கொய்யா – நல்ல கனி… நல்ல கனி…

ஏனோ தெரியவில்லை அற்புதமான கனியான கொய்யா, இன்னமும் கிராமத்து பாமரர்களைத் தாண்டி,

னோ தெரியவில்லை அற்புதமான கனியான கொய்யா, இன்னமும் கிராமத்து பாமரர்களைத் தாண்டி, நகரத்து உணவு மேஜைக்குப் போகவே இல்லை. அதற்கு என்ன காரணம்?

முதல் காரணம், அதன் வெளிப்புற தோற்றம். பின், உட்புறம் நிறைந்திருக்கும் விதைக்கட்டு.

அறுவடை ஆகி, ஆண்டு முழுவதும் கோல்டு ஸ்டோரேஜில் வைத்து, பளபளக்கும் கருவாடாய் வரும் ஆப்பிளுக்கு உள்ள கிராக்கி, பறித்தவுடன் கைக்கு வந்து சேரும் கொய்யாவுக்கு இல்லையே.

தோட்டக்கலை விஞ்ஞானிகளும், விவசாயிகளும் இப்போதுதான் கொய்யாவை ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியுள்ளனர். மருத்துவர்களும், உணவியலாளர்களும் கொய்யா நல்ல கனி… அவசியம் தினசரி சாப்பிடுங்கள்... ஒரு கொய்யா சாப்பிட்டால் நான்கு ஆரஞ்சு பழம் சாப்பிட்டதற்கு சமம்… 10 எலுமிச்சைக்கு சமம்… எக்கச்சக்கமான வைட்டமின் சி கொட்டிக்கிடக்கிறது… எளிதில் ஜீரணமாகும்… தினமும் கொய்யாவைச் சாப்பிட்டால் மலச்சிக்கல், மூலம் போன்ற ஜீரண மண்டலப் பிரச்னைகள் வரவே வராது என அடித்துச் சொல்கின்றனர்.

சமீபகால ஒட்டுக்கொய்யா வகைகள் வரும்வரை இருந்த நாட்டுரக கொய்யாக்களில் சதைப்பகுதி மிகக் குறைவு. விதைகள் பெரிதாக இருக்கும். சிவப்பு, ரோஸ், வெள்ளை வண்ணங்களில் சதைப் பகுதி இருந்ததாலும், அளவில் குறைவாக இருந்ததாலும், பழத்தின் அளவு சிறியதாக இருந்ததாலும், கிராமங்களைத் தாண்டவே இல்லை.
 

கல்வில்லோ என்பது மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம்தான் கொய்யாவின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. கல்வில்லோ நகரத்தின் மொத்தப் பொருளாதாரமும் கொய்யாவை மட்டுமே நம்பியுள்ளது. உலகின் பலவிதமான கொய்யா ரகங்கள் கிடைக்கும் இந்த மெக்ஸிகன் நகரத்தில்தான், அந்த நாட்டிலேயே அதிகபட்ச கொய்யா விளைகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கல்வில்லோ நகரில் நடைபெறும் கொய்யா கண்காட்சி, உலகப் புகழ் பெற்றது.

நம் தமிழகத்தில், பழநி அருகே உள்ள ஆயக்குடி எனும் கிராமத்தின் மொத்தப் பொருளாதரமும் கொய்யாவையே நம்பியுள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌ, வட இந்தியாவின் கொய்யாக்களின் தலைநகரம் எனப்படுகிறது.

நமது நாட்டில் நிலவி வரும் மாறுபட்ட காலநிலைகள், சிறப்பான மண் வளம் போன்றவை பழவகைப் பயிர்களின் உற்பத்திக்கு பெரிதும் சாதகமாக உள்ளன. நமது நாட்டின் தோட்டக்கலை விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சியால் உருவான உயர் விளைச்சலைத் தரக்கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் வாய்ந்த ரகங்கள், புதிய மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது விவசாயிகள் பயிர் செய்துவருகின்றனர்.

நமது நாட்டில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கொய்யாப் பழம் ஏற்றுமதி ஆகிறது. அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவூதி அரேபியா போன்ற நாடுகள், நம்முடைய கொய்யாப் பழங்களை இறங்குமதி செய்கின்றன.

இந்தியாவைப் போலவே சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளும், கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் கொய்யா உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. உலக அளவிலான புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் கொய்யா உற்பத்தி செய்யப்படுகிறது.

