அத்தியாயம் 17

‘என்னையும் உன்னையும் சேர்த்து ஒன்பது பெண்கள் இந்த முகாமில் இருக்கிறோம். இதில், பாத்திரம் தேய்க்கின்ற மூன்று பெண்களுக்கு எப்போதும் ஆபத்து என்கிறாய்.
அத்தியாயம் 17

‘உனக்கு ரிவால்வர் வைத்து சுட்டுப் பழக்கமுண்டா?’

‘இல்லை தலையசைத்தான் முத்துராசா ‘போலீஸில் இருந்த போது என்ஃபீல்டு ரைஃபிள் எடுத்திருக்கேன்’

‘காட்டில் ரிவால்வர் பயன்படும்’ என்றான் ஆண்டர்ஸன். ஏதோ யோசித்து கூடாரத்துக்குள் சென்றான். ஒரு நிமிடத்தின் பின் திரும்பி வந்து முத்துராசாவிடம் ஒரு பெட்டியை நீட்டினான்.

‘வெப்லி.  இலகுவான ரிவால்வர், ஆறு புல்லட் வைக்கலாம். குறி தப்ப வாய்ப்பே இல்லை. எனது முதல் காதலி இவள்தான்’ ஆனி அதனை விரைவிலேயே இரண்டாம் இடத்தில் தள்ளிவிட்டாள் என்பதையெல்லாம் அவன் சொல்லவீல்லை.

‘உன் வீரத்திற்கு என் பரிசு’ ஆண்டர்ஸன் பெட்டியைத் திறக்க, முத்துராசா உள்ளே பளபளத்த ரிவால்வரை பிரமிப்புடன் பார்த்தான். விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கைப்பிடி, அதன் அடியிலிருந்த ஊக்கு வளையமும், குதிரையும், காப்பு வளையமும், மேலே தெரியும் சில பாகங்களும் தங்கமயமாக மின்னின.

‘இவையனைத்தும் தங்கம்’ என்றான் ஆண்டர்ஸன். ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து வாங்கியது இது.  பழைய மாடல் மார்க் 3. ஆனால் இப்போதைய மார்க்4 ரகத்தை விட கம்பீரமும், மென்மையான அழகும் வாய்ந்தது இதுதான்.’

முத்துராசா அதனை வாங்கித் தன் வேட்டியில் சொருகிக்கொண்டு இறுகக் கட்டினான். ஆண்டர்ஸனின் காரியதரிசி சிரித்தான் ‘யோவ், முத்துராசு, இப்படிக் கட்டினேன்னா, அவசரத்துல எப்படி எடுத்துச் சுடுவ? எசகு பிசகா தானா சுட்டுருச்சுன்னு வையி… சரி, கலியாணம் ஆயிட்டா ஒனக்கு?’

முத்துராசா சிரித்துக்கொண்டே, திடீரென ஒரு கணத்தில் அதனை உருவி எடுத்து நீட்டினான். ‘சரி, உனக்கு கலியாணம் ஆயிட்டா?’

அதன்பின் முத்துராசாவிடமிருந்து பத்தடி தொலைவிலேயே அவன் நடந்து வந்தான். சங்கரலிங்கம் என்ற அவனது மனதில் ஆழமாக ஒரு காழ்ப்புணர்வு உதித்தது. முத்துராசாவை பார்க்கும் போதெல்லாம் அடியில் வேர்விட்டு, மேலே இலைவிட்டு செடியாய் வளர்ந்தது.

ஆனியின் கூடாரத்தின் அருகே சில ஆட்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். தன்னோடிருந்த பெண்களை அவர்கள் தொலைவில் சீண்டுவதும், சிரிப்பதுமாக இருப்பதை ஆனி கவனித்தாள். கொஞ்சம் கொஞ்சம் உடைந்த தமிழில் அவள் கேட்டதற்கு, கதை கதையாக உடைந்த ஆங்கிலத்திலும் அபிநயத்திலுமாக முத்தாயி சொல்வதை பொறுமையாகக் கேட்டாள். முத்தாயி கற்பனைவளமிக்கவள். மிகைப்படுத்தி நாடகபாணியில் அவள் சொன்னாலும், அதிலோரளவு உண்மை இருப்பதை ஆனி அறிவாள். எது உண்மை என்பதை அவதானிப்பதுதான் கடினம்.

