அத்தியாயம் - 15

ஆனி தன் விரலை மீண்டும் பார்த்தாள். தங்க மோதிரம் கனமாக மினுக்கியது.  ஆண்டர்ஸன் பரிசளித்தது. கன்னிங்ஹாம் தம்பதியினர் தூத்துக்குடி வந்த இரண்டாம்நாளே,
அத்தியாயம் - 15

'இன்றைக்கு முழு அமாவாசைதினமாதலால், நல்லநாள் என்று முத்துராசாவை அழைத்துக்கொண்டு ஆண்டர்சன் துரையைச் சந்திக்கக் கிளம்பினேன். வழியில் ஆதிகேசவ அய்யங்கார் வீட்டில் பழைய பாக்கி பற்றி விசாரித்துக்கொண்டு கிளம்புகையில் நேரமாகிவிட்டபடியால் , கொக்கிரகுளம் பாலம் வரை விரைந்து நடந்து சென்று, அங்கேயிருந்து முதலியார் பாலத்தில் ஜட்காவில் போய்க்கொண்டிருக்கையில், எதிரே ஆண்டர்சன் துரை குதிரை மேல் ஆரோகணித்து வந்துகொண்டிருந்தார்.

லேட் என்று உறுமிய ஆண்டர்சனின் குரலில் புலி இருந்தது என்றால், ஜட்காவில் இருந்து குதித்து அவனை நேராகப் பார்த்த முத்துராசாவின் கண்களில் சிம்ஹ தீட்சண்யம்.’  – நவம்பர் 17, 1910 நடேசபிள்ளையின் டைரியிலிருந்து.

ஆனி தன் விரலை மீண்டும் பார்த்தாள். தங்க மோதிரம் கனமாக மினுக்கியது.  ஆண்டர்ஸன் பரிசளித்தது. கன்னிங்ஹாம் தம்பதியினர் தூத்துக்குடி வந்த இரண்டாம்நாளே, நிச்சயதார்த்தம் என்பது மிக எளிமையாக வீட்டளவில் முடிந்துபோனது. ஆண்டர்ஸன் அதிக ரொமாண்ட்டிக் ரகமில்லை என்பதை ஆனி முதல்நாளே அறிந்தாள். துப்பாக்கி, வேட்டை அதுவும் போராளிகளை துரத்துவது.. இவனால் அமைதியாக லண்டனிலோ, ஸ்காட்லாண்டில் ஒரு கிராமத்திலோ ஜொஹேன்னஸ்பர்க்கிலோ ஒரு வீட்டில் வாழ்ந்துவிடமுடியாது என்பதும் புரிந்தது.

'ஆனி, ஒரு வேட்டை முகாமிற்குப் போகிறேன்’ என்றான் ஆண்டர்சன். “பயமில்லையே?” என்றாள் ஆனியின் அம்மா.

'நோ நோ’ என்றான் ஆண்டர்ஸன் 'இங்கு விலங்குகள் பயப்படும் படியானவையல்ல. இங்கு ஆபத்தானவை  வேறு ரகம்.’

முத்தாயி அவளைத்தேடி வந்திருப்பதாக பணிப்பெண் சொல்ல, ஆனி மெல்ல அந்த உரையாடலிலிருந்து வெளியேறினாள். முத்தாயி அவளைத்தேடி வருவதா? அதுவும் இத்தனை தொலைவு?

வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த முத்தாயியைக் கண்டு  ஆனி மெல்லிய மகிழ்வுடன் அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

'எப்ப வந்தே? சாப்பிட்டாயா?’

முத்தாயியின் முகம் வியர்த்திருந்தது. 'ஆனியம்மா’ என்றாள் குரல் பிசிறடித்து. 'அண்ணனோட சேர்ந்துதான் வந்தேன். ரெண்டு வார்த்த சொல்லணுமே உங்ககிட்ட?’

ஆனி புரிந்துகொண்டாள் அருகில் நின்ற பணியாளரைப் போகச் சொன்னாள். 'இப்ப சொல்லு’

'உங்க புருசன் இன்னும் கிளம்பலீல்லா? வேணாம்னு சொல்லுங்க.’

ஆனி முதலில் புருசன் என்ற சொல்லுக்கு மறுப்பாகப் பேச எத்தனித்து புருவத்தைத் தூக்கினாள்  'உனக்கு எப்படித் தெரியும்?’

