அத்தியாயம் 31

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, நடேசபிள்ளை தன் குடையை விரித்துக்கொண்டார்.
அத்தியாயம் 31

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, நடேசபிள்ளை தன் குடையை விரித்துக்கொண்டார். சுலோசன முதலியார் பாலத்தின் அடியில் வெள்ள நீர் புரண்டு ஓட, மக்கள் கரையிலும், மேலே பாலத்திலுமாக நின்றிருந்தார்கள். நீதிபதி , தன் வீட்டிலிருந்து இன்னும் கிளம்பவில்லை. ‘ஒரு துளி மண்ணுல விழல, பிள்ளைவாள் ஊருக்கு முந்தி கொடை பிடிக்காரு. இப்படித்தான், வூட்டுல..’ என்று ஒரு பெண் நடேசபிள்ளை பாலத்தில் ஆட்களைத் தள்ளி நடந்துகொண்டிருப்பதைக் கிண்டல் செய்ய, அருகிலிருந்த பெண்கள். வாயைக் கையால் மூடி, உடல் குலுங்கிச் சிரித்தனர்.

‘சும்மா கெடங்கவுட்டீ. அந்தாளுதான் நம்ம ராசாவுக்கு சாதகமா பேசுதாரு. கொடுவாய மூடிட்டு இருப்பீயளா?’ என்று எவளோ எரிந்து விழ, பதில் சொல்ல வந்த பெண், பாலத்தில் சலசலப்பு கேட்க, உரையாடலை விடுத்து அங்கே வேடிக்கை பார்க்கலானாள்.

‘நீதிபதி வீட்லேர்ந்து இப்பத்தான் கொளம்புதாவளாம்’

நடேசபிள்ளை பாலத்தின் நடுப்பகுதியை அடைந்தார். கையை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்குமாறு பணித்தார். ‘நல்ல சேதிதான். முத்துராசா விடுதலையாயிருவான். இன்னும் கொஞ்ச நாள் விசாரணைக்கு வைக்காங்க. ஒரு பாதகமுமில்ல. எல்லாரும் ஊருக்குப் போய்ச்சேருங்க’ தொண்டை கிழியப் பலமுறை கத்திவிட்டு, ‘ஏலா, சும்மா நிக்காம, ஆளாளுக்குப் போய்ச் சொல்லுங்கடே. ஆத்துக்குள்ள பொம்பளேள் நிக்கா. வெள்ளம் வந்தா அடிச்சிட்டுப் போயிரும். போங்க’ என்றார். மழை மெல்ல வலுக்க, ஆட்கள் நாலாபுறமும் சிதறிப் பிரிந்து, செய்தியை அறிந்து, மகிழ்ச்சியில் கலைந்தனர்.

நீதிபதியின் அறையில், அதிகாலையிலேயே வந்துவிட்டிருந்த கன்னிங்ஹாம் குடும்பம் அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமதி கன்னிங்ஹாமின் விழிகள்  சிவந்திருக்க, முகம் உப்பியிருந்த்து. கன்னிங்ஹாம் பாறைபோல் இறுகியிருந்தார்.

‘மிஸ் ஆனி. நீ சொல்வதெல்லாம் சுய நினைவோடுதான் சொல்கிறாயா?’ ஆனி , ஆம் என்பது போல் தலையசைத்தாள் ‘யுவர் ஹானர், யுவர் ஹைனஸ், மிலாட்.. இதில் எதைச் சொல்வதென அவளுக்குத் தெரிந்திருக்கும்.

அதனைக் கவனியாதது போல் நீதிபதி தொடர்ந்தார்/ ‘நீ சொல்லப்போவது, ஆங்கிய சாம்ராஜ்யத்தில் முதன்முதலாக நடைபெற்ற அரசியல் படுகொலையின் வழக்கினைப் பாதிக்கும். பொறுப்புள்ள ஒரு இங்கிலாந்துப் பிரஜையாக…  ‘

‘என் கடமையை ஆற்றுவேன்’

நீதிபதியின் முகம் சிவந்தது ‘இருவர் வீழ்ந்ததைப் பார்த்த்தாகச் சொல்கிறாய்.. சபாபதியை யார் சுட்டது?’

‘அதற்கு முன் சபாபதியின் நிலை பற்றிச் சொல்ல விரும்புகிறேன், யுவர் ஹானர். அவன், என் கணவனாக ஆகியிருக்கவேண்டிய, ஆண்டர்ஸனைக் கொல்லும் திட்டத்துடன் இருந்ததை நான் அறிந்தேன். ‘

ஜட்ஜின் புருவங்கள் உயர்ந்தன ‘சுதேசி?’