‘இவங்க ரொம்ப மோசம். மறைவா போகக்கூட விடாம பின்னால வந்து அசிங்கம் அசிங்கமாப் பேசிகிட்டு...நேத்திக்குக் ஒருத்தன் கையப் பிடிச்சு இழுத்தான்... எங்கண்ணன் பெயரைச் சொன்னதும்தான் அடங்கினான்’

‘ஆண்டர்ஸன்கிட்ட சொல்லட்டுமா?’ என்றாள் ஆனி சிந்தனையில் ஆழ்ந்து. இவர்கள் எனக்குக் காவலாக இருப்பதில் சம்மதமில்லை என்றால் ஏன்? என்று கேட்பான். சொல்லலாமா?

ஆண்டர்ஸன் இந்தியர்களின் வாழ்வு பற்றி கவலைப்படுபவனில்லை என்பதை ஆனி உணர்ந்திருந்தாள். அவன் ஒன்றுமே பதில் பேசாமல் செல்லக்கூடும். அல்லது எச்சரித்து விட்டுவிடக்கூடும். அவ்வளவே. இவர்கள் அதற்கெல்லாம் மாறுவார்களா?

அன்று இரவு ஏதோ நீண்ட அழுகையொலி கேட்டது. காடாவிளக்கு ஒளியில் வெளியே எதுவும் தெரியாத நிலையில் ஆனி உறங்க முயன்றாள். மீண்டும் கேட்டது.. இந்த முறை தெளிவாக..

பெண்ணின் குரல்.

ஆனி எழுந்தாள். முத்தாயி ஏற்கெனவே விழித்திருந்தாள். ‘பேயாய் இருக்கும். வேணாம்’

விளக்கை ஏந்தியபடி ஆனி கூடாரத்தை விட்டு வெளிவர, முத்தாயி பின் தொடர்ந்தாள் ‘இப்படி நள்ளிரவுல கூப்பிடுதுன்னா அது ரத்தக் காட்டேரியா இருக்கும்ம்மா. எதுக்கும் உங்க கையில சிலுவையை பிடிச்சுக்குங்க.’ ஆனியின் கையில் ரிவால்வர் இருந்தது. அவளது பழகிய மார்க் 3 .

ஆனி சற்று தொலைவில் சில உருவங்கள் குந்தி இருந்ததுபோல நிழலாகத் தெரிந்தது. காவலர்களை உரக்க அழைத்துப் பார்த்தாள். ஒருவரும் காணவில்லை. சற்றே விளக்கை உயர்த்திப் பிடிக்க, ஒரு வளையமாக அமர்ந்திருந்த மூன்று பெண்கள்  பரபரத்து எழுந்தனர். தலையில் முட்டாக்கு போன்று ஒன்று அணிந்து, பாவாடை போன்ற உடை.. ‘இந்த ஊர்க்காரிகள் இல்லை…லம்பாடிகள்ம்மா’ என்றாள் பின்னால் நின்றிருந்த முத்தாயி. அவள் அழைத்து வந்ததில் இரு ஆண்கள் தீவட்டிகளுடன் ஓடி வந்தனர்.

தீவட்டியின் தழல் ஒளி போறாமையால், அருகிலிருந்த காய்ந்த புற்களைப் பிடுங்கி எரித்துப் பிடித்தனர். அப்பெண்களின் ஆடையில் இருந்த ஜிகினா வேலைப்பாடுகளில் ஒளி பட்டுத்தெறிக்க, அவர்கள் பயந்து எழுந்தனர்.

