் சாபவிமோசனம். இதில் மிகை ஏதும் இல்லை. 1947-ல் தொடங்கிய அந்த இமாலயப் பணி, 1949-ல் முடிந்தது.

மஹாபாரத பீமனின் நினைவாக அவருக்கு பீம் என்ற பெயர் வைத்தது ஒருவகையில் மிகவும் பொருத்தமானது. பீமன், பஞ்ச பாண்டவர்களில் பலத்திலும் உருவத்திலும் மஹா ஆளுமை. அம்பேத்கரோ, அறிவின் மூலமாக மகா ஆளுமையாகத் தன்னை உயர்த்திக்கொண்டவர். தன் அறிவை தாய்நாட்டுக்காக அர்ப்பணித்தவர். சமத்துவம், சமயச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றின் சட்டரீதியான வடிவமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்ததற்கு, பல ஆண்டுகளாக அம்பேத்கர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் வழிவகுத்தன என்றுகூடச் சொல்ல வேண்டும்.    

‘கான்ஸ்டிடியூஷன்’ சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதை மதிக்காமல் நடந்துகொள்ளும் மனிதர்களுக்கு, என்றைக்கு தெய்வத்தின் ‘ரெட்ரிப்யூஷன்’ கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை. என்றைக்கு ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ இந்தியாவின் பிரதம மந்திரியாக (ஜனாதிபதியாக அல்ல) ஆகிறாரோ, அன்றைக்கு உண்மையிலேயே இந்தியா சமயச்சார்பற்ற தேசமாக மாறத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் அதுவரை, நம்மிடையே தோன்றிய, இன்னும் தோன்ற இருக்கும் அம்பேத்கர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நிரந்தரப் பாடமாக வைப்பது பற்றியும் அவசியம் யோசிக்க வேண்டும்.
 

                                 ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com