அத்தியாயம் 19

ஆனியால் உறங்க முடியவில்லை. வெளியே ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
அத்தியாயம் 19

ஆனியால் உறங்க முடியவில்லை. வெளியே ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு பெண் அழுவது போல… சட்டென ஒரு கோபமும் அலுப்பும் தோன்றின அவளுக்கு. இந்த காவலர்கள் எப்பவும் எந்தப் பெண் கிடைப்பாள் என்றே அலைகிறார்களா? இவர்கள் இடுப்பில் யூனிபார்ம் இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரம்தான் அதிகம் போல.

எரிச்சலுடன் வெளிவந்த ஆனி, கண்ட காட்சியில் சற்றே நிம்மதியானாள். முழு உடையணிந்த ஆண்கள், அவர்களோடு உடையணிந்த பெண் ஒருத்தி கைகுவித்து ஏதோ இறைஞ்சுகிறாள்.

ஆனியைப் பார்த்ததும் அவள் கால்களில் விழுந்த பெண்ணை எழுப்ப  இரு சேடிப்பெண்கள் வரவேண்டியதாயிற்று. மெல்ல மெல்ல அவள் கேவல்களூடே சொல்லிய செய்தியை பணிப்பெண்கள் உடைந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அந்தப் பெண் பேசிய மொழி தமிழல்ல. தெலுங்கோ, மலையாளமோ...

‘என் புருசன் விரலை வெட்டியனவரு நாளைக்கு, கழுத்த வெட்ட மாட்டாருன்னு என்ன நிச்சயம் தொரசானி? புள்ளைங்க ரெண்டு இருக்கு.’

‘யாரு வெட்டினது?’ 

காவலாளிகள் தெரியாது என்பதாக தலையசைத்தனர். அவர்களில் ஒருவன் கண்களில் மிரட்சி தெரிந்தது. ஆனி புரிந்துகொண்டாள். சொல்லப் பயப்படுகிறான். முத்தாயி தூக்கம் கலைந்து வெளியே வந்தாள். செய்தியைக் கேட்டவள் ‘பயப்படாதே, வெட்டமாட்டாங்க’ என்றாள்.

‘நீ சொல்லுத மவளே. வெட்டறவன் ஒன்னைக் கேட்டுட்டா வெட்டுவான்? தொர்சானி மனசுவச்சா...’

‘நாஞ்சொல்லுதேன்லா? வெட்டமாட்டான்.போ’ என்றாள் உறுதியாக.

அந்தப்பெண் தயங்கித்தயங்கி வெளியேற, ஒரு காவலாளி தீப்பந்தத்தை ஏந்தியபடி அவளுடன் சென்றபின்னர், ஆனி கேட்டாள் ‘உனக்கு எப்படித் தெரியும்? சும்மா அனுப்பிவைக்க அப்படி சொன்னியா?’

‘இல்ல’ என்றவள் தயங்கினாள். மற்ற காவலர்கள் விலகிச்செல்ல, தீப்பந்த சிவப்பொளியில், சடசடவெனப் பறந்த தீப்பொறிகளினூடே, ஆனியின் சிவந்த முகத்தருகே வெகுவாக நெருங்கி ‘எங்கண்ணந்தான் வெட்டினான். அது அவன் தந்த தண்டனை. ஒருவாட்டிதான் தண்டனை. அவங்கிட்டேர்ந்து வரும்’

‘யாரு ,உங்கண்ணன்?  அதான் போலீஸ் இருக்கு, கோர்ட்டு இருக்கு, அவங்க பாத்துக்குவாங்களே?’

அண்ணன் வெள்ளையர்களை அதிகமாக இப்போதெல்லாம் நம்புவதில்லை என்பதை எப்படிச் சொல்வது?

