அத்தியாயம் 16

நடேசபிள்ளைக்கு கொஞ்சம் உதறலாகவே இருந்தது. முத்துராசாவுக்கும் அந்த ஆண்டர்ஸனுக்கும் அதிகம் இணைவு இல்லையே? எசகுபிசகாக அவர்களுக்குள் ஏதோ வெடித்து
அத்தியாயம் 16

நடேசபிள்ளைக்கு கொஞ்சம் உதறலாகவே இருந்தது. முத்துராசாவுக்கும் அந்த ஆண்டர்ஸனுக்கும் அதிகம் இணைவு இல்லையே? எசகுபிசகாக அவர்களுக்குள் ஏதோ வெடித்து...

இரு நாட்களில் இருவரும் இணைந்தே செல்வதை மக்கள் அவரிடம் சொன்னதில் சற்றே அமைதியானார். இனிமே கவலையில்லை. ஆண்டர்சன் களக்காட்டு பகுதியில் ஒரு வேட்டை காம்ப் இட இருப்பதாகவும், அங்கு காட்டினைப் பற்றி தகவல் அறிய முத்துராசாவை முன் அனுப்பியிருப்பதாகவும் அறிந்தார். களக்காட்டுப் பகுதியில் திடீரென இவனுக்கென்ன வேட்டை மீது ஆசை?. நீலகண்டனுடன் இருந்தவர் சிலர் சேரன்மகாதேவியிலிருந்து இரவில் இறங்கி, காட்டுவழியே களக்காடு நோக்கிச் சென்றார்கள் என்பதும் அவருக்குத் தெரியவந்தது.

ஒருவேளை...

இந்த வேட்டை அவர்களுக்கானதாக இருக்குமோ? களக்காட்டின் மறுபுறமொரு போலீஸ் படை சென்றிருப்பதாக அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்த இரு விவசாயிகள் தெரிவித்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு கணம் வயிறு உள்வாங்கி கலங்கியது.

சில நாட்களிலேயே ஆண்டர்சன், முத்துராசாவின் திறமையை அறியலுற்றான். வேகம், கவனிப்பு, திட்டமிடுதல், எந்த விலங்கின் பின் செல்லவேண்டும் என்பதை அறிவதிலும், நொடிக்கு நொடி மாறும் வேட்டைக் காட்சிக்கு ஏற்றாற்போல் முத்து ராசா தன் செயல்களை மாற்றும் லாவகமும் அவனை வியப்பில் ஆழ்த்தின. ஆனியின் தோழியாக இருக்கும் அந்த நெக்லேஸ் பெண், இவனது சகோதரி என்பது மேலும் நம்பிக்கயை வளர்த்தது.

சூரியன் உச்சியில் தகிக்கத் தொடங்கிய நாளொன்றில், வல்லநாடு மலை தாண்டி, ஆண்டர்ஸனின் குழு முட்புதற்காட்டினுள் புகுந்திருந்தது. வெயிலும், எதிரொளித்த வெக்கையும், புழுக்கமும் அவர்களை மேலும் தளர்வடையச் செய்தது.

‘கொஞ்ச தூரம் நடந்தா கிராமம் ஒண்ணிருக்கு’ என்ற இடையன் ஒருவனின் சொற்களை நம்பியது தவறாகிவிட்டது. அந்தப் பகுதியிலிருந்து வந்த இருவர், வழிகாட்ட, மேலும் நடந்தனர். ஆண்டர்ஸன் தனியாக நடந்தான். பழுப்பர்களினூடே நடப்பது அவனுக்கு வெறுப்பல்ல. தனித்திருப்பதில் ஒரு சுகமிருக்கிறது.

‘தொரை, பிரிந்து  நடக்கவேண்டாம்” என்ற முத்துராசாவின் எச்சரிப்பு அவனுக்கு எரிச்சலளித்தது. முத்துராசா, திடீரென நின்றான். அருகிலிருந்த காவற்காரன் ஒருவனின் ஈட்டியைப் பிடுங்கினான். ‘பின்னாடி போ’ என்று அவனை நெஞ்சில் கைவைத்து பின்னால் தள்ளிவிட்டு, ஈட்டியை எடுத்தபடி, ஆண்டர்ஸனை நோக்கி ஓடினான்.

ஆண்டர்ஸன் பின்னால் நடக்கும் களேபரத்தைக் கவனிக்கவில்லை. மனமெல்லாம் ஆனி நிறைந்திருந்தாள், ‘இந்த நெக்லேஸ் நல்லாயிருக்கா?’ என்றாள் புன்னகையுடன், அவன் கண்களுக்குள்.

