அத்தியாயம் 37

அத்தியாயம் 37

செல்லியாத்தா, பையினுள் தேடி ஒரு மாலையை எடுத்தாள் ‘ இது நீ, அன்னிக்கு போட்டிருந்தது.

செல்லியாத்தா, பையினுள் தேடி ஒரு மாலையை எடுத்தாள் ‘ இது நீ, அன்னிக்கு போட்டிருந்தது. முத்து மால. எங்க ஆச்சி ஒனக்கு செஞ்சி கொடுத்துச்சே, அந்த மாலை. ஆமா, அவ கொடுத்தாளாம்லா, காதுல மாட்டற சிமிக்கி.. அத இன்னும் வச்சிருக்கேல்லா?’

முத்துக்குமார் லிண்டாவின் காதில் முணுமுணுத்தான் ‘ஷி இஸ் ஹாலூஸினேட்டிங்.. ஆனியை இவ பாத்ததில்ல. நாம் கிளம்பலாமா?’

‘நோ. அவ பேசட்டும்’ லிண்டாவின் குரலில் ஒரு தீவிரம் தெரிந்தது. ‘முத்துக்குமார், என் தமிழ் அவளுக்குப் புரியாது. அவள் பேசுவதை என்னால் மிகுந்த சிரமத்துடன் புரிந்துகொள்ள முடிகிறது.  நான் சொல்வதை மொழி பெயர்த்துச் சொல்லு ‘ ஆமா, இது நாந்தான்’’

‘வாட்?’ திகைத்த முத்துக்குமார் அவள் சொல்வதை மொழிபெயர்த்தான். செல்லியாத்தாவின் கண்கள் மின்னின.

‘நாந்தான் சொல்லுதேன்லா? நீ வருவேன்னு காத்துட்டேயிருந்தேன், கேட்டியா? முத்தாயிக்கிழவி சொல்லிச்சு. ஒருநாளு அவ வருவாட்டீ, வந்தா, இந்த மாலையக் காமி. அவளுக்குத் தெரியும். எம்பெயரச் சொல்லு.’

முத்துவின் தலை சுற்றியது. என்ன சொல்கிறாள் இந்த கிறுக்குக் கிழவி?

லிண்டா அவளருகே குனிந்தாள் ‘என்னப் பத்தி பாட்டி வேறென்ன சொல்லியிருக்கா?’

செல்லியாத்தாவின் முகம் மாறியது ‘வேறென்ன சொல்லுவா? பெரிய தாத்தா இருக்கறவரை, அவரைப் பாத்துகிட்டே புலம்புவா பாத்துக்க. அவ சொல்லச் சொல்ல எங்கண்ணு முன்னாடி நீல்லா வந்து நிப்ப?’

‘எதாச்சும் துப்பாக்கி பத்திச் சொன்னாளா?’

முத்துக்குமார் பொறுமையிழந்து அங்குமிங்கும் நோக்கினான். பரணில் ஒரு ட்ரங்குப்பெட்டி போல் ஒன்று. அதனருகே ஒரு பானை. அதனருகே ஒரு பூனை அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தது.  அவன் மீண்டும் செல்லியாத்தாவைப் பார்த்தபோது அவள் லிண்டாவின் கையை இறுகப் பற்றியபடி உரத்த குரலில் பாடலும், பேச்சுமாக இருந்தாள்.

மூத்தவ போகையிலே தங்கச்சி கைபிடிச்சு

சேத்தே கொடுத்துட்டா செம்மையா வீடுறவே

செத்தேநான் போனாலும் மவனுக்குத் தாய்வேணும்

அத்தயப் பாத்துகிட, அன்பா நடந்துகிட

‘நீ போனப்புறம் பெரியதாத்தா வாசல்லதான் படுக்கை. கேட்டியா? அவர் பொஞ்சாதி , மவராசி இடுப்பு வலில கிடந்தா பாத்துக்க. ஒருவாட்டி, அவரக் கூப்பிட்டு ‘ இந்தாரும்வே, நாம்போயிட்டா, வீடு நாறிடக்கூடாது. அத்தைய, மாமாவப் பாத்துக்கிட ஆள்வேணும். எம்மவனுக்கு ஒரு அம்ம வேணும். கேட்டியளா? எந்தங்கச்சிய  கட்டிகிடும்’ன்னா.

‘ஏட்டி, ஒனக்கென்ன புத்தி பேதலிச்சிறுச்சா, சிறுக்கி,சும்மா கெட’ன்னாரு தாத்தா.

அவ அழுது ஆர்ப்பாட்டம் வக்கயில, அவரு சத்தியம் செஞ்சாரு நல்லா கேட்டுக்கோ ‘மவனுக்குத் தாய் வேணும், அம்ம, அப்பனப் பாத்துகிட ஒருத்தி வீட்டுல வேணும். இவ தங்கச்சிய வீட்டுக்குக் கொண்டாறேன்’ன்னு சத்திய வாக்கு.  அவ, நிறைவாக் கண்ணு மூடினா. மூணு மாசங்கழிஞ்சி, அவரு தம்பியக் கூட்டியாந்து, கொளுந்தியாளக் கட்டிக்கொடுத்து, ’வீட்டோடு நில்லுலே’ன்னாரு. அவனுக்கு தன்னோட  வாழைத்தோட்டத்தக் கொடுத்து, எம்மவன ஒம்மவனா வளத்துக்கிடுன்னாரு. ‘

செல்லியாத்தா நிறுத்தி, தண்ணீர் குடித்தாள். பின் பாடத் தொடங்கினாள்

முத்தைய்ய மவராசன் மகனைக் கொடுத்திட்டே

சத்தியவழி நின்னான்: சித்தியும் தாயானா

பொய்யொண்ணு மில்லயடா: மெய்யாலுஞ் சொல்லிடுதேன்

மெய்வீழும் நாள் வரையில் மெய்தீண்டா தானின்னான்

அய்யனுக்கு ஒப்பாக அகிலத்தில் ஆளுண்டா?

அவரு தம்பி புளியரை, நாரோயில்ன்னு அலைஞ்சிகிட்டிருந்தாரு. இவரு வீட்டுள்ளார எப்பவாச்சும்தான் போவாரு. வெளிய, இந்தா இங்கன ஒரு வேப்பமரம் நின்னிச்சி, அதுன்னடியில, கட்டிலு போட்டு கிடப்பாரு. தலையருகே, அருவா, வாளு, ஈட்டின்னு இருக்கும். ‘

லிண்டா, அவள் கையைத் தொட்டு நிறுத்தினாள் ‘அவர் தலையருகே ஒரு துப்பாக்கி, கைத் துப்பாக்கி வைச்சிருந்தாரா?’

செல்லியாத்தா, மீண்டும் தன் உலகத்தில் புகுந்துவிட்டாள். அவளது குரலும், வேகமான பேச்சும், முத்துக்குமாருக்கு மொழிபெயர்ப்பதில் சிரமமாக இருந்ததால், ஒரு நேரத்தில் மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டான். அவள் தன்போக்கில் ஏதோ விசும்பியபடி பாடிக்கொண்டிருந்தாள்.

பத்து நிமிட அமைதிக்குப்பின் லிண்டா முத்துவின் தோளைத் தொட்டாள் ‘அந்த ஆயுதங்கள் எங்கே? முத்து, கேள்’

முத்துக்குமார் மொழிபெயர்த்துக் கேட்க அவள் முணுமுணுத்தாள் ‘ அதான் சாமி முன்னாடி வச்சாச்சே? குறுவாளு மனுச ரத்தம் கண்டுட்டுல்லா?’

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com