அத்தியாயம் 38

‘என்ன ஆச்சு?’ முத்துக்குமார் ஆர்வமாகக் கேட்டான். பெரியப்பா கொஞ்ச நாள் முன்னாடி
அத்தியாயம் 38

‘என்ன ஆச்சு?’ முத்துக்குமார் ஆர்வமாகக் கேட்டான். பெரியப்பா கொஞ்ச நாள் முன்னாடி சொன்னாரே? அந்த நிகழ்வைத்தான் சொல்கிறாளோ?

‘அப்ப, எங்கம்மா பிரம்மதேசத்துல இருந்தா. அங்கிட்டு பொத்தைன்னு ஒரு  குன்று இருந்திச்சி. அதும்பக்கம்  இருந்தம். எஞ்சித்தப்பன் கொஞ்சம் வாயிக்கொழுப்பு பாத்துக்க. இங்க வந்தா, திமிரா நடந்துப்பான். ‘சேரி, மாப்பிள தம்பி, மருவாத கொடுப்பம்’னு பெரிய தாத்தா கண்டுக்காம இருந்தாரு. யாருகிட்ட கேட்டானோ, ஒரு தடவ, பெரிய தாத்தா இல்லாதப்ப, ஆனியம்மா பத்தி  என்னமோ தப்பா சொல்லிட்டான்.’

முத்துக்குமார் நிமிர்ந்தான்.

‘பெரிய தாத்தாவுக்கு யாரோ சொல்லிட்டாவ. யாத்தி, அவரு பொங்கிட்டாரு. அவன ஓட ஓட விரட்டி, தேரடிப் பக்கம் பிடிச்சு, தூண்ல கட்டிவைச்சாராம். பொறவு, குறுவாளை எடுத்து’ அவளப் பத்தி பேசின நாக்குதானல இது?’ன்னு கேட்டுகிட்டே, நாக்கை அறுத்து எறிஞ்சாராம். அதுக்கப்புறம்தான், ஊர்ப்பெரிவங்க, அவரை அமைதியாக்கி... அம்புட்டு ஆயுதத்தையும் கருப்பண்ணசாமி கோயில்ல வச்சுட்டாவ. இவரும் ‘ஆயுதம் எடுக்கமாட்டேன்’ன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டாரு’

‘அது ஏன் ஆனி பெயரு சொன்னா இம்புட்டு கோவம் வந்துச்சி, ஆத்தா?’

செல்லியாத்தா அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள் ‘ போல, போக்கத்த பயலே. அவருக்கும், இந்தா நிக்காளே இவளுக்கும் தெய்வ சம்பந்தம்லா? இவதாம்ல அந்த ஆனியம்மா’

முத்துக்குமார் சிரித்தான்’ ‘யாத்தா, அந்தம்மா எப்பவோ போயிருச்சு.’

‘இல்லலே’ ஆவேசமானாள் செல்லியம்மா ‘இவதான் அவ. எங்கம்மா  எம்புட்டு சொல்லியிருக்கா.? ஆனியம்மாவும் அவளும் அம்புட்டு பாசம் பாத்துக்க. ஆனியம்மாவுக்கும், பெரிய தாத்தாவுக்கும் என்ன தொடர்புன்னு நீயோ நானோ பேசக்கூடாது. வாயி அவிஞ்சி போவும். தனியா இருக்கச்சே, தாத்தா, ராத்திரி யாருகிட்டயோ பேசுவாராம். அம்மா யாருன்னு பாக்கப் போவயில, முன்னாடி யாரும் இருக்க மாட்டாளாம். யாருட்டப்பா பேசுதீய?ன்னு அவ கேட்டா ‘ஏட்டி, ஆனி நிக்காள்லா முன்னாடி? காங்கலியா?ன்னுவாராம்.’

லிண்டா அருகில் ஒரு சிரிப்புடன் நின்றிருக்க, செல்லியாத்தா மீண்டும் பாடத்தொடங்கினாள்.

பொத்தைதான் பெருங்கல்லோ, பொதிகைதான் பெருமலையோ?

முத்தையன் மனசுறுதி அதுக்குத்தான் அளவுண்டோ?

அறுதியாச் சொல்லிடுதேன்  நிக்குறவா கேளேண்டி

உறுதின்னா ராசாதான் ஊரெல்லாஞ் சொல்லிடுமே

முத்துக்குமார் உதட்டைப் பிதுக்கி ‘இது தேறாது’ என்பதாகத் தலையசைத்தான். லிண்டா ஆமோதிப்பதாகத் தலையசைத்து, ஒரு சிரிப்புடன் செல்லியாத்தாவைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.

தேஞ்சியே ஓடாக ராசா முத்தையா

நெஞ்சத்தான் காங்கலயே? ஆரெடுத்துப் போனாளோ?

ஊனுருகி உடலுருகி வீதியிலே கிடக்கையிலே

ஆனிதான் வந்தாளோ, அள்ளிட்டுப் போனாளோ?

லிண்டா நின்றாள். ‘ஆனி’ என்ற வார்த்தை அவளுக்குப் புரிந்தது கண்டு, முத்துக்குமார், அந்த வரிகளை அவளுக்குத் தேவையில்லாமல் விளக்கினான். உணர்வுகள் மனதுக்குப் புரியும்போது மொழி ஒரு தடையல்ல. இருவரும் வெளியேறுகையில், செல்லியாத்தாவின் பாடல் மாறி, புதியதாக தெளிவாக ஒலித்தது.

குஞ்சியிலே நெய்தடவி குமரியிலே புறப்பட்டா

காஞ்சிக்கும் அப்பாலே கலங்கிடுவான் துரையெல்லாம்

அஞ்சிறுமே புலியெல்லாம் அய்யா கிளம்பிட்டா

இதுபோல ஒரு பாடல்தான் அன்று பாடினாள்? முத்துக்குமார் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே செல்லியாத்தாவின் குரல் மேலும் அழுகை தோய்ந்து, காற்றில் மிதந்து வந்தது.

‘அஞ்சுகுண்டு வச்சிருக்கான் அய்யாவென அறிஞ்சிட்டா’

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com