ஆனியையும், அவளருகே இருந்த முத்தாயியையும் கண்டு ஓடிவந்து கைகூப்பினர். ஒருத்தி முத்தாயியின் காலில் விழுந்தாள். என்ன மொழியில் பேசுகிறார்கள் என்பது எவருக்கும் புரியவில்லை. சைகைகள் மூலம் அவர்களில் ஒருத்தி விளக்கியதில் ஏதோ புரிந்தது.

அவர்களது கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள், காட்டில் வழி தெரியாது தொலைந்து போக, ஈட்டி ஏந்திய நான்கு வீரர்கள் அவர்களை மிரட்டி அழைத்து வந்ததாகவும், அவர்களில் ஒருத்தியை இருவர் இழுத்துக்கொண்டு காட்டிற்குள் சென்றதாகவுமாக ஒருமாதிரி புரிந்தது.

‘யார் அவர்கள்?’ என்றாள் ஆனி. தீவட்டி ஏந்தியவர்கள் தயங்கி ‘தெரியாது’ என்பதாகத் தலையசைத்தனர்.

‘எந்தப் பக்கமாகப் போனார்கள்?’

அந்தப் பேரிளம்பெண் வலத்திசையில் ஒரு மேட்டுப்பகுதியை நோக்கி கை காட்டினாள்.

ஆனியின் கை உயர்ந்தது. துப்பாக்கி வெடிக்க, சலசலத்து பறவைகள் கூச்சலிட்டு பறந்து அடங்கின. பிற கூடாரங்களில் சலசலப்பு கேட்க, மேலும் பல தீவட்டிகள் தோன்றின.

‘உனது தீவட்டியை உயர்த்திப் பிடி. அவர்களை இங்கே அழை’ ஆனியின் கட்டளையில், தீவட்டிகள் உயர்ந்து ஆட, சில நிமிடங்களில் அருகில் பேச்சுக்குரல்கள் கேட்டன. தீவட்டிகள் நெருங்கின.

ஆனி அருகிலிருந்த பாறை ஒன்றில் ஏறினாள். ‘எங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. இங்கிருந்த ஒரு பெண் பலவந்தமாக காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அவளைக் கொண்டு வாருங்கள்’

பதினைந்து நிமிடங்களில் ஆடை கலைந்த நிலையில் அப்பெண் கொண்டு வரப்பட்டாள். அவளுடன் மூன்று வீரர்களும் பிடித்துக் கொண்டுவரப்பட்டனர். ‘இவங்க நம்ம ஆளுங்கதான்மா’ என்றார்கள் அவர்களை அடையாளம் கண்ட பிற வீரர்கள்.

அந்தப் பெண்களைத் தன் கூடாரத்தினுள் கூட்டிச்சென்றாள் ஆனி. வாசலில் வீரர்கள் வாக்குவாதம் செய்வது தெளிவற்ற ஒலிகளாகக் கேட்டுக்கொண்டிருந்தது. முத்தாயி உறங்காமல், அவர்கள் வாக்குவாதத்தைக்  கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘லுக் ஆனி. இது அவர்கள் சமுதாய பிரச்னை. நாம் இதில் தலையிடக் கூடாது’  ஆண்டர்ஸன் எரிச்சலை அடக்கிக்கொண்டு பொறுமையாகப் பேச முயன்று கொண்டிருந்தான். காலை எட்டு மணிக்கு அவன் பெண்கள் முகாம் பகுதியில் நடந்ததை அறிந்தவன், அப்போதே ஆனி அவனிடம் பேச வருவாள் என எதிர்பார்த்திருக்கவில்லை.

‘ஆன்டி, இது நாளை முத்தாயிக்கு நடக்கலாம்’

‘நடக்கலாம்’

அதிர்ந்து போன ஆனிக்கு மெல்ல சினம் மூண்டது.

