அத்தியாயம் 25

லிண்டாவின் அறையில் வெகுநேரம் தொலைத்தொடர்பு உரையாடல் கேட்டுக்கொண்டிருந்தது.
அத்தியாயம் 25

லிண்டாவின் அறையில் வெகுநேரம் தொலைதொடர்பு உரையாடல் கேட்டுக்கொண்டிருந்தது. சன்னமாக தெளிவுறாமல் இருந்தாலும், அதன் சாராம்சம் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு மாடசாமியால் ஊகிக்க முடிந்தது. வெளியே சென்று செல்போனை எடுத்தவர், சில நிமிட தயக்கத்தின்பின் , போனை இயக்கினார்.

‘முத்து?’ எங்கிட்டிருக்க?  ஜங்ஷன் வரை வாரியா?  ஒண்ணு சொல்லணுமே?’

மறுமுனையில் முத்து ஒரு நிமிடம் எரிச்சலானான். இந்த பார்ஸல், கூரியர், டிக்கட் சேவை கம்பெனிகளே இப்படித்தான்.  பார்ஸல் சர்வீஸ்ல பில் போடாம போட்டது பொருள் தொலைஞ்சிருக்கும். இப்ப எப்படி அதச் சமாளிக்கறதன்னு கேக்கறதுக்கு கூப்பிடறாரு போல.

‘என்ன விசயம்?’ என்றான் முத்து. இருவரும் ஜங்ஷன் நெரிசலிலிருந்து மெல்ல நடந்து மேம்பாலம் வரை வந்திருந்தனர். அதுவரை அமைதியாக வந்த மாடசாமி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்ல ‘இந்தம்மா போக்கு சரியில்லயே?’ என்றார்.

‘என்ன சரியில்ல? இப்படி மொண்ணையாச் சொன்னா எப்படி?’

‘ராப்பூரா எதோ வளவளன்னு பேச்சு.. எவங்கிட்டயோ இண்டர்நெட்டுல. அதுக்கப்புறம், லாப்டாப்புல எதோ கலர் கலரா படம் பாத்திட்டிருக்கு. என்னான்னு கேட்டேன். கான்ஸர் வந்த செல்களோட படமாம். இந்தம்மா கான்ஸர் ஆய்வு செய்யுதா, இல்ல முப்பாட்டன் காலத்து துப்பாக்கியத் தேடுதான்ன்னு தெரியல’

‘என்னமும் செஞ்சிட்டுப் போட்டும். அதான் ஒங்களுக்கு சொளையா மாசாமாசம் அம்பதாயிரம் ரூவா வாடகை தர்றென்னுட்டாள்லா? பொறவென்னா?”

‘அட, அதுக்கில்லடே.. இன்னிக்கு கொஞ்சம் கவனமா கேட்டேன் பாத்துக்க.’

‘ஒட்டுக்கேட்டேன்னு சொல்லுங்க’

‘சரி, ஒட்டுக்கேட்டேன். வச்சிக்க. என்னமோ ஒரு மில்லியன் பவுண்டுன்னு சொன்னா.. ரொம்ப பெரிய தொகைல்லா? கிட்டத்தட்ட ஒம்பது கோடி.’

முத்துக்குமார் தன் பதற்றத்தை மறைக்க சிரமப்பட்டான் ‘அது.. அவங்க ஆராய்ச்சி கம்பெனி வரவு செலவா இருக்கும். விட்டுத்தள்ளுங்க’

‘இல்லடே.. இங்கிட்டு யாரோ குடும்பத்துக்குக் கொடுப்பாங்களாம். அப்படித்தான் அரசல் புரசலா காதுல விழுந்தது. யாரு குடும்பத்துக்கு சொல்லுதாவ?”

‘யாருக்கா இருந்தான்ன, அண்ணாச்சி. நமக்கில்ல. விடுங்க.’

‘மாடசாமி அவன் தோள்களைத் தொட்டார் ‘தெரியாத மாரி வெளயாடாத, முத்து, வெளங்குதா? எனக்கு ஓரளவு புரியுது. உங்க குடும்பத்துல ஏதோ தொடர்பு இருக்கு. அதுக்குத்தான், இந்த வேகாத வெயில்ல திருநவேலில வந்து சாகுதா, அவ. ஒனக்கு சொல்ல பிடிக்கலேன்னா எனக்குன்னு ஒண்ணுஞ் சொல்லேண்டா. கேட்டியா?’

முத்துக்குமார் அமைதியாக இருந்தான். மாடசாமி அவனை விடுத்து முன்னே நடந்தார்.  நெரிசலில் மெல்ல ஊர்ந்து திரும்பிக்கொண்டிருந்த ஒரு பஸ்ஸில் தாவி ஏறி மறைந்து போனார்.

அவர் பஸ்ஸில் ஏறிய ஒரு நிமிடத்தில் லிண்டாவின் போன் வந்த்து. ‘முத்து, ஒரு ஹெல்ப் வேணும்

‘என்ன?’ என்றான் அசிரத்தையாக.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com