அத்தியாயம் 26

இன்ஸ்பெக்டர் ராமசாமி முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தார்.  
அத்தியாயம் 26

இன்ஸ்பெக்டர் ராமசாமி முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தார். காலை ஐந்து மணியிலிருந்து நிற்கிறேன்.. பத்து மணியாகிவிட்டது. இதுவரை நான்கு சடலங்கள்... நம்மூர் ஆளானால் கேஸ் எளிதில் முடித்துவிடலாம். சுதேசிகள் சுட்டார்கள் என.. இறந்தவர்களில் ஒருவன் ஆங்கிலேய ஆபீஸர்.. விடுவார்களா?

இரண்டு கிலோமீட்டர் தூரம்வரை வட்டமாப் போட்டு தேடிட்டோம். கிடைச்ச துப்பாக்கி ரவைகளெல்லாம் இந்த பொட்டியில போட்டாச்சி. சார்வாள்..’ என்றார் கான்ஸ்டபிள் குமரேசபிள்ளை.

‘சுதேசிக்காரன் எவனாச்சும் கிடக்கானாய்யா? இத்தனை சூடு நடந்திருக்கு. ஒருத்தன் கூடவா சாகல?’

‘அதான் ஆச்சரியமா இருக்கி, பாத்துகிடுங்க’ என்றார் குமரேசபிள்ளை ‘சுட்டவனெல்லாம் சாதாரண ஆளில்லய்யா. சபாபதி, அவனோட முக்கியமான ஆட்கள்.. எவனும் சுடறதுல சோட போனவனில்ல, கேட்டியளா? அவனுவ சுட்டு இவன் ஆள் ரெண்டு பேர் போயிட்டானுவ. சபாபதிய எவஞ்சுட்டான் தெரியல’

‘அதான் பிடிச்சிருக்கோம்லா, நம்மாள் முத்துராசா..

முத்துராசா அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் கைகளில் விலங்கிடப்பட்டிருந்தது. அவன் முகம் இறுகியிருந்த்து. கீழே தரையைப் பார்த்த் நிலைகுத்தியிருந்தன அவன் கண்கள். ‘திருநவேலிக்கு கொண்டு போணுமாம். கலெக்டர் பாக்கணும்காராம்’  மூச்சிரைக்க ஏறி வந்த ஒரு கான்ஸ்டபிள் சொன்னார்.

களக்காடு கிராமத்தில் மக்கள் தெருவெங்கும் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். சிறுவர்கள் மரங்களில் ஏறி நின்று, மலையிலிருந்து வரும் பாதையை பேராவலுடன் கவனித்துக்கொண்டிருந்தனர்.

‘வந்தாச்சி. எக்கா, வந்தாச்சி’ என்றபடி ஒரு சிறுவன் கத்திக்கொண்டே கீழிறங்கி தலைதெறிக்க ஓட , பிற சிறுவர்கள் அவன் பின் ஓடினர். பெண்கள் பதறி, வீடுகளின் வாசலின் உட்புறம் மறைந்து நின்று வேடிக்கை பார்த்தனர். ஆண்களில் பலர் வீடுகளின் திண்ணையிலும், தெருவோரங்களிலும் ஒதுங்கினர். சரிவில் காவலர்கள் இறங்கி வர, அதன்பின் சில பெண்கள்.. அதில் ஒருத்தி வெள்ளைக்காரி.

அடிவாரத்தில் ஒரு குதிரை வண்டி நின்றிருக்க, அதில் அப்பெண்ணும், இரு சேடிப்பெண்களும் ஏறிக்கொண்டனர். முன்னும் பின்னும் இரு குதிரைகளின் மேல் காவலர்கள் ஆரோகணித்திருக்க, அக்குதிரை வண்டி முக்கிய சாலையை மெல்ல அடைந்து, பின் வேகமெடுத்து, திருநெல்வேலை நோக்கி விரைந்தது.

ஆனியினருகே அமர்ந்திருந்த முத்தாயியின் விசும்பல் குதிரைகளின் குளம்பொலியில் அடங்கிப் போனது.

***

லிண்டா, ஆன்லைன் எக்ஸல்-லில்  தனது செலவுகளை பதிவேற்றம் செய்து, மீண்டும் ஒருமுறை சரிபார்த்தாள். முகில் கணனியில் தனது கோப்புகளை பத்திரமாகச் சேமித்து வைப்பதிலும், அதனை அடிக்கடி சரிபார்ப்பதிலும் லிண்டாவின் பொறுமை, ஒழுங்கு மிக அதிகம். அன்றைய கணக்குகளைச் சரிபார்த்தவள், டிங் என்ற் ஒலியுடன் வந்த  மின்ன்ஞ்சலின்  பொருள் கண்டு உற்சாகமானாள். ஒரு பதட்டத்துடன் அதனை சொடுக்கி விரித்தவள், இணைக்கப்பட்டிருந்த கோப்பினை தரவிரக்கினாள்.