ஆண்டர்ஸனின் காரியதரிசி ‘கெட் மீ த கன், கெட் மீ த கன்’ என்று அலறியவாறே ஒரு துப்பாக்கியை வேட்டைக்குழு ஆள் ஒருவனிடமிருந்து பிடுங்கி, ஆண்டர்ஸனை நோக்கி ஓடும் முத்து ராசாவை குறி வைக்க, சப்தம் கேட்டு ஆண்டர்ஸன் திரும்பினான். மிக மிக அருகே, ஒரு ஈட்டி முனை.

திடீரென ஈட்டி முனை திரும்பியது. அதன் மறுமுனை அவன் நெற்றியின் மேலே ஒரு கோணத்தில் ஏறியது. “கீழே குனியுங்க” என்ற முத்துராசாவின் குரல் அலறலாகக் கேட்டது. திகைத்து நின்ற ஆண்டர்ஸன் குனியத் தவறினான். முத்துராசாவின் கால் நீண்டது. ஆண்டர்சனின் காலைத் ,அவனது ஒல்லியான கரிய கால் தட்டிவிட, ஆண்டர்ஸன் சரிந்தான்.

ஈட்டிமுனை மீண்டும் சுழன்றது. மேலே உயர்ந்து, சற்றே மண் நோக்கிச் சரிந்து, மிகக் கனமான அந்த இரும்புக் கம்பி, முன்னே தன்னில் சுழன்றபடி பாய்ந்தது.

முன்னே வடகிழக்குப்பக்கமாக இருந்த முட்புதரில் புழுதி பறந்த அதே நேரம், ஒரு அலறல் கேட்டது. காட்டுப்பன்றி ஒன்று பாய்ந்து வெளிவந்து மண்ணில் தடுமாறி இடப்புறமாக வீழ்ந்தது. அதன் இடது முன்னங்காலின் சற்றே மேலே ஈட்டி பாய்ந்து நின்றிருக்க, மெல்ல, ரத்தம் கசிந்து வந்து, பெருகியது. கால்கள் உதைத்து உதைத்து அக்காட்டுப் பன்றி மெல்ல மெல்ல அடங்கியது.

ஆண்டர்ஸனின் காரியதரிசி, திகைத்து நிற்க, துப்பாக்கி வழுகி விழுந்தது. ஆண்டர்ஸனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் மண்ணில் கிடந்தான். யார் என்னைக் கொல்ல வந்தது. இவனா? அல்லது காட்டுப் பன்றியா? அல்லது அந்த சோம்பேறி காரியதரிசியா?

சிலநிமிடம் கழித்து, குழு மெல்ல அந்த ஈட்டியை உருவ முயன்று தோற்று நின்றது. இவ்வளவு பெரிய காட்டுப் பன்றி..அதுவும் இந்த மலைப்பகுதியில்?

‘வலது பக்கம் திரும்பப்போகையிலேயே கவனிச்சேன். ஒரு பள்ளம்… சூடு பொறுக்காம பன்னி தோண்டியிருக்கற மாதிரி. அதோட சைஸு பாத்ததுமே தெரிஞ்சு போச்சு. பெரிசு.. இங்கனக்குள்ளாறத்தான் எங்கயோ நின்னிட்டிருக்கும்னு நினைச்சேன். கடுவன் குரங்கு கணக்கா, ஆபத்தானது பாத்துக்குங்க’ முத்துராசா காரியதரிசியிடம் விளக்கிக்கொண்டிருந்தான்.

‘புலி வேட்டைன்னு போனா, புலி மட்டும்தான் இருக்கணும்னு இல்ல. காட்டுல எத்தனையோ இருக்கும். எல்லாத்தையும் கவனிக்கணும்.’ யாரோ சொல்ல, கூட்டம் ஆமென முணுமுணுத்து, பன்றியின் அளவு கண்டு வியந்து நின்றது.ஆண்டர்ஸனுக்கு முத்துராசா மீது மதிப்பும் பொறாமையும் ஒருசேர வந்தது. 

‘நீ இதற்கு முன் வேட்டையை தொழிலாகக் கொண்டிருந்திருக்கிறாயா?’ என்றான் ஆண்டர்ஸன், உச்சிப்பொழுதில், காட்டுப்பன்றியை எடுத்துக்கொண்டு இறங்கிச்செல்லுமாறு நால்வரைப் பணித்துவிட்டு ஆயாசமாக இருவரும் அமர்ந்திருக்கும்போது.

‘இல்லை’ என்றான் சுருக்கமாக முத்துராசா. ‘கொடிய விலங்குகள் எப்படி வந்தாலும், கொல்லணும்னு நினைச்சுட்டேன்னா, கொன்னுருவேன்’

ஆண்டர்ஸன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். அவன் வலதுகை தனிச்சையாக இடுப்பில் இருந்த வெப்லியைத் தடவியது.

தொடரும்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com