அத்தியாயம் 39

செல்லியாத்தாவின் வீட்டில் பாத்திரங்கள் உருண்டன. லிண்டா, அவளது கையைப்
அத்தியாயம் 39

செல்லியாத்தாவின் வீட்டில் பாத்திரங்கள் உருண்டன. லிண்டா, அவளது கையைப் பிடித்து அமர்ந்திருக்க, செல்லியாத்தா ஏதோ உளறியபடி அழுதுகொண்டிருந்தாள். முத்துக்குமார் பரணில் பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தான். அந்த ட்ரங்க் பெட்டி.. அதனருகே இருக்கும் மஞ்சள் பை?

எதிலும் கிடைக்கவில்லை அந்த துப்பாக்கியும் ஐந்து குண்டுகளும்.

‘யாத்தா, அஞ்சு தோட்டான்னு சொன்னியே? அதென்னா?’ முத்துக்குமார் பல விதங்களிலும் கேட்டுப் பார்த்துவிட்டான். அவள் சொல்லுவதாகத் தெரியவில்லை. மீண்டுm மீண்டும் ‘மூத்தவ போவயிலே..’

‘நாம் மிக அருகில் வந்துவிட்டோம்’ என்றாள் லிண்டா. இவர் சொல்லிவிட்டால் ப்ரச்சனை தீர்ந்த்து. அந்த துப்பாக்கி.. எங்கு இருக்க்க்கூடும்?’

ஒரு இடத்திலும் கிடைக்காமல் ஏமாற்றம் மிஞ்ச, சட்டென லிண்டா உடைந்தாள். அவளது விசும்பல் ஒலிகேட்டு, செல்லியாத்தா, அழுகையை நிறுத்தி, லிண்டாவைக் கூர்ந்து பார்க்கலானாள்.

‘அந்த துப்பாக்கி, அந்த குண்டுகள். அதன்பின் பெரும் வரலாறு நிற்கிறது. அதின்றி எங்கு போக முடியும்? ஆனியின் வலிகள், தியாகங்கள் வீணாகிப் போய்விடுமோ?’

செல்லியாத்தா அவள் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் ‘நீ அழுவாதே ஆத்தா. என்ன வேணும் ஒனக்கு?’

‘நீ சொன்னியே…அந்த துப்பாக்கி, ஐந்து குண்டுகள். அவை வேண்டும்’

செல்லியாத்தா எழுந்தாள். விறுவிறுவென வெளியே நடந்தாள் தொடர்ந்து முத்துக்குமாரும், லிண்டாவும் ஓட்டமும் நடையுமாக அவள் பின் செல்ல, இருபது நிமிடங்களில், முள் வேலங்காட்டினுள், சமீபத்தில் தோண்டப்பட்ட முத்துராசாவின் சமாதியின் அருகே ஒரு மரத்தின் அடியிலிருந்து சற்றே விலகி,   நின்றாள்.  முத்துக்குமார், சில ஆட்களோடு அங்கு வந்து கிட்டதட்ட பத்து அடி விஸ்தீரத்தில் தோண்டத் தொடங்கியதை மறுக்கவில்லை அவள். க்ளங் என்ற சத்தத்துடன் நாலு அடியில் கிடைத்த அந்தப் பொருளை சலனமின்றிப் பார்த்து நின்றாள்.

துருப்பிடித்திருந்த அந்த உலோகப்பெட்டி, க்றீச்சிட்டுத் திறந்தது. அதனுள், பளபளப்பு குறைந்த, ஆனாலும் கம்பீரம் குறையாத, லேசான மினுங்கலுடன், தங்க நிறத்தில் வெப்லி மார்க் 4 கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதோடு பழுப்படைந்த இரு காகிதங்கள்..

‘நடேசபிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து கிழிக்கப்பட்ட பக்கம்’ என்றாள் லிண்டா அதனைப் பார்த்தபடி. ‘பக்கம் எண் 43

சிரமத்துடன் முத்துக்குமார் அதனை படித்தான். அதே சாய்ந்த எழுத்துக்கள்.’ ஆனி, இன்று காலை என்னைப் பார்க்க அழைத்திருந்தாள். விடைபெற்றுச் செல்லுமுன் ஒரு பரிசு கொடுக்கவேண்டும் என்று சொன்னாள். முத்தாயி அருகிலிருந்தாள். அவளது அழகுத் தொப்பியில் புதைத்துக் கொடுத்த வஸ்து. கனமாக இருக்கவே ‘என்ன இது?’ என்றேன். ‘ஆண்டர்ஸன் எனக்குத் தந்த வெப்லி’ என்றாள். இதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள். அன்று என்ன நடந்த்து என்பதற்கு இது மட்டுமே சாட்சி. என்றாள்.’ எனக்குப் புரிய பல நிமிடங்களாயிற்று.’

மற்ற சிறிய காகிதம் பலவருடங்களுக்குப்பின் எழுதப்பட்டிருந்தது ‘எது அன்பிற்கு அத்தாட்சியாக நின்றதோ, எது தியாகத்தின் சின்னமாக நின்றதோ, எது காக்கப்படவேண்டுமோ, அதனை இன்று முத்துராசாவிடம் சேர்ப்பிக்கிறேன். என் மனப்பாரம் குறைந்துவிட்டது’

முத்துக்குமார் குடும்பம் மிகப் பரபரப்பாயிருந்தது. ‘ஏலா, எத்தனை நாள்ல பைசா வரும்?’ என்றார் பெரியப்பா ,குறைந்த பட்சம் முப்பது தடவை கேட்டிருப்பார்.

லிண்டாவின் கண்களில் ஒரு நிறைவு தெரிந்தது. இன்னும் இரு நாட்களில் கிளம்பறேன்’ என்றாள் முத்துக்குமாரிடம்/ ‘எல்லாம் சரியாகப் பொருந்தி வந்துவிட்டது. இது அந்த துப்பாக்கிதானா என்பது மட்டும் உறுதி செய்துவிட்டால் போதும். அது மிக எளிது. உங்களுக்கு பணம் இன்னும் ஒரு மாதகாலத்தில் வந்துவிடும் ‘ என்றாள்.

‘முதலில் இந்தப் பணம் எனக்கு வேண்டுமென்று மட்டுமே நினைத்திருந்தேன் முத்துக்குமார் ‘ என்றாள் சூடான இஞ்சி டீயை உறிஞ்சியபடி.

‘இப்போ…சரி..மேலும் சில வெஞ்ச்சர் கேபிடலிஸ்ட்களை அணுகிப் பார்த்துவிடலாம். என்ன கொஞ்ச நாட்களாகும் ஆகட்டும்.’ முத்துக்குமாரின் கையிலிருந்து துப்பாக்கியை வாங்க கைநீட்டினாள்.

முத்துக்குமார் அவளைப் பார்த்து புதிராகச் சிரித்தான். ‘உன்னிடம் துப்பாக்கியைக் கொடுக்க முடியாது, சாரி’

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com