அத்தியாயம் 40

லிண்டா நிமிர்ந்தாள். முத்துக்குமார் தொடர்ந்தான் ‘இந்த துப்பாக்கியை இங்கேயே
அத்தியாயம் 40

லிண்டா நிமிர்ந்தாள். முத்துக்குமார் தொடர்ந்தான் ‘இந்த துப்பாக்கியை இங்கேயே சோதனை செய்யவேண்டும். அங்கு சென்று, இது அந்த துப்பாக்கி இல்லை என்று சொல்லிவிட்டால், எப்படி நம்புவது? எனவே ஒரு மூன்றாம் மனிதரை அழைத்துச் சோதனை செய்யச் சொல்லலாம். என்ன சொல்கிறீர்கள்?’

லிண்டாவின் கண்களில் ஒரு வேதனை படர்ந்தது. கடைசியில் நீயும் இப்படி காசுக்கு…

‘சரி. எங்கள் லாயர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். யார் அந்த மூன்றாம் மனிதர்?’

‘விக்ரம் சின்ஹா, துப்பாக்கி வல்லுநர்’ என்றான் முத்துக்குமார். லிண்டா அவனைப் பார்த்த்தில் ஒரு ஏளனம் இருந்தது.

‘டில்லியில் மாருதி கார்கள் போல, அன்றைய இந்தியாவில் வெப்லிகளும், என்ஃபீல்டுகளும் நிறைந்திருந்தன என்றாரே? அவரா?’

சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டான் முத்துக்குமார் ‘அவர் பன்னாட்டு துப்பாக்கி ஆய்வாளர்களின் குழுமங்களில் உள்ளவர் லிண்டா. இன்று, இந்தியா மட்டுமல்ல, ஆங்கிலேய காலனியாதிக்க நாடுகளில் எந்த துப்பாக்கிகள், பீரங்கிகள், குண்டுகள் எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றிய ஆய்வுகளில் அவரது புத்தகங்களின் உசாத்துணைகள் இருக்கும். இக்திடார் ஆலம் கான், நடுகாலத்திய இந்தியாவில் துப்பாக்கிகள் என்ற புத்தகத்தில் எழுதியவற்றிற்கு, விக்ரம் ஒரு விரிவான கட்டுரை எழுதி….’

‘அவரது அறிவு பற்றி எனக்குத் தெரியத் தேவையில்லை, முத்து, அவரால் என்ன செய்துவிடமுடியும் எனக் நினைக்கிறாய்? இது எந்த காலத்தியது அல்லது யாருடையது என்றா?’

‘அனைத்தும்’ என்றான் பிடிவாதமாக முத்துக்குமார். ‘அவர் நாளை மறுநாள் இங்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். ராஞ்சியிலிருந்து, இங்கு வந்து போகும் போக்குவரத்து செலவு போக, ஒரு நாளைய அவரது ஃபீஸ் ரூபாய் பத்தாயிரம். இது போன்று பல குழப்பங்களை அவர் சுமுகமாகத் தீர்த்துவைத்திருக்கிறார். அவருடைய பயோடேட்டாவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்’.

லிண்டாவின் முகத்தில் ஒரு வலி தெரிந்தது. மவுனமாக, தன் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டாள். ஒருமணி நேரம் கழித்து வந்த மின்னஞ்சலை ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு, முத்துராசா குடும்பத்தினரை அழைத்தாள்.

‘எனது வழக்கறிஞர்களும், ட்ரஸ்ட்டிகளும் இந்த சோதனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், ஆய்வின் ஒவ்வொரு படியும் வீடியோ, ஆடியோ பதிவு செய்யப்படவேண்டும். அது நேரலையாக அவர்களுக்கும் அனுப்பப்படும். இதற்கு ஒத்துக்கொண்டால், ஆய்வை இங்கு விக்ரம் சின்ஹாவைக் கொண்டு தொடரலாம்’

அனைவரும் மவுனமாகத் தலையாட்டினர். ‘இசக்கியாபிள்ள மவன் வீடியோ கடை வச்சிருக்கான், இவனே… முத்து.. கலியாணம் காட்சின்னா நம்மூர்ல அவந்தான் கேட்டியா? அவன கூப்பிட்டு, வீடியோ எடுக்கச் சொல்லுவம். நமக்குன்னா ஒரு டிஸ்கவுண்ட்டு போடுவான்.. என்ன சொல்லுத?’