‘அண்ணனுக்கு ஒரு நீதி உண்டு. அதைத் தாண்டி எதையும் செய்ய மாட்டான். சத்தியம் கொடுத்திருக்கான். இந்த ஊர்ல ஒரு பொண்ணும், குழந்தையும், வயசானவங்களும் ஒரு அநியாயம் நடக்க விடமாட்டேன். நடந்தா, அவனை விடமாட்டேன்’ன்னு கருப்பண்ண சாமி முன்னாடி, வாளால விரல்ல கீறி ரத்த சத்தியம் செஞ்சிருக்கான்.’

ஆனிக்குத் தான் காணாத முத்துராசாவிடம் ஒரு கோபம் எழுந்தது. இப்படி ஆளுக்காள் அரசு நடத்தினால் எப்படி சமூக ஒழுங்கு இருக்கும்? முத்தாயியிடம் சொல்ல வேண்டும். உன் அண்ணனை ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்ல, நானே போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துருவேன்.

கேட்டபோது முத்தாயி பெரிதாகச் சிரித்தாள் ‘அண்ணன் போலீஸ்லேர்ந்துதான் வெளிய வந்திருக்கு.’ என்றவள் சட்டென சிரிப்பை நிறுத்தினாள்.

‘அண்ணன் எப்பவாச்சும் திடீர்னு எங்கயோ வெறிச்சு பாத்திகிட்டிருக்கும்.. என்னண்ணே?ன்னா, அங்கிட்டு அம்மா நிக்கா. இனிமே எந்தப் பொம்பளையும் அய்யோன்னு கதறக்கூடாதுங்கா.:ன்னும்’

ஆனி அவள் பேச்சை திசை மாற்றினாள். ஒரு முறை அவனது தோற்றத்தை நினைத்துப் பார்த்தாள். வெகுவும் சாதாரண உடல்வாகு.  அவனது கொண்டையும், கருகருவென்றிருக்கும் அவனது மெலிந்த உடலும் பிற பழுப்பர்களைப் போலவே இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இந்தப் பழுப்பர்கள் பலரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். மெலிந்து, உயிரின்றி, தாடி வைத்து, அல்லது வைக்காமல்.. எப்படியும் ஒரு தாக்கம் வராது.

அன்றும் மறுநாளும் ஆண்டர்ஸனுக்கு அருகே அவனைக் காணவில்லை என்பதை அன்றுதான் ஆனி கவனித்தாள். ‘ஆண்டர்ஸன் அவனைக் கழற்றி விட்டிருப்பான்’ என எண்ணினாள். சட்டென எப்படி அவன் இல்லாததைக் காண முடிந்தது? என்பதை தன்னுள் வியந்தாள். 

களக்காடு பகுதியின் மேலே, காட்டினுள் முகாமிட்டிருந்தனர். அரைநாள் பயணம், அரைநாள் முகாமிடும் வேலை.. மழைக்காடு என்பது மிகவும் ஈரப்பதமிக்க, மூச்சு முட்டும், வியர்வை பொங்க வைக்கும் இடம். ஆனிக்கு மூச்சு முட்டவே, அங்கு சற்றே செடிகள் அகன்றிருந்த இடத்தில் அவளுக்கும் சில பெண்களூக்குமாக கூடாரம் அடிக்கப்பட்டது. ஆண்டர்ஸன் முகம் சிவக்க ‘இதுதான் நீ வரவேண்டாம் என்றேன், ஆனி’ என்றான். அவள் பதிலுக்கு கோபமாகப் பேசத் தொடங்க, வேண்டா வெறுப்பாக இரு காவலாளிகளை அவள் இருக்குமிடத்தில் அமர்த்தினான்.

மூன்றாம் நாள் விடிகாலையில் முத்தாயி யாரிடமோ உச்சத்தில்  கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டாள். முத்தாயியின் முன் ஒரு மெலிந்த உருவம் குனிந்து அமர்ந்திருக்க, அவள் உச்சஸ்தாயியில் கொதித்துக் கொண்டிருந்தாள் ‘இதான் உனக்கு திண்ணக்கம் அதிகம்ங்கேன். எவ எப்படிப் போனா ஒனக்கென்னா? அங்? அவ ஒம்பொஞ்சாதியா?’