'எங்கண்ணனத் தேடி ரெண்டு பேர் வந்து, அவர் இல்லன்னு திரும்பப் போனாங்களா? அப்ப பேசிக்கிட்டாங்க. உங்க புருசனுக்கு ஆபத்தும்மா , சொல்லிட்டேன். ஐயா, சுதேசிகளை தாக்கறதுக்குத்தான் காட்டுள்ள போறாருன்னு அவங்களுக்குச் சேதி. அங்க அவரை அடிச்சுப்போடணும்னு அவங்க சொன்னத கேட்டேன். நமக்கென்னான்னு சொல்லிறலாம். ஆனா, உங்க புருசனாச்சே? அதான்’

ஆனி சிந்தனையில் ஆழ்ந்தாள். இதை ஆண்டர்சனிடம் நேராகச் சொல்ல முடியாது. உனக்கு யார் சொன்னது? என்று கேள்வி வரும். அனாவசியமாக இந்தப் பெண் மாட்டிக்கொள்வாள்.

சொல்லாதிருப்பதும் நல்லதல்ல.

ஆனி முத்தாயியைப் பார்த்தாள்  'நீ எங்க தங்கப்போற?’

'அண்ணன் ஒரு ஆச்சி வீட்டைக் காட்டியிருக்கு. அங்கிட்டுப் போயிறுவேன்.’

'உங்கண்ணனும்தானே வேட்டைக்குப் போகப்போகிறான்?’

'ஆமாம்மா’ என்றாள் முத்தாயி ஒரு வேதனையில், 'ஆன மட்டும் சொல்லிப்பாத்தேன். கேக்க மாட்டேன்னுட்டு அண்ணன். திருநெவேலிப் பிள்ளைவாள் சொன்னாக் கேப்பாக’

ஆனி ஒரு தீர்மானத்தில் எழுந்தாள்.

'ஆண்டர்ஸன்,’ என்றாள் உள்ளே , மெல்ல நாற்காலியில் அமர்ந்து 'நானும் வருகிறேன். வேட்டை முகாமில் பெண்களுக்கும் முகாமில் தங்க இடமிருக்கும் இல்லையா?’

'ஓ... நோ’ என்றாள் ஆனியின் அம்மா பதறி.

ஆண்டர்ஸனின் பச்சை விழிகள் ஒளிர்ந்தன 'வெல்கம்’ என்றான். 'எனது முகாமில்  ஆங்கிலேயப் பெண்களின் பாதுகாப்பிற்கும், கவுரவத்திற்கும் ஒரு பங்கமும் வராது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு. நன்றி ஆனி’ என்றான்.

'என்னோடு சில லோக்கல் தோழிகளும் வருவார்கள்’

'வரட்டும்.’ என்றான் ஆண்டர்ஸன். 'குடும்பத்துடன் காட்டில் வேட்டைச் சுற்றுலா என்று சொல்லிக்கொள்ளலாம். இன்னும்  களக்காட்டு வனத்துள்தான் இருக்கிறார்கள்’ மறுநாள் காலையில் ஆண்டர்ஸன் வந்தபோது அவன் கையில் ஒரு அழகிய நகைப்பெட்டி இருந்தது. பித்தளைப்பூண் போட்ட நான்கு சிறு கால்கள் கொண்ட அப்பேழையைத் திறந்தான். முத்தாயியிடம் அவன் வாங்கிச்சென்ற நகை, அதனடியில்...

'வெப்லி 4’ என்றான் புன்னகைத்து 'தங்க முலாம் பூசியது. 6 குண்டுகள் கொண்டது. என் காதலிக்கு காதலியையே பரிசாகக் கொடுக்கிறேன்’ ஆனி அதனை எடுத்துப் பார்த்து ப்ரமித்தாள்.

'உனக்கு ரிவால்வர் சுடத் தெரியவில்லையெனும்...’ ஆண்டர்ஸன் முடிக்கவில்லை.

'யார் சொன்னது?’ என்றாள் கோபத்தில் முகம் சிவந்து.

'ஓ. ஸாரி’

'ப்ரெஞ்சுக்காரர்களால் உருப்படியாக ஒன்றைச் செய்துவிடமுடியாது என்பதை பெர்த்திய ரைபிள் நிரூபித்திருக்கிறது’

அவன் வியந்துபோனான்.  'பெர்த்திய?’

'கல்கத்தா வந்த ஒரு ப்ரெஞ்சுக்காரன் விற்றுபோனான். சர்வீஸ் ரைபிள். மொத்தம் மூன்றே குண்டுகள்தான் அடைக்கமுடியும்.. போருக்கும் உதவாது, வேட்டைக்கும் உதவாது. நமது லீ- என்பீல்டு ரைபிள் பரவாயில்லை. பளு அதிகம் ஆனால்...’

ஆண்டர்ஸனுக்கு தன் வருங்கால மனைவிமீது மரியாதை தோன்றிய கட்டம் அது.

முத்தாயி ஆனியுடன் மற்றொரு குதிரை வண்டியில் தொடர ஒரு வண்டி வரிசை கிளம்பியது.

தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com