‘நாளை மறுநாள் எனக்கு நடக்கலாம்’

‘அது நடக்க விடமாட்டேன். லுக். மீண்டும் சொல்கிறேன். இது அவர்களது சாதீயத்தட்டின் கொடூரம். ஒரு பழுப்பு நிறப்பெண் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை. நம்மைத் தாக்காதவரை’ ஆண்டர்ஸன் கண்களைச் சுருக்கினான். வெளியே வெந்நீர் போடுவதற்கு விறகுகளை எரித்துக் கொண்டிருந்தார்கள். ஈர விறகின் புகை மெல்ல காற்றில் பறந்து கூடாரத்துள் வியாபித்தது. ஆனி லேசாக இருமினாள். புகை.. மூச்சடைப்பு. அஸ்ஸாம்.

அவள் எழுந்தாள் ‘நான் வருகிறேன் ஆன்டி’ அவன் சொல்லுக்குக் காத்திராமல் நடந்தாள்.

‘என்னையும் உன்னையும் சேர்த்து ஒன்பது பெண்கள் இந்த முகாமில் இருக்கிறோம். இதில், பாத்திரம் தேய்க்கின்ற மூன்று பெண்களுக்கு எப்போதும் ஆபத்து என்கிறாய். உன்னை சீண்டியிருக்கிறார்கள். இந்த அப்பாவிப் பெண்களை பலவந்தப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஏன் முத்தாயி இத்தனை வக்கிரம்?’

‘வெளியூர்ப் பொம்பளைங்கள என்ன செஞ்சா இவங்களுக்கு என்னன்னு பேசிக்கிறாங்கம்மா. நேத்திக்கு ராத்திரி’ ஆனியிடம் தான் கேட்டதையெல்லாம் முத்தாயி விவரித்தாள். அவளது இயல்பில் சற்றே கண் மூக்கு வாய் என பல அங்கங்கள் கொண்ட விசித்திரப் பிராணியாய் அக்கற்பனை விரிந்து, ஆனியின் முன் தலைவிரித்தாடியது. முத்தாயியின் மிகைப்படுத்தல் ஆனிக்குத் தெரியுமென்றாலும், அந்த இளகிய நிலையில் அவளை அந்த பேச்சு அவளை பாதித்தது.

அன்று மதியம், ஆண்டர்ஸன் வேண்டாவெறுப்பாக இரு ஆண்களின் துணையோடு, முந்தய இரவு வந்து சேர்ந்த பெண்களை மலையடிவாரத்திற்கு அனுப்பிவைத்தான். அங்கிருந்து அவர்களை பத்திரமாகக் கொண்டுபோய் அவர்களது குழுவில் ஒப்படைக்க போலீஸுக்கு ஓர் ஆணையை, அவ்வீரர்களிடம் தந்திருந்தான்.

ஆனால், ஆனி எவ்வளவோ சொல்லியும், தவறிழைத்த வீரர்களைத் தண்டிக்க மறுத்துவிட்டான். ‘இது அவங்க சமாச்சாரம், ஆனி.. கட்டவிழ்க்கப்பட்ட அவர்கள் சிரித்துக்கொண்டே செல்வதைப் பார்க்கப் பார்க்க மூச்சு கோபத்தில் பெரிதானது அவளுக்கு. மறுநாள் காலை, அவ்வீரர்கள் மூவரும் நாக்கு, விரல்கள் துண்டிக்கப்பட்டு கிடந்ததை முத்தாயி சொன்னதும் வியந்துபோனாள். ‘யாரு செஞ்சாங்க முத்தாயி? அந்த பெண்களின் உறவினர்களா?’

‘இல்ல..’ என்று தயங்கிய முத்தாயி பேச்சை மாற்றினாள். மதியம், அவள் முத்துராசா அண்ணனைச் சந்தித்ததையோ, அவன், அவர்கள் யார் என்று அடையாளம் கேட்டதையோ சொல்லப் போவதில்லை.

தொடரும்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com