அத்தியாயம் 34

எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு, சிறு அளவிலான மின் ரம்பத்தால் அறுக்கப்பட்டன.
அத்தியாயம் 34

எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு, சிறு அளவிலான மின் ரம்பத்தால் அறுக்கப்பட்டன. அதன் பல துண்டுகள் வேறுவேறான பார்கோடு ஒட்டப்பட்ட சோதனைக் குழாய்கள் போன்ற பாலிமர் குழாய்களில் கவனமாக, கைபடாமல் இடப்பட்டு மூடப்பட்டன. ஒவ்வொரு பார்கோடு எண்ணும் வேறு வேறு மாதிரிகளைக் குறித்தாலும்,அவை எந்த  எலும்புக்கூட்டின் தொடர்புடையவை என்பதை ஒரு வம்சாவளித் தொடர் மூலம் அந்த மென்பொருளால் காட்டிவிட முடியும்.

எளிதில் ஒரு பையில் வைத்துக் கொண்டு போகக்கூடியதாக இருப்பினும், அவை அனைத்தும் மிகுந்த பொருட்செலவில், கூரியர் மூலம் லண்டனுக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் கூரியர் ரசீதுகள் கவனமாக கோப்பில் வைக்கப்பட்டன. ‘பின்னொரு நாள் எவராவது அந்த எலும்பு மாதிரிகள் கொண்டு செல்லப்பட்ட விதம் தவறானது என்று கோர்ட்டில் வழக்குத் தொடரக் கூடாது என்பதற்காகவும், தணிக்கை அதிகாரிகள் இந்தப் பண விநியோகத்தில் எவ்வாறு ஒவ்வொரு படியும் செயல்படுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தால், அதில் சட்டத்திற்கு மாறான முறையில் எந்தச் செயலும் இருந்துவிடக் கூடாது என்பதற்காவும், முன்னேற்பாட்டுடன் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன’ என்று லிண்டா முத்துகுமாரிடம் சொன்னாள்.

லிண்டாவின் போக்கில் ஒரு மாறுதல் இருப்பதை முத்துக்குமார் கவனித்தான். அவள் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பதாகவும் கணினியில் தீவிரமாக வேலையில் தனித்து ஈடுபடுவதையும் கொண்டு, இது வேலைப்பளு என முடிவு கட்டினான்.

முதலில் வெறுக்கப்பட்டு, விலக்கப்பட்ட மாடசாமியை நோக்கி, தன் விரிவான குடும்பம் நட்பாகி வருவதையும் அவன் கவனித்தான். ‘ஒம்ம பங்கையும் எங்க தொழில்ல போடுங்கண்ணாச்சி, கேட்டியளா? பார்ட்னர்ஷிப்புல பணம் அள்ளலாம்’ என்றவர்கள் ‘பேசாம ரெண்டு மூணு லாரி வாங்கி விட்டுட்டா என்னா? நல்ல லாபம்ங்கான் மாடசாமி. நாம அவன் தொழில்ல மொதலீடு செஞ்சா, அவனும் நம்ம பக்கம் திரும்புவான்லா? மனுசாளுக்கு மனுசாள் ஒத்தாச, அதான் வேணும்’ என்றார்கள்.

குடும்பத்தில் ஒரு உற்சாகம் தொத்திக் கொண்டிருந்தது. மாடசாமி மூலம் ஒரு இன்னோவா புக் செய்து, திற்பரப்பு அருவிக்குச் சென்று ஒரு நாள் முழுதும் குதூகலமாக இருந்து வந்தார்கள்.

பெரியப்பா ஒரு வாரத்தில் சிகப்பு நிற ஆக்டிவா ஒன்றில் வந்தார் ‘கார்த்திக் சொன்னாண்டே. யப்பா, எதுக்கு வேகாத வெயில்ல இப்படி பஸ் மாறி அலையறீய? ஒரு ஆக்டிவா வேங்கிடுங்கன்னான். நானும் சே…ரீ.. நமக்கும் வயசாயிட்டே வருதுல்லா’ன்னு… வேங்கிட்டேன்.’

‘பைசா எப்படி பெரீப்பா கட்டப்போறீய?’ வாயில் வந்த வார்த்தைகள் பிரமிப்பில் வெளியே வந்துவிட ‘ ஏ.. அதான் பைசா வந்துரும்லா? செக்கா குடுப்பானா இல்ல கேஷா டே? செக்குன்னா வரி கட்ட வேண்டிவரும்லா?’

பெரியம்மா பளபளவென ஒரு புடவையைச் சுற்றியிருந்தாள் ‘மருமவோ நேத்திக்கு ஆட்டோல டவுணுக்கு கூட்டிப் போனா, இவனே.. இறங்கிட்டுப்பாக்கேன்.. போத்தீஸ்ஸு. வாங்கத்தே, பட்டுப் பொடவ எடுக்கணும்’ன்னா. அவளுக்கு ஒண்ணு, எனக்கொண்ணுல்லா எடுத்துட்டா?! நல்லாருக்காடே?’

‘எம்புட்டு ஆச்சி?’

‘அதென்ன களுத நாப்பதாயிரம் இருக்கும். கடன் கார்டு தேச்சிட்டா கேட்டியா? ஒரு மாசத்துல வெள்ளக்காரி பணம் வந்துரும்லாடே? ‘

ஒரு வாரத்தில் இங்கிலாந்திலிருந்து முடிவுகள் வந்தன. கை விரல் அறுபட்டிருந்த எலும்புக்கூடு ஆண். அதன் YSTR மரபணுக்கள் மாடசாமியின் மரபணுவில் ஒத்திருந்தன. மற்ற அனைவருக்க்கும் அதன் பங்கு குறைந்த அளவில் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடு முத்துராசாவுடையதென்றால், இவர்கள் அனைவரும் அவனது குடும்பத்தினரே என்பது நிச்சயமான ஒன்று.

வலதுபுறமிருந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது. அதன் மாதிரிகளிலிருந்த MRNA மரபணுக்கள், மாடசாமியிடம் காணப்பட்டது பிறரிடம் காணப்படவில்லை. எனவே மாடசாமியின் தாய் வழி அவள் என்பது உறுதியானது.

லிண்டாவின் முகத்தில் ஒரு பொலிவு தெரிந்தது. ‘எக்ஸலெண்ட். சரியான குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். இனி, அந்த ஐந்து குண்டுகள் கொண்ட அந்த துப்பாக்கி .. அது மட்டும்தான் கிடைக்கவேண்டும்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com