பெரியப்பாவின் சிபாரிசுகளை கவனமாகத் தவிர்த்தான் அவன். மூன்று கடைகளின் விலைப்பட்டியலை லிண்டாவுக்குக் கொடுத்து அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னான். இறுதியில் ஒரு சி.சி.டி.வி, துப்பாக்கி இருக்கும் அறையில் இருக்கவேண்டுமென்பது முடிவானது. மாடசாமியின் வீட்டின் மாடியில் ஒரு அறையில் துப்பாக்கி , மேசைமீது ஒரு கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டு, அருகில் ஒரு மேசை விளக்கு எப்போதும் எரிந்திருக்க, மேலே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வியினால் 24 மணிநேரமும் நேரலையாக அது இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டது.

மதுரை வரை விமானத்தில் வந்த விக்ரம் சின்ஹாவை முத்துக்குமாரே நேரில் போய் அழைத்து வந்தான். ஏதோ அரசியல்வாதியின் வீட்டுத் திருமணமென்று , நகரில் உருப்படியான ஓட்டல்களின் அறைகள் கிடைக்காததால், விக்ரம் சின்ஹா மாடசாமியின் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டார். ஏ.ஸி இல்லாத்தை நிமிடத்திற்கு ஒரு முறை சுட்டிக்காட்டினார்.

இரவு ஒரு மணியளவில் திடீரென மின்சாரம் போய்விட, வீட்டில் இருந்தவர்கள் சலசலத்து எழுந்தனர்.  அனைவரும் துப்பாக்கி இருந்த அறை நோக்கி ஓடி வர, அங்கு மூடப்பட்டிருந்த கதவின் அருகே டார்ச்சுடன் முத்துக்குமார் நின்றிருந்தான். ‘பயப்படவேண்டாம். சி.சி.டிவிக்கு பாட்டரி பேக் அப் இருக்கு.’ என்றவன் மாடிப்படியில் நின்றிருந்த லிண்டாவை உற்றுப் பார்த்தான். 'கோடிகளுக்காக , ஒரு நாள் உறக்கம் போவது தவறில்லை லிண்டா’

மறுநாள் காலை, பத்து மணியளவில், மாடசாமியின் வீட்டின் ஹாலில் பலர் கூடியிருந்தனர். ஒரு பதற்றத்துடன் சலசலப்பு உயர்ந்து கேட்டது. குடும்பத்தில் இல்லாத சில பெரிய மனிதர்களையும் சாட்சிக்கு அழைத்து வந்திருந்தார் பெரியப்பா ‘ இருக்கட்டும்லே. நாளைக்கு எவனாச்சும் ஒங்க பங்காளிகளா நின்னு பைசாவ லவுட்டிட்டானுவோ-ன்னு சொல்லிரப் படாதுல்லா? அதான்… ஒக்காருங்க ஐயர்வாள். டே, இங்கிட்டு ஒரு சேர் போடு’

ஒரு மேசையில் வெள்ளைப்படுதா விரித்திருக்க, சின்ஹா அதன் மறுபுறம் அமர்ந்திருந்தார். கையுறை அணிந்தபடி, துப்பாக்கியை அவர் எடுக்கும்போது, ஒருவன் படு மும்முரமாக அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான்.

‘இது வெப்லி மார்க் 4. ஆங்கிலேய உயர் அதிகாரிகள், ஆர்மி அதிகாரிகள், ஏன் சில தனியாட்களும் 1900களில் பயன்படுத்திய மாடல் இது. போயர் போரில் பயன்படுத்திப் பிரபலமான ஒன்று’ யாருக்கும் புரியாத, வேண்டாத விவரங்களை விக்ரம் அள்ளித் தெளித்தபடி துப்பாக்கியை கவனமாகப் பார்த்தார்.

ஒரு பூதக்கண்ணாடி கொண்டு அதனை முழுதும் ஆராய்ந்தவர் ‘இது ஸ்பெஷலாகச் செய்து வாங்கியது. பிடி சற்றே மென்மையாக வளைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பெண்கள் பயன்படுத்துவதாக இருந்தால்மட்டுமே இப்படி அழகுசெய்வார்கள். ம்ம்ம் தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்.’ துப்பாக்கியை மேலே திறந்து, உள்ளிருந்த குண்டுகளை வெளியே எடுத்தார்.

சட்டென அவர் முகம் மாறியது. ‘இந்த குண்டுகள்…’ அவர் நிதானமாக ஒவ்வொரு குண்டாக எடுத்து பூதக்கண்ணாடியாலும் கவனித்துப் பார்த்தார்.

அனைவரையும் ஒரு முறை நோக்கினார்.

‘இந்த குண்டுகள் போலி’

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com