அத்தியாயம் 21

‘இருக்கு தொர’ போன வாரம் ஒரு மிளாவை அடிச்சு ஆத்துல இழுத்துப் போட்டிருந்துச்சு.
அத்தியாயம் 21

‘இருக்கு தொர’ போன வாரம் ஒரு மிளாவை அடிச்சு ஆத்துல இழுத்துப் போட்டிருந்துச்சு. சகதியெல்லாம் ரெத்தமா கிடந்துச்சா, பயந்துபோயி இறங்கிட்டோம்’

முன்னே நின்ற இருவர் பதற்றமாக கைகளை ஆட்டியபடி பேச, ஆண்டர்ஸன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். முத்துராசா விரித்த முடியை கோதி, முடிந்துகொண்டிருக்க, முத்தாயி அவர்கள் சொன்னதை, உடைந்த ஆங்கிலத்தில் ஆனிக்கு விளக்கிக்கொண்டிருந்தாள். ஆனி, தன் பங்கிற்குத் தான் அறிந்த தமிழில் ஆண்டர்ஸனிடம் விவரித்தாள். மும்முனை மொழிபெயர்ப்பாக நடைபெற்ற அச்சுவையான நாடகம், விரைவில் முடிவுபெற்றது.

‘புலி களக்காட்டு பகுதியிலேயே இருக்காம்.  அடிபட்டிருக்குன்னு சொல்றாங்க. ஒரு காலை விந்தி விந்தி நடந்திருக்கு. ஒரு கால் தடம் மெல்ல, ஒரு கோணத்தில் பதிந்திருக்கு. அதிக வேகமாக ஓட முடியாது. ஆனா வெறியில இருக்கு. ஆபத்துங்கறாங்க/ அதுவும் ரெண்டு நாள்ல அமாவாசை பாத்தீங்களா? இருட்டுல நாம வழி தவறிடுவோம்’

ஆண்டர்ஸன் சற்றே பரபரத்ததாக ஆனி உணர்ந்தாள். இந்த மழையில் ஒரு புலி வேட்டை தேவையா? அதுவும் வங்காளத்தில் இதன்முன் அதிகமாக புலிவேட்டையென்று இவன் போனதாக எவருமே சொல்லவில்லையே? இப்போது எங்கிருந்து அதீத வேட்கை, அதுவும் ஆபத்தான நிலையில்?’

‘மழை அதிகமாகப் பெய்ய வாய்ப்பிருக்கிறது’ என்று களக்காட்டில் கேட்டபோது ஆண்டர்ஸன் உற்சாகம் குன்றினான். ‘எப்படியும் செல்லவேண்டும்.. விட முடியாது. அது திருவிதாங்கூர் காடுகளுக்குள் செல்லுமுன் எனது குண்டுகள் அதனைத் துளைக்க வேண்டும். சபாபதி, நாளை அதிகாலையில் மேலே செல்வோம். பத்துபேர் நம்மோடு வரவேண்டும். மீதமிருக்கும் இருக்கும் ஐந்து பேரில் இருவர் இப்பெண்களோடு கீழே களக்காட்டு கிராமத்தில் இறங்கட்டும், மூவர் கிழக்குப் பக்கமாக நாம் நேற்று முகாமிட்டிருந்த இடத்திற்குச் செல்லட்டும். இப்போதே அவர்களை கிழக்கில் திரும்பிப் போகச் சொல். ‘

சபாபதி திகைத்தான். ‘இப்போதா? அடர்ந்த காட்டில், மழையில் மூவர் திரும்பிப் போவது என்பது மரண தண்டனை. ‘அதோடு அனுபவமிகுந்த அவனுக்கு லேசாக சந்தேகம் தட்டியது.

பத்து பேர் மேற்குப்புறமாக வளைக்கிறோம். திருவிதாங்கூர் எல்லை இக்காட்டில் மிக அருகில் எங்கோ இருக்கிறது. அதைக் கடந்தால் மலையாளக் காடு. மேலே சென்று வடக்கில் திரும்பினாலும், அடர்ந்த மலையாளக் காடுகள். செல்வதே கடினம். கிழக்கே சென்றால்..

நமது ஆட்கள் மூவர். அவர்கள் என்ன செய்துவிட முடியும். ? புரியவில்லை. 

தெற்கே, கீழே இறங்கினால் களக்காடு கிராமம்.. இப்பகுதியில் புலி இறங்காது.

சற்றே தொலைவில் சரசரவென எழுந்த ஒலியில் சபாபதி திரும்பினான். போலீஸ் படை. சிறப்புப் படை, என்பீல்டு ரைஃபிள்களை ஏந்தியபடி.

சட்டேன அவனுக்குப் புரிந்து போனது.

இது  புலிவேட்டையில்லை.