‘ஏட்டி, அடக்கிப் பேசு’ என்றது அவ்வுருவம் மெலிதான குரலில்.

‘எவளோ காட்டுல தொலைஞ்சு நின்னாளாம். இவன் அவகூட மலையில இறங்கி கிராமம் வரைக்கும் போயி விட்டுட்டு வந்தானாம். நீயென்ன சொள்ள மாடனா, இல்ல ஊர்க்காவல் தெய்வமா? கேக்கேன். சொல்லுண்ணே’

அவன் ஆனியைக் கண்டு மெல்ல எழுந்தான். கண்கள் தூக்கமின்மையில் சிவந்திருக்க, உடலெங்கும் அழுக்காக, மிகச்சோர்ந்திருந்தான். முத்தாயி கத்திக் கொண்டேயிருந்தாள். அவன் ஆனியைப் பார்த்து மெல்லப் புன்னகைத்து, மெல்ல அங்கிருந்து நகர்ந்தான். இரு மணி நேரம் கழித்து அவன், ஆண்டர்ஸனின் அருகே நின்றிருந்ததை ஆனி கண்டாள். அவளைப் பார்த்ததும், அவன் முகத்தில் ஒரு புன்னகை லேசாக விரிந்ததாக அவளுக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல ஆனி, அவனைக்குறித்து அறியத் தொடங்கினாள்., அவன் ஒரு வீரனாய் அறியப்பட்டவன் என்பதும் அவனுக்காய் ஒரு நீதி வைத்திருப்பதும் புரியத் தொடங்கியது. பெண்களை, எந்த ஜாதியினராக இருந்தாலும் காப்பதாக நிற்பதான அவனது உள்ளம் அவளை அவன் மீது மரியாதை கொள்ளச் செய்தது. ஆனால் ஆங்கிலேயர்கள்? அவர்களை முழுதும் வெறுக்கும் படையைச் சேர்ந்தவனோ? ஆண்டென்ஸன் ஏன் இவனை வைத்துக்கொண்டு திரிகிறான்? இவனாலேயே ஆபத்து வருமோ? அன்று மாலையில் முத்தாயியைப் பார்க்க வந்தவன், அருகிலிருந்த ஆனி சினேகமான புன்னகையுடன் தலையசைத்து வணக்கம் தெரிவித்தான்.. அவனது தமிழ் மிக வேகமாக இருந்ததாக ஆனி உணர்ந்தாள். முத்தாயி ஒரு சிரிப்புடன், முத்துராசா சொன்னதை நிதானமாக வட்டார வழக்கு அதிகமில்லாத தமிழில் ஆனியிடம் பேச, அவள் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டாள். அவள் ஆங்கில வாடையில் கேட்ட கேள்விகளை முத்தாயி முதலில் தமிழில் மொழி பெயர்க்க, ஐந்து நிமிடங்களின் பின், அவளை தடுத்துத் தானே புரிந்துகொண்டதாய் , மிக நிதானமாக பதில் சொன்ன ராசாவை முத்தாயி உள்ளூர வியந்தாள்.

‘எந்தப் பெண்ணாய் இருந்தாலும், உதவி தேவைப்பட்டால், உடனே செய்வேன் ‘அவளை எப்படி அழைப்பது என்று தடுமாறி பொதுவில் சொல்லி வைத்தான் அவன்.

ஆனி புன்னகைத்து ‘ஆனி’ என்றாள்.

ராசா அவள் பெயரைச்சொல்லி அழைக்கத் தடுமாறினான் ‘வேணாம், தொரசானி..’

‘நோ,  கால் மி ஆனி, ப்ளீஸ்’

முத்து ராசா தவிர்த்தான். அவன் ஒரு பதற்றத்தில் இருந்ததாக முத்தாயி கவனித்தாள். ஆனியின் முகத்தில் தெரிந்த உற்சாகம், ஒளி அவளை என்னமோ செய்தது. இது.. இது..

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com