ஒரு நிமிடம் அதனைக் கவனமாகப் பார்த்தபின், எழுந்து அறைக்குள் சிந்தனையுடன் உலவினாள். பின் மீண்டும் கோப்பினைத் திறந்து பார்த்து, ப்ரிண்ட் செய்துகொண்டாள். சில நிமிட தீவிர யோசனையின் பின், அக்காகிதத்தைக் கையில் இறுகப்பற்றியவாறு, மாடசாமியின் அறைக்குச் சென்றாள்.

‘மாடா, முத்துகுமார் குடும்பத்துல பெரியவங்க அனைவரையும் நான் சந்திக்கணும். ஏற்பாடு செய்யுங்க..’

‘யாரெல்லாம் வரணும்? சிலர் ரொம்ப வயசானவங்க. அவன் சித்தி கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவ.’

‘எல்லாரையும்..எல்லாரையும் பாக்கணும். அவங்க வரமுடியாதுன்னா, நாம போவோம்’

மாடசாமி முத்துக்குமாரை அழைத்து விவரத்தைச் சொன்னார். ‘எதுக்குன்னு தெரியலைடே. இந்தம்மா எப்ப என்ன சொல்லும், செய்யும்னு எவங்கண்டான்? ஆட்கள் ஜாஸ்தில்லா?  எதுக்கும் உங்க சித்தி வீட்டுப்பக்கமே போயிருவம்.’

அடுத்த நாள் காலை முத்துகுமார் குடும்பத்தில், அவன் பெரியப்பா, அவரது மகன்கள், மகள்கள், முத்துக்குமார், அவன் பெற்றோர், அக்கா என ஒரு கூட்டமே அவனது சித்தி வீட்டினருகே நின்றிருந்தனர். தெருவிலிருந்தவர்கள், ஒர் வியப்புடன் வேடிக்கை பார்த்து நிற்க ‘வீட்டுல விசேசமாக்கும்?’ என்ற கேள்விக்கு விட்டேத்தியாகப் பதில் சொன்னான்.

லிண்டா, மாடசாமியுடன் சரியாக ஒன்பது மணிக்கு அவரது காரில் வந்து இறங்கினாள். ‘முத்து, நான் சொல்வதை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லு’ என்ற வேண்டுகோளுடன் அனைவரையும் அமரச்சொன்னாள். மாடசாமியை ‘ நீங்க போலாம்’ என்பதாகப் பார்த்தாள். அவர் புரிந்ததாகத் தலையசைத்து வெளியே  சென்றார்.

‘உங்களுடைய மரபணுக்களைப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தேன். குடும்பத் தொடர்புகளை ஆராய்ந்து சொல்கிற ஆய்வு அது.

எங்களிடம் ஆனியின் சேகரிப்பில் இருந்த தடயங்களென இரு மாதிரிகள் உள்ளன. முத்துராசா என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைடில் பாதுகாக்கப்பட்ட ஒன்று. மற்றொன்று, ஆனிக்குப் பரிசாகக் கிடைத்த இரு காதணிகள். இவை, ‘முத்துராசாவின் மனைவியின் நகைகள்’ என அவர் வைத்திருந்த குறிப்பொன்று உணர்த்துகிறது.  இக்காதணிகளின் ஊசிகளில் இருந்த செல்களை பிரித்தெடுத்தோம்.  இத்தனை வருடங்கள் போனதில், மாதிரிகளில் இருந்து கிடைத்த மரபணுக்கள் பெரும்பாலும் சிதிலமடைந்து போய்விட்டன. பிற மரபணுக்கள் கலந்து மாசுபட்டுப் போயிருக்கின்றன. ‘

‘அடிப்பாவி’ திகைத்தான் முத்துக்குமார். ‘இவ்வளவு விசயம் வைத்திருப்பதைச் சொல்லவேயில்லையே இவள்?’.

‘எனினும், இரு விதமான ஆய்வுகளை மேற்கொண்டோம். ஒன்று, முத்துராசா அவர்களுடைய மரபணு, மற்றது, அவரது மனைவியின் மரபணு. இது, எம்.ஆர்.என்.ஏ என்ற மரபணுப்பொருளில் கிடைக்கும். இரண்டையுமே தேடச் சொன்னோம். இரு தலைமுறை இடைவெளியில் துல்லியமாகக் கிடைப்பது அரிதுதான். ‘

‘என்னத்தைத் தேடினீங்க? ஒண்ணுமே புரியலையே?’ என்றார் முத்துவின் பெரியப்பா.