ஆண்டர்சனை அணுகிய சீனியர் இன்ஸ்பெக்டர் ஒருவர் விரைத்து சல்யூட் அடித்தார். ஆண்டர்ஸன் எழுந்தான் அவன் முகம் அசாதாரணமாக ஜொலித்தது. ‘முப்பது பேர் எனது குழுவுடன் மலையில் ஏறவேண்டும். மலையில் இருந்து இறங்கும் இடங்களில் மிச்சமிருக்கும் இருபது பேரை நிறுத்திவையுங்கள். இறங்கும் எவரையும் கண்டவுடன் சுடவேண்டும்’

‘யெஸ் ஸர்’

‘கிழக்குப் பகுதியில்?’

‘இருவது பேர் கொண்ட குழு நேற்று நீங்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்கள் அவர்களுக்கு சரியான இடத்தைக் காட்டவேண்டும். அந்த இருபத்து மூன்று பேரும் கிழக்கில் அடைத்துவிடுவார்கள். காலை மூன்று மணியளவில் கிழக்கு அடைக்கப்படும்’

‘வெரிகுட்’ ஆண்டர்ஸன்  தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து சபாபதியிடம் நீட்டினான் ‘இந்த பட்டியலில் இருக்கும் பத்து பேர், இவரது குழுவை மலையில் வழிநடத்திச் செல்லட்டும். அவர்களுடன் நாம் இருவரும் போவோம்.’ சபாபதி இயந்திர கதியில் அக்காகிதத்தை வாங்கிப் பார்த்தான். தனது குழுவில் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருந்த அவனுக்கு ஒரு நொடியில் பெயர்களின் தொடர்பு புரிந்தது. 

அனைவரும் களக்காடு, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். மலைப்குதியை நன்கு அறிந்தவர்கள். இருவர்,திருவிதங்கூர் மலைப்பகுதியில் இருந்து வந்தவர்கள். இவர்கள் இருக்கும் வரை மலைக்காடு என்பது மரங்களற்ற, சமதள பூமி. எதுவும் எவரும் தாண்டிச் சென்றுவிட முடியாது.

ஆண்டர்ஸனின் கையில் என்பீல்டு ரைபில் ஒன்று இருந்தது. அவன் இடுப்பில் வெப்லி. ஒரு கோணத்தில் சற்றே நீட்டிக்கொண்டிருந்தது.

‘ஆனி, உனது தோழியரோடு களக்காட்டு கிராமத்தில் தங்கலாம். இரு வீரர்களை காவலுக்கு விட்டுச் செல்கிறேன்.  அதுகூட வேண்டாம். போலீஸ் இருக்கிறது’ என்ற ஆண்டர்சனை சட்டென அவள் வெட்டினாள்.

‘இந்த மழையில் காட்டாறு, பாதையை வெட்டியிருக்கிறது. கீழே இறங்க முடியாது’

‘யார் சொன்னார்கள்?’

‘ஆம்’ என்றான் சபாபதி, தயக்கத்துடன். பயணத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல்,  கீழே இறங்கி ஓட முயன்ற இருவர், முடியாமல் மீண்டும் முகாமுக்கு வந்து சேர்ந்ததையும், அவர்கள் விவரித்த மழையின் கோரக் காட்சியையும் மெல்ல விவரித்தான். ‘கீழே எளிதில் இறங்கிவிட முடியாது. வழுக்குப் பாதைகளுடன், திடீரெனப் பெருகும் ஓடைகளின் வேகம், திசை மாற்றம் பெரும் ஆபத்து’.

சிந்தனையில் ஆழ்ந்த ஆண்டர்சன் ‘அந்த செங்கல்தேரி ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்.. சில வருடங்களுக்கு முன்புதானே கட்டினார்கள்? நீங்கள் அனைவரும் அதற்குப் போய்விடலாம்’

முன்னே கைகட்டி நின்றிருந்தவரில் ஒருவன் பதற்றமானான் ‘அது இன்னும் ஆபத்து. குறுக்கு வழின்னா நேரே ஏறணும். இந்த மழையில, இருட்டுல அது பழகினவங்களாலேயே முடியாது. சுத்திப் போகலாம்... அதுவும் ரெண்டு ஓடையைக் கடக்கணும். அதுவும் ராத்திரியில ஆபத்து. வேணாம்’

ஆனி, ‘இங்கயே இருந்திடலாம். காலேல மழை நின்னப்புறம் கீழ இறங்கிடுவோம்’ என்றாள்.

ஆண்டர்ஸன் ‘மூன்று பேர் இங்க காவலுக்கு இருக்கட்டும். நாம கிளம்புவோம்’ என்றவன், சட்டென முத்துராசாவை ஏறிட்டான்.

‘நீ எங்கூட வர்ரே. இங்க சபாபதியோட ஆட்கள் ரெண்டுபேரும் ஒரு போலிஸூம் இருக்கட்டும்’

சபாபதியின் முகத்தில் ஒரு முறுவல் படர்ந்தது. முத்துராசா, சட்டென ஆண்டர்ஸனை ஏறிட்டான்.

முத்துராசாவின் முகத்தில் தெரிந்தது ஒரு ஏமாற்றமா? அல்லது ஒரு பழிவாங்கும் வன்மத்தின் சுடரா?

ஆனிக்குத் தெரியவில்லை.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com