பொதுவாக கொய்யா, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவது இல்லை. பதியன்கள் மூலமாகவே கொய்யா இனப்பெருக்கமாகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், கொய்யா நடவு செய்ய ஏற்றவை.

கொய்யா செடியை நேர் மரமாக வளர்க்காமல் பரந்து படரும் செடியாக கவாத்து செய்து வளர்த்தால், கொய்யாவில் அதிக மகசூல் எடுக்க முடிவதுடன் அறுவடையும் எளிதாக இருக்கும்.

இருபது அடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள, அகல, ஆழம் உள்ள குழிகள் தோண்டப்பட்டு, அந்தக் குழியில் தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, மேல் மண் கலந்த கலவை கொண்டு மூட வேண்டும்.

தரமான காய்ப்புத் திறனையும், அதிக அளவு மகசூலும், பருவம் தவறாது காய்க்கும் தன்மையும் உள்ள தாய் செடியில் இருந்து பதியன் போடப்பட்ட கொய்யா நாற்று, மண் தொட்டிகளில் கிடைக்கும்.

தொட்டியில் உள்ள செடிக்கு ஒன்றிரண்டு மணி நேரம் முன்னதாகவே தண்ணீர் விட வேண்டும். செடியின் தண்டுப் பாகம் இரண்டு விரல்களுக்கு மத்தியில் இருக்கும்படியாக வைத்து, தொட்டியில் உள்ள மண் பகுதியையும் தாங்கிப் பிடித்து மறுகையால் சட்டியை லேசாகத் தட்டிக் கொடுத்து கவிழ்க்க வேண்டும். தொட்டியின் வாய் அகலமாகவும், கீழ்ப்பகுதி சிறியதாகவும் உள்ளதால், மண் பகுதி கையில் இறங்கிவிடும். ஒருவேளை அதிகப்படியான வேர் பிடிமானத்தால் மண் வரவில்லை என்றால், தொட்டியை உடைத்து எடுக்கலாம்.

ஆணி வேரும், சல்லி வேர்களும் எவ்வித சேதமும் ஆகாமல் எடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். மண் கண்டம் கலைந்துவிட்டால், வேர்ப்பகுதியில் காற்றுபட்டு கொய்யாச் செடி இறந்துவிடும். செடிகளை, குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். மிக உயரமான நாற்றுகளாக இருந்தால், அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, கொய்யா செடியையும் குச்சியையும் எட்டு வடிவ கயிறு பிணைந்து கட்ட வேண்டும். இந்த எட்டு வடிவ கட்டினால் கொய்யா இறுக கட்டப்படாது. ஆனால், காற்றில் ஆடாமல் இருக்கும்.

நாற்று நடவு செய்தவுடன், குழு முழுவதும் நனைந்து, மண் இறங்கி இறுக்கம் அடையும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். பின்னர், மூன்றான் நாள் உயிர் தண்ணீர் விடுவது அவசியம். அதன்பின், மண்ணின் தன்மை, பருவ கால நிலை போன்றவற்றை அனுசரித்து ஏழு முதல் பத்து நாள்களுக்கு ஒருமுறை, தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை எடுக்காத வெள்ளாமை, கால் வெள்ளாமை என்பது விவசாய முதுமொழி. எனவே, செடியைச் சுற்றி எந்தவிதமான களையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடியைச் சுற்றி மூடாக்கு போட்டால், களையும் வராது. தண்ணீரும் ஆவியாகாமல் தடுக்கப்படுவதால், தண்ணீர்ப் பாசன இடைவெளியும் அதிகரிக்கும்.

மார்ச், அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்துக்கு நனக்கு மக்கிய தொழு உரம், மக்கிய ஆட்டு உரம் போன்றவை 50 கிலோ, மண் புழு உரம் 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம் தலா அரை கிலோ வீதமும், சூடோமோனாஸ் 200 கிராம், ஹியூமிக் ஆசிட் அரை லிட்டரும் கலந்து இரண்டு பகுதிகளாக நிலத்தில் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ரசாயன உரம் போட விரும்புபவர்கள், அரை கிலோ தழை, மணி, சாம்பல் சத்து கிடைக்குமாறு ரசாயன உரங்களைக் கலந்து, மரத்தின் வெளி வட்டத்தில் குதிரை லாட வடிவில் குழி எடுத்து, ஒரு கூடை தொழு எருவுடன் கலந்து போட்டு, மண் மூடி தொடர்ந்து மண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இதேபோல், வருடம் இரண்டு முறை செய்ய வேண்டும். கொய்யாவில் போரான் சத்து குறைபாடு இருந்தால், பழங்கள் கடினமாக இருக்கும். சில சமயம் வெடித்துக் காணப்படும். இதை நீக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று கிராம் போராக்ஸ் கலந்து தெளிக்கலாம் அல்லது செடிக்கு ஐந்து கிலோ எருக்கச் செடியை வெட்டிப் புதைத்து போரான் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