‘முத்துராசா அவர்களோட தலைமுறை எந்த குடும்பத்துல பரவியிருக்குன்னு உறுதி செஞ்சுதான் சில முடிவுகளை எடுக்க முடியும். அதுனால..’ என்றவள் சொல்லிவிடவா? என்பதாக முத்துக்குமாரை ஏறிட்டாள்

முத்துக்குமார் வேணடாம் என்பதாக கண்ணசைத்தான். ‘அவங்க, ஒரு ஆராய்ச்சியில சுதேசிகளின் உண்மையான வாரிசுகள் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு வேலை செய்யறாங்க. அதுல நம்ம பெரிய தாத்தா பேரு இருக்கு.

‘டே, அவர் பையந்தான் முந்தியே செத்துட்டாரே? நானு, ஒங்கப்பா எல்லாரும் அவரு தம்பி வம்சாவளில்லா?’ என்றார் பெரியப்பா.

லிண்டா மெல்ல முறுவலித்தாள். அவள் கைகளிலிருந்த காகிதத்தை உயர்த்திக் காட்டினாள். ‘இதுல பரிசோதனைகளின் முடிவு வந்திருக்கு. முத்துராசாவின்  சகோதர சகோதரிகளோட, அடுத்தடுத்த சந்ததிகள், இங்க இருக்கிற அஞ்சு பேரோட மாதிரிகளை சோதனை செஞ்சிருக்கோம். மரபணு தொடர்பு மூலமா, ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் இவங்கன்னு நல்லாவே தெரியுது.  ‘ எனவே நான் தேடற முத்துராசாவின் நீட்சியான குடும்பம் நீங்கதான்னு உறுதியாயிருச்சு.’

அவள் நிறுத்தினாள். காகிதக்கற்றையின்  கடைசிப்பக்கத்தை உயர்த்திப் பிடித்தாள்.     ‘நான் அறியாமலே இன்னொரு மாதிரி, ஆறாவது ஒன்று, இதோட போயிருக்கு. எப்படிப் போச்சு, யாருன்னு அப்புறம் பார்க்கலாம். ஆனா, அந்த மாதிரியோட முடிவுகள்..’ அவள் தன் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அடக்க முயற்சித்தது முத்துக்குமாருக்கு விளங்கியது.

‘அந்த மாதிரியோட முடிவுகள்ல, முத்துராசாவின் மரபணு கடந்து வந்திருப்பது தெரியுது. அதோட, உங்க மாதிரிகள்ல, மற்றொரு மரபணுவையும் பார்க்கச் சொல்லியிருந்தோம். அது, அவரது மனைவியின் மரபணு. இது, இருவருக்கும் பிறந்த குழந்தையிடம் இருந்து, அடுத்த தலைமுறையில் மெல்லக்குறைந்து வரும். இருவரின் மரபணுவும் தோன்றுவது அவரது நேர் சந்ததியிடம் மட்டுமே சாத்தியம். அது இந்த ஆறாவது மாதிரியில் இருக்கிறது.. உங்களில் அவரது நேரடிச் சந்ததியாக இருப்பது யார்?’

கூட்டம் திகைத்து ஒரு கணம் மவுனித்தது. பின் அவர்கள், சளசளவென தன்னுள் பேசத்தொடங்கினர். ‘ ஏ, அவர் பையன் சின்ன வயசுலயே செத்துட்டாரு. சாகறப்போ அந்தப் பையனுக்கு வயசு என்ன, பத்து பன்னெண்டு இருந்திருக்கும். அப்ப எங்கேருந்து அவருக்கு அடுத்த சந்ததி வரும்?’ பெரியப்பா குழம்பிக் கடுப்பானார்.

‘இந்த மரபணு சோதனையில மண்ணள்ளிப் போட.. சந்தோசமா இருந்தம். இப்ப யாரு, யாருக்கு என்ன உறவுன்னே சந்தேகமாற மாரி,  அடி மடியில கைவைக்காளே? வெளங்குவாளா?’ பெரியம்மா புலம்பத் தொடங்கினாள்.

‘நான்தான்’ குரல் கேட்டு,  சிலர் திரும்பினர். அழுவதில் கவனமாக இருந்தவர்களில் சிலர் பிறர் திரும்புவதைப் பார்த்து திரும்பினர்.

மாடசாமி வாசற்கதவைத் தாண்டி உள்ளே நின்றிருந்தார்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com