அத்தியாயம் 20

திடீரெனப் பெய்த மழையில் சிறு ஓடைகள் அங்கிங்கு புறப்பட்டிருந்தன.
அத்தியாயம் 20

திடீரெனப் பெய்த மழையில் சிறு ஓடைகள் அங்கிங்கு புறப்பட்டிருந்தன. முகாமில் நீர்  புகுந்து சற்றே வசதிக்குறைவாக இருந்ததை ஆண்டர்ஸன் அடிக்கடி எடுத்து சொல்லிக்கொண்டேயிருந்தான்.

‘ஆனி’ என்றான் ஆண்டர்ஸன் திடமாக, ஒரு மாலையில் ‘இக்காட்டுவாசிகள், அருகிலுள்ள ஊர்ப்பெரியவர்கள் மலையில் அடைமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். நாம் கீழே  இறங்கிவிட்டு பின்னர் ஏறலாம் என்றிருக்கிறேன்.  நாளை காலையில் கிளம்புவோம். தயாராக இரு’

அன்று இரவு சிணுசிணுத்த மழையில், ஆனியின் முகாம் அருகே இருந்த காவலாளிகளுடன் முத்துராசா ஒரு சிறு கூடாரத்தில் துணையிருந்தான். முத்தாயி அங்கிருக்கிறாள் என்பதால் அங்கு வந்தான் என்றாள் மற்றொரு சேடிப்பெண். இத்தனை நாள் முத்தாயி அவளுடன் இருந்தபோது அவன் வரவில்லையே? என்று நினைத்தாள் ஆனி.

லிண்டாவின் அறையின் சன்னல் திறந்திருக்க, திடீரென கோடை மழை தூறலாக வீழ்ந்ததில், வெப்பம் குறைந்து வேப்ப மரக்காற்று அறைக்குள் சில்லென நுழைந்தது.

லிண்டா அதையெல்லாம் ரசிக்கும் நிலையில் இல்லை. முன்னே விரிந்து கிடந்த கோப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மொத்தம் 140 பெயர்கள் கொண்ட அட்டவணை. அதில் ஐந்து பெயர்கள் தவிர மற்றவை சிவப்பு மையில் குறியிடப்பட்டிருந்தன.

ஐந்து பேர் லிண்டாவின் உதடுகள் முணுமுணுத்தன. அனைவரும் இங்கே இருப்பவர்கள். சரியான இடத்தில்தான் வந்திருக்கிறேன்.’

இதுவரை அவள் அனுப்பியிருந்த தகவல்களை வைத்து மென்பொருள் ஒன்று பலவகையான தர்க்க நுணுக்கங்களை ஆய்ந்து, புள்ளிவிவரங்களுடன் அனுப்பிய ரிபோர்ட் அது. யார் மிக அருகாமையாக ஆனி சொன்ன முத்துராசா குடும்பத்தினராக இருக்க முடியும்  என்பதான அறிக்கை அது.

‘மாடா’ என்றாள், சோம்பல் முறித்தவாறே. மாடா என்ற மாடசாமி அவளிடம் வந்தபோது, லேசாக நனைந்திருந்தார்.

‘இந்த ஐந்து பேர்களுடைய டி.என்.ஏ மட்டும் பாதுகாப்பாக டீப் ஃப்ரீஸரில் வைத்தால் போதும். எதற்கும் உலர்ந்த பனிக்கட்டி வைச்ச பெட்டியில் டேட்டா லாகர் வைத்திருக்கிறேனா என்று பாருங்கள்’

மாடசாமி அந்த அறையில் புதிதாக மின்னிய பெரிய ப்ரிஜ்ஜைத் திறந்தார். பல சதுரப் பெட்டிகளில் சிறு சோதனைக்குழாய்கள் நிறைந்து கிடந்தன. அவள் சொன்ன தகவல்படி, தேடி, ஒரு பெட்டியை எடுத்து சோதித்தார்.

ஐவரில் ஒவ்வொருவருக்கும் இரு மாதிரிகள் வீதம் பத்து சோதனைக்குழாய்கள் அந்தப் பெட்டியில் இருந்தன. மாதிரிகள் , வாயில் வைத்து ஈறில் தேய்த்து எடுக்கப்பட்ட பஞ்சுஉருண்டைகளிலிருந்து திசுக்கள் பிரித்தெடுக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பாக அவை திரவத்தில் பதப்படுத்தப்பட்டிருந்தன.  

மாடசாமி, அதனை ப்ரிட்ஜில், எடுக்க வசதியாக  முன்புறமாக வைத்து மூடினார்.

‘நாளைக்கு ட்ரை ஐஸ் வைச்ச பெட்டி வந்திரும், அதுல வச்சி சென்னைக்கு அனுப்பிடறேன்’ என்றார்.