கொய்யா விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னை என்றால், அது கொய்யாவில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறைதான். நுண்ணூட்டச் சத்துகளின் குறைபாட்டால் இலைகள் சிறுத்துப் போதல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்துச் செடிகள்போல் தோற்றம் தருதல், இலைகள் வெளிரிப்போதல், ஓரங்கள் தீய்ந்ததுபோன்ற தோற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இந்த நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, ஐந்து லிட்டர் தண்ணீரில் 25 கிராம் துத்தநாக சல்பேட், 25 கிராம் மக்னீசியம் சல்பேட், 25 கிராம் மாங்கனீஸ் சல்பேட், 12.5 கிராம் காப்பர் சல்பேட், 12.5 கிராம் ஃபெர்ரஸ் சல்பேட் கரைத்து, அதனுடன் சோப் ஆயில் போன்ற ஒட்டும் திரவத்தை கலந்து கீழ்க்கண்ட பருவங்களில் செடி முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். கொய்யாவில் புதிதாகத் தளிர்கள் தோன்றும்போதும், அதன்பின் முப்பது நாள்கள் கழித்தும், பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் தெளிக்க வேண்டும்.

கொய்யா பதியன் செடி என்பதால், நடவு செய்த மூன்று மாதங்களுக்கும் பூக்கள் தோன்றும். கொய்யா சுமார் 30 ஆண்டுகள் வரையிலும் வைத்திருக்க வேண்டிய மர வகை பழப்பயிர். அதனால், முதல் ஆண்டு முழுவதும் கொய்யா மரத்தில் தோன்றும் பூ மொட்டுகளை கிள்ளி நீக்கிவிட வேண்டும். அதன்பின், அதிகப்படியாக நான்கு ஐந்து பூங்கொத்து இருந்தால், பாரம் தாங்காமல் கொத்தில் இருந்து ஒன்றிரண்டு பூக்களைக் கிள்ளி நீக்கிவிட வேண்டும்.

கொய்யா மரத்தை அதிக உயரமாக, நேராக வளர்க்காமல், கவாத்து செய்து பக்கவாட்டில் புதர் போன்று அடர்த்தியாக வரும்படி வளர்க்க வேண்டும். அப்போதுதான், அதிக எண்ணிக்கையில் எளிதாகப் பறிப்பதற்கு ஏற்ப பழங்கள் கிடைக்கும்.

செடியின் அடிப்பாகத்திலும் குறுக்கும் நெடுக்குமாகத் தோன்றும் கிளைகளை கவாத்து கத்திரியின் மூலம் வெட்டி நீக்க வேண்டும். மேல் நோக்கி நீண்டு வளரும் கிளைகளின் நுனியை கிள்ளி எடுத்து பக்கவாட்டு வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.

ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகம் இல்லாத குச்சிகளை நீக்கிவிட வேண்டும். வயதான மற்றும் உற்பத்தித் திறன் குறைந்த மரங்களை தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கூர்மையான கத்தி அல்லது ரம்பத்தினால் அறுத்து மேல் பகுதியை அப்புறப்படுத்திவிட வேண்டும். இதில் மீண்டும் துளிர்த்து வரும் புதிய பக்கக் கிளைகள், இளம் மரம் மகசூல் கொடுப்பதுபோலவே நிறைவான மகசூலைக் கொடுக்கும்.

பதியன் நட்ட இரண்டாவது வருடத்தில் இருந்து கொய்யா பலன் கொடுக்கத் தொடங்கிவிடும். கொய்யா, ஆண்டு முழுவதும் பலன் கொடுத்தாலும், ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச் சீசனிலும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் சீசனிலும் அதிக அளவில் காய்க்கும். பூ பூத்ததில் இருந்து ஐந்து மாதங்களுக்குக் பழங்கள் கிடைக்கும். மரத்தின் அடர்ந்தி, பரந்து விரிந்த அளவைப் பொருத்து, மரம் ஒன்றுக்கு 500 பழங்கள் வீதம், ஹெக்டேருக்கு 25 மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைக்கும்.