‘இல்லை. இது உள்ளூர் பகையின் அரசியல். சபாபதியும் அவன் குழுக்களும் பெண்களை துன்பப்படுத்துவது பொறுக்காது, ஒருவன் அதனைத் தண்டித்தான். அவன் மீது கொண்ட விரோதத்தின் பழித்திட்டம் அது.’

‘நீ சொல்வதை ஆர்தர் கேன்ன் டாயில் கேட்டிருந்தால், ஷெர்லாக் ஹோம்ஸின் அடுத்த கதை இதனை ஒட்டி அமைந்திருக்கும்.. இதற்கு என்ன அத்தாட்சி?’

‘ஆண்டர்ஸன் என்னிடம் தனிமையில் சொன்ன விவரம் இது. சபாபதியினால் அவருக்கு ஆபத்து வருமென அவர் எண்ணியிருந்தார். அதனால்தான் தனக்குக் காவலாக அந்த முத்துராசாவை துணைக்கழைத்தார்’

நீதிபதி சிந்தனை வயப்பட்டு, தன் உதடுகளை அழுத்தித் திறந்தார். ‘இருப்பினும், சுதேசிகளுடன் போரிடவே சபாபதியை மறுபக்கம் ஆண்டர்ஸன் அனுப்பியதாக , அவன் குழுவினர் தெரிவித்தார்கள். நீ சொல்வது ஒப்புக்கொள்வதாக இல்லை’

‘எதிரிகள் என சபாபதி காட்டியவர்கள், அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டர்ஸனை அவர்கள் பதுங்கியிருந்த சுதேசிகள் என நம்ப வைப்பதில் அதிக சிரமமில்லை. அதில் ஒருவனை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவன் பெயர்.. சங்கரலிங்கம். அவனையும் மற்றொருவனையும் சபாபதி முன்னே பதுங்கி நடக்க விட்டு, சுதேசிகள் சுட்டதாக ஆண்டர்ஸனையோ, அந்த முத்துராசாவையோ சுடுவது என்பது திட்டம். ‘

‘சங்கர லிங்கம்’ நீதிபதி மணியை அடித்து சேவகனை வரவழைத்து, காகித்த்தில் அப்பெயரை எழுதிக் கொடுத்தார் ‘ இன்ஸ்பெக்ட்டரிடம் கொடு’

ஆனி தொடர்ந்தாள் ‘எதிர்த்திசையிலிருந்து வளைவாக வந்த பாதையில் குறுக்கே கடந்து ஆண்டர்ஸனின் பின்புறமாக வந்தபோதுதான், அவர்கள் இருவரையும் கண்டேன். ஆண்டர்ஸன் அவர்களைக் குறிவைக்க எத்தனித்தபோது, எதிரே சபாபதி, ஆண்டர்ஸனை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியது தெரிந்தது. ஒரு குண்டில் அவன் வீழ்ந்தான்.’

‘யார் சுட்டது?’

‘முத்துராசா’

‘ம்ம்ம்’ என்றார் நீதிபதி ‘ஆண்டர்ஸனைச் சுட்டது யார்?’

ஆனி மவுனித்தாள்

‘நீ மிக அருகில் இருந்திருக்கிறாய். ஆண்டர்ஸன் தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாகவும், தான் தற்காப்புக்கு அவனை நோக்கி ரிவால்வரை நீட்டியதாகவும் முத்துராசா ஒத்துக்கொண்டிருக்கிறான்.

ஆனியின் கைகள் இறுகின. விஞ்ச் துரையருகே அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி கோவிந்த நாயுடு எழுந்தார்.

‘முத்துராசாவிற்கும் ஆண்டர்ஸனுக்கும் ஏற்கெனவே பகை இருந்திருக்கிறது. இதனை குழுவில் இருந்த பலரும் போலிஸிடம் விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, முத்துராசாவிற்கு சுதேசிகளிடம் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த சிதம்பரம் பிள்ளையின் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறான். எனவே அவன் அரசுக்கு எதிராகச் செயல்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் ஆண்டர்ஸனைக் கொன்றிருக்கக் கூடும்’

ஆனி, அவரை நேரே நோக்கினாள் ‘முத்துராசாவிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருந்தன?’

‘ஐந்து’ என்றார் நாயுடு.

‘இருவரையும் முத்துராசா சுட்டிருந்தால்,’ ஆனி புன்னகைத்தாள் ‘நீங்கள் கைப்பற்றிய அவனது வெப்லி மார்க் 4-ல் நான்கு குண்டுகள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்’

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com