‘அந்த க்ரையோஜெனிக்ஸ் லாப்ல இடம் இருக்குன்னு உறுதிப்படுத்தினாங்களா? நீங்க அனுப்பிட்டு, அவங்க இங்க ப்ரீஸர்ல இடம் இல்லைன்னு சொல்லிடக்கூடாது’

‘இருக்கு லிண்டா. இன்னிக்கு காலேலதான் அவங்ககிட்டேர்ந்து, இடம் இருக்குன்னு மின்னஞ்சல் வந்தது’

க்ரையோஜெனிக்ஸ் லாப் லிமிடெட் என்ற நிறுவனம், ராட்சத அளவில் -80 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலை கொண்ட டீப் ப்ரீஸர்களை நிறுவி, மிகக் குறைவான வெப்பநிலையில் பாதுகாக்கப் படவேண்டிய மாதிரிகளை சேமிக்கும் வங்கியாகச் செயல்படும் தனியார் நிறுவனம். விந்து, தொப்பூழ்கொடி, ப்ளாஸ்மா, மரபணு போன்றவற்றை வருடக்கணக்கில் சேமித்து வைக்கும் உறை நிலைக்கிடங்கைப் பராமரிக்க ஆகும்செலவை, வாடகையாக வசூலிப்பார்கள். தேவைப்பட்டபோது அவை எடுத்துக் கொடுக்கப்படும். அனைத்து பரிமாற்றங்களும், தகுந்த ஆவணங்களுடன் பதிவுசெய்யப்படும்.

அனுப்பப்படும் மாதிரிகள் போகும் வழியிலும் தேவைப்பட்ட அளவு வெப்பநிலையில் இருப்பதற்காக உலர்ந்த பனிக்கட்டி எனப்படும் திட நிலை கார்பன் டை ஆக்ஸைடு பெட்டிகளில் வைக்கப்பட்டு, பெட்டியின் வெப்பநிலையை எப்போதும் கண்காணித்து பதிவு செய்ய டேட்டா லாகர்  Data logger என்ற கருவி பொருத்தப்பட்டபின் விசேஷமான கூரியர்களில் அனுப்பப்படும்.

மாடசாமி, கூரியர் கம்பெனியை அழைத்தபோது, லிண்டா கணினியில் எக்ஸெலைத் திறந்து சில கணக்கீடுகளைச் செய்துகொண்டிருந்தாள். 10 மாதிரிகள். ஒருமாதிரியில்  முழு சோதனைக்கு ரெண்டாயிரம் பவுண்டுகள். பத்து மாதிரிகளூக்கு  இருபதாயிரம் பவுண்டுகள். ஏற்கெனவே செலவு கட்டுக்கடங்காமல் எகிறிக் கொண்டிருக்கிறது. இதனைச் செய்யத்தான் வேண்டுமா?

அந்த மாதிரிகள், யார்க்‌ஷைரில் ஒரு பரிசோதனைச்சாலையிலிருந்து தகவல் வந்ததும், க்ரையோஜெனிக்ஸ் லாபிலிருந்து அனுப்பி வைக்கப்படுமென்பதும், அவற்றின் இறுதி இடம் யார்க்‌ஷைர் பரிசோதனைச்சாலையின் ஏதோவொரு டீப் ஃப்ரீஸரின் ஷெல்ஃப் ஒன்று என்பதும் அவளைத்தவிர எவருக்கும் அங்கு தெரியாது. தெரிந்தாலும் ஒன்றும் புரிந்திருக்காது.

‘சென்னை ப்ளேன் தூத்துக்குடிலேர்ந்து கிளம்பற நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வர்றோம் சார். அதுதான் சரியா இருக்கும்’ என்ற பதிலில் மாடசாமி நிறைவானார்.

மறுநாள் பெட்டி மீண்டும் சரிபார்க்கப்பட்டு கூரியர் பையனிடம் கொடுக்கப்பட்டது.

யார்க்‌ஷைரரில் அந்த தனியார் மரபணுச் சோதனைச் சாலையில்  மாதிரிகளை பரிசோதிக்க கோரி வந்திருந்த விண்ணப்பத்தைப் பார்த்த ஆய்வாளர் நெற்றியைச் சுருக்கினார். ‘ஜீனியாலஜி - (உறவு சந்ததி) தொடர்புகளை மட்டும் கண்டறிய ஐந்து மாதிரிகளா? இடியாப்பச் சிக்கலாக இருக்குமே? ‘

மறுநாள், சென்னை, க்ரையோஜெனிக்ஸ் லாபில், மாதிரிகள் அடங்கிய பெட்டிகளை வாங்கும்/கொடுக்கும் இடத்தில், அதனை மேலோட்டமாகப் பரிசோதித்தவன் சற்றே குழம்பினான். தனது மேனேஜரை அழைத்தான்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com