கொய்யாவில் சொறி நோய் தாக்கும். பழங்கள் பழுக்கும் முன், கரிய கடினமான பகுதிகள் தோன்றி பழங்களை சேதப்படுத்தும். 0.5 சதவீத போர்டோ கலவை அல்லது 0.25 சதவீத காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலவை தெளித்து, சொறி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கொய்யாவில் தேயிலைக் கொசு தோன்றும். இது பழங்களில் மேல் துளையிட்டு உள்ளிருக்கும் பழச்சாற்றை உறிஞ்சிவிடும். இதனால், பழங்களில் தோல் பகுதியில் கரும்புள்ளிகள் தோன்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மோனோகுரோட்டாபாஸ் அல்லது 1 மில்லி மாலத்தியான் அல்லது 1 லிட்டர் பென்தியான், காலை அல்லது மாலையில் தெளிக்கலாம்.

இயற்கை முறையில் கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெய் 3 சதவீத கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி அளவில் கலந்து, உடன் சோப் ஆயிலும் சேர்த்து கலந்து தெளிக்கலாம்.

கொய்யா செடியில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் அசுவிணி பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மோனோகுரோட்டாபாஸ் அல்லது டைமித்தோயேட் கலந்து தெளிக்க வேண்டும்.

கொய்யாவில் அடுத்த பெரும் பிரச்னை, பழ ஈக்கள். இப் பூச்சிகள், பழங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தும். இதனால், பழங்கள் உதிர்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டு கீழே விழுந்த பழங்களைச் சேகரித்து அவற்றின் மேல் லிண்டேன் மருந்து தூவி ஆழமாகப் புதைத்துவிட வேண்டும்.

பூச்சித் தாக்குதல் உள்ள நேரத்தில் மரத்தைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி, ஏக்கருக்கு ஒரு கிலோ லிண்டேன் 1.3 சதவீத மருந்தை தூவலாம். ஒரு லிட்டருக்கு 1 மில்லி எண்டோசல்பான் அல்லது மாலத்தியான் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை வீதம் நான்கு முறை தொடர்ந்து தெளிக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, ஒட்டும் பசை தடவப்பட்ட அட்டைகளை மரங்களில் கட்டிவிட வேண்டும்.

செதிள் பூச்சிகள், இலைகள் மற்றும் பழங்களில் உள்ளை சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி டிரைசோபாஸ் மற்றும் 5 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது இப் பூச்சிகளை இரையாக உண்ணும் பொறிவண்டுகளை விட்டு, உயிரியல் முறையிலும் அழிக்கலாம்.

கொய்யா அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பழமாகத்தான். அத்துடன், கொய்யா ஜாம், ஜெல்லி, சாஸ், ஐஸ்கிரீம், ஊறுகாய், சட்னி, பழக்கூழ், ஜூஸ், பேஸ்ட், கேக், புட்டிங் என பல்வேறுவிதமான உணவுப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கொய்யா விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கும் மருந்துப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

திரிதோஷஞ் சென்னித் திருப்ப மரோசி

பொருமாந்தம் வாந்தி பொருமல் – கரப்பானு

மெய்யாய்ப் பரவுமல மெத்தவிடும் போகமுண்டாங்

கொய்யாப் பழத்தினாற் கூறு

என, பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தலை மயக்கம், மாந்தம், வயிப்புப் பொருமல், கரப்பான், மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும் குணம் கொய்யாவுக்கு உண்டு என்பது இந்தப் பாடலின் பொருள்.

மலைவாழ் மற்றும் பழங்குடி இன மக்கள், கொய்யா இலையை அரைத்துப் பூசி, எந்தவிதப் புண்களையும் ஆற்றிக்கொள்கின்றனர். கொய்யா இலையில் கசாயம் வைத்து காய்ச்சலைப் போக்க முடியும். கொய்யா இல்லை மென்று தின்றால், ஆடும் பற்கள், பல் சொத்தை, ஈறு வீக்கம், பல் கறைகளைப் போக்க முடியும். கொய்யா இலையில் ஹேர் டை எனப்படும் தலைச் சாயம் தயாரிக்கலாம்.

இப்படி, பல்வேறு பயன்களையும் சிறப்புகளையும் உடையது கொய்யா. அதிக விலையும் இல்லாத, வருடம் முழுவதும் கிடைக்கும் இத்தகைய சிறந்த கொய்யாப் பழத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தி பயன் அடையலாம். நகரத்து மக்கள் இதை எளிய, கிராமத்துக் கனி என்று ஒதுக்காமல் அதன் பலனுக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப் பழக வேண்டும்.

                         ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com