அத்தியாயம் 35

அந்தச் சிறுவன் ஓடி வந்ததை, முத்துராசா அசிரத்தையாகத்தான் கவனித்தான். இடது கையின்
அத்தியாயம் 35

ஜனவரி 28, 1914

அந்தச் சிறுவன் ஓடி வந்ததை, முத்துராசா அசிரத்தையாகத்தான் கவனித்தான். இடது கையின் நாலு விரல்களைக் கொண்டு மட்டும் ஒரு மரக்கட்டையைப் பிடித்துவிட எளிதில் முடிந்துவிடவில்லை. கட்டையை ஒரு முனையில் செதுக்கி கூராக்கி வேல் போல் செய்து கொடுப்பதற்கு இப்போதெல்லாம் மூன்று நாட்கள் பிடிக்கிறது. வேட்டைக்குப் போக இருப்பவர்கள் நெருக்குகிறார்கள்.

‘மாமோய். அத்தைக்கு ஒடம்பு சொவமில்லயாம். உடனே கூட்டியாரச் சொன்னாக’ பையன் மூச்சிரைத்துக்கொண்டே சொல்லிவிட்டு, எங்கோ ஓடிப்போனான்.

‘கப நாடி தூக்கலா இருக்கு கேட்டியா? இழுத்துகிட்டுத்தான் கிடக்கா. காலேல இஞ்சி கஷாயத்துல மருந்து கரைச்சி ஒரு வாட்டி கொடுக்கச் சென்னேன்.. இருமி, கோழையா வந்துச்சி. சே..ரி.. சரியாயிரும்னு பாத்தா, ஒரு நிமிசத்துல நெஞ்சுல திரும்பவும் சளி கட்டிருதே இவளுக்கு?’ வைத்தியர் நெற்றியில் சிந்தனை மடிப்புகள் ஏற முணுமுணுத்தார்.

‘பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருவமா? இங்கிலீஷ்காரன் என்ன கொடுக்கான்னு பாப்பம். இல்ல, நாரோயிலு போலாம். அங்கிட்டு சில பாதிரிமாருங்க மருந்து கொடுக்காகளாம்’

‘அவுங்க கிறிஸ்துவங்களா மாறு-ம்பாவளே?’

முத்துராசாவின் மனைவி பலவீனமாகக் கையை உயர்த்தி அவனை அழைத்தாள். ‘என்னாட்டி வேணும்?’ என்றான் முத்துராசா கனிவாக, குனிந்து.

‘பொளக்க மாட்டேன்’

‘அப்படிச் சொல்லதவுட்டீ. எல்லாஞ் சொவமாகும். வண்டி கட்டிறுதேன். பெரியாஸ்பத்திரி போவம், என்னா?’

‘அதெல்லாம் வேணாம்’ என்றாள் பலவீனமாகத் தலையசைத்து. ‘இந்தாங்க, ஒரு சத்தியம் பண்ணிக்கொடுங்க.’

முத்தாயி, ஒரு நாள் அந்த வெள்ளைக்காரியிடம் அழைத்துப் போனதையும், அவள் ஆங்கிலத்தில் நடந்ததைச் சொல்லச் சொல்ல, முத்தாயி மொழிபெயர்த்துச் சொன்னதையும், உணர்ச்சிப்பெருக்கில், தான், காதில் கிடந்ததைப் பிய்த்தெடுத்து ரத்தம் வழிய, அவளுக்குக் கொடுத்ததையும், பதறிய அந்த வெள்ளைக்காரி வாங்க மறுத்ததையும், பின் ஒரு அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொண்டு ரத்தக்கறை படிந்த தோடுகளை, ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டதையும் அவள் சொல்லவில்லை. சொல்ல நேரமுமில்லை.

‘கிறுக்கி.. கஞ்சியக் குடிச்சிட்டு உறங்கு. உச்சிக்கு சூடா ரசம் வச்சித்தரச்சொல்லுதேன். ஒந்தங்கச்சி எங்கிட்டுப் போனா? மொளகு தட்டி….’

‘ரசம் கிடக்கு. நாம் பாடையில கிடக்கறதுக்கு முன்னாடி, ஒரு சத்தியம் பண்ணுங்கங்கேன்’

முத்துராசா உடைந்தான் ‘என்னாட்டி சொல்லுத? என் என் ராணில்லா.. கொஞ்சம் மனசு பிடிச்சு நில்லு. நீ இல்லாட்டி நான் என்ன செய்வேன்?’

‘அதாஞ் சொல்லுதேன். என் ராசால்லா நீரு? ஒமக்கும், பிள்ளைக்கும் ஒருத்தி வேணும் வீட்டுல. நாம் போயிட்டா, இன்னொரு கட்டு கட்டிக்கிடுங்க’

‘வாய மூடு’ சீறியவன் அழுகையில் தடுமாறினான்.

‘ஒமக்கு வேண்டான்னாலும், பிள்ளைக்கு அம்மாக்காரி வேணும்லா? அத்தைக்கும் மாமாவுக்கும் வீட்டுல ஆக்கிப்போட ஆளு வேணும்லா?அதுக்காச்சும் கட்டுங்க’

‘நீ இருந்த இடத்துல இன்னொருத்தியா? உளறாம உறங்குட்டீ’

‘என் தங்கச்சியக் கட்டுங்க. அவளுக்கும் அத்தை, மாமா உறவு உண்டும். பிள்ளைய அவ பிள்ளையாட்டாம் பாசமாப் பாத்துக்குவா’

‘முடியாது’ கண்ணீர்த்துளி இமை சேர அவன் தலையசைத்தான்.

‘பிள்ளைக்கு அம்மா வேணும், அத்தை, மாமாவுக்கு மருமவ வேணும்னாச்சும் அவளக் கட்டிகிடுங்க. சத்தியம் பண்ணிக்கொடுங்க ராசாவே’ அவள் தீனமாகப் பேசியபடியே, நடுங்கிய வலது கையை முன்னே நீட்டினாள்.

முத்துராசா அவளது கையில் தன் கையை வைத்தான்.. உறுதியாக.

அன்றிரவு, அமைதியாக உறக்கத்தில் அவள் இறந்து போனாள்.

காரியமெல்லாம் முடிந்த இரு மாதத்தில் முத்துராசாவின் மாமனார் மெல்ல பேச்சைத் தொடங்கினார் ‘அவதான் போயிட்டா. வம்சத்தைக் காப்பாத்தணும்லா? ரெண்டாம் கட்டு, மூத்தா இருக்கச்சே கட்டினாத்தான் கேப்பாவ. இப்ப மாப்பிள தட்டக்கூடாது.’

முத்துராசா மவுனமாக இருந்தான். ‘மவராசி போவயிலே, ஒங்ககிட்ட சத்தியம் வாங்கினா.. அதுக்காச்சும்..’

‘அவளுக்குக் கொடுத்த சத்தியத்த மீறமாட்டேன், மாமா. ஒரு வாரத்துல சொல்லியனுப்புதேன்’

நாகர்கோவில் அருகே சிலம்பம், சுருள் வாள் என வீர விளையாட்டுகளைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்த தன் தம்பி குமரவேலை வரவழைத்தான். ‘லே, கொஞ்ச நாள் இங்கிட்டு நம்ம நிலத்தையும் பாத்துகிட்டு இரி.என்னா?’

‘நான் இங்கிட்டு இருந்தாத்தான்ணே வேலை நடக்கு. நாரோயில்ல நா நிக்கலேன்னா, கூட இருக்கறவனுவ ஓய்ச்சிப்போடுவானுவோ’

‘சரி, விக்கிரமாதித்தன் கணக்கா, ஆறுமாசம் இங்கிட்டு, ஆறுமாசம் அங்கிட்டுன்னு இரு. எனக்கு முந்தி மாரி கம்பு சுழட்ட முடியல. விரலு இல்லேல்லா..’

தம்பி கண் கலங்கினான். ‘என்ன செய்யணும்ணே? ‘

‘வள்ளியம்மைய நீ கட்டணுங்கேன்’

‘அண்ணே!’

‘எல்லாத்தையும் நாம் பாத்துக்கறேன். நீ சரின்னு சொன்னாப் போதும்’

சேதி அறிந்து மாமனார் வீடு அமளிப்பட்டது. ஆத்திரமடைந்து கேட்க வந்தவர்களை அமர வைத்து முத்துராசா நிதானமாக எடுத்துரைத்தான் ‘நான் என்ன சத்தியம் செஞ்சு கொடுத்தேன்? என் மவனுக்கு ஒரு அம்மா, என் அம்மா அப்பாவுக்கு ஒரு மருமக.. ஒங்க பொண்ணு, எந்தம்பிக்கு வாக்கப்பட்டாலும் அதேதானே ஆகிறா? எனக்கு பொண்டாட்டியாத்தான் வரணும்னு இல்லேல்லா?’

மாமனார் கண் கலங்கினார் ‘ஒம்மப் போல ஒரு மாப்பிள கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்யா. ராமனா நிக்கீரே?’

‘அவ சீதையால்லா இருந்தா? லச்சுமணனா எந்தம்பி நிக்கான். சரி, கலியாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாருங்க.’

திருமணத்தன்று, தன் மகனை, மணமக்களிடம் ஒப்படைத்தான் முத்துராசா. ‘இப்ப நீ சித்தியில்லட்டீ.  இவனுக்குத் தாயி’

வீட்டின் வெளியே, வேப்ப மரத்தின் அடியில் தனது பழைய கட்டிலைப் போட்டுப் படுக்கத் தொடங்கினான். ‘உள்ளாற வந்து கிடங்கண்ணே’ என்று முத்தாயி பலமுறை வற்புறுத்தியும் மறுத்தவன், பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவளை அழைத்துச் சொன்னான் ‘அடக் கூமுட்ட, கேளு. நானும் உள்ள படுத்தேன்னு வையி. இவன் நாளப்பின்ன, நாரோயில் போனாம்னு சொன்னா, ஊரு என்ன சொல்லும்?. தம்பி இல்லாதப்ப… இதெல்லாம் நாம கேக்கணுமாங்கேன்? எனக்கு வாசல்ல காத்து வருது. அதோட வீட்டுக்குக் காவலும் ஆயிறுச்சுல்லா?’

விசயம் கேள்விப்பட்டு நடேசபிள்ளை பல நிமிடங்கள் உறைந்து போனார். பின்னர் தனது குறிப்பேட்டில் எழுதினார் ‘பீஷ்மனின் மறு அவதாரம்  நெல்லையருகே நடக்கக் கண்டேன்’

இரவு, முத்துராசாவின் தலைமாட்டில் தலையணையின் அடியில் இரு பொருட்கள் வைப்பதை முத்தாயி மட்டுமே அறிவாள். ஒன்று, நீண்ட அருவாள். மற்றொன்று ஒரு வெல்வெட்டுப் பை. அதனுள் பளபளவென்றிருந்த கைத்துப்பாக்கி.

காலையில் முத்துராசா எழுந்ததும், அவை இரண்டையும் எடுத்து மறைவாக வைப்பது முத்தாயியின் வேலையாயிருந்தது.

வானை நோக்கி அண்ணாந்து, அவன் வாசலில் கிடப்பதை ஒரு முழுநிலவு இரவில் கண்டு, முத்தாயி புலம்பினாள்.

‘சித்தியோடு மகந்தானும் வீட்டுள்ளே கிடக்கையிலே…

பத்தியமா மவராசன் தெருவில் கிடந்தானே.. ராசா தெருவில் கிடந்